அனுபவிப்பது வரைஉல்லாசம் அனுபவித்த பின் கைலாசமா?

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், முன்னாள் தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

சிரமப்பட்டோம்’ பசியிலிருந்தோம்’ கையில் பணமிருக்கவில்லை நடையாகவே நீண்ட தூரம் கல்விக்காகச் சென்று வந்தோம்’ விடா முயற்சியோடு முன்னேறினோம்’ இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்…

இப்படியொரு கடந்த காலத்தை மீட்டிப் பாருங்கள். அனுபவித்த சிரமங்களை நினைத்தால்… பட்டினி கிடந்ததை எண்ணிப் பார்த்தால்… மனதுக்குக் கவலையாக இருக்குமா? விரக்தி ஏற்படுமா? அல்லது மகிழ்ச்சி ததும்புமா?

ஒரு முஸ்லிம் இப்படியொரு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் நிச்சயம் அகமகிழ்ந்து இறைவனைப் (அல்லாஹ்வை) புகழ்வான். தான் அனுபவித்த இன்னல்கள், துன்பங்கள் மற்றும் தனது விடா முயற்சிகள் என்பன குறித்து திருப்தியடைவான். அவற்றை தனது பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தி அவர்களது ஔிமயமான எதிர்காலத்துக்கும் வழிகாட்டுவான்.

இதற்கு நேரெதிராக பின்வருமாறு கற்பனை செய்து பாருங்கள்: தந்தையிடம் பணமிருந்தது. தாராளமாகச் செலவு செய்தோம்’ நண்பர்களோடு ஊர்- உலகம் சுற்றினோம்’ விதம் விதமாக சாப்பிட்டோம்’ உல்லாசங்களிலே பொழுதைக் கழித்தோம்’ பாடசாலைக்குப் போனதல்லாமல், தகைமைகளையோ திறமைகளையோ வளர்த்துக் கொள்ளவில்லை. இன்று தந்தை வசதியிழந்தவராக மாறிவிட்டார்… தன்னாலும் தகுதியானதொரு தொழிலைச் செய்ய முடியாதிருக்கிறது’ குடும்பம் தத்தளிக்கிறது.

இப்போது பழைய உல்லாசங்களையும் நண்பர்களையும் நினைத்தால் உள்ளம் நிறைவடையுமா? மகிழ்ச்சி பொங்குமா? அல்லது தன் மீது தனக்கு வெறுப்புண்டாகுமா? விரக்தியைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அல்லது விதியை நொந்து கொள்வோமா?

சிலபோது தனது தந்தை மற்றும் நண்பர்கள் மீதுகூட விவரிக்க முடியாத ஒரு கோபம் வருவதற்கு இப்படியான சந்தர்ப்பங்களில் வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறாயின், உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? எதிலே இருக்கிறது?

ஒரு சிலர் இரண்டாம் நிலையையும் தாண்டி இன்னும் மோசமாகி விடுகிறார்கள்.

கெட்ட நண்பர்கள், போதைப்பொருள் பாவனைகள், விரசமான படங்கள், திருட்டுத் தொழிலால் தேடிய செல்வங்கள் என உல்லாசங்களில் மிதந்து, இறுதியில் வீட்டாலும் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு நோயாளிகளாகவோ அல்லது சிறைவாசம் அனுபவிப்பவர்களாகவோ மாறி விடுகிறார்கள். இறுதியில், எஞ்சுவது மனநலன் பாதிக்கப்பட்ட உள்ளங்களும் விரக்தியும்தான். சந்தோஷம், மகிழ்ச்சி, மன அமைதி என்பவற்றைத் தேடியவர்கள்தான் மேற்கூறப்பட்ட மூன்று சாராரும்.

எனினும், முதல் வகுப்பாருக்கு அவை கிடைக்காதது போன்றிருந்தது ஆரம்பத்தில்… பின்னர், அவை அவர்களுக்குக் கிடைத்து விட்டன.

இரண்டாம், மூன்றாம் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அவை ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டன. எனினும், பின்னர் அவை காணல்நீராகி விட்டன: அவர்கள் ஏமாந்து விட்டார்கள்.

உண்மையில் என்ன நடந்தது?

பிந்திய இரு சாராரும் உல்லாசத்தை மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் கருதி விட்டனர். மகிழ்ச்சி வேறு, உல்லாசம் வேறு என்பதை அவர்கள் உணரவில்லை.

இரண்டிற்குமிடையிலுள்ள வேறுபாட்டை அவர்கள் புரிந்திருந்தால் சிலபோது அவர்களது நிலைமை மாறியிருக்கலாம்.அது என்ன வேறுபாடு?

உல்லாசம் என்பது அனுபவிக்கின்றபோது கிடைக்கின்ற இன்பமாகும். மகிழ்ச்சி அல்லது மனநிறைவு என்பது அனுபவித்த பிறகு நீடித்து நிலைக்கின்றதோர் இன்பமாகும்.

உதாரணமாக, சினிமா பார்க்கிறோம்’ நண்பர்களோடு சேர்ந்து ஊர்- உலகம் சுற்றுகிறோம்’ அரட்டை அடிக்கிறோம்’ ஒரு சிலர் மது அருந்துவார்கள்.

இவற்றில் ஈடுபடுகின்ற வரைக்கும் ஓர் இன்பம் கிடைக்கிறது. மகிழ்ச்சி போன்று இருக்கிறது’ எங்களையும் எங்களது பிரச்சினைகளையும் சிறிது நேரம் மறந்திருக்கிறோம்’ ஈடுபாட்டை நிறுத்திக் கொண்டாலோ அதனோடு அனைத்து இன்பங்களும் மகிழ்ச்சிகளும் முடிவடைகின்றன. மறைந்திருந்த பிரச்சினைகள் மீண்டும் மனக்கண்ணுக்கு முன்னால் வந்து விடுகின்றன. இதுதான் உல்லாசம். அனுபவிக்கின்றபோது இருக்கும்… முடிந்தால் முடிந்துவிடும்… மீண்டும் தேவைப்பட்டால் மீண்டும் அனுபவித்துத்தான் பெற வேண்டியிருக்கும். அனுபவிக்க முடியாமல் போனால் விரக்தி ஏற்படும்.

உண்மையான மகிழ்ச்சி அல்லது மனநிறைவு அதுவல்ல. அது அனுபவித்த பிறகும் நிலையாக நிற்கக்கூடியது’ என்றுமே உற்சாகத்தைத் தரக்கூடியது’ பலருக்கும் படிப்பினையாக அமையக்கூடியது.

உல்லாசங்களோடு வாழ்பவர்கள் உலகில் சிலர் எப்போதும் உல்லாசங்களோடு வாழ்கிறார்கள். வசதி படைத்தவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என இத்தகையோருக்கு உதாரணங்கள் பல. கார்கள், பங்களாக்கள், கண்கவர் தோட்டங்கள், ஆடம்பரமான வைபவங்கள், வளிநாட்டுப் பயணங்கள்… என இவர்களது உல்லாசங்களும் ஏராளம்.

இவர்களைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள், என்ன வாழ்க்கை! வாழ்ந்தால் இவர்களைப் போலல்லவா வாழ வேண்டும் என நினைக்கிறர்கள்.

முறையான வழிகளில் முன்னேறி இவர்களைப் போல் வாழ்வதற்குத் தடையில்லை. சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் முன்னுதாரணங்களாகத் திகழுவதற்கும் தம்மிடமிருக்கும் வளங்களாலும் பலங்களாலும் அதிகமான மக்கள் பயன் பெறுவதற்கும் இத்தகையவர்கள் வழிசமைக்கலாம்.

எனினும், நாம் பார்க்கின்ற அனைவரும் அவ்வாறு இருக்க மாட்டார்கள். அவர்களுள் பலரது வாழ்க்கையின் வளிப்பக்கம்தான் உல்லாசமாக இருக்கும்’ சிறிது நெருங்கிப் பார்த்தால் ஒழுங்கில்லாத வாழ்க்கை, போட்டியாளர்களின் தொல்லை, மனத்தளர்ச்சி, மதுப் பழக்கம், குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை, தனிமை, எதிர்பார்த்தவாறு பிள்ளைகள் வளரவில்லை… என எத்தனையோ குழப்பங்கள் இருக்கும்.

உல்லாசங்களை அனுபவிப்பது மட்டுமே வாழ்க்கை, அதில்தான் மகிழ்ச்சியிருக்கிறது, மன நிறைவிருக்கிறது என்று கருதுபவர்கள் வாழ்க்கையின் பெறுமதியான பல பொக்கிஷங்களைத் தொலைத்து விட்டார்கள். எல்லாமிருந்தாலும் ஏதோவொன்று இல்லாதது போல் வெறுமையாலும் ஒருவித வறுமையாலும் பீடிக்கப்பட்டிருப்பார்கள். அது என்ன வெறுமை? அல்லது வறுமை? என்பது அவர்களுக்குப் புரியாதிருக்கும். எல்லாமிருக்கிறது… ஏதோவொன்று இல்லாதது போல் தெரிகிறது… என்பார்கள். ஒன்றிலும் மனம் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கிறது என்றும் கூறுவார்கள். புரியாமலே வாழ்ந்து விட்டுப் போவார்கள்.

அவர்களைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்களோ பாக்கியசாலிகள் என அவர்களை நினைப்பார்கள்.

இப்படித்தான் வாழ்க்கை. வாழ்க்கையை உலகில் ஒரு முறைதான் வாழ்கின்றோம். அதனைப் புரியாமல் எமது காலங்களை நாம் வீணாக்கி விடலாகாது. மகிழ்ச்சி, மன நிறைவு எல்லாம் அந்த வாழ்க்கையில் மிகவும் பெறுமதியானவை.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இறை விசுவாசத்தை அடிப்படையாகவும் மறுமையின் வெகுமதிகளை இலக்காகவும் கொண்டு உலகின் நற்பணிகள் செய்வதும் எண்ணற்ற மக்கள் அவற்றால் பயனடைவதும் அவ்வாறு பயனடைந்தவர்கள் அதற்கு காரணமாக இருந்தவர்களுக்காக பிரார்த்தனை (துஆ) செய்வதும் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சிகளையும் மன நிறைவுகளையும் பெற்றுத் தர வல்லவையாகும்.

இந்த உண்மையை உணர்ந்தவர்கள் என்றும் மன நிறைவோடு வாழ்வார்கள். அமைதியை இழக்க மாட்டார்கள். அவர்கள் மனநிறைவுடன் வாழ்ந்து மன நிறைவுடனேயே இந்த உலகை விட்டு விடை பெறுவார்கள்.

உணராதவர்கள் அனுபவிப்பது வரை உல்லாசமாக இருப்பார்கள். அனுபவித்த பின் கைலாசம் போகவே ஆசைப்படுவார்கள்.

நாங்கள் யாராக இருக்க வேண்டும்!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *