சகவாழ்வை மேம்படுத்துவதில் முஸ்லிம் குடும்பங்களின் வகிபாகம்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்

முழு மனித சமூகமும் இரத்த உறவால் பின்னிப் பிணைந்துள்ளது; சகோதர உறவால் தொடர்புபட்டுள்ளது. எனவே, இரத்த உறவால் ஒன்றிணைந்தவர்களிடம் இன, நிற, மொழி, தேசிய, குல, கோத்திர வெறிகள் இருக்க முடியாது.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிக பயபக்தியுடையவரே நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.” (49: 13)

ஏதேனும் காரணங்களால் ஒருவர் ஓர் இனத்தைச் சேர்ந்தவராகவும் பிறிதொரு மதத்தைப் பின்பற்றுபவராகவும் வித்தியாசமான நிறம் அல்லது மொழி உடையவராகவும் இருக்கலாம். ஆனால், மனிதன் என்ற வகையில் யாரையும் பிரித்து நோக்க முடியாது. முஸ்லிம்கள் சிறந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதற்கு ஒட்டுமொத்த மனித சமூகமும் இன, மொழி, நிற வேறுபாடின்றி நன்மைகளை அடைந்து, தீமைகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று முஸ்லிம்கள் மூலமாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் சுபிட்சத்தையும் அனுபவிக்க வேண்டும்.

அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்தான்.”    (5: 48)

நபியே! உம்முடைய இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவருமே ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள் (10: 99)

நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அதற்கான நேர்வழியை வழங்கியிருப்போம்.” (32: 13)

வேறுபட்ட நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் கலாசாரங்களும் நிறைந்த ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்ற பன்முகத் தன்மையை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பிற சமூகத்தினரைப் பகைத்துக் கொண்டும் அவர்கள் மீது வெறுப்பையும் குரோதத்தையும் உள்ளத்தில் சுமந்து கொண்டும் வாழ முடியாது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் முஸ்லிம்கள் கொள்கையில்தான் முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து வேறுபட்டு இருந்தார்களே தவிர அன்றாட வாழ்வின் விவகாரங்களில் அனைவரும் ஒன்றிணைந்தே காணப்பட்டார்கள். எனவே, நாமும் இன்று பன்மைத்துவ வேறுபாடுகளை முரண்பாடுகளாகப் பார்க்கக் கூடாது.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தினதும் அங்கத்தவர்கள் சிறந்ததொரு சகவாழ்வைக் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்ய வேண்டும். குழந்தைகளை சிறுபராயத்திலிருந்தே அதற்கு ஏற்றவிதமாக நெறிப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும். சிறந்த பண்பாடுகளையும் நல்லொழுக்க விழுமியங்களையும் நாட்டு சட்டங்களையும் ஒழுங்கையும் பேணி நடக்கும் மனோபாவத்தையும் அவர்களுக்குள் தோற்றுவித்திட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் தங்களைச் சூழவுள்ள முஸ்லிமல்லாத குடும்பத்தார்களுடன் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் உதவி ஒத்தாசைகள் புரிந்து கொண்டவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். பிறருக்கு இயன்றவரை நன்மை பயப்பவர்களாகவேயன்றி தொல்லை, தொந்தரவுகள் அளிப்பவர்களாகவோ, பிறரது உரிமைகளில் தலையிடுபவர்களாகவோ, பிறருக்கு அசௌகரியங்கள் கொடுப்பவர்களாகவோ  யாரும் இருக்கக் கூடாது. குப்பை-கூலங்களைக் கொட்டுதல், கழிவு நீரை வெளிப்படுத்தல், மழைநீரை திசைருப்பி அகற்றல் உள்ளிட்ட எந்த விடயத்திலும் அடுத்தவர்கள் நம்மைத் தொல்லையாகக் கருதும் நிலை அமையக் கூடாது.

நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். இன்னும் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், அனாதைகள், வறியவர்கள், உறவினர்களான அண்டை வீட்டினர், அந்நிய அண்டைவீட்டினர், அருகிலுள்ள நண்பர்கள், பாதையில் சந்திப்பவர்கள், உங்கள் அடிமைகள் ஆகியோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.” (4: 36)

முஜாஹித் (ரஹிமஹுல்லாஹ்) அறிவிக்கிறார்: நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தில் இருந்தேன். அவரது அடிமை ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அடிமையே! நீ வேலையை முடித்து விட்டால் எங்கள் யூத அண்டை வீட்டானைக் கொண்டு ஆரம்பிப்பீராக!” என்று கூறினார். அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் யூதனா? அல்லாஹ் உங்களை சீராக்குவானாக!” எனக் கூறினார்.

அதற்கவர் நிச்சயமாக நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசிப்பதைக் கேட்டுள்ளேன். எதுவரையெனில், அவரை அனந்தரச் சொத்திற்கு உரிமையாக்கி விடுவார்களோ என நாங்கள் பயப்பட்டோம்” என்று கூறினார். (அல்அதபுல் முஃப்ரத்)

ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் தங்களைச் சூழவுள்ள அல்லது தங்களை அண்மித்திருக்கின்ற சில முஸ்லிமல்லாத குடும்பத்தார்களுடனாவது நெருங்கிய உறவைப் பேணி வளர்க்க வேண்டும். அவர்களது இன்ப, துன்பங்களில் பங்கெடுக்க வேண்டும். சிறந்த பண்பாடுகளை வெளிக்காட்ட வேண்டும். அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும். அன்பளிப்புக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அவர்களது நல்ல அழைப்புக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் புதல்வி அஸ்மா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: குறைஷிகள் ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்திருந்த காலகட்டத்தில் என்னுடைய தாயார் இணைவைப்புக் கொள்கையில் இருந்த நிலையில் மதீனாவிலிருந்த என்னிடம் வந்தார். நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தாயார் என்னைப் பார்க்க ஆர்வத்தோடு என்னிடம் வந்திருக்கிறார். நான் அவருடன் உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆம்! அவருடன் நீர் உறவைப் பேணி நடந்து கொள்வீராக!” என்று கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில், இவ்வாறு இடம்பெற்றுள்ளது. அஸ்மா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் தாயார் கத்தீலா என்பவர் இணைவைப்புக் கொள்கையுடையவராக இருந்தபோது தம்முடைய மகள் அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் மரப்பூட்டு உள்ள தாழ்ப்பாள், பாலாடைக்கட்டி, சுத்தப்படுத்தப்பட்ட வெண்ணெய் போன்ற சில அன்பளிப்புக்களுடன் வந்தார்.

அவர் கொண்டு வந்த அன்பளிப்புக்களை வாங்கவோ தம்முடைய வீட்டின் உள்ளே வர அவரை அனுமதிக்கவோ அஸ்மா (ரழியல்லாஹு அன்ஹா) மறுத்து விட்டார். அது பற்றி ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டபோது அல்லாஹ் எவர்கள் மார்க்க விடயத்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும், மேலும் உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீர்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கிறான்” (60: 8) என்ற வங்னத்தை இறக்கியருளினான். (அஹ்மத், இப்னு ஜரீர்)

முஸ்லிமல்லாத குடும்பங்களோடு நல்லவிதமாக உறவாடுவது போன்று முஸ்லிமல்லாத சமூகங்களோடும் சிறந்த பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தி மிகச் சிறந்த முன்மாதிரியுடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இமாம் ஸர்கஸீ (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் இருக்கும்போது மக்காவில் ஒரு பஞ்சம் நிலவியது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 600 தீனார்களை அபூஸுஃப்யானுக்கு அனுப்பி வைத்து அங்குள்ள ஏழைகளுக்குப் பங்கிடுமாறு கூறினார்கள். (அல்மப்ஸூத்)

பரந்து, விரிந்த சமூகப் பார்வை முஸ்லிம்களிடம் இருக்க வேண்டும். பொதுப் பணிகளில் ஈடுபட முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளும்போது முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் இலங்கை மக்கள்” என்ற வகையில் சிந்திக்க வேண்டும். சிரமதானங்கள், இரத்த தான முகாம்கள், நடமாடும் வைத்திய சேவைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மரநடுகை செயற்திட்டங்கள், ஆறு, கிணறு போன்ற அனைவருக்கும் பொதுவான வளங்களை சுத்திகரிப்பு ஙெ்ய்தல் உள்ளிட்ட எல்லாப் பொது நலப் பணிகளிலும் முஸ்லிமல்லாதேரையும் இணைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாத பிரதேங்ங்களுக்கும் சென்று நமது ஆக்கப் பணிகளை விஸ்தரிக்க வேண்டும்.

முஸ்லிம்களுடைய நிறுவனங்களில் முஸ்லிமல்லாதவர்களைப் பணிக்கமர்த்துதல், முன்மாதிரி நற்பிரஜைகளாக வாழ்ந்து காட்டுதல், அவர்களோடு கொடுக்கல்- வாங்கல்களில் ஈடுபடல் முதலான அனைத்துமே சிறந்த சகவாழ்வுக்கான வழிகளாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறந்தபோது அன்னாரது போர்க் கவங்ம் ஒரு யூதனிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு யூதனிடம் கடனாக உணவுப் பொருளை வாங்கி தம் கவசத்தை அவரிடம் அடைமானமாக வைத்தார்கள்” என்று ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார். (அல்புகாரி)

ஒவ்வொரு முஸ்லிமான ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் மனோபாவம் இருக்க வேண்டும். மேலும், மனித குலத்தில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒரே குடும்பமாக நோக்கும் விசால உள்ளம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். பன்மைத்துவம் அல்லாஹ்வின் ஏற்பாடுகளில் ஒன்று என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது பேச்சு, உரையாடல்கள், போதனைகள், குத்பாக்கள், கலந்தாலோசனைகள் முஸ்லிம்களை மாத்திரம் மையப்படுத்தியதாக அமையாமல் நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். பாதுகாப்பு, நீதி, சுபிட்சம், நிம்மதி, அமைதி, அபிவிருத்தி, இழப்புக்கள், அனர்த்தங்கள், பிரச்சினைகள், தீர்வுகள் போன்ற எந்த அம்சத்தை எடுத்தாலும் முழு இலங்கை மக்களையும் ஒன்றிணைத்து சிந்திக்கும் போக்கு நமக்குள் வர வேண்டும். முஸ்லிம் சமூகம் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் அதனூடாக மொத்த நாடும் நாட்டின் எதிர்காலமும் அடையப்போகும் விளைவுகளையும் பாதிப்புக்களையும் பற்றியே நாம் பேச வேண்டும்.

நாம் இலங்கையில் சிறுபான்மையினராக வாழும்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் வாழ்வது போன்று வாழ முடியாது. இந்த நாட்டின் சட்டங்களையும் கலாசாரத்தையும் கருத்தில் கொண்டு நமது வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் கருத்து வேறுபாடு இருந்தால் அதில் எந்தக் கருத்து நாம் வாழும் சூழலுக்கு மிகப் பொருத்தமானதோ அதைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இனவாத உணர்வு முஸ்லிம்களிடம் தோற்றம் பெறுவதை இஸ்லாம் வெறுக்கிறது. இனவெறியோ, மதவெறியோ முஸ்லிம்களிடம் இருக்க முடியாது. ஒரு முறை முஹாஜிர்களுக்கும் அன்ஸார்களுக்கும் இடையில் ஒரு பிரச்சினை தோன்றியது. அப்போது முஹாஜிர்களின் அடிமை முஹாஜிர்களே!” என்று அழைத்தார். அன்ஸார்களின் அடிமை அன்ஸார்களே!” என்று கூவி அழைத்தார். இரு சாராருக்கும் இடையில் ஒரு மோதல் ஏற்படப் போவதை பார்த்தபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்விடத்திற்கு வந்து ஓர் உபதேசம் செய்துவிட்டு இந்த வெறியுணர்வை நீங்கள் விட்டுவிடுங்கள். இது துர்நாற்றம் வீசும் ஒரு விடயமாகும்” என்றார்கள். (அல்புகாரி)

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது இனத்தின் பெயர்களல்ல. ஒரு சிறந்த கொள்கையின் பின்னணியில் வந்த குர்ஆனில் கண்ணியப்படுத்தப்படுகின்ற சொற்களாகும். ஆனால், அத்தகைய சொற்களைக்கூடக் கையாண்டு இன உணர்வு தூண்டப்படுவதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

முஸ்லிம்களது அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். சிங்கள அரசியல், முஸ்லிம் அரசியல், தமிழர் அரசியல் என்று அரசியல் விவகாரங்களை குறிப்பிட்ட தத்தமது இனங்களுக்கானவையாக சித்திரிக்காமல் மனித குலத்தின் நலனையும் நாட்டின் அபிவிருத்தியையும் மையமானதாகக் கொண்டமைய வேண்டும். உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தும் அரசியலால் இனவாதம் மென்மேலும் வலுப்பெறுகிறதேயல்லாமல் நல்லுறவுகள் மலர்வதில்லை. மொத்தத்தில் அது இலங்கை நாட்டுக்கான” அரசியலாக இருக்க வேண்டும். சுயநலன்களோ இன உணர்வுகளோ அங்கு அறவே இருக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *