உலகம் அழியப் போகிறதா? மரத்தை நட்டுவிடுங்கள்!

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

மனிதர்களிடையே காணப்படும் பல்வகைமை பற்றிய விளக்கம் விவாதிக்கத் தேவையில்லாத ஒன்றாகும். எனினும், அதனைப் பற்றிய ஒரு கருத்தாடலை இந்தப் பத்தியில் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு நாம் முனைப்பு சார்ந்த பல்வகைமை குறித்து ஒரு கண்ணோட்டத்தை செலுத்துவதே நோக்கமாகும். இயல்பு சார்ந்த பல்வகைமை, தொடர்பு சார்ந்த பல்வகைமை என பல்வகைமைகள் பல இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மனிதர்களுள் ஒவ்வொருவரும் இயல்பு காரணமாகவோ அல்லது சூழல் காரணமாகவோ வேறுபட்ட முனைப்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களது முனைப்புகளை அடிப்படையாகக் கொண்ட பிரிப்புகள் தொடர்பில் அறியும்போது அவர்களுடனான தொடர்பைப் பேணுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் அவர்கள் மூலம் ஏனையோர் பயன் பெறுவதற்கும் வழி பிறக்கிறது.

வாழ்வாதார முனைப்பைக் கொண்டவர்கள்

மனிதர்களுள் அடித்தட்டைச் சேர்ந்த பெருந்தொகையானோர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அதாவது, அன்றாடம் வாழ்வாதாரத்தைத் தேடிப் பெற்றுக் கொள்வதில்தான் அவர்களது கவனம் குவிகின்றது. வாழ்க்கையின் வேறு திசைகள் பற்றி சிந்திப்பதற்குக்கூட அவர்களால் முடியாது.

வாழ்வாதாரத்தோடு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலைமைகள் இவர்களுள் கணிசமானோருக்குண்டு. அத்தகையவர்களது பிரச்சினை மேலும் சிக்கலானது.

வளமான வாழ்வைப் பேண விரும்புபவர்கள்

இவர்கள் முன்னைய தரத்தைத் தாண்டி மேலே வந்தவர்கள். வாழ்வாதாரத்துக்கான நிரந்தர வருமானம் மற்றும் அடிப்படை வசதிகளை இவர்கள் பெற்றிருப்பார்கள்.

தற்போது அவர்கள் விரும்புவது வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வதையே. உழைப்பை இரு மடங்காக்கியோ அல்லது வேறு வழிகளிலோ வளமுடன் வாழுகின்ற ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள இவர்கள் பிரயாசைப்படுகிறார்கள்.

குபேர மனம் படைத்தவர்கள்

இவர்கள் உண்மையில் ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணப்பாட்டை உடையவர்கள். இவர்களிடம் எது இருக்கிறதோ அதைப் பெருமனதோடு பிறருக்களிப்பதில் உவகை கொண்டவர்கள். இத்தகையவர்களது எண்ணிக்கை பொதுவாகக் குறைவாகவே காணப்படும்.

இவர்களிடம் பணமிருந்தால் அதன் மூலம் அதிகமானவர்கள் பயன் பெறுவார்கள். அறிவிருந்தால் அதன் மூலம் எண்ணற்றவர்கள் பிரயோசனம் பெறுவார்கள். மார்க்கமிருந்தால் அதன் மூலம் பலர் சீர்திருத்தம் பெறுவார்கள். அந்தஸ்து, அதிகாரம் என்பன இருந்தால் அவற்றின் மூலம் பலர் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு கொள்வார்கள். இவர்கள் தன்னலம் பாராதவர்கள்ளூ சேவை மனப்பான்மை உடையவர்கள். ஏழைகளிலும் இத்தகையோர் இருப்பார்கள். அவர்களிடம் உடல் உழைப்புத்தான் இருக்கும். அதனைப் பயன்படுத்தி முடியுமான உதவிகளை பிறருக்கு அவர்கள் வழங்கிக் கொண்டிருப்பார்கள்.

சமூக அந்தஸ்தை விரும்புபவர்கள்

சமூகத்தில் மதிக்கத்தக்கதோர் இடத்தை இவர்கள் அடைய முயற்சிப்பார்கள். பணத்தால், பதவிகளால், ஆன்மிகத்தால், பரம்பரைச் செல்வாக்குகளால், அதிகாரங்களால் சமூக அந்தஸ்தைப் பெறும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருப்பார்கள்.

இத்தகைய சமூக அந்தஸ்தை முன்னேற்றகரமான வழிமுறைகளில் பயன்படுத்துகின்றவர்களும் இருப்பார்கள். சாணக்கியம் போதாமையால் தமக்குக் கிடைத்த சமூக அந்தஸ்தை பழுதாக்கிக் கொள்பவர்களும் இருப்பார்கள்.

இவர்கள் மக்களது அபிப்பிராயங்களையும் அபிலாஷைகளையும் அனுசரித்து நடந்து கொள்வார்களாயின் மக்கள் மனங்களில் இடம்பிடித்துக் கொள்வார்கள். தவறினால் மக்கள் இத்தகையவர்களை கருத்திலெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

உல்லாசமானவர்கள்

எந்த விடயத்திலும் சீரியசாக இருக்க மாட்டார்கள். ஹாஷ்யம், பொழுதுபோக்கு, குதூகலம், முடிவில்லாத கதை, கலை, விளையாட்டு… என இவர்களது வாழ்க்கை Enjoy பண்ணுவதாகவே இருக்கும். இத்தகையவர்கள் ஒன்றாகச் சேர்ந்திருப்பதில் எப்போதும் கரிசனையோடிருப்பார்கள். அவர்களுக்கேயுரிய உல்லாசத்தோடு சில வேளைகளில் நன்மைகள் செய்வதற்கும் ஒன்றுசேர்ந்து கொள்வார்கள்.

தனிமை இவர்களுக்கு கசப்பானதாக இருக்கும். அதிக உல்லாசமும் ஹாஷ்யமும் உடைய ஒருவரை இவர்கள் சுற்றிச் சுழல்வார்கள். சமூகத்தில் அவர்களுக்கு என்றும் துணை அவர்கள்தான்.

சீரியஸானவர்கள்

உல்லாசத்துக்கு நேரெதிரானவர்கள். சிரிப்பை அவர்கள் கடன் வாங்கித்தான் தருவார்கள். எதிலும் திருப்தி காண மாட்டார்கள். விமர்சிப்பதிலும் குறை காண்பதிலும் முனைப்பாக இருப்பார்கள். ஒவ்வொரு விடயத்திலும் தங்களுக்கென்று ஒரு கண்ணோட்டத்தையும் பார்வையையும் இவர்கள் கொண்டிருப்பார்கள். தாங்களே சரியானவர்கள் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். ஒன்றை சரியென்றும் மற்றொன்றைப் பிழை என்றும் நிறுவும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பணிவு ஆகிய அனைத்தும் இவர்களைப் பொறுத்தவரை அடிமைத்தனமும் கோழைத்தனமுமாகும்.

வரலாற்று மனிதர்கள்கூட இவர்களது உள்ளங்களில் இடம்பிடிக்க முடியாது. அஞ்சா நெஞ்சம் கொண்ட ஆர்வக் கோளாறு ஒன்று மட்டுமே இவர்களுக்குக் கவர்ச்சியானதாக இருக்கும்.

இவர்களுள் ஒரு சாரார் கிஞ்சிற்றும் கவலையற்றவர்களாக தாம் நினைத்ததை செய்து முடிப்பார்கள். முற்றுமொரு சாரார் ஒதுங்கியவர்களாக இருந்த நிலையில் சமூகத்தை விமர்சித்துக் கொண்டே வாழ்ந்து விட்டுப் போவார்கள்.

பரவசமூட்டுபவர்கள்

இவர்கள் எப்போதும் பரபரப்பை விரும்புவார்கள். பரபரப்பூட்டும் விடயங்களை தேடித் திரிவார்கள். அவற்றைத் தீவிரமாகப் பரவச் செய்வார்கள். மகிழ்ச்சியோ, துக்கமோ, கவலையோ, அதிர்ச்சியோ… ஏதோ ஒன்றினூடாக மக்கள் மனங்களை கொதிநிலையில் வைத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆத்ம திருப்தி.

எழுத்தில் அல்லது பேச்சில் இவர்கள் விற்பன்னர்களாக இருப்பார்கள். கற்பனைகள், பொய்கள், மிகைப்படுத்தல்கள், மலினப்படுத்தல்கள் என உண்மைகளைப் பிசைந்து கொடுப்பதற்கு இவர்களிடம் ஏராளமான மசாலாக்கள் இருக்கும். ஒவ்வொருவரதும் சுவைக்கேற்ப விவகாரங்களை பிசைந்து கொடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு கைவரப் பெற்றதாக இருக்கும்.

இத்தகைய ஆற்றல் பெற்றவர்களில் உண்மையின் பக்கமும் நீதியின் பக்கமும் மனித நேயத்தின் பக்கமும் உறுதியாக நின்று தடம்பதிப்பவர்களும் உண்டு. இத்தகையவர்களது தடம் உறுதியாக இருந்தபோதிலும் அவர்கள் வாழ்கின்ற இடம் அவர்களுக்கு உறுதியையும் உத்தரவாதத்தையும் வழங்குவதாக பலபோது இருப்பதில்லை. அதனால் இத்தகையோரது எண்ணிக்கை உலகில் அருகிச் செல்கிறது.

மேலோங்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்

உலகை வளங்களாகவும் அதிகாரங்களாகவும் பார்ப்பவர்கள் இவர்கள். உலகின் அதிகமான வளங்களும் அதிகாரங்களும் தங்களிடமிருக்க வேண்டும் என்பது இவர்களது எண்ணமாகும். அப்போது மனித சமூகத்திற்கு நன்மை செய்யலாமென்று இவர்கள் கருதுகின்றார்கள் போலும்.

எனினும் இந்த இலக்கை அடைவதோ அடைந்து விட்டால் தக்கவைத்துக் கொள்வதோ இலகுவானதல்ல. அடைவதும் தக்கவைத்துக் கொள்வதும் கடும் பிரயத்தனங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகும். மட்டுமல்ல, பல்வேறு போட்டிகளையும் அதற்காக அவர்கள் சந்தித்தாக வேண்டும்.

அந்தப் போட்டிகளும் பிரயத்தனங்களும் அவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை எதிர்வுகூற முடியாது.

மேடு, பள்ளங்கள் இல்லாத சமவெளியில் நடப்பது போன்று இத்தகையவர்களது பயணங்கள் அமைவதில்லை. பயணம் கரடுமுரடாகும்போது அவர்களும் கரடுமுரடான நிலைக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.

உலகை வளங்களாகவும் அதிகாரங்களாகவும் பார்ப்பதற்குப் பதிலாக உலகை மனிதர்களாகவும் மனிதர்களை உலகமாகவும் பார்ப்பவர்களாக இவர்கள் மாறினால் உலகம் ஒரு சுவன பூமியாக மாறும்.

மனித சமூகம் இவ்வாறுதான் பல்வேறு வகைப்பட்ட முனைப்புக் கொண்டவர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல்வேறு முனைப்புகளைக் கொண்டவர்களும் சமூகத்தில் இருக்கின்றனர். இவ்வாறானதொரு சமூகக் கட்டமைப்பில் வாழுகின்றவர்கள் முன்னேற்றம், அபிவிருத்தி, சீர்திருத்தம், சுபிட்சம் போன்ற எண்ணக்கருக்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது இலேசானதல்ல.

இருப்பினும் இத்தகையதொரு சமூகச் சூழலில் தனது தகுதிக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் நேர்மறை பங்களிப்பை (Positive contribution) வழங்க முடியுமாக இருந்தால் மேலே நாம் கூறிய எண்ணக்கருக்களை குறிப்பிடத்தக்களவு செயல் வடிவம் பெறச் செய்யலாம். நேர்மறை பங்களிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கானதாக இராமல் மனித சமூகத்துக்கானதாக இருக்கவும் வேண்டும்.

‘நீதிகள் வாழும்; நன்மைகள் உயரும்; அநீதிகள் ஒன்று மற்றொன்றுடன் மோதி தனக்குள்ளேயே அழிந்து போகும்’ என்ற நியதியை உறுதியாக நம்புவோரால் மட்டுமே எத்தகைய சூழலிலும் மேற்கூறப்பட்ட நேர்மறை பங்களிப்பை நல்க முடியும்.

நாட்டுக்கும் மக்களுக்கும் சுபிட்சமானதோர் எதிர்காலம் அமைய வேண்டுமென்று ஆசிப்போருக்கு இது தவிர மற்றொரு வழியல்லை.

‘இருட்டை ஏசாதே! முடியுமாயின் ஒரு குப்பிவிளக்கை ஏற்றி வை!’

‘அடுத்த நிமிடத்தில் உலகம் அழியப் போகிறது என்ற நிலையில் ஒரு மரக்கன்று உனது கையிலிருந்தால் அதனை நட்டிவிட முடியுமாயின் நட்டி விடு’ (நபிமொழி)

போன்ற பொன்மொழிகள் எந்த சூழலிலும் மனிதன் நேர்மறையான பங்களிப்புகளை செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களாக இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *