சான்று பகர்தலும் நற்பிரஜையாக வாழ்தலும்!

அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர்
விரிவுரையாளர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

“அவ்வாறுதான் நீங்கள் மக்களுக்கு சான்று பகர்கின்றவர்களாகவும் தூதர் உங்களுக்கு சான்று பகர்பவராகவும் இருக்க உங்களை நாம் நடுநிலை சமூகமாக ஆக்கினோம்.” (ஸூரதுல் பகரா: 143)

முஸ்லிம் சமூகத்தினது முதல் தலைமை கட்டமைப்பு, உள்ளக ஒழுங்குகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் முஹம்மத் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமையில் வரையப்பட்டுக் கொண்டிருந்தபோது அல்லாஹ் அதன் மைய சுழற்சிகளையும் அதனுள் இழையோட வேண்டிய கோட்பாடுகளையும் நடத்தைசார் விடயங்களையும் வழங்கிக் கொண்டிருந்தான். உலக மக்களுக்கு வழிகாட்டி, மக்களை நேரிய வழியின்பால் வழிநடத்திச் செல்லும் மொத்தப் பொறுப்பு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது சமூகத்தின் மீதும் ஒப்படைக்கப்படுகிறது.

தமது பிரதேசத்தில் (மக்கா, மதீனா) சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடி ஏகத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டி 15 வருடங்களைக் கழித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், இலட்சியவாத சமூகத்தை நடுநிலைச் சமூகம், சமநிலைச் சமூகம் என அல்லாஹ் வர்ணிக்கின்றான். நடுநிலைச் சமூகம் என்பது வெறும்  பண்பு நிலை, வர்ணனைச் சொல்லாடல் அல்ல. அது அகல்விரிவான கோட்பாட்டு விடயங்களைக் கூறும் சொல்லாட்சியாகும்.

மனிதன் அறிவும் உணர்வும் கொண்டவன்; ஆத்மாவையும் உடலையும் கொண்டவன். ஆத்மார்ந்த உணர்வுகளும் தேவைகளும் கொண்டவனாக இருப்பது போல் உடலியல் தேவைகளாலும் இயல்பூக்க உணர்வுகளாலும் ஆக்கப்பட்டவன். எனவே, இஸ்லாம் அவனை நடுநிலைத் தன்மையுடன் பார்க்கிறது. மனிதனை ஒட்டுமொத்த அடிமையாக அல்லது சுதந்திரவானாக ஆக்காமல் கட்டுப்பாடுகளுடன் கூடிய செயல் சுதந்திரமுள்ளவனாக ஆக்கியுள்ளது. தனி மனித வாழ்வில் நடுநிலைத் தன்மை பேணப்படுவது போலவே சமூக வாழ்விலும் நடுநிலைத்தன்மை கொண்ட சமூகம் மிகைத் தன்மைகளற்ற, தீவிரப் போக்குகளற்ற நீதத்தின் பாதையில் நிலைத்திருக்கும் அநீதி இழப்புகளுக்கு துணை நிற்காத தலைமை அந்தஸ்து கொண்ட சமூகம்.

வரலாறு நெடுகிலும் மனிதர்கள் தோற்றுவித்த சிந்தனைகள், கருத்தியல்கள், வாழ்க்கைப் போக்குகள், ஆத்மிக எண்ணக்கருக்கள், நாகரிகங்கள், விருப்பு வெறுப்புகள், கால- இட வேறுபாட்டுத் தாக்கங்களுக்கு உட்பட்டு முழுமைத் தன்மையற்றவையாக இருப்பது போலவே பகுதி நிலை விவகாரங்களுக்கும் தாக்கமுற்று, நடுநிலைத் தன்மைகள் அற்றவையாக இருப்பதைக் காண்கிறோம். இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி புவியையும் புவியில் வாழும் மனிதர்களையும் படைத்த ஏக வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டதாகும். அது எவ்வளவு தூரம் பூரணத்துவத் தன்மையும் மாறாத் தன்மையும் கொண்ட தெய்வீகத் தன்மை மிக்கதாக இருக்கின்றதோ அவ்வாறே, அதன் நடுநிலைத் தன்மையும் ரப்பானிய்யத் எனும் தெய்வீகத் தன்மையும் மிக்கதாகும். 

இஸ்லாம் கொள்கையால், கோட்பாட்டால் நடுநிலையானது. வழிபாடுகளில் அனுஷ்டானங்களில் நடுநிலைத்தன்மை பெற்றது. பண்பாடுகளில், குண ஒழுக்கங்களில் நடுநிலை கொண்டது. சட்டங்களில், ஒழுங்குகளில் நடுநிலைப் போக்கு கொண்டது. தனி மனித வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் இடையே சமநிலை விகிதத்தை உத்தரவாதப்படுத்தியுள்ளது. அவ்வாறே, அதன் வாழ்வொழுங்கிலும் நடுநிலைத் தன்மையைப் பிரயோகிக்கின்ற யதார்த்தபூர்வமான வாழ்க்கை நெறியாகும். 

நடுநிலைச் சமூகம் சான்று பகரும் சமூகமாக வாழ வேண்டும் என்ற கடப்பாடு இந்த சமூகத்தின் மீது ஒப்படைக்கப்பட்ட அடிப்படை வேளைகளில் ஒன்றாகும். அதற்கு அவர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்து இறை சந்நிதானத்தில் பதில் சொல்ல வேண்டியவர்கள். அவ்வாறுதான் நீங்கள் மக்களுக்கு சான்று பகர்கின்றவர்களாகவும் தூதர் உங்களுக்கு சான்று பகர்கின்றவர்களாகவும் இருக்க, உங்களை நடுநிலைச் சமூகமாக ஆக்கியுள்ளோம் என்ற இந்த வசனம் ஸூரதுல் பகராவின் 143ஆவது வசனம் தவிர்ந்து வேறு எங்கும் இடம்பெறவில்லை. ஸூரதுல் பகரா, பூமியில் மனிதர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக வாழ வேண்டியவர்கள் எனச் சொல்கிறது. இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது தலைமைத்துவப் பிரார்த்தனை ஸூராவின் எல்லா இடங்களிலும் இழையோடுவதைக் காண்கிறோம். 

இஸ்லாம் என்ற அருள்நெறி ஓர் இனத்தால், ஒரு காலப் பகுதிக்குரியோரால், சில பிரதேசங்களில் இருப்புக் கொண்டோரால் மாத்திரம் அனுபவிப்பதற்குரியதல்ல. அதன் எல்லாப் பக்கங்களும் ஒளிவு மறைவுகளின்றி முழு மனித சமூகத்துக்கும் காட்டப்படல் வேண்டும். அது அவர்களது சிந்தனையில் தாக்கம் விளைவிப்பதாகவும் மனக் கிளர்ச்சிகளை உண்டுபண்ணுபவையாகவும் சுயவிசாரணைக்கு உட்படுத்துபவையாகவும் அமைய வேண்டும். 

சொல்லாலும் செயலாலும் சான்று பகரும் பணி இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். தனி மனித, சமூக வாழ்வின் எல்லா கூறுகளிலும் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவதை எல்லோரும் காண வேண்டும். முஸ்லிம்கள் உலகின் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம், மனித வாழ்வின் பன்முக முன்னேற்றம், அபிவிருத்தி முதலான அம்சங்களின் பயனாளிகளாகவும் பார்வையாளர்களாகவும் இருந்து விடாது அதியுயர்ந்த விழுமியங்களுடன்  கூடிய பங்காளர்களாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். 

சான்று பகரும் சமநிலைச் சமூகம் எப்போதும் கோட்பாட்டு தளத்திலும் நடைமுறை வாழ்விலும் பண்பாட்டு நிலையிலும் அறிவியல் ஆய்வு நிலைகளிலும் சரிவுக்கும் புறழ்வுக்கும் உட்பட்டதுவோ அப்போதே தலைமை வழங்கும் தகுதியை இழந்தது. அதைத் தொடர்ந்து சான்று பகரும் கடமையை முழுமையாக நிறைவேற்ற முடியாததாக்கியது.

இருந்தபோதும் தனி மனித வாழ்வில், குடும்ப கட்டமைப்பில், குழந்தை வளர்ப்பில், அயலவர் உறவில், மானுடம் பெறுவதில், பொருளாதார வாழ்வில் தாம் வாழும் தேச எல்லைக்குள் அங்கு மேற்கொள்ளப்படும் நிர்வாக ஒழுங்குகளில் பிற சமூகங்களுடனான உறவாடலில், அறிவியல் முன்னேற்றங்களில், சான்று பகர்தல் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அப்போது மனிதர்கள் அதன் தெய்வீகத்தன்மையை, சமூக நீதியை, அமைதி மற்றும் சுபிட்சத்தின் பிறப்பிடங்களை மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதோடு மாத்திரமன்றி, அநியாயங்களின் தோற்றப்பாட்டையும் போலிப் பிரமைகளையும் சகல பிரச்சினைகளையும் மூலவேர்களையும் கண்டு கொள்வார்கள்.

முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் தம்மோடு வாழும் பெரும்பான்மை சமூகத்திற்கு இஸ்லாத்தின் இலகு தன்மையையும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். இஸ்லாம் கஷ்டமானதாகவோ, அதிருப்தியை ஏற்படுத்தக் கூடியதாகவோ அறிமுகப்படுத்தப்பட்டு விடக் கூடாது முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் தமது ‘இஜ்திஹாதின்’ ஆய்வுகள் ஊடாகவும் ‘தஜ்தீத்’ மறுசீரமைப்பு கோட்பாட்டாலும் மனித நலன்களைக் கட்டியெழுப்ப வந்தவர்கள் என ஏனைய இனங்கள் யதார்த்தபூர்வமாக கண்டு கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தமக்குள் நல்லவர்களாக வாழ்வது போல் நாட்டின் நலனில் பங்கு கொள்கின்ற அதன் பிரஜைகள் என அடையாளப்படுத்தப்பட வேண்டும். 

‘சான்று பகர்தல்’ என்ற இம்மகத்தான பொறுப்பு, குறித்த வசனத்தின் விளக்கம் முடிவில் மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

‘இறை வழிகாட்டுதலை முஸ்லிம் சமூகத்திடம் சேர்க்கின்ற மாபெரும் பொறுப்பும் கடமையும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சுமத்தப்பட்டு இருப்பதுபோல் உலக மக்களிடம் இறை வழிகாட்டுதலை சேர்க்கின்ற பொறுப்பும் கடமையும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு  கொண்டவராக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருப்பது போலவே பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு  முஸ்லிம்களுக்கும் உண்டு.

உன்னுடைய தூதர் மூலமாக நீ எங்களுக்கு அனுப்பி வைத்த உன்னுடைய வழிகாட்டுதலை உனது அடியார்கள் வரை சேர்ப்பதில் எத்தகைய குறையையும் வைத்து விடவில்லை என முஸ்லிம்களால் அந்நாளில் சான்றளிக்க முடியவில்லை எனில், அவர்கள் இறைவனிடம் வசமாக மாட்டிக் கொள்வார்கள். அந்த வேளையில் இறைவனின் பிடியிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது. அப்போதும் உலக மக்களின் தலைமைப் பொறுப்பும் மேன்மையும் சிறப்பும் நிறைந்த அந்த அந்தஸ்து அவர்களுக்கு எந்தப் பயனும் தராது.அதற்கு மாற்றமாக அந்தப் பதவியே அவர்களது அழிவுக்கும் இழிவுக்கும் காரணமாக ஆகிவிடும். அவர்களின் காலத்தில் அலட்சியத்தாலும் பிழைகளினாலும் உலகில் தலை தூக்கிய குழப்பங்கள், கொடுமைகள், அவலங்கள் யாவற்றையும் ஏற்றாக வேண்டியேற்படும். ‘உலகத்தில் தீமைகள் புயலாய் வீசியபோது… அக்கிரமங்களும் கொடுமைகளும் சூறாவளியாய் சூழ்ந்து நின்றபோது… மனித வாழ்வை அறியாமையும் அவலமும் வாட்டி வதைத்த போது நீங்கள் எங்கே மறைந்திருந்தீர்கள்?’ என மறுமையில் விசாரிக்கப்படும்.

அல்ஹஸனாத், பெப்ரவரி- 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *