இனம், மொழி, நிறம், தேசம், சமயம் என்பன மனித சமூகத்தின் பிரிகோடுகள் அல்ல!

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்களிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவரே. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (ஸூரதுல் ஹுஜுராத்: 13)

இங்கு அல்குர்ஆன் முழு மனித சமூகத்தை நோக்கியுள்ளது. தோல்விகளினதும் அழிவுகளினதும் துவக்கப் புள்ளி யாது? என்பதையும் சர்வ வெற்றியினதும் எழுச்சியினதும் ஆரம்பம் எங்கே இருந்து துவங்குகிறது? என்பதையும் இரத்தினச் சுருக்கமாக முன்வைக்கிறது. புவியோட்டில் வாழும் நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்கள். உங்களை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்தவன் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினான் என்ற யதார்த்தம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். மனிதர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை பல்வேறு குழுக்கள், சமுதாயங்கள், கோத்திர்ங்களின் வடிவில் அமைத்திருப்பதெல்லாம் பரஸ்பர அறிமுகத்திற்கும் ஒத்துழைப்புக்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதற்காகவே.

மனிதர்களில் சிலர் வெள்ளையர்களாகவும் இன்னும் ஒரு சாரார் கறுப்பர்களாகவும் படைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு மொழிகளை பேசுவதும் போட்டி போடுவதற்கும் பெருமை பேசுவதற்கும் பரஸ்பர இழிவுபடுத்துவதற்கும் தூற்றுவதற்கும் அல்ல. இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளை சார்ந்ததாகும் என அல்குர்ஆன் கூறுகின்றது. 

“வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே.” (அர்ரூம்: 22)

குடும்பக் கட்டமைப்பு இரத்த உறவுகளிலிருந்து கிளைகள், கோத்திரங்கள் என விரிவாக்கம் பெற்றுள்ளது. எனவே அடிப்படையில் கொண்டாடப்படும் இரத்த பந்த பாசமும் நேசமும் வளர்ந்து வியாபகம் பெற்றிருக்க வேண்டும். அது பாதுகாக்கப்பட வேண்டும். அல்குர்ஆன் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது: 

“மனிதர்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த எங்களின் இறைவனை அஞ்சுங்கள். மேலும் ஓர் ஆன்மாவிலிருந்து அதன் துணையை அவன் உருவாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவர்களிடம் (உரிமைகளை) கோருகின்றீர்களோ! அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.” (அந்நிஸா: 01)மனித உறவுகளை பரஸ்பர ஒத்துழைப்பை விருப்பமில்லாத சுமைகளாக கருதுவதும் உறவுகள் மீது வெறுப்புணர்வு கொள்வதும் அநாகரிகமானதாகும். மாறாக அவற்றை மாபெரும் அருட்கொடையாக கருத வேண்டடும்.  நிற, மொழி, வாழ்விட வேறுபாடுகளும் பாரம்பரியங்களும் தவிர்க்க முடியாத உண்மைகளாகும். அதன் வரலாறு மிக ஆழமானது; அகலமானது; விசாலமானது. அக்கட்டமைப்புக்களை உடைப்பதும் தகர்த்தெறிவதும் மானிடத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். பிரித்தாள்வதும் அவர்களுக்கு அநீதி இழைப்பதும் இறைவனின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களாகும். எந்த சமூகத்திடம் இந்த நோய்கள் காணப்படுகின்றனவோ அந்த சமூகம்  அழிந்தே போய்விடும்.

வரலாற்றின் ஒரு கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கும் பிர்அவ்னுக்கும் இடையே நடந்ததை குர்ஆன் இப்படி முன்வைக்கிறது:

“நிச்சயமாக பிர்அவ்ன் வரம்பு மீறி நடந்து கொண்டான். அதில் வசிப்பவர்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான். அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டு விட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரை சேர்ந்தவனாக இருந்தான். மேலும் எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும் அவர்களைத் தலைவர்களாக்கவும் அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம். மேலும் அவர்களின் மூலமாக பிர்அவ்னுக்கும் ஹாமானுக்கும் அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம்.” (28: 4-6)

இந்த வசனம் மூன்று நிலைப்பாடுகளை முன்வைக்கிறது என பேராசிரியர் ஸையத் ஜலாலுத்தீன் உமரி கூறுகிறார்:

01. எந்தவொரு சாராரையும் அடிமைகளாக நடத்துவதற்காக ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை.

02. தேசத்தில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் ஒவ்வொரு சமூகமும் அவரவர் உரிமைகளைப் பெறுவர்.

03. அரசாங்கம் சாக்குப் போக்குகளை சொல்லியோ உயர்ந்தவர்- தாழ்ந்தவர் என்ற போலி உணர்வுகளின் அடிப்படையிலோ உரிமைகளை முடுக்கிவிட முடியாது.

நாம் கலந்துரையாடும் ஸூரா ஹுஜுராத்தின் 13ஆவது வசனம் வேறுபட்ட நம்பிக்கைகள், நடத்தைகள், கலாசாரங்களைப் பின்பற்றுவோருக்கிடையே பரஸ்பர அறிமுகமும் ஒத்துழைப்பும் பல வழிகளில் பரிணாமம் பெற வேண்டும் என விரும்புகின்றது. அது சுரண்டல்வாதத்திற்கோ அடக்கியாள்வதற்கோ இனச் சுத்திகரிப்பிற்கோ வழிகோலக் கூடாது.அகில நாகரிகத்திற்கு வழிகாட்டிய அல்குர்ஆன் அதன் நாகரிக கட்டமைப்பை பன்முகத் தன்மையுடன் கட்டமைக்கப்பட்டதை காண்கிறோம். அரபுகள்- அரபுகள் அல்லாதோர், உயர் குலத்தார்- தாழ் குலத்தார், எஜமானர்கள்– அடிமைகள் என பல்வேறு வடிவங்களில் முரண்பாடுகள் கூர்மை அடைந்திருந்த சமூகத்தில்தான் ‘ஒரே சமூகம்’ என்ற நிலை மாற்றமடைந்தது. பன்மைத்துவத்தை அங்கிகரித்து ஊக்கமளித்த நிலையிலேயே அதன் முதல் பரம்பரையினர் இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்பினர். இறைத் தூதரின் மதீனாவில் பாரசீகர்கள், அபீசினீயர்கள் என்ற புலம்பேயர்ந்தவர்களும் வேறுபட்ட நம்பிக்கையுடைய கிறிஸ்தவ- யூதர்கள், முஸ்லிம்களும் வாழ்ந்தனர். அவர்களது அந்தஸ்து உரிமைகள் குறித்து மதீனா சாசனம் தெளிவாகக் கூறுகின்றது. உமையாக்கள் மற்றும் அப்பாஸிய ஆட்சிக் காலங்களில் கலாசார மற்றும் அரசியல் போக்குகள் பிரதேசங்களுக்கு ஏற்ப தளமாற்றமடைந்து கொண்டிருந்தது. உஸ்மானியர்களின் ஆட்சியில் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பன்முகத் தன்மை கணிசமானளவு கருத்தாடப்பட்டது. போல்கன் நாடுகளில் கிரேக்க பழமைவாதிகளும் ஆர்மேனிய பழங்குடிகளும் யூதர்களும் சமய ரீதியில் சுய ஆட்சி பெற்றவர்களாக வாழ்ந்தனர். சிறுபான்மை மக்களின் கலாசார சுதந்திரம் பேணப்படுவதற்கு முஸ்லிம்கள் உறு துணையாக இருந்தனர். பன்மைத்துவம் எனும் எண்ணக்கரு இருபதாம் நூற்றாண்டுகளுக்கு புதியதாகவும் அனுபவம் பெறுதலாகவும் இருக்கலாம். ஆறாம் நூற்றாண்டில் இருந்தே முஸ்லிம் ஆட்சியாளர்களும் புத்திஜீவிகளும் பொது மக்களும்  பன்மைத்துவத்திற்கு இயல்பாகவே பரிச்சயம் அடைந்திருந்தனர். இஸ்லாம் மனிதன், மனித கண்ணியம், மானுட நேயம் என்ற தளங்களிலிருந்து பன்மைத்துவத்தைக் கட்டமைக்க நவீன பன்மைத்துவம் அரசியல், பொருளாதார, சடத்துவ பின்னணிகளிலிருந்தே பன்மைத்துவத்தைக் கட்டமைக்கிறது. எனவே கடந்த நூற்றாண்டு முழுதும் நேர் எதிர் தன்மைகளுடன் தடுமாறுவதைக் காண்கிறோம். 

தனி மனித சமூகங்களின் அந்தஸ்தும் கண்ணியமும் மனிதர்களுக்கிடையே பல்வேறு அளவுகளில் அளவிடப்பட்டாலும் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்கள் அவனுக்கு எல்லா நிலைகளிலும் அஞ்சி ஒழுக்க விழுமியங்களோடு வாழ்வோரே. தக்வா என்ற அடித்தளத்திலிருந்து எழும் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவினூடாகவே மனித குல அமைதியும் நிம்மதியும் உறுதியாக கட்டமைக்க முடியும். ஏனைய முயற்சிகள் யாவும் துணை காரணிகளாகவும் தற்காலிக தன்மை கொண்டதாகவுமே இருக்கும்.

அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர், விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

அல்ஹஸனாத்- மார்ச் 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *