அவர்களது தந்தை ஸாலிஹானவர்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்
பெற்றோர் நம்பிக்கையிலும் கொள்கையிலும் நடத்தையிலும் சிறப்புற்று விளங்குகின்றபோது அது அவர்களது சந்ததிகளில் நிச்சயமாக தாக்கம் செலுத்துகிறது. பேற்றோர் நன்னடத்தை மிக்கவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் திகழும்போதும் அவர்களுடைய பிள்ளைகளின் விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றன்றான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் பாடத்தை ஸூரதுல் கஃபின் இறுதிப் பகுதி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
மூஸா, கிழ்ர் (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களது பயணத்தின்போது நிகழ்ந்த மூன்றாவது காட்சி இதுவாகும்.
“பின்னர் அவ்விருவரும் சென்றனர். ஒரு கிராமத்தவர்களிடம் அவ்விருவரும் வந்து, அவர்களிடம் உணவளிக்க வேண்டியபோது அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர். அப்போது அங்கே விழுவதற்கு அண்மித்த நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டபோது அவர் அதை நிறுத்தி வைத்தார்.” (18: 77)
இந்த வசனத்தில் அரபு மூலத்திலுள்ள “யுரீது அன்யன்கழ்ழ” என்ற பிரயோகம் அந்த சுவரை உயிர் வாழும் ஒரு ஜீவராசி போன்று சித்திரிக்கிறது. தூண் விழுந்து விட வேண்டும் என்று அந்தச் சுவர் யோசித்துக் கொண்டிருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. அந்தச் சுவரை கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) நிமிர்த்தி வைத்தார்.
“அந்தச் சுவரோ அந்நகரத்திலுள்ள இரு அநாதைத் சிறுவர்களுக்கு உரியதாக இருந்தது. அதற்குக் கீழே அவ்விருவருக்கும் சொந்தமான ஒரு புதையல் இருந்தது. இன்னும் அவ்விருவரின் தந்தை ஸாலிஹானவராக இருந்தார். அவ்விருவரும் பருவ வயதை அடைந்து உமது இறைவனின் அருளால் அவ்விருவரும் புதையலை தாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என உமது இறைவன் நாடினான். இவற்றை நான் என் விருப்பப்படி செய்யவில்லை.” (18: 82)
அந்த ஊரில் நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவர் இறப்பதற்கு முன் தன் குழந்தைகளுக்காகப் புதையல் ஒன்றை அச்சுவருக்கு கீழ் புதைத்து வைத்திருந்தார். சுவர் இடிந்து விழுந்தால் புதையல் வெளியே தெரிந்து விடும். எனவே, கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) அதைச் செப்பனிட்டார். அக் குழந்தைகள் பெரியவர்களான பின் புதையலை எடுத்து பயன்படுத்திக் கொள்ள இது உதவியது.
அந்த இரண்டு அநாதைச் சிறுவர்களும் தங்களது தந்தையின் நன்னடத்தையால் காப்பாற்றப்பட்டனர். அந்தச் சிறுவர்களின் நன்னடத்தை பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. அவர்கள் இருவரும் யார் மூலமாகப் காப்பாற்றப்பட்டனரோ அவர் அவ்விருவருக்கும் நேரடித் தந்தை அல்லர். மாறாக, அவர்களுக்கும் அவருக்கும் இடையே ஏழு தலைமுறை இடைவெளி இருந்தது என்று ஒரு கருத்தும் உள்ளது.
வசனத்தின் இறுதியில் “அவ்விருவரும் தமது புதையலைத் தாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என உமது இறைவன் நாடினான்” (18: 82) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளிலும் வித்தியாசமான வார்த்தைப் பிரயோகங்கள் கையாளப்பட்டன. சிறுவனைக் கொலை செய்தது தொடர்பாக கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) குறிப்பிடும்போது “அவனுக்கு மாற்றாக அவனை விடச் சிறந்த குழந்தை ஒன்றை அவ்விருவருக்கும் அவர்களின் இறைவன் வழங்க வேண்டுமென நாம் விரும்பினோம்” (18: 81) என்றும் மரக்கலத்தைத் துளையிட்டது தொடர்பாக பேசும்போது “அதை நான் பழுதாக்க நினைத்தேன்” (18: 79) என்றும் கூறினார்கள்.
ஆனால், இங்கு “உமது இறைவன் நாடினான்” என்று விருப்பத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறியுள்ளார். அநாதைச் சிறுவர்கள் இருவரும் பருவமடைந்ததும் அது வரை அவர்கள் உயிருடன் இருப்பதென்பதும் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் ஆற்றலால் மட்டுமே சாத்தியமானது என்பதே இதற்கான காரணமாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்! அல்லாஹ்வின் அருளும் அரவணைப்பும் இல்லாமல் உலகத்தில் எதுவும் நடப்பதில்லை.
“ஒருவரின் நற்செயல்கள் மூலமாக அல்லாஹ் அவருடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பாதுகாக்கின்றான்” என்று இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிவிட்டு “அவ்விருவரின் தந்தை ஸாலிஹானவராக இருந்தார்” (18: 82) என்ற வசனத்தை ஓதினார்கள். (இப்னுல் முபாரக், அத்தபரீ)
முஹம்மத் இப்னு அல்முன்கதிர் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்: ஒரு மனிதரின் ஸாலிஹான செயல்கள் மூலமாக அல்லாஹ் அவருடைய பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பாதுகாக்கிறான். அவர் வாழும் நகரத்தையும் சூழவிருக்கும் குடியிருப்புக்களையும் அல்லாஹ் பாதுகாக்கிறான். அனைத்தும் எப்போதும் அல்லாஹ்வின் பாதுகாவலின் கீழ் இருக்கும். (அல்ஹில்யதுல் அவ்லியா வதபகாதுல் அஸ்ஃபியா)
தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய வேண்டும் என்றும் எந்தவொரு பிழையான சித்தாந்தங்களாலும் கவரப்பட்டு நெறி பிறழக் கூடாது என்றும் அவர்கள் தங்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே வாழ வேண்டும் என்றும் கருதுகின்ற பெற்றோர்கள் அதற்கு ஏற்றவிதமாக இந்த உலகத்தில் வாழ்ந்து மறைய வேண்டும். இதுவே இறைதூதர்கள், உண்மையாளர்கள், நல்லடியார்கள், நபித் தோழர்கள் ஆகியோரது மரபாகும்.
சிறையிலிருந்த யூசுஃப் (அலைஹிஸ்ஸலாம்) தங்களது கனவுகளுக்கு விளக்கம் கோரிய சிறைத் தோழர்களுக்கு கனவு விளக்கம் அளிப்பதற்கு முன்னால் கூறி வார்த்தைகளைப் பாருங்கள்: “எனது மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தையே நான் பின்பற்றுகிறேன். எந்த ஒன்றையும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எமக்குத் தகுதியானதன்று. இது எம் மீதும் ஏனைய மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.” (12: 38)
அவ்வாறே யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் மரணத் தறுவாயில் தம் பிள்ளைகளிடம் “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” என கேட்டபோது அவர்கள் “உங்கள் இறைவனும் உங்களுடைய மூதாதையர்களாகிய இப்ராஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு முஸ்லிம்கள் ஆகிவிடுவோம்” எனக் கூறினார். (2: 133)
பிள்ளைகளை நன்கு பயிற்றுவித்து அறிவு ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்தி நல்வழியில் நிலைத்து நிற்கச் செய்து விட்டு இறைவனை சந்திக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மூலமாக அந்தஸ்தில் உயர்ந்து செல்கிறார்கள். இமாம் இப்னுல் முஸய்யப் (ரஹிமஹுல்லாஹ்) தன் மகனுக்கு இவ்வாறு கூறினார்:
“என் அன்பு மகனே! நான் உனக்காக எனது பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்கிறேன். ஏனெனில், உன் மூலமாக நான் பாதுகாக்கப்பட்டலாம்” என்று கூறிவிட்டு “அவ்விருவரின் தந்தை ஸாலிஹானவராக இருந்தார்” (18: 82) என்ற வசனத்தை ஓதினார்கள். (நூருல் இக்திபாஸ் ஃபீ மிஷ்காத் வஸிய்யா- இப்னு ரஜப்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஸஈத் இப்னுல் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: “தந்தை தன் பிள்ளைகளுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமாகும்.” (மிஷ்காத்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: “மனிதன் இறந்து விடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகிறது. ஆனால், மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
1. தொடர்ந்து நீடிக்கும் பலன் தரும் நிலையான நல்லறங்களை ஆற்றி விட்டுச் செல்வது.
2. மக்கள் பயனடையக் கூடிய கல்வியை அளித்து விட்டுச் செல்வது.
3. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த பிள்ளை.” (மிஷ்காத்)
தந்தையின் முயற்சியின் விளைவாக அவரது மகன் இறையச்சமுடையவனாகவும் பேணுதல் மிக்கவனாகவும் விளங்குவானாயின் அந்தப் புதல்வன் இந்த உலகில் உயிர் வாழும் வரை அவன் புரியும் நற்செயல்களுக்கான கூலி அவனது தந்தைக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் அந்த மகன் நல்லவனாக இருப்பதால் அவனுடைய தந்தைக்காக துஆ செய்து கொண்டும் இருப்பான்.
தந்தை மிகச் சிறந்த நல்லடியாராக இருந்தாலும் சிலபோது அவருடைய பிள்ளைகள் நெறிதவறிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கான ஓர் உதாரணத்தையும் அதன் விளைவையும் எடுத்துக்காட்டும் ஒரு சரிதையையும் அல்குர்ஆன் சமர்ப்பிக்கிறது.
ஒரு தோட்டத்தின் சொந்தக்காரர் அந்தத் தோட்டத்தின் விஷயத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவராக இருந்தார். தோட்டத்தில் அறுவடை செய்தவுடன் தனது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையான உணவை ஒதுக்கி வைத்து விட்டு மீதமுள்ளதை ஏழைகளுக்கு தர்மம் செய்து விடுவார். அவர் இறந்த பின் அவரது பிள்ளைகள் அந்தத் தோட்டத்தை வாரிசாகப் பெற்றார்கள். ஆனால், தந்தையைப் போன்று ஏழைகளுக்கு இரங்கும் மனோபாவம் அவர்களிடம் இருக்கவில்லை.
“தோட்டவாசிகளை நாம் சோதித்தது போல் இவர்களையும் நிச்சயமாக நாம் சோதித்தோம். இவர்கள் அதை அறுவடை செய்வதற்காக அதிகாலையில் செல்வதாக சத்தியம் செய்தபோது ‘அல்லாஹ் நாடினால்’ என அவர்கள் கூறவில்லை. அதனால் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது உமது இறைவனிடமிருந்து கற்றக்கூடிய நெருப்பானது அதனைச் சுற்றியது. உடனே கறுப்பு சாம்பாலைப் போன்றானது.” (68: 17-20)
இருள் கவ்விய இரவைப் போன்று காய்ந்துலர்ந்த சருகுகளாக அவர்களது தோட்டம் உருப்பெற்றது.
தீய எண்ணம் கொண்டவர்களாக அதிகாலையில் புறப்பட்டார்கள். அவர்கள் காலை வேளையை அடைந்ததும் “நீங்கள் அறுவடை செய்பவராக இருந்தால் உங்கள் விளை நிலங்களுக்கு அதிகாலையிலேயே செல்லுங்கள்” என ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்.” (68: 21-22)
அறுவடை நாளில் எந்தவோர் ஏழையும் உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்கள். அவர்களுடைய பேச்சு எவருடைய காதுக்கும் எட்டவில்லை. “இன்றைய தினம் உங்களிடம் எந்த ஏழையும் நுழையக்கூடாது என அவர்கள் தமக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டு சென்றனர். ஏழைகளைத் தடுக்க ஆற்றல் உடையவர்களாகவே அவர்கள் அதிகாலையில் சென்றனர்.” (68: 23-25)
அதிகாரம் தங்கள் கைவசம் வந்து விட்டதாகக் கருதிக் கொண்டும் தங்களின் எண்ணப்படி அறுவடை செய்ய ஆற்றல் பெற்றிருப்பதாக நினைத்துக் கொண்டும் அவர்கள் சென்றார்கள். ஆனால், நடந்தது அவர்களது விருப்பத்திற்கு நேர் முரணானதாகும். “அழிக்கப்பட்ட அதை அவர்கள் கண்டபோது ‘நிச்சயமாக நாம் வழிதவறி வந்து விட்டோம்; இல்லை நாம் தடுக்கப்பட்டு விட்டோம்’ என்று கூறினார்.” (68: 26-27)
அவர்களது கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. தங்களது தோட்டத்திற்குள்தான் கால்வைத்து இருக்கிறோம் என்பதையும் உணர முடியவில்லை. அந்தத் தோட்டத்துக்கே உரிய செழிப்பையும் கனிகளின் செறிவையும் இழந்து உருக்குலைந்து எந்தப் பயனையும் அதிலிருந்து அடைய முடியாது என்பது தெளிவாகியதும் “நாம் இதிலிருந்து தடுக்கப்பட்டோம்” என்று கூறலானார்கள்.
அவர்களுள் ஒரு நல்லவரும் இருந்தார். “அல்லாஹ்வை நீங்கள் துதித்திருக்க வேண்டாமா என நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று அவர்களில் நடுநிலையானவர் கூறினார். (68: 28)
பிறகு அவர்கள் அனைவரும் தங்களது தவறை உணர்ந்தார்கள். “எங்கள் இறைவன் தூய்மையானவன். நிச்சயமாக நாம்தான் அநியாயக்காரர்கள் ஆகிவிட்டோம் என்று கூறினார். ஆவர்களில் சிலர் மற்றும் சிலரை குறை கூறியவர்களாக முன்னோக்கினர். ‘எமக்கு ஏற்பட்ட கேடே! நிச்சயமாக நாம்தான் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்’ என்று கூறினர்.” (68: 29-31)
அல்ஹஸனாத், பெப்ரவரி- 2020