கருத்தியல்களின் தோற்றமும் அதில் சூழல்களின் தாக்கமும்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
முன்னாள் தலைவர் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, 
தலைவர் – இஸ்லாமிய சிந்தனைகளுக்கான மத்திய நிலையம்

உருப்படியான தொழிலொன்று கிடைக்காத நிலையில் தொழில் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவர் கூறுகிறார், ‘வாழ்க்கையே சூன்யமாகி விட்டது’ என்று…

வாடகை வீடுகளில் மாறி மாறிக் குடியிருக்கும் ஒருவர் கூறுகிறார், ‘வாழ்க்கை நாடோடியாகி விட்டது!’ என்று…

கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் கூறுகின்றார், ‘வாழ்க்கை வண்டி ‘ரிம்’ இல் ஓடிக் கொண்டிருக்கிறது’ என்று…

சூழல்களாலும் பிரச்சினைகளாலும் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்த பாதிப்புகளோடு மட்டும் இருந்து விடுவதில்லை. மாறாக, குறித்த பிரச்சினைகளிக் தராதரங்களை விளக்குவதற்கு ஒரு கருத்தைச் சொல்ல முற்படுகிறார்கள். அத்தகைய கருத்துக்கள் சரியா, பிழையா? என்பதைவிட தங்களது நிலைமைகளை பிறருக்கு புரிய வைப்பதற்கு அவை உதவுகின்றன என்பததே அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. 

தனி மனிதர்கள் மட்டுமல்ல, தத்தமது சூழல்களாலும் புறக் காரணிகளாலும் பாதிப்புக்குள்ளாகின்ற சமூகங்களும் இதே போன்ற அணுகுமுறைகளையே கையாள்கின்றன. தங்களது பிரச்சினைகளையும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும் பிறருக்குப் புரிய வைப்பதற்கும் அவற்றை முன்னின்று எதிர்கொள்வதற்கும் அச்சமூகங்கள் ஒரு சிந்தனையையோ ஒரு கருத்தியலையோ உருவாக்குகின்றன.

அதத்தகைய சிந்தனைகள் அல்லது கருத்தியல்கள் சரியானவையா? அல்லது பிழையானவையா? என்பதை விட தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள அவை உதவுகின்றன என்பதே அச்சமூகங்களுக்கு முக்கியமாக இருக்கின்றன.

அமெரிக்கா போன்ற வல்லரசுகள் முதல் உலகில் இருக்கின்ற அனைத்து கமூகங்களும் விதிவிலக்கின்றி தமது பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இவ்வாறானதோர் அணுகுமுறையை கையாளுகின்றன என்று கூறுவது மிகையாகாது என்று நினைக்கிறேன்.

‘பனிப்போர்’ ‘நாகரிங்களுக்கிடையிலான போர்’ ‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்’ போன்ற தவைப்புகளில் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் மேலே கூறப்பட்ட அணுகுமுறைக்கான சில உதாரணங்களாகக் கொள்ளப்படலாம். 

முஸ்லிம் உலகிலும் தொன்றுதொட்டு இத்தகைய கருத்தியல் உருவாக்கங்கள் இடம்பெற்று வந்தன. முஸ்லிம் உலகில் தோற்றம் பெற்ற சில கருத்தியல்கள் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் முஸ்லிம்களை வழிதவறச் செய்வதாகவும் இருந்திருக்கின்ற என்பது கசப்பாயினும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான கருத்தியல்களை அதிகபட்சம் தமது மார்க்கத்திலிருந்து உருவாக்கிக் கொண்டார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். எனினும், அவர்கள் குறித்த கருத்தியல்கள் விடயத்தில் நேர்மையாக நடந்தார்களா? என்ற வினா இருக்கவே செய்கிறது. 

ஒரு பிரச்சினையையும் அதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்களில் சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தியலையும் உதாரணத்திற்கு இங்கே எடுத்துக் கொள்ளலாம். 

ஆட்சியதிகாரம் வாரிசுச் சொத்தாகப் பார்க்கப்பட்டதொரு காலத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வபாத்தாகியபோது அன்னாரின் ஆட்சியதிகாரத்திற்கு வாரிசாகுபவர் யார்? என்ற பிரச்சினை வந்தது. அந்தப் பிரச்சினை ஆரம்பத்தில் சுமுகமாக தீர்க்கப்பட்டாலும் ஒரு சாரார் அந்தப் பிரச்சினையை பின்னர் பூதாகரமாக்கினர்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ஆட்சியும் அதிகாரமும் அன்னாரின் வாரிசான அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும். எனினும், அது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே அவர்களது பிரச்சினையாக இருந்தது. அந்தப் பிரச்சினையின் பக்கம் மக்களது கவனத்தை ஈர்ப்பதற்கான விளக்கங்களையும் சொல்ல ஆரம்பித்தார்கள் அவர்கள். அந்த விளக்கங்கள் இறுதியில் ‘ஷிஆயிஸம்’ என்றதொரு கோட்பாட்டில் வந்து முடிந்தது. தற்போது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உலகில் இல்லை. அந்தப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட தரப்பினரும் இன்று உலகில் இல்லை. எனினும், அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்காக சிலர் முன்வைத்த விளக்கங்கள், அந்த விளக்கங்களினடியாக இறுதியில் உருவெடுத்த கோட்பாடுகள், கருத்தியல்கள் என்பன இன்றுவரை இருக்கின்றன. அந்தக் கோட்பாடுகள், கருத்தியல்கள் சரியா, பிழையா? என்பதைவிட அவற்றால் குறிப்பிட்டதொரு சமூகத்தை வழிநடத்த முடியும் என்பதற்கே இன்று முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  

மற்றுமொரு பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற யுத்தம் இடைநிறுத்தப்பட்டு, இரு தரப்பு மத்தியஸ்தர்களின் பேச்சுவார்த்தை மற்றும் தீர்மானம் என்பவற்றோடு யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த மத்தியஸ்தம் மற்றும் முடிவு என்பவற்றை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொண்ட ஒரு குழுவினர் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்காக ஒரு மார்க்க விளக்கத்தை சொல்லத் துவங்கினார்கள். அந்த விளக்கங்கள் படிப்படியாக பரிணாமமடைந்து ஒரு தீவிரவாதக் கருத்தியலாக… கோட்பாடாக உருப்பெற்றது. அந்தக் கருத்தியலின் சொந்தக்காரர்கள்தான் கவாரிஜ்கள் தமது அந்தக் கருத்தியலால் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். 

பிற்காலத்தில் முஸ்லிம் உலகில் ஏற்பட்ட அறிவியல் மறுமலர்ச்சி பல புதிய பிரச்சினைகளைக் கொண்டு வருகின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த அறிவுக் கருவூலங்கள் முஸ்லிம் உலகத்துக்கு எடுத்து வரப்படுகின்றன. பகுத்தறிவுவாதத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்த கிரேக்கர்களின் சிந்தனைகள் மற்றும் ஆய்வுகள் அரபுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. கிறிஸ்தவர்கள் போன்ற பிற மதத்தவர்களின் கடவுள் கொள்கைகள் இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையோடு ஒப்பீட்டாய்வு செய்யப்படுகின்றன.

இந்த அறிவியல் சூழமைகளை எதிர்கொள்ள முற்பட்ட ஒரு குழுவினர் ஒரு புதிய கருத்தியலை நோக்கி நகர்ந்தனர். அவர்களே முஃதஸிலாக்கள் எனப்பட்டனர். முஸ்லிம் உலகின் பகுத்தறிவுவாதிகளாகவும் அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். 

இவ்வாறு புதியதொரு சூழலை நோக்கி, புதியதொரு பிரச்சினையை நோக்கி உலகம் நகரும்போதெல்லாம் அந்தப் புதிய சூழலை அல்லது புதிய பிரச்சினையை எதிர்கொள்ள முற்படுவோர் விரும்பியோ விரும்பாமலோ, சரி பிழையை ஆராய்ந்தோ ஆராயாமலோ ஒரு கருத்தியலின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றனர். முஸ்லிம்களின் பக்கமிருந்து அவ்வாறு உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் வரலாற்றில் நிறையவே இருக்கின்றன. அந்தக் கருத்தியல்கள் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல்கள், வாதப் பிரதிவாதங்கள், தத்துவ விசாரணைகள் மற்றும் தர்க்கங்கள் என்பவற்றிலிருந்தே தோன்றியிருக்கின்றன. இறுதியில் இஸ்லாத்தின் இயல்புக்கு நெருக்கமானவையாகவோ அல்லது இஸ்லாத்தின் இயல்பிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவையாகவோ அவை மாறி விடுகின்றன. 

எவ்வாறாயினும் (சரி பிழைகளுக்கு அப்பால்) கருத்தியல் ஒன்றின் சிறப்பம்சம் யாதெனில், அது மனித சமூகத்தில் ஒரு சாராரைக் கவரக் கூடியதாகவும் அவர்களை ஒரு திசையில் வழிநடத்தக் கூடியதாகவும் இருக்கும் என்பதே. ஒரு கருத்தியலின் ஆயுட்காலம் அதன் சரி, பிழைகளைத் தீர்மானிக்கும் அளவுகோலாகக் கொள்ளப்படுவதற்கு முடியாததாகும்.

இஸ்லாம் ஒரு கருத்தியலா?

மேலே நாம் விவாதித்தவையினடியாக இவ்வாறானதொரு வினா எழுப்பப்பட முடியும். அதாவது, காலத்துக்குக் காலம் பல்வேறு புதிய சூழல்களையும் புதிய பிரச்சினைகளையும் எதிர்கொள்வோர் இஸ்லாத்தினடிப்படையில் சிந்தித்து (சரி, பிழைகளுக்கு அப்பால்) பல கருத்தியல்களை உருவாக்கியிருக்கிறார்கள். எனினும், ‘இஸ்லாமே ஒரு கருத்தியல்தான்’  என்று கூற முடியுமா? 

இந்த வினாவுக்கான விடையை சுதந்திரமாக சிந்திப்பதற்கு இடம் வைத்து விட்டு பின்வருமாறு ஒரு கருத்தைக் கூறி அப்பால் நகரலாம் என்று நினைக்கிறேன். 

‘இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி’ மனித வாழ்க்கையில் எவையெல்லாம் சம்பந்தப்படுகின்றனவோ அவை அனைத்துக்குமான நேரடி வழிகாட்டல்களை… அல்லது அவற்றிற்கு வழிகாட்டுவதற்கான அடிப்படைகளை அது கொண்டிருக்கிறது. காலமறிந்து, சூழலறிந்து, பிரச்சினைகளையறிந்து, இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையறிந்து அந்த வழிகாட்டல்களை வழங்கத் தகுதியுடையவர்கள் மக்களை வழிநடத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு வழிநடத்தும்போது அந்த வழிநடத்தலுக்கு உதவும் வகையில் கருத்தியல்களை உருவாக்கிக் கொள்ள முடியும். எனினும், குறித்த கருத்தியல்கள் விடயத்தில் மூன்று அவதானங்களை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். 

01.  குர்ஆனையும் ஸுன்னாவையும் ‘அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ’வைச் சேர்ந்தவர்கள் அணுகிய முறைமைகள் மற்றும் அவை இரண்டுக்கும் அவர்கள் கொடுத்து வந்த விளக்கங்கள் என்பவற்றுக்கு முரண்படாத வகையில் குறித்த கருத்தியல் இருக்க வேண்டும்.

02. குறித்த சூழலொன்றை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கருத்தியலை அனைத்து சூழலுக்கும் உரியதாக மாற்றி எக்காலத்திற்கும் உரியதான மாறாத் தன்மையையும் அதற்குக் கொடுக்காதிருக்க வேண்டும்.

03. இஸ்லாம் வலியுறுத்துகின்ற மானிட விழுமியங்களுக்கோ இஸ்லாத்தின் சிறப்பம்சங்களுக்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் அல்லது அவற்றைக் கொச்சைப்படுத்தும் வகையில் குறித்த கருத்தியல் அமையப்பெறாதிருக்க வேண்டும்.

முதலாவது நிபந்தனை இஸ்லாத்தின் பூர்விகத் தன்மை மற்றும் அதன் இயல்பு நிலை என்பவற்றைப் பாதுகாக்க உதவுவதோடு, மக்கள் தவறான பாதைக்கு செல்லாதிருப்பதனையும் உறுதி செய்யும்.

இரண்டாவது நிபந்தனை ஸ்தம்பிதமாகுதல், தேக்க நிலையை அடைதல் போன்ற பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்லாத வகையிலும்… வாழ்கின்ற சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையிலும்… புதிய சூழல்கள் உருவாகின்றபோது மாற்றங்கள் காணும் வகையிலும் செயற்படுவதற்குதவும். 

மூன்றாவது நிபந்தனை கடும்போக்கு, தீவிரவாதம், அடக்குமுறை போன்றவற்றைத் தவிர்ப்பதற்கும் நற்குணங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் உதவும். 

இந்த வகையில் இஸ்லாம் எளிமையானது, இலகுவானது, இயற்கையானது, சிக்கலற்றது, நெகிழும் தன்மை கொண்டது, வாழ்க்கையோடு சம்பந்தப்படுகின்ற அனைத்தையும் தன்னோடு சம்பந்தப்படுத்தி வழிகாட்டல்களை வழங்க வல்லது. பாமரனும் அதனோடு உறவாட முடியும்ளூ படித்தவனும் அதனோடு உறவாட முடியும் என்ற தகுதியைக் கொண்டது எனலாம். 

இஸ்லாம் என்ற இத்தகைய வாழ்க்கை நெறியை ஒரு குறிப்பிட்ட சூழலில் அமுல்படுத்துபவர்கள் அந்த சூழலோடு முரண்படாத, அதனோடு மோதாத கருத்தியலொன்றை மேலே கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளுக்கமைய உருவாக்கிக் கொள்ளலாம். சூழல் மாறும்போது பழைய கருத்தியலைக் கைவிட்டு புதிய சூழலுக்கான கருத்தியலையும் அதே பாணியில் உருவாக்கிக் கொள்ளலாம். 

இஸ்லாம் நிரந்தரமானது; கருத்தியல்கள் தற்காலிகமானவை. இஸ்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாதது; கருத்தியல்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவையல்ல. இஸ்லாம் பற்றிப் பிடிக்கப்பட வேண்டியது; கருத்தியல்கள் கைவிடப்பட முடியுமானவை… போன்ற உண்மைகளையும் இந்தத் தலைப்பு தொடர்பில் நாம் விளங்க வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல, காலத்துக்குக் காலம் கருத்தியல்களை உருவாக்குவது இஜ்திஹாதின் பாற்பட்ட பணி என்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம் என்று கருதுகின்றேன்.

கருத்தியல்களுக்கு மாறாத் தன்மையைக் கொடுத்தால்… கருத்தியல்களில் இறுகிப் போனால்… ஏதோவொரு சூழலுக்கு அந்த சூழலை விளங்கியவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல்களை பொருத்தமற்ற வேறு ஒரு சூழலுக்கு பொருத்த முயன்றால் இஸ்லாம் தவறாகப் புரியப்படுவதைத் தவிர்க்க முடியாது போகலாம் என்பது எமது சமூகம் விளங்கிக் கொள்ளாத விடயமாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

அரபு நாட்டுச் சூழல்… அடக்குமுறைச் சூழல்… அனாச்சாரங்கள் மற்றும் ஷிர்க், பித்அத்கள் நிறைந்த சூழல்… அனைத்தையும் புறக்கணித்து விட்டு ஆடம்பரங்களுக்குப் பின்னால் அள்ளுண்டு செல்லும் சூழல்… வறுமை தாண்டவமாடும் சூழல்… அறிவியலின் சாகசங்கள் ஆர்ப்பரிக்கும் சூழல்… இழந்ததைப் பெற விரும்பும் சூழல்… தத்துவ விசாரணைகளுக்கு அதிகம் முகம் கொடுக்க வேண்டிய சூழல் என வேறுபட்ட சூழல்களைத் தத்தமது காலத்தில் எதிர்கொண்டவர்கள் அத்தகைய சூழல்களை எதிர்கொள்வதற்கு உதவும் வகையிலான கருத்தியல்களை உருவாக்கியிருப்பார்கள். அவை நாம் மேலே சுட்டிக்காட்டிய மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாகக்கூட இருக்கலாம். இருப்பினும், அத்தகைய கருத்தியல்களை மற்றுமொரு சூழலுக்குப் பொருத்த முற்படும்போது இரண்டாவது நிபந்தனை தானாகவே மீறப்படுகிறது. அதன் விளைவாக குறித்த சூழலில் இஸ்லாம் பற்றிய தப்பெண்ணம் வளர்க்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் தோன்றுகின்றன.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கே உரிய சிறப்பம்சங்கள் பலவற்றை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் கருத்தியல்கள் தொடர்பில் இலங்கைக்குப் பொருத்தமானதை உருவாக்கும் முறைப்புக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்களா? அவர்களிடமிருந்த கருத்தியல்கள் இலங்கை சமூகத்திலிருந்து அவர்களைத் தூரமாக்குகின்ற தன்மை கொண்டனவாக இருந்தனவா? அண்மைக் காலங்களில் அவர்கள் எதிர்கொண்டு வந்த நெருக்கடிகளுக்கு அவை ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளனவா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். 

ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் கருத்தியல்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டுமென நான் இங்கு கூறவில்லை. காரணம், ஒட்டுமொத்த சமூகமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட பிரகடனத்தினூடாக அத்தகைய கருத்தியல்களை மறுத்து நிராகரித்து விட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். இன் தீவிரவாதக் கருத்தியல்களால் கவரப்பட்டவர்களை முஸ்லிம் சமூகம் இடித்துரைத்ததே தவிர ஆதரிக்கவில்லை. நெருங்கிய உறவினர்கள் பெற்றோர் ஆகியோரும் கூட அத்தகைய கருத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மிகுந்த மனவேதனையுடனேயே இருக்கின்றனர். இந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் உறுதியாக இருந்து கொண்டு மேலே சுட்டிக்காட்டப்பட்ட ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் உலமாக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களிடையே மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள், செயலமர்வுகள் என்பன இடம்பெற வேண்டும். இத்தகை சுதந்திரமான கலந்துரையாடல்கள், செயலமர்வுகளுக்கு பின்னூட்டங்களை வழங்கவல்லனவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களிடையே புரிந்துணர்வுகள் மலர முடியும். 

இலங்கையின் சுமுகமான, சுபிட்சமான எதிர்காலத்திற்கான முஸ்லிம் சமூகத்தின் கருத்தியல் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்பட முடியும்.

அல்ஹஸனாத், பெப்ரவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *