அல்-இஹ்ஸான்

அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி), விரிவுரையாளர், கதீஜதுல் குப்றா மக, வடதெனிய, வெலம்பொட

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை நேசிக்கின்றான்.’ (2: 195)

அல்-இஹ்ஸான் எனும் உயரிய பண்பு புனித அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உயரிய பண்பாகும். அல்-இஹ்ஸான் எனும் பதம் நன்மை செய்தல், உபகாரம் செய்தல், நேர்த்தியாக செய்தல், குறையின்றி பரிபூரணமாக செய்தல் முதலான அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல்லாகும். ஒரு வேலையை முழு அழகோடு சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு அல்-இஹ்ஸான் என்று அழைக்கப்படுவதுண்டு. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பது ஒரு சாதாரண நிலையாகும். ஆனால், அதை முழு அழகுடனும் முழுக் கவனத்துடனும் தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி நேர்த்தியாக செய்து முடிப்பது உன்னத நிலையாகும். இத்தகைய நடைமுறைதான் இஹ்ஸான்  எனப்படும். அதனைப் பேணுபவர்கள் முஹ்ஸின்கள்   ஆவார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அல்-இஹ்ஸான்’ என்றால் என்ன என்று வினவப்பட்டபோது, நீ அல்லாஹ்வை பார்ப்பது போன்று அவனை வணங்குவதாகும். நீ அவனை பார்க்கா விட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான் என்ற உணர்வோடு அவனை வணங்குவதாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அனைத்து நற்பண்புகளையும் உள்ளடக்கிய ஒரு பண்பாக அல்-இஹ்ஸான் அமைந்துள்ளது. அது ஈமானின் அடிப்படையாகும். ஈமானின் அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய உயரிய பண்பாக அல்-இஹ்ஸான் கருதப்பட்டுள்ளது.

‘அல்-இஹ்ஸானை’ இரு வகைப்படுத்த முடியும். ஒன்று, அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டிய கடமைகளை சரிவர குறைவின்றி நிறைவேற்றுவதாகும். அடுத்தது, அல்லாஹ் படைத்துள்ள உயிரினங்களுக்கு அனைத்து வகையான நன்மையும் சென்றடைவதற்கு முயற்சித்து செயற்படுவதாகும்.

‘அல்-இஹ்ஸான்’ எனும் பண்பு ‘அல்-ஈமான்’ என்பதற்கு மேலால் இருக்கின்ற ஓர் உயரிய உன்னத பண்பாகும். ஏனெனில், ஈமான் உள்ள ஒருவன் தன்மீது விதியாக்கப்பட்ட  கடமைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டால் அவன் ஓர் இறை விசுவாசம் கொண்ட முஃமினாக கருதப்படுவான். ஆனால்இ அல்-இஹ்ஸான் எனும் உயரிய பண்பைக் கொண்டுள்ள முஹ்ஸின் தன்மீது கடமையாக்கப்பட்ட கடமைகளுக்கு அப்பால் உபரியாக நன்மைகளைச் செய்பவனாகவே இருப்பான். உதாரணமாக, ஒருவன் ஐங்காலத் தொழுகையை குறையின்றி நிறைவேற்றுவது, கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நிறைவேற்றுவது ஈமானியப் பண்பாகும். ஆனால், ஒருவன் ஐங்காலத் தொழுகைக்கு மேலதிகமாக ஸுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவது, கடமையாக்கப்பட்ட ஸகாத்துக்கு மேலதிகமாக தானதர்மங்களை நிறைவேற்றுவது இஹ்ஸானியப் பண்பாகும்.

வாழ்வில் எல்லாத் துறைகளிலும் அனைத்தையும் திறன்பட குறைவின்றி நேர்த்தியாக நிறைவேற்றுவது இஹ்ஸானாகும். இறை விசுவாசிகள் தம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் இஹ்ஸானைக் கடைப்பிடிப்பது இஸ்லாத்திற்காக அவர்கள் ஆற்றும் மகத்தான பணியாகும்.  இவ்வுயரிய பண்பு ஒரு சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுமாயின் அச்சமூகம் இஸ்லாமிய அழைப்புப் பணியை பெரியளவில் செய்ய வேண்டிய தேவை இருக்க மாட்டாது. இறை விசுவாசிகள் முஹ்ஸின்களாக செயற்படுவார்களாயின் மாற்று மதத்தவர்களின் நன்நம்பிக்கையைப் பெற்று, தப்பெண்ணங்களையும் சந்தேகங்களையும் முழுமையாக அகற்றி சகவாழ்வுக்கு அது வழிவகுக்கும் என்பது திண்ணம்.

இஸ்லாம் அதன் கொள்கை, கோட்பாடுகளை அடிப்படையாக வைத்தே மதிப்பிடப்படுவது அவசியமாகும். இருப்பினும், முஸ்லிம்களின் நடத்தைகளைப் பார்த்தே இஸ்லாம் மதிப்பிடப்படுவது யாவரும் அறிந்த கவலைக்குரிய உண்மையாகும்.இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துள்ளது.

‘அல்முஹ்ஸின்’ அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒரு பண்பாகும். இறை விசுவாசிகள் இப்பண்பைக் கடைப்பிடிப்பது அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கு நிச்சயம் வழிவகுக்கும்.  ஒரு மனிதனை  இல்லாமையிலிருந்து உருவாக்கி, அவனுக்கு தேவைப்படும் அனைத்து அருள்களையும் வழங்கி, நேர்வழி காண்பித்திருப்பது அல்லாஹ்வின் மாபெரும் இஹ்ஸானாகும். எனவே, அல்லாஹுத் தஆலா மனிதனின் மீது அருளியிருக்கின்ற இஹ்ஸானை அது போன்ற இஹ்ஸானைக் கொண்டு அதனை எதிர்கொள்வது அவசியமாகும்.

சுவனத்திற்கு ‘அல்ஹுஸ்னா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுவனத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வது ஒவ்வொரு விசுவாசியின் மீதும் கடமையாகும். சுவனத்தை நம்பியவன்  அதற்காக  அவன்  உலகிலே செயற்படுவது அவசியமாகும். ‘அல்ஹுஸ்னா’ என்று

அழைக்கப்படும் சுவனத்தை அடைந்து கொள்வதற்கு அல்-இஹ்ஸான் எனும் உயரிய பண்பைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். ‘அல்ஹுஸ்னா’ என அழைக்கப்படும் சுவனத்தை நம்பிய மனிதன் அதற்காக தன்னைத் தயார் செய்து தன்னால் முடிந்த நன்மைகளை தனக்காகவும் பிறருக்காகவும் செய்து கொள்வது அவசியமாகும்.

அல்லாஹுத் தஆலா நீதியைக் கொண்டும் நன்மையைக் (இஹ்ஸானைக்) கொண்டு பின்வரும் வசனத்தில் கட்டளையிட்டுள்ளான்:

‘திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை (இஹ்ஸான்) செய்யும்படியும் உறவினருக்குக் ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான்.’ (16: 90)

நீதி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய கட்டாயக் கடமையாகும். அதற்கு மாற்று வழிகள் கிடையாது. ஆனால், இஹ்ஸான் என்பது கடமைக்கு அப்பால் மனமுவந்து விரும்பிச் செய்கின்ற ஒரு கடமையைக் குறிக்கும் சொல்லாகும். உதாரணமாகஇ கடனாளி உரிய தினத்திற்கு தனது கடனை திருப்பிச் செலுத்துவது நீதியாகும். ஆனால், கடனாளி மீது கருணை கொண்டு கடன் கொடுத்தவன் அவனது கடனில் ஒரு தொகையைக் கழிப்பது, அல்லது கடனை முழுமையாக மன்னித்து விட்டுவிடுவது ‘இஹ்ஸான்’ ஆகும். ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவளுடைய ‘இத்தா’ காலம் வரையில் அவளுக்காக அனைத்து செலவினங்களையும் செய்வது நீதமாகும். ஆனால், நீதத்திற்கு அப்பால் அவளது ‘இத்தா’ காலம் முடிவடைந்ததன் பின்னாலும் வாழ்நாள் முழுவதும் மாதாந்த செலவினங்களுக்காக உபகாரம் செய்வது இஹ்ஸானாகும். நீதி மூலம் தீர்த்துவிட முடியாத சமூகப் பிரச்சினைகளை இஹ்ஸான் எனும் உயரிய பண்பின் மூலம் தீர்த்துவிட முடியும்.

இஹ்ஸான் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் கடைப்பிடிக்கப்படுவது அவசியமாகும். ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று அல்லாஹுத் தஆலா அனைத்திலும் இஹ்ஸானை கடமையாக்கியுள்ளான்.

நிச்சயமாக அல்லாஹ் இஹ்ஸானை அனைத்திலும் கடமையாக்கியுள்ளான்.’ (முஸ்லிம்)

மனிதன் முதலில் தனக்குள் இஹ்ஸானை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே.’ (17: 7)

அடுத்து மனிதன் தன்னைச் சூழவுள்ளவர்களோடு இஹ்ஸானுடன் நடந்து கொள்வது அவசியமாகும். 

‘அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள்! பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் நெருங்கிய அண்டை வீட்டாருக்கும் தூரமான அண்டை வீட்டாருக்கும் பயணத் தோழருக்கும் நாடோடிகளுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் இஹ்ஸான் (நன்மை) செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.’ (4: 36)

சுற்றுச்சூழல் மாசடையாது பாதுகாப்பது, நீர், மின்சாரம் போன்ற வளங்களை வீண்விரயம் செய்யாது சிக்கனமாகப் பயன்படுத்துவதும் இஹ்ஸானாகும்.

‘பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும் நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு (முஹ்ஸின்களுக்கு) அருகில் உள்ளது.’ (7: 56)

அதேபோன்று அனைத்து உயிரினங்களுடனும் இஹ்ஸானுடன் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் போதித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் சமூக, பொருளாதார, அரசியல் உட்பட எல்லாத் துறைகளிலும் இஹ்ஸானைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

இஹ்ஸானைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கிடைக்கப் பெறும் நன்மைகளை வார்த்தைகளால் வரையறுத்து விட முடியாது. சகவாழ்வு, புரிந்துணர்வு, சமூக ஒற்றுமைக்கு இஹ்ஸான் அடித்தளமிடுகின்றது.  நாசகார அழிவு அரசியலிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க இஹ்ஸான் உதவுகின்றது.

இஹ்ஸானைக் கடைப்பிடித்து வாழும் மக்களோடு அல்லாஹுத்  தஆலா இருக்கின்றான் என்பது முஹ்ஸின்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியமாகும்.நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சி நல்லறங்கள் செய்வோருடனே (முஹ்ஸின்களுடனே) இருக்கிறான்.’ (16: 128)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *