கொரோனாத் தொற்று: எதிர்கொள்வதற்கு அவசியமான ஆன்மிக பலமும் பௌதிக பலமும்

கொரோனாத் தொற்று ஒரு மனிதப் பேரவலமாக மாறியிருக்கின்ற தருணத்தில் அதனை எதிர்கொள்ளாமலிருக்கவும் முடியாது… எதிர்கொண்டு தப்பவும் முடியாது… என்ற குழப்பமான மனோநிலை இன்னோர் அவலமாக உருவெடுக்கப் பார்க்கிறது. பயமும் பீதியும் கலந்த இந்த மனோநிலை உடல், உள ரீதியான பலவீனங்களுக்கு இட்டுச்செல்ல முடியும். அது மட்டுமல்லாது, பிற மனிதர்களைக் காணும்போது வழமையாக உள்ளத்தில் ஏற்படுகின்ற அன்பு, பரிவு, கண்ணியம், மனித நேயம் என்பவற்றுக்குப் பதிலாக சந்தேகம், பயம், தப்பெண்ணம், வெறுப்பு என்பவற்றை உருவாக்கி விடவும் முடியும்.
இதன் மூலம், ஓர் அவலம் பல அவலங்களாக மாறும் நிலை தோன்றுகின்றது. துரதிஷ்டவசமாக ஒரு மனிதர் பாதிப்புக்கு ஆளாக நேர்ந்தால் வாழ்க்கை சுமையாகி விரக்தி நிலைக்கு அவர் சென்றுவிடவும் கூடும். இவ்வாறானதொரு நிலை வராதிருப்பதற்கு என்ன செய்யலாம் என்றதொரு கலந்துரையாடலே இந்தப் பத்தியாகும்.

ஒரே வார்த்தையில் இதற்கான பரிகாரத்தை சுருக்கமாகச் சொல்வதானால், ‘நோயை முன்னெச்சரிக்கைகளாலும் பயத்தை நம்பிக்கைகளாலும் எதிர்கொள்ள வேண்டும்’ என்பதே..
இந்தத் தீர்வை சிறிது விளக்கமாக பார்ப்பதற்கு முன்னால் பின்வரும் கூற்றை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். அதனோடு உடன்பட முடியுமா? என்றும் யோசித்துப் பாருங்கள்.
‘நோயை அலட்சியத்தாலும் பயத்தை மூடநம்பிக்கைகளாலும் எதிர்கொள்வோம்’ என்று ஒருவர் கூறினால் அந்தக் கூற்றோடு நாம் உடன்பட முடியுமா? முடியாது எனின், ‘நோயை முன்னெச்சரிக்கைகளாலும் பயத்தை நம்பிக்கைகளாலும்தான் நாம் எதிர்கொள்ள வேண்டும்’ என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

நோயை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கு அவசியமான வழிகாட்டல்கள் போதியளவு வழங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன. அதிகமான மக்கள் முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் கரிசனை மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். எனினும், முன்னெச்சரிக்கை தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுகின்ற சம்பவங்களும் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. இதுவரை, கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. முன்னெச்சரிக்கை தொடர்பிலான சட்டங்களை மட்டுமல்ல, அறிவுறுத்தல்களையும் பலர் மீறுகின்றார்கள். இது நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் வைத்தியத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

மக்களின் இந்த அசிரத்தை காரணமாக சகல வளங்களையும் வசதிகளையும் கொண்ட உலகின் முதல் தர நாடுகள்கூட இன்று செய்வதறியாது தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இலங்கை அரசாங்கம் கொரோனாத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை பாராட்டத்தக்க வகையில் முன்னெடுப்பதாக BBC செய்திச் சேவை கூறியிருக்கிறது. அத்தகையதொரு அரசாங்கத்திற்கு இலங்கை மக்கள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் முடியுமான ஒத்துழைப்புகள் அனைத்தையும் வழங்க வேண்டும். நோயை எதிர்கொள்வதற்கு அவசியமான முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் கரிசனையோடு செயல்பட்டு அரசாங்கத்துடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்.

முன்னெச்சரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் அசிரத்தையோடு செயல்படுவதற்கான காரணம் தொடர்பில், ‘ஏன் சட்டத்தை மீறுகிறார்கள்?’ (https://www.facebook.com/sljiofficial/posts/10158238760093159) என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு விளக்கத்தை நான் வழங்கியிருந்தேன். அதனையும் முடியுமானால் வாசித்துக் கொள்ளுங்கள்.

ஆக, முன்னெச்சரிக்கைகளின்றி நோயை எதிர்கொள்வது ஆபத்தானது. முன்னெச்சரிக்கைகளைக் கைவிட்டு ஆபத்தை விலைக்கு வாங்கும் விஷப் பரீட்சையில் ஒருவரும் இறங்கக் கூடாது என்ற அறிவுறுத்தலை பரஸ்பரம் நாம் பரிமாறிக் கொள்வோம்.

அதேநேரம், கொரோனாத் தொற்று ஏற்படுத்தியிருக்கும் பயம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். சிலர் பயம் இல்லாததாலோ என்னவோ.. முன்னெச்சரிக்கைகளில் அசிரத்தையாக இருக்கிறார்கள். விபரீதத்தையும் பன்மடங்காக்கி விடுகிறார்கள். மற்றும் சிலர் பயத்தின் காரணமாக மூடநம்பிக்கைகளிடம் சரணடைகிறார்கள். அல்லது மத நம்பிக்கைகளை அர்த்தமற்றதாக்கி நடைமுறைப்படுத்துகிறார்கள். இதன் மூலம், அவர்கள் எதிர்பார்ப்பது போன்று நோயைத் தடுத்துவிட முடியாது. ‘மதம் மனித வாழ்வின் எதிரியாக மாறும்போது’ (https://www.facebook.com/affanaleemi/posts/10217758489778411) என்ற தலைப்பில் அப்பான் அப்துல் ஹலீம் எழுதிய கட்டுரை இது தொடர்பான சிறந்ததொரு பின்னனி விளக்கத்தைத் தந்திருக்கிறது. அதனையும் முடியுமானவர்கள் வாசித்துக் கொள்ளுங்கள். 
நாம் இங்கே பயத்தைப் போக்குவதற்கு உதவுகின்ற நம்பிக்கை எத்தகையதென்பது பற்றிய கலந்துரையாடலையே செய்ய விரும்புகின்றோம். பயத்தைப் போக்குவதற்கு மக்கள் தத்தெடுத்துக் கொண்ட மூடநம்பிக்கைகளையோ அல்லது அர்த்தமற்றதாக அவர்கள் ஆக்கிக் கொண்ட மத நம்பிக்கைகளையோ நாம் இங்கு கலந்துரையாடவில்லை.

இஸ்லாத்தின் நம்பிக்கைகளில் பிரதானமானதோர் அம்சம், அசாதாரணமாக சம்பவிக்கும் ஓர் அவலத்தைக் கண்டு அஞ்சி ஓடாமல் அதனை அல்லாஹ்வின் ஓர் ஏற்பாடாகக் கருதி முதலில் ஒரு முஸ்லிம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் தனது மனநிலை சரிந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதுமாகும். இது முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த வகையிலும் ஒரு தடையல்ல. மாறாக, முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதோடு இந்த மனநிலையையும் ஏற்படுத்திக் கொள்வதே முக்கியமானது. 
அல்லாஹ்வின் ஏற்பாடு என்பது அவலங்களோடு மாத்திரம் தொடர்புபட்டதல்ல. மாறாக, பிரபஞ்சத்தின் உருவாக்கம், அதன் தொடர்ச்சியான இயக்கம், உயிரினங்களது வாழ்க்கை வட்டம், மனித வாழ்க்கை மற்றும் அதன் சுக, துக்கங்கள் என சகலதும் அவனது ஏற்பாட்டுக்குள் அடங்குகின்றன. அந்த ஏற்பாடுகளை அல்லாஹ்வின் திட்டம் என்றும் கூறலாம். அத்திட்டத்தினுள் இரண்டு வகைகள் இருக்கின்றன. 

1. இறுக்கமானவை

2. ஐதானவை 

இறுக்கமானவை: 
அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் இந்த வகையைச் சார்ந்தவைகளுக்கு உதாரணமாக சூரியன், சந்திரன், பூமி மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் இயக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தப் படைப்புகள் அல்லாஹ்வின் திட்டத்தை அல்லது ஏற்பாட்டை மீறுவதில்லை. அதாவது, தமக்கென்று வரையறுக்கப்பட்ட கால, நேர மற்றும் வேக எல்லைகளை அவை தாண்டுவதில்லை. இது பற்றி அல்குர்ஆன் கூறுவதை பின்வரும் வசனங்களில் நீங்கள் காணலாம். (36: 38, 67: 03)

ஐதானவை:
அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் இந்த வகை உதாரணம் மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. மனிதனுக்கு பகுத்தறிவு, சுதந்திரம், சிந்தனா சக்தி, உழைப்பாற்றல், படைப்பாற்றல் என (ஏனைய படைப்பினங்களுக்கு இல்லாத) பல்வேறு விஷேடங்களை அல்லாஹ் வழங்கியிருக்கிறான். எனவே அவனது வாழ்க்கை தொடர்பான அல்லாஹ்வின் ஏற்பாடு சூரியன், சந்திரனுக்கானது போன்று இறுக்கமானதாகவன்றி ஐதானதாகவே இருக்கின்றது. 

அதாவது, இறுக்கமான பாதையில் பயணிக்க வேண்டுமென்ற திட்டத்தை மனிதன் தவிர்ந்த ஏனைய படைப்பினங்களுக்கும் ஐதான பாதையில் பயணிக்க வேண்டுமென்ற திட்டத்தை மனிதனுக்கும் அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதே இதன் சுருக்கமாகும். தண்டவாளத்தில் பயணிப்பதை இறுக்கத்திற்கும் அகன்றதொரு நெடுஞ்சாலையில் பயணிப்பதை ஐதானதிற்கும் ஒப்பிடலாம்.
மனிதன் ஐதான பாதையில் (அகன்ற நெடுஞ்சாலையில்) பயணித்தாலும் அந்தப் பாதைக்கும் வலதிலும் இடதிலும் எல்லைகள் உண்டு. அந்த எல்லைகள் அல்லது வேலிகள் தான் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும், அதே நேரம் கட்டுப்படுத்தும் இறைநியதிகள் ஆகும்.

சூரியன், சந்திரன் மற்றும் பிரபஞ்சம் என்பவற்றின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்ற பௌதிக நியதிகளைப் போன்று மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் சமூக நியதிகள் இருக்கின்றன என்பதே இங்கு நாம் கருத்திற் கொள்ள வேண்டியதாகும். இந்த இரு வகையான நியதிகளும் ஒரு முஸ்லிமின் விசுவாசத்தில் இறைநியதிகள் எனப்படுகின்றன. இத்தகைய நியதிகளால்தான் பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் அல்லாஹ் இயக்குகின்றான். இது அல்லாஹ்வின் திட்டம் அல்லது ஏற்பாடு (கழா கத்ர்) எனப்படுகின்றது. 

இந்தத் திட்டத்தில் ஓர் அம்சமாகவே மனித வாழ்வின் எந்தவொரு சுக, துக்கமும் நிகழ முடியும். மனித வாழ்வின் வெற்றி, தோல்விகளும் இந்த நியதிகளுக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும். கொரோனாத் தொற்று இவற்றுள் எந்த இறைநியதியோடு சம்பந்தப்பட்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதற்கு முன்பதாக, மனித வாழ்வோடு தொடர்பான சில இறைநியதிகளை வாசகர்களின் கவனத்திற்கு முன்வைக்கிறோம். 
‘தனி மனித சமூக வாழ்வில் இறைநியதிகள்’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்ட கலாநிதி மஜ்தி முஹம்மத் ஆஷூர் என்பவர், தான் குர்ஆனிலிருந்து அடையாளப்படுத்தியதாகக் கூறும் இறைநியதிகள் பலவற்றைத் தருகிறார். அவற்றோடு அவர் குறிப்பிடாத சில இறைநியதிகளையும் நான் இங்கு இணைத்துள்ளேன். அவையாவன..

1. காரணிகளின் அடிப்படையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன.

2. ஒரு செயலுக்கு அதேபோன்றதினூடாகவே வெகுமதி வழங்கப்படுகிறது.

3. மொத்த மனித வாழ்வும் ஒரு சோதனையாகும்.

4. மனித வாழ்வைக் குறை நீக்கி நிறைப்படுத்தும் வகையில் அமையும் சோதனைகள்.

5. சமூகங்களின் அழிவு அல்லது பின்னடைவு என்பவற்றிற்கு வழிவகுப்பவை.

6. நல்வழிக்கும் தவறான வழிக்கும் இட்டுச் செல்பவை.

7. உள்ளத்தை ஆரோக்கியம் பெறச் செய்பவையும் மாசடையச் செய்பவையும்.

8. சிலரைக் கொண்டு சிலரின் அக்கிரமங்களைத் தடுத்தல்.

9. வெற்றியின் நாட்களையும் தோல்வியின் நாட்களையும் சுழற்சி முறையில் கொண்டு வருதல்.

10. வேறுபாடும் வேறுபடுதலும் என்ற யதார்த்தம்.

11. மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் எனும் யதார்த்தம்.

12. வாழ்வாதாரங்கள், அவற்றின் பங்கீடுகள் என்பன பற்றிய யதார்த்தம்.

13. சமநிலை மற்றும் நடுநிலை பேணுவதன் அவசியம்.

14. செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உலக, மறுமை விளைவுகள் உண்டு.

15. இலகுபடுத்தலே வாழ்க்கையை இயங்குதன்மை கொண்டதாக ஆக்குகின்றது.

16. தவணை கொடுத்தல் என்பது மனிதனது பொறுப்புக்கூறலின் தொடர்ச்சிக்கு அவசியமாகின்றது.

17. மனிதனின் செயல்கள் அவனுக்கு அலங்கரிக்கப்படுகின்றன.

18. படிமுறை அல்லது பரிணாமம் என்பது வாழ்க்கையின் வளர்ச்சிப் போக்காகும்.

19. காலத்துக்குக் காலம் சமூகங்கள் இடம்மாறுகின்றன.

20. பாவங்கள் பலவீனங்களுக்கு இட்டுச் செல்கின்றன.

21. நன்மைகளதும் தீமைகளதும் அளவீடுகள்.

22. அறிவே மனிதனது மேம்பாடாகும்.

23. நம்பிக்கையே மனிதனது உள அமைதியாகும்.

24. உள அமைதியைப் பெறாதவர் உண்மையான அமைதியை மறு வாழ்வில் பெற முடியாது.

25. மனோ இச்சை மனித இடர்களது துவக்கமாகும்.

26. உடன்படுதல் பலம்பெறுவதற்கான அடிப்படை.

27. பிறந்தால் மரணித்தாக வேண்டும்.

28. மனிதனது இறுதி நிலையே மறுமையில் அவன் எழுப்பப்படும் நிலையாகும்.

இவ்வாறான நியதிகளோடு சம்பந்தப்படாத எந்தவொரு நிகழ்வும் மனித வாழ்வில் இடம்பெறுவதில்லை. இத்தகைய நியதிகளோடு முரண்பட்ட நிலையில் மனித வாழ்வு சதாவும் சாதகமான திசையில் செல்வதுமில்லை.

கொரோனாத் தொற்று மேற்கூறப்பட்ட நியதிகளுள் “காரணிகளின் அடிப்படையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன” “மனித வாழ்வைக் குறை நீக்கி நிறைப்படுத்தும் வகையில் அமையும் சோதனைகள்” “செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உலக, மறுமை விளைவுகள் உண்டு” ஆகிய நியதிகளுள் ஏதாவதொன்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இவற்றுள் “மனித வாழ்வைக் குறை நீக்கி நிறைப்படுத்தும் வகையில் அமையும் சோதனைகள்” எனும் நியதியோடு இந்த அவலம் சம்பந்தப்படுமானால் மனிதர்கள் தமது வாழ்வில் இருக்கின்ற குறைகளை நீக்கி நிறைகள் காண முயல வேண்டும் என்ற படிப்பினையை அது தருகின்றது எனக் கொள்ளலாம். 

“காரணிகளின் அடிப்படையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன” அல்லது “செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உலக, மறுமை விளைவுகள் உண்டு” எனும் நியதிகளோடு சம்பந்தப்பட்டதாக குறித்த அவலம் ஏற்பட்டிருக்குமெனின் இந்த அவலத்திற்கு ஏதோ ஒரு வகையில் மனிதன் காரணமாக இருக்கிறான் என்றே கருத வேண்டும். யாரிந்த அவலத்திற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்கள் “செயல்கள் ஒவ்வொன்றிற்கும் உலக, மறுமை விளைவுகள் உண்டு” எனும் நியதியின்படி மறுமையில் தண்டிக்கப்படுவார்கள். அவர்களால் தொற்றுக்கு இலக்காகி மரணிக் கின்றவர்கள் எந்த நிலையில் மரணிக்கின்றார்களோ அதேநிலையில் மறுமையில் எழுப்பப்படுவார்கள். அவர்களுக்குப் பொருத்தமான வெகுமதிகளும் அதன்போது வழங்கப்படும்.

இதுதான் இந்த அவலம் தொடர்பான பயத்தைப் போக்குவதற்கு அவசியமான நம்பிக்கையின் சுருக்கமாகும். இந்த நம்பிக்கை நிச்சயமாக மன ஆறுதலையும் அவலத்தை எதிர்கொள்கின்ற உற்சாகத்தையும் தரவே செய்யும். அவற்றோடு முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடித்தால் வாழ்க்கை நிச்சயம் தடம்புரளாது.

-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *