ஏன் சட்டத்தை மீறுகிறார்கள்?
மனிதர்களில் நான்கு வகையினர் இருக்கின்றனர். அவர்களுள் மிக உயர்ந்த வகையினரை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
1. சொல்வதை செவிமடுத்து (அதில்) மிக அழகானதை (தெரிவு செய்து) பின்பற்றுபவர்கள். (39: 18)
‘இவர்கள் நல்வழியை அடைந்தவர்கள்ளூ இவர்களே அறிவுடையவர்கள்’ என்றும் இத்தகைய மனிதர்களை அதே வசனத் தொடரில் குர்ஆன் பாராட்டுகின்றது.
2. இவர்கள்தான் மிக உயர்ந்தவர்கள் எனின், அடுத்த தரத்திலிருப்பவர்கள் சுமாராக எப்படி இருப்பார்கள்? ‘சொல்வதை செவிமடுத்து அதனைப் பின்பற்றுபவர்களாக’இருப்பார்கள் என்று கூறலாமல்லவா? ஆம்,அழகானதையெல்லாம் இவர்கள் ஆராய்ந்துகொண்டிருக்க மாட்டார்கள்.எனினும்,சொல்வதை செவிமடுத்துச் செயல்படுவார்கள்.
3. மூன்றாம் தரத்திலிருப்பவர்கள் சொல்வதை செவிமடுப்பார்கள். எனினும், சிந்தனையோடு அதனை உள்வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒரு விடயத்தை அவர்கள் உள்வாங்குவதாயின் பல முறை அவர்களுக்கு அவ்விடயத்தை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கும்.
4. நான்காம் வகையினர் சொல்வதை செவிமடுக்கவே மாட்டார்கள் அவர்கள் தாம் நினைத்ததையே செய்வார்கள்.
கொரோனா மனிதப் பேரவலம் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பேரவலத்தை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருக்கிறதுளூ இலங்கை அரசாங்கம் சொல்லியிருக்கிறது. சுகாதார மற்றும் வைத்தியத் துறையினர் சொல்லியிருக்கிறார்கள். மத பீடங்கள் ஒவ்வொன்றும் சொல்லியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு விஷேடமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் சொல்லியிருக்கிறது.
என்றாலும், மேலே கூறப்பட்ட நான்கு வகையினருள் நான்காம் வகையினர் (அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்கள்தான்) தாம் நினைத்ததையே செய்கிறார்கள்.
நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது சட்டத்தை மீறிக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6200 ஐத் தாண்டி விட்டது. இவர்களுள் முஸ்லிம்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனினும், இவர்களுள் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் ஒரு செய்தியை எத்திவைப்பது இன்றியமையாதது என்று நினைக்கிறேன்.
சட்டத்தை மீறியவர்களுள் மிக மோசமானவர்கள்தான் தனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டிய காலத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் கொரோனாத் தொற்றுடன் நடமாடியவர்கள். இவர்கள் கொள்ளை நோயைக் காவிச் சென்று பரப்பும் வேலையைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு வகையில் இறைதூதருக்கு மாறு செய்திருக்கிறார்கள் எனலாம். ‘தொற்று நோய் பரவும் பிரதேசத்தில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம்’ என்ற நபிகளாரின் அறிவுறுத்தலை மீறியது மட்டுமல்லாமல் தொற்றை காவித் திரிந்து பரப்பியிருப்பது ஒரு சாதாரண செயலாக முடியுமா?
அதற்கடுத்தவர்கள் சட்டத்தை மீறி ஒன்றுகூடியவர்களாவர். மார்க்கத்தின் பெயரால் அவர்கள் ஒன்றுகூடியிருப்பினும் அவர்கள் செய்தது பாரிய தவறாகும். அவர்கள், உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து செய்கின்ற நன்மைக்கு (அதாவது கொரோனா எதிர்ப்புப் போராட்டத்திற்கு) எதிராக வேலை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் குர்ஆனின் போதனையையும் மீறியிருக்கிறார்கள். ‘நன்மைக்குப் பரஸ்பரம் ஒத்துழையுங்கள்ளூ தீமைக்கு ஆதரவாக ஒத்துழைக்காதீர்கள்’ என்று அல்-குர்ஆன் போதிக்கிறது. இவர்கள் தீமைக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.
மூன்றாவது தவறை செய்தவர்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள். இவர்கள் நாட்டுச் சட்டத்தை மீறியதோடு இஸ்லாமிய சட்டத்தையும் மீறியிருக்கிறார்கள். பொது நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் (மஸ்லஹா முர்ஸலா) இற்கு மதிப்பளித்துக் கட்டுப்படுவது கட்டாயக் கடமை (வாஜிப்) என்று இஸ்லாமிய சட்ட விதி கூறுகின்றது.
இந்த வகையில், மேலே கூறப்பட்ட தவறுகளை செய்தவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மார்க்க சட்ட திட்டங்களுக்கும் முரணாக செயல்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அறியாமையில் செயல்பட்டிருந்தாலும்கூட குறித்த பாவங்களுக்காக தௌபாவும் இஸ்திஃபாரும் செய்ய வேண்டும்.
சொல்வதை செவிமடுக்காமல் நினைத்ததை செய்ய முயலுகின்றவர்கள்தான் இந்தத் தவறுகளை செய்கின்றார்கள். இவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களாக இருந்தாலும் மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் இவர்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் சொற்பமானவையல்ல.
கட்டுப்படுதல் என்ற உன்னதமான பண்பை இஸ்லாம் எப்போதும் செவிமடுத்தலுடன் இணைத்தே பேசியிருக்கிறது. செவிமடுக்காதவர்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்ளூ கிரகித்து உள்வாங்க மாட்டார்கள். இன்னும் சிலரோ, செவிமடுக்க விரும்புவதே இல்லை. இத்தகையவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சட்டத்தால் மட்டுமே இவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.
இத்தகையவர்களால் விளையும் விபரீதங்களை சமூகம் சீரியஸாக சிந்திக்க வேண்டும். இத்தகையோரின் பிரச்சினைக்குத் தீர்வாக செவிமடுத்தல் என்ற பண்பை முனைப்பாக சமூகத்திலே வளர்க்க வேண்டும். சமூகத்தில் சிறந்த முஸ்லிம்களாகவும் நாட்டில் நல்ல பிரஜைகளாகவும் செவிமடுப்பவர்களை விட வேறு எவரும் உருவாக மாட்டார்கள்.
ஜப்பான் மக்களிடமிருக்கின்ற ஓர் அதிசயமான பண்பு கட்டுப்படுதலாகும். அரசாங்கத்தின் ஓர் உத்தரவை இறைவாக்கை விசுவாசிப்பதைப் போல ஏற்றுக் கட்டுப்படுகின்ற ஓர் உன்னதமான மனநிலையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். உலகில் அவர்களை அதி உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்ற ஒரு பண்பாக அதனை சுட்டிக்காட்டினால் மிகையாகாது. அவர்களிடமிருக்கும் மிகச் சிறந்த அடிப்படைப் பண்பு செவிமடுத்தலாகும்.
ஒரு சமூகம் பேச்சுக்கு மறுபேச்சு என்றும் வாதத்திற்கு எதிர்வாதம் என்றும் கருத்துக்கு மாற்றுக் கருத்து என்றும் தனது மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால் செவிமடுத்தல் என்ற பண்பு கானல் நீராகி விடும். இதன் பொருள் சிந்தனைக்குப் பொருந்தாதவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதல்ல. மாறாக, சிந்தித்து உணர வேண்டியவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கே இந்தப் பண்பு அவசியப்படுகின்றது. அதனை சமூகத்தில் பரவலாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு முயல வேண்டும்.
-உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்-
30.03.2020