இப்றாஹீம்(அலை) அவர்களது விழுமியங்களை உயிர்ப்பிப்போம்
நாம் ஏற்றுள்ள இஸ்லாம் மார்க்கத்தை ஒரு மரத்திற்கு ஒப்பிட்டால் அதன் ஆணிவேர் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் தொடர்புற்றுள்ளது என்று கூறலாம். பல நபிமார்களுக்கும் சமூகங்களுக்கும் தலைவராக மிளிர்ந்த அந்த மாமனிதர் மறுமை நாள் வரைக்கும் மனித குலத்திற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ இருக்கிறார். இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளும் அவற்றில் அன்னார் காட்டிய திடவுறுதியும் நம்மை இன்றுவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த மாபெரும் இறைதூதரை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
“நிச்சயமாக என் இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தி விட்டான். அது நேரான மார்க்கமும் நேரிய வழிநடந்த இப்றாஹீமின் மார்க்கமும் என்று நபியே! நீர் கூறுவீராக.” (6: 161)
“நேரிய வழியில் நின்ற இப்றாஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு உமக்கு நாம் வஹீ அறிவித்தோம்.” (16: 123)
“நிச்சயமாக இப்றாஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது.” (60: 4)
“உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைப்போருக்கு அவர்களிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது.” (60: 6)
இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சரிதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில முக்கிய பாடங்களை சுருக்கமாக நோக்குவோம்:
அடிமைத்துவம்
ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் ஒரு பொருளுக்கு அல்லது ஒரு சக்திக்கு அல்லது இன்னொரு மனிதனுக்கு அடிமையாகித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அது சுதந்திரமற்ற ஒரு நிலையாகும். ஆனால், ஒரு முஸ்லிம் எல்லா அடிமைத்தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையாக வாழ ஆரம்பித்தால் அவன் முழு சுதந்திரம் உடையவனாகக் கருதப்படுகிறான். இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அத்தகைய அடிமைத்துவத்தில் முன்னோடியாவார்கள்.
“இப்றாஹீமை அவரது இறைவன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது> அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார்.” (2: 124)
“அவரது இறைவன் அவரிடம் ‘கட்டுப்படுவீராக” என்று கூறியபோது ‘அகிலத்தாரின் இறைவனுக்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டேன்” என அவர் கூறினார்.” (2: 131) அதாவது தனக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் அடிபணிந்து வாழுமாறும் தனது விஷயத்தில் மனத்தூய்மையைப் பேணுமாறும் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். விதிப்படியும் மார்க்க அடிப்படையிலும் அந்தக் கட்டளையை அன்னார் நிறைவேற்றினார். இறைகட்டளைகளையும் பொறுப்புக்களையும் மிகப் பரிபூரணமாக செய்து முடித்தார்.
இதைத்தான் ‘முழுமையாக நிறைவேற்றிய இப்றாஹீம்” (53: 37) என்று மற்றோர் இடத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். முழுப் பிரபஞ்சமும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதை அவதானித்த இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அத்தகைய கட்டுப்பாட்டையும் பணிவையும் அடிமைத்துவத்தையும் தம் வாழ்வின் அடிப்படையாக ஆக்கிக் கொண்டார். அதனை ஒரு மாபெரும் அருளாகவும் கண்டார்.
“நிச்சயமாக இப்றாஹீம் நேரிய வழியில் நின்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகமாக இருந்தார்.” (16: 120)
அவர் ஒரு தனியான சமூகமாக விளங்கினார். ஒரு சமூகம் ஆற்ற வேண்டிய கடமையை தனி ஒருவராக இருந்து செய்து முடித்தார். அவர் ஒரு முழுமையான நிறுவனமாகத் திகழ்ந்தார். பல சந்தர்ப்பங்களில் அவர் தன்னந்தனியாகப் பிரயாணங்களில் ஈடுபட்டு சாதனை படைத்தார். எனவே, பல சமூகங்களுக்குத் தந்தையாக விளங்கினார். ‘உம்மத்” என்ற சொல் ஒரு தனியான திசையை இலக்காகக் கொண்டு செயற்படுவதைச் சுட்டுகிறது. அதன் மற்றொரு பொருள் அவர் தனது வாழ்க்கைப் பாதையின் திசையில் மிகவும் அவதானமாக இருந்தார் என்பதாகும்.
அத்தோடு> இணைந்து வரும் ‘கானித்தன்” என்ற பதம் கட்டுப்பட்டவர்> கவனத்தில் கொண்டு செயற்பட்டவர்> அல்லாஹ்வின் திருப்தியை நாடி பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் அடிமைத்துவத்தை வெளிப்படுத்தியவர் ஆகிய பொருள்களைத் தருகிறது. அல்லாஹ்வுக்குரிய நமது அடிமைத்துவத்தில் அவன்பால் அன்பும் நேசமும் இருக்க வேண்டுமே தவிர, கடமைக்காக எப்படியாவது குறிப்பிட்ட ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற மனோபாவம் இருக்கக்கூடாது. அல்லாஹ்வுக்கான அடிமைத்துவத்தில் எத்தகைய இழப்புக்கள் நேர்ந்தாலும் அவை நமது உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. ஓர் உண்மையான இறையடியான் வாழ்வில் குறுக்கிடும் எந்தவொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்வான். இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு குடும்பம் பற்றிய அக்கறையோ குழந்தை மீதான நேசமோ நெருப்பு பற்றிய அச்சமோ அல்லாஹ்வுக்கு அடிபணிவதற்கு தடையாக அமையவில்லை.
நன்றியுடைமை
“அவர் அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவன் அவரைத் தேர்வு செய்து நேரான பாதையில் அவரை வழிநடத்தினான்.” (16: 121)
இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் துணைவியார் ஹாஜர் (அலைஹஸ்ஸலாம்) அவர்களையும் பிள்ளை இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் ஆள் அரவமற்ற ஒரு பள்ளத்தாக்கில் மக்காவில் விட்டுவிட்டுத் திரும்பியபோது முதல் முறையாகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது கஃபா கட்டப்படவில்லை. அடுத்து கஃபா கட்டப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
“எங்கள் இறைவனே! புனிதமான உனது வீட்டுக்கு அருகில் விவசாயமில்லாத பள்ளத்தாக்கில் தொழுகையை நிலைநாட்டுவதற்காக என் சந்ததியில் சிலரை நிச்சயமாக நான் குடியமர்த்தியுள்ளேன். எனவே> எங்கள் இறைவனே! மனிதர்கள் சிலரின் உள்ளங்களை இவர்கள்பால் நாட்டம் கொள்ளச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனி வர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!” (14: 37)
முதுமையில் தள்ளாத வயதில் குழந்தைப் பேற்றை நல்கியதற்காக தம் இறைவனை இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் போற்றிப் புகழ்ந்தார்கள்.
“முதுமைப் பருவத்தில் இஸ்மாஈலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எனது இறைவன் பிரார்த்தனையை செவியேற்பவன்.” (14: 39)
இன்பங்களை அனுபவித்துக் கொண்டு செழிப்போடு வாழும்போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது இலகுவானது. ஆனால்> வாழ்வில் சவால்களையும் கடுமையான சோதனைகளையும் சந்தித்த நிலையில் வாழும்போது நன்றியுணர்வுடன் நடந்து கொள்வது மிகச் சிரமமானது.
இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது வாழ்வின் பெரும்பகுதி கஷ்டங்களோடும் அர்ப்பணங்களோடுமே கழிந்தது. ஆனால்> அன்னார் அல்லாஹ் வழங்கிய அவனது அருள்களுக்கு நன்றி செலுத்த மறக்கவில்லை. தனது குடும்பத்தாரும் நன்றியுணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்பினார்கள். அவர்களது வழித்தோன்றலில் வந்த யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அடுக்கடுக்கான துயரங்களை சந்தித் வேளையில் சிறைக்கூடத்தில் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்: “எனது மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக்> யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தையே நான் பின்பற்றுகிறேன். நாம் எந்தவொன்றையும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எமக்குத் தகுதியானதன்று. இது எம்மீதும் ஏனைய மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும்> மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.” (12: 38)
நன்றியுணர்வு ஒருவரிடம் இருந்தால்தான் துயரங்களின்போதும் இழப்புக்களின்போதும் பொறுமையுடன் நடந்து கொள்வது சாத்தியமாகிறது. இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் பொறுமை பாரிய அளவில் பிரதிபலித்திருப்பதை அவதானிக்கலாம். நன்றிகெட்ட மனிதனிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது.
இளகிய உள்ளம்
“நிச்சயமாக இப்றாஹீம் இளகிய மனம் படைத்தவரும் சகிப்புத்தன்மை உடையவருமாவார்.” (9: 114)
அதிக மென்மையானவராகவும் மிகவும் இளகிய உள்ளம் கொண்டவராகவும் மனித இனத்தின் மீது இரக்கமும் கருணையும் காட்டக்கூடியவராகவும் அவர் வாழ்ந்துள்ளார்.
மனிதர்கள் பசி> பட்டினியால் சிரமப்படுவதையோ ஆதிக்க சக்திகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்படுவதையோ இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் விரும்பவில்லை. “என் இறைவனே! மக்காவாகிய இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக! மேலும் இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களுக்கும் கனிவர்க்கங்களில் இருந்து உணவளிப்பாயாக என்று இப்றாஹீம் பிரார்த்தித்தார்.” (2: 126)
எந்தவொரு மனிதனும் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவதை அன்னார் ஒருபோதும் விரும்பவில்லை. “என் தந்தைக்கு மன்னிப்பளிப்பாயாக! நிச்சயமாக அவர் வழிதவறியவர்களில் இருக்கின்றார்.” (26: 86)
“எங்கள் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பளிப்பாயாக!” (14: 41)
தன்னைப் புறக்கணித்து தனக்கு மாறு செய்தவர்களைக்கூட மன்னித்தருள வேண்டும் என்றே அவர் ஆவல் கொண்டார். “யார் என்னைப் பின்பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவராவார். யார் எனக்கு மாறு செய்தாரோ நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் எப்போதும் அன்புடையவனுமாவாய்.” (14: 36)
தன்னை ஏற்றுக் கொண்ட மக்களோடு மாத்திரம்தான் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) கருணையோடு நடந்து கொண்டார் என்றில்லை. எல்லா மனிதர்களுடனும் பாசத்தோடு நடந்து கொண்டார். லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமூகத்தை அழிக்க அல்லாஹ் வானவர்களை அனுப்பியபோது அந்த மக்களுக்காகவும் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) குரல் எழுப்பினார். “இப்றாஹீமை விட்டும் திடுக்கம் நீங்கி நன்மாராயம் அவரிடம் வந்தபோது லூத்துடைய சமூகத்தார் பற்றி எம்முடன் அவர் தர்கிக்கலானார். நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத்தன்மை உடையவரும் இளகிய மனம் உடையவரும் இறைவன்பால் மீள்பவரும் ஆவார்.” (11: 74-75)
மனிதர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் மாறுசெய்பவர்களாக நடந்து கொண்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்பதுதான் இறைதூதர்களது பெருவிருப்பமாக இருந்தது. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் தமது சமூகம் பற்றி இப்படித்தான் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்: “அவர்களை நீ தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! அவர்களை நீ மன்னித்து விட்டால் நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவன்| ஞானம்மிக்கவன்.” (5: 118)
‘எங்கள் இறைவா! அவர்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்புவாயாக” (2: 129) என்று இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்)> முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அந்த இறுதித் தூதரைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
“நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது. உங்கள் விடயத்தில் அவர் ஆர்வமுடையவராக இருக்கிறார். இறைநம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமும் உடையவராவார்.” (9: 128)
மனிதர்களின் துன்பம் நமக்குப் பாரமாக இருக்க வேண்டும். அவர்களது நலனில் நாம் அக்கறை கொள்ள வேண்டும். இம்மை> மறுமையின் பயன்கள் மனித குலத்தைச் சென்றடைவதற்கும் பிரச்சினைகள் தீர்வதற்கும் பங்களிப்புச் செய்பவர்களாக நாம் வாழ வேண்டும். இன> மொழி> மத> நிற வேறுபாடுகள் யாவற்றையும் தாண்டி உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் அன்புடனும் நேசத்துடனும் பரிவுடனும் நோக்கும் மனோபாவம் நமக்குள் வரவேண்டும். ஆயிரக் கணக்கான வருடங்கள் தாண்டியும் இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமக்குக் காண்பித்து விட்டுச் சென்ற இத்தகைய உத்தமங்கள் இன்றும் உயிர்ப்பிக்கப்படல் வேண்டும்.