எதிர்வினையாற்ற வேண்டாம்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

முன்னாள் தலைவர்- இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

எதிர்வினையாற்றல் சிறுபிள்ளைத்தனமான ஒரு வகை மனப்பாங்காகும். அடித்தவனைத் திருப்பியடித்தல், ஏசியவனை திருப்பி ஏசுதல், முறைத்தால் முறைத்துப் பார்த்தல் போன்ற எதிர்வினையாற்றல்கள் பெரிய மனம் கொண்டவர்களிடம் காணப்படுவதில்லை.

பெருமனம் படைத்த ஒருவர் தன்னோடு பொருத வருபவருடன் பொருத மாட்டார். திட்டியவரை திட்ட மாட்டார். மாறாக திட்டியவர் திருந்த வேண்டும் என்றே நினைப்பார். அல்லது திட்டியவரை திருத்துவதற்கு தருணம் பார்த்திருப்பார். எதிர்த்து நின்று பழி தீர்க்க மாட்டார்.

சிலபோது இந்தப் பொறுமையையும் தாண்டிச் சென்று தன்னை உபத்திரத்திற்கு உள்ளாக்கியவருக்கு உதவி செய்வார். அல்லது உபத்திரம் செய்தவர் அறியாமையினால் அதனை செய்திருப்பார் எனக் கருதி பெருமனம் கொண்டு அவரை மன்னித்து விடுவார். ரஹ்மான் என்ற கருணையாளனின் குணங்களும் இப்படிப்பட்டவையே. எனினும் அவற்றிற்கு ஒப்புவமை கிடையாது. அல்லாஹ்வின் குணவியல்புகளால் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்” என்ற நபி போதனையை செவிமடுத்திருப்பீர்கள். அந்த கருணையாளனாகிய அல்லாஹ்வை நம்பியவர்கள் அவனது இந்த அழகிய குணவியல்புகளால் முடியுமானவரை தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள்.

இன்றைய உலகம் இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஒரு வித ஃபோபியாவால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் ஒரு பயங்கரவாதமாகவும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கப்பட்டே இந்த ஃபோபியா வளர்க்கப்படுகிறது. எனவே, முஸ்லிம்களுக்கு இது ஒரு நெருக்கடிமிக்க காலமாகும். இந்த நெருக்கடியான சூழலில் இஸ்லாத்திற்கு எதிரான மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை செவிமடுக்க நேரிடுகின்றபோதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கெடுபிடிகள் அதிகரிக்கின்றபோதும் முஸ்லிம்களில் பலர் எதிர்வினையாற்ற முனைகிறார்கள்.

நெருக்கடி மிக்க சூழலொன்றில் வாழுகின்ற முஸ்லிம்கள் இவ்வாறு எதிர்வினையாற்ற முற்படுகின்றபோது அது தெளிவின்மைகளை வளர்க்கவே உதவும். தெளிவின்மைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை.

இது போன்ற சந்தர்ப்பங்களில் சமூகம் சார்பில் பிரச்சினைகளை அணுகவல்லவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஏனையோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை ஒன்றிருக்கிறது. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதிலே தமது கவனத்தை செலுத்துவதற்கு முனைய வேண்டும்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் என்ற பெயர்களுக்கு வரைவிலக்கணமாக வாழ முயற்சிப்பதே அந்த வழிமுறையாகும்.

இஸ்லாம் என்பதன் பொருள் அமைதி, முஸ்லிம் என்பதன் பொருள் ‘கட்டுப்படுபவன்’ அல்லவா?

அவ்வாறாயின் கட்டுப்பாடாக நடந்து சொல்லாலும் செயலாலும் அமைதியை பரவச் செய்யும் பெருமனம் கொண்ட மனிதர்களாக வாழ்வதே நெருக்கடிகளின்போது முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

நெருக்கடிகளை தவிர்க்கும் நோக்கில் பகட்டுக்காக செய்கின்ற ஒரு கருமமல்ல இது. மாறாக, இஸ்லாத்தின் தூய வழிகாட்டல் இதுதான் என்ற புரிதலோடு செய்யப்பட வேண்டியதொரு கடமையாகவே இது காணப்படுகின்றது.

இந்த விடயத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டியதன் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே தோன்றுகிறது. காரணம், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான ஃபோபியா தொழில் உலகில் சர்வ சாதாரணமாகி வருகிறது. இது முஸ்லிம்களின் உணர்ச்சி விசையை எப்போதும் அழுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இவற்றுக்கு பதிலளிக்க முற்படுகின்றவர்கள் அறிவுபூர்வமான, பண்பாடான அணுகுமுறைகளை மறந்து அவசரப் புத்தியோடும் ஆத்திரத்தோடும் செயல்பட முனைகின்றனர்.

எத்தகைய சர்ச்சைகள், நெருக்கடிகள் உருவாகின்றபோதும் முதலில் நிதானம், அடுத்து அளவான, அவசியமான பேச்சு, அதனைத் தொடர்ந்து பண்பாடான அணுகுமுறை, மேலும் ஒரு படி சென்றால் கருணையை வெளிப்படுத்துகின்ற பக்குவம்… என முஸ்லிம்கள் தம்மை உரமூட்டிக் கொள்ள வேண்டிய பண்பாடுகளில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.

இன்றைய சூழலில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான தப்பபிப்பிராயங்களை வெளியிடுபவர்கள் யாராக இருந்தபோதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து சிநேகபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

அதற்கும் அப்பால் எமது அணுகுமுறையை விஸ்தரிப்பதற்கும் இடமிருக்கிறது. எம்மைப் பற்றி தப்பபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்தபோதிலும் அவர்களுக்குள் அவர்களுக்கே உரிய உண்மையான கவலைகளும் கரிசனைகளும் இருக்கவே செய்யும். அவற்றை விளங்கி குறித்த கவலைகள், கரிசனைகள் தொடர்பில் நாமும் பங்காளர்களாக மாற முடியுமாயின், அப்போது பேதம் கடந்த நட்பும் பாசமும் துளிர்விடுவதற்கான தருணங்களாக அவை இருக்கவே செய்யும்.

இந்த நிலையை எட்டிப் பிடிக்காமல் அனைவரும் கனவு காணுகின்ற சகவாழ்வோ சமாதானமோ எட்டும் கனியாக இருக்கப் போவதில்லை.

தற்போதைய சூழலில் சாதகமோ பாதகமோ, நன்மையோ தீமையோ, நட்போ, பகையோ, அனைத்தையும் கொட்டித் தீர்க்க சமூக வலைத்தளங்கள் இருப்பதால் விவஸ்தையில்லாமல் அவற்றை பயன்படுத்துகின்ற நிலைக்கு பலரும் சென்றிருக்கிறார்கள். கொட்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களில் மனித உறவுகள் நீர்த்துப் போவதைத் தவிர மற்றொன்று நடக்க முடியுமா? எமது சந்ததிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாம் விட்டுச் செல்ல வேண்டுமானால் உறவுகளை பண்பாடாக வளர்த்துவிட்டுச் செல்வதே எமது பொறுப்பாகும்.

முஸ்லிம்கள் இஸ்லாம் என்ற பெயருக்கு இலக்கணமாகவே வாழ வேண்டும். அமைதியின் காவலர்களாக அதன் பிதா மகன்களாக முஸ்லிம்கள் தங்களை வார்த்துக் கொள்ளும் அளவிற்கு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன.

முஸ்லிமுக்கு இலக்கணம் கற்பித்த இஸ்லாத்தின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியது ஒன்றே இது விடயத்தில் எமக்கு வழிகாட்டப் போதுமானதாக இருக்கின்றது.

எந்த மனிதனது கையாலும் நாவாலும் பிற மனிதர்கள் துன்பங்களின்றி பாதுகாக்கப்படுகிறார்களோ அவனே முஸ்லிம்.”

முஸ்லிம் அமைதியின் அச்சாணியாக இருப்பான் என்பதுதானே இதன் அர்த்தம்! இந்த இலக்கணத்தின்படி வாழ்வதற்கு பேச்சு நாகரிகமும் எழுத்து நாகரிகமும் உதவுவது போல் மற்றொன்று ஒரு முஸ்லிமுக்கு உதவ மாட்டாது.

திட்டுபவனைத் திட்டி, மோதுபவனோடு மோதி, மனிதர்களோடு பொருதுகின்ற பொல்லாமை ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்கவே முடியாது. ஏனெனில், ஒரு முஸ்லிமின் அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுகின்ற நெறிமுறையானது ஃபோபியா தொழிலில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் கூறுவது போல ஒரு பயங்கரவாதமல்ல. மனிதர்களை உயர்ந்த பண்பாடுகள் மற்றும் நாகரிகம் என்பவற்றை நோக்கி வழிநடத்துகின்ற அமைதி நெறிமுறையாகவே இஸ்லாம் இருக்கிறது.

அத்தகைய அமைதியை தனது உள்ளத்திலும் தான் வாழ்கின்ற உலகிலும் நிலைநிறுத்த முயற்சிப்பவனே முஸ்லிம். அந்த அவனது முயற்சிக்கு சன்மானமாகவே மறுமையின் வீடான அமைதியின் இல்லத்தை அதாவது சுவனத்தை இறைவன் அவனுக்கு பரிசளிக்கக் காத்திருக்கிறான்.

அமைதியடைந்த ஆன்மாவே! எனது நல்லடியார்களோடு எனது சுவனத்தில் நுழைந்துவிடு. (நீ போற்றிப் பாதுகாத்த அமைதி காரணமாக) உனது இரட்சன் உன்னைப் பொருந்திக் கொண்டான். (அவன் உனது உள்ளத்தில் நிரப்பிய அமைதி காரணமாக) நீ உனது இரட்சகனை பொருந்திக் கொண்டாய்.”

இந்த இதமான வார்த்தைகள் வாழ்த்துக்களாக தன் காதில் விழ இருக்கின்ற விடுதலை நாளை நினைத்தவனாகவே முஸ்லிம் இந்த மண்ணில் நடமாட வேண்டும்.

அந்த வகையில் ஒரு முஸ்லிம் அமைதியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை மலை போன்று உறுதியானதாகும். எத்தகைய நெருக்கடி மிக்க சூழலாக இருந்தாலும் அந்த நம்பிக்கை அவனது வாழ்வில் தளர முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *