சுபிட்சமானதொரு நாளை எமது நாட்டின் கண்டிப்பான தேவை!

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

சுதந்திர தினம் எனும்போது உள்ளத்தில் ஒரு குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் பரவுகின்றது. சுதந்திரத்தின் பெறுமதியை உணர்ந்தவர்களுக்கு இந்த அனுபவம் சுகமானது.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது நாட்டை நாம் பெற்றுக் கொண்டோம். எமது மண் எமக்குரியதாகி விட்டது. அதன் வாசனைகளை நுகர எமக்குத் தடையேதுமில்லை. எம்மை நாம் நிர்வகிக்கின்றோம். அதற்கான சட்ட வரைபை நாம் பெற்றிருக்கின்றோம். ஜனநாயக விழுமியங்கள் அதனை அலங்கரிக்கின்றன. எமது பாதுகாப்பு அதில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையர்கள் என்ற இணைப்பும் இலங்கைப் பிரஜைகள் என்ற அந்தஸ்தும் இலங்கை மக்களிடையே பரஸ்பர பக்க பலத்தையும் பரஸ்பர நல்லிணக்கத்தையும் உருவாக்குகின்றன. அதனால் சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற பேதம் மக்கள் மனங்களுக்கு வேலி போடவில்லை. வாழ்ந்த இடங்களில் இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாஞ்சையோடும் மனிதநேயத்தோடும்தான் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்கள். இடர்கள் வந்த காலங்களில் தன்னலம் பாராது ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவி செய்துள்ளார்கள்.

பன்மைகளுக்கு மத்தியில் ஒருமையாக நாம் வாழ்ந்தது இப்படித்தான். பிளவுபடாத தேசம் அல்லது ஒன்றுபட்ட நாடு என்பதன் முழு அர்த்தமும் அதுவாகவே இருக்கின்றது.

எமது நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்று சிந்தித்தபோதும்… செயல்பட்டபோதும்… போராடியபோதும் எமது முன்னோர்கள் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு நாடு வேண்டும் என்று சிந்திக்கவில்லை. இலங்கையருக்கு இலங்கை வேண்டும் என்றே சிந்தித்தார்கள். இனப் பிரச்சினை, மதப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை போன்றவற்றை உள்வீட்டு அண்ணன் தம்பிப் பிரச்சினையாகவே அவர்கள் பார்த்தார்கள்.

சில தீய சக்திகள் இத்தகைய சாத்விகங்களைத் தூக்கி எறிந்ததும் மோதல்களை உருவாக்கியதும் உண்மைதான். எனினும், தீய சக்திகள் எங்கிருந்து தோற்றம் பெற்றாலும் அவற்றுக்கு வாழ்வில்லை என்பதை இயற்கையின் விதி எழுதியே வைத்திருக்கின்றது. காரணம், மனித உள்ளங்களில் அந்த விதி எழுதப்பட்டிருக்கின்றது.

மனித உள்ளம் வெறுப்பு, பகை, குரோதம், அநீதி, பழிவாங்கல், அழிவு மற்றும் நாசகார வேலைகள், தந்திரங்கள், மோதல்கள் போன்ற அனைத்துக்கும் எதிரானதாகவே இருக்கிறது. அது மனித உள்ளத்தில் இயற்கை எழுதி வைத்த விதியாகும். அந்த விதியை எவராலும் அழித்துவிட முடியாது. அதனால் மக்களிடையே பரஸ்பர நல்லெண்ணங்களும் புரிந்துணர்வுகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கட்டியெழுப்புவதன் மூலம் நிச்சயம் நாடு கட்டியெழுப்பப்படும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இலங்கை எம் நாடு; இலங்கையர்கள் எமது மக்கள் என்ற ஒருமைப்பாட்டை நாம் பேண வேண்டும். நாட்டைத் துண்டாடுவதும் நாட்டு மக்களைத் துண்டாடுவதும் ஒன்றுதான். இரண்டில் எதைத் துண்டாடினாலும் அந்த ஒருமைப்பாடு சீர்குலைந்து போகின்றது. அப்போது சுதந்திரம் கேள்விக்குறியாக மாறுகின்றது| எதிர்காலம் நிச்சயமற்றதாகிறது.

உடலில் ஓர் ஒருமைப்பாடு இருக்கிறது. உடலின் ஒவ்வோர் உறுப்பும் அதனதன் தொழிற்பாட்டை சரியாக வழங்கும்போது உடலின் ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்படுகின்றது.

இயற்கையில் ஓர் ஒருமைப்பாடு இருக்கிறது. சூரியன், காற்று, வளிமண்டலம், அடர்ந்த காடுகள் என இயற்கையின் ஒவ்வோர் அங்கமும் இடையூறுகளின்றி அதனதன் பங்களிப்பை வழங்கும்போது இயற்கையின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுகிறது.

மனித சமூகத்தில் இருக்க வேண்டிய ஒருமைப்பாடும் அத்தகையதே. பன்மைத்துவம் பன்மைத்துவமாக இருக்க புரிந்துணர்வுகளுடன் அனைவரும் ஒன்றிணைந்து மனித நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதே அந்த ஒருமைப்பாடாகும். அந்த நாகரிகத்துக்கான பங்களிப்புகளில் ஒவ்வொரு சாராரும் தமக்குரியதை நிறைவேற்றுவார்கள்.

இத்தகைய தன்மைகளைக் கொண்ட சுபிட்சமானதொரு நாளை எமது நாட்டின் கண்டிப்பான தேவை. சுதந்திரம் வாழவும் வளரவும் பிரார்த்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *