சூழ்ந்து கொள்ளும் மறுமையும் இரு வகை முகங்களும்

இஸட்.ஏ.எம். பவாஸ் BACC (Hons), சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், மலேசியா

ஆல்குர்ஆன் மறுமை நாளைக் குறிக்க பல பெயர்களைக் கையாண்டுள்ளது. அல்காரிஆ, அல்வாகிஆ, அல்ஹாக்கா போன்றவை இதற்கு உதாரணங்களாகும். சிலபோது மறுமை நாளுக்குரிய பெயர் ஸூராவின் பெயராகவும் சூட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் ஸூரதுல் ஃகாஷியா (மறுமை) என்பது அல்லாஹ்வின் வேதனைகள் சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு பயங்கரமான நாள் என்பதைக் குறித்து நிற்கிறது. இதற்கு முந்திய அத்தியாயமான ஸூரதுல் அஃலாவில் சுவனத்திற்குச் செல்பவர்கள், நரகத்திற்குச் செல்பவர்கள் ஆகிய இரண்டு வகையான மனிதர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஆனால், அந்த ஸூரா நெறிபிறழ்ந்து வாழ்ந்த மனிதர்களைப் பற்றிக் குறிப்பிட்டு முடிவடைகிறது. ‘எனினும், நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.’ (87: 16) இந்த வகை மனிதர்களுக்குத்தான் ஸூரதுல் ஃகாஷியாவின் ஆரம்பத்தில் அறைகூவல் விடுக்கப்படுகிறது.

‘நபியே! உம்மிடம் சூழ்ந்து கொள்ளக்கூடிய மறுமையின் செய்தி வந்ததா?’ (88: 1) என்று அல்லாஹ் தன் தூதரை விளிக்கிறான். இன்னொரு வகையில் சொல்வதானால் முந்தைய ஸூராவில் தோல்வியுறும் மனிதர்களை விளித்துப் பேசிய அல்லாஹ், இப்போது அவர்களிடமிருந்து திரும்பி தன் தூதரைப் பார்த்துப் பேசுகிறான்.

அல்குர்ஆனில் வேறு இடங்களிலும் அல்லாஹ் இவ்வாறு வினா எழுப்புகிறான்: ‘நபியே! மூஸாவின் செய்தி உம்மிடம் வந்ததா?’ (20: 24)

‘இப்றாஹீமின் கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி நபியே உம்மிடம் வந்ததா?’ (51: 24)

‘ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் கூட்டத்தாரின் செய்தி நபியே! உம்மிடம் வந்ததா?’ (85: 17-18)

மறுமை நாள் பற்றிய பல விபரங்கள் குர்ஆனில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் ‘மறுமையின் செய்தி உம்மிடம் வந்ததா?’ என்று அல்லாஹ் கேட்கிறான். பாரமான, சக்தி வாய்ந்த, பாரதூரமான ஒரு விடயம் வருவதைக் குறிப்பிட ‘ஜாஅ’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒப்பீட்டு ரீதியில் இலகுவான, எளிமையான விடயத்திற்கு ‘அதா’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இங்கு அல்லாஹ் மறுமை நாள் பற்றி சொல்லாமல் மறுமை நாள் பற்றிய செய்தி குறித்துப் பேசுகிறான். மறுமை பற்றிய செய்தி இலகுவானது; ஆனால், மறுமை எனும் நிகழ்வு கடினமானது.

‘சூழ்ந்து கொள்ளக்கூடிய மறுமையின் செய்தி நபியே! உம்மிடம் வந்ததா?’ (88: 1) என்று அல்லாஹ் ஏன் வினா எழுப்புகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு மத்தியில் அதிபர் வந்து ஆசிரியரிடம், ‘நீங்கள் இவர்களுக்கு சிறப்பாக கற்றுக் கொடுக்கவில்லையா?’ என்று கேட்கிறார். இந்தக் கேள்வி மூலம் இரண்டு விஷயங்கள் நாடப்படுகின்றன. ஒன்று, அதிபர் மாணவர்களிடமிருந்து தன் கவனத்தைத் திருப்புகிறார். மற்றையது, மாணவர்களுக்கு ஆசிரியர் சிறப்பாகத்தான் கற்றுக் கொடுத்தார் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டுகிறார்.

‘எனினும், நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். மறுமையோ மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும். நிச்சயமாக இது இப்றாஹீம், மூஸா ஆகியோரின் வேதங்களான முன்னைய வேதங்களில் உள்ளதாகும்.’ (87: 16- 19)

மக்கா இணைவைப்பாளர்கள் தங்களது மரபை இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோடு இணைத்துப் பார்த்தார்கள். யூதர்கள் தங்களது மரபை மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிலிருந்து ஆரம்பித்தார்கள். எனவே, அன்று வாழ்ந்த இந்த இரு சாராரும் தங்களது வம்சாவழி மரபை ஒரு தடைவ சீர்தூக்கிப் பார்த்தாலும் உலகத்தைவிட மறுமைதான் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் எப்போதும் கல்வி கற்பதிலும் பொருளீட்டுவதிலும் திருமணம் முடிப்பதிலும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதிலும் மாத்திரம் கவனத்தைக் குவித்து, வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்து விடுகிறார்கள். ஆனால், மறுமை வந்து விட்டால் மனிதன் எதற்காக இரவும் பகலும் ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்தானோ அவை அனைத்தையும் அது மூடிக்கொள்ளும். மறுமை சூழ்ந்து கொண்ட பிறகு, மனிதன் உலகத்தில் பெறுமதியானவையாகக் கருதிய யாவும் அவனுக்கு எந்தப் பெறுமானமும் அற்றவையாக மாறிவிடும்.

இழிவடையும் முகங்கள்

இந்த ஸூராவில் மனிதர்கள் இரு வகையினராகப் பிரித்துக் காட்டப்படுகின்றனர். எனினும், அவர்களைப் பற்றி ‘இரு வேறுபட்ட முகங்கள்’ என்றே உரையாடல் தொடர்கிறது. ஏனெனில், மகிழ்ச்சி- கவலை, அமைதி- ஆபத்து, இலகு- கஷ்டம், பாதுகாப்பு- பயம் ஆகிய எல்லா நிலைகளிலும் உடனடி மாற்றம் தென்படுவது மனிதனின் முகத்தில்தான். முகத்தை வைத்துத்தான் மனித ஆளுமை அடையாளம் காணப்படுகிறது. எனவே, ‘முகங்கள்’ எனும் சொல் இங்கு ‘மனிதர்கள்’ எனும் பொருளில் உள்ளது.

‘அந்நாளில் சில முகங்கள் இழிவடைந்திருக்கும்.’ (88: 2)

அல்குர்ஆனில் வேறு இடங்களில் நிராகரிப்பாளர்களது கண்களும் குரல்களும் அச்சத்தால் சூழப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இழிவின் மிகத் தாழ்ந்த நிலையாகும். இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களது உள்ளம்தான் அச்சத்தால் மூழ்கியிருக்கும். பார்க்க- (57: 16)

‘அவை தீமையில் உறுதியாக நின்று செயற்பட்டவையாகும்.’ (88: 3)

அவர்கள் தங்களது செயல்களால் கடுமையாகக் களைப்படைந்து விட்டார்கள். இந்த உலகத்தில் அவர்கள் அல்லாஹ் ஏவியவற்றை செய்யவில்லை. அவன் எதிர்பார்த்த பணிகளைப் புரியவில்லை. அவனது விருப்பத்திற்கேற்ப செயற்படவில்லை. மாறாக, அவற்றுக்கெல்லாம் முரணாக வேலை செய்து உலகத்தில் களைப்படைந்தார்கள். அவர்கள் உலகத்திலும் மகிழ்ச்சியானதொரு வாழ்வை அனுபவிக்கவில்லை. வாழ்வின் அற்ப விடயங்களுக்காக உடலாலும் உள்ளத்தாலும் சிந்தனையாலும் களைப்படைந்து தங்களது வாழ்நாளை வீணடித்துக் கொண்டார்கள். உலகத்தில் களைப்படைந்திருந்த அவர்களுக்கு மறுமையின் களைப்பும் காத்திருக்கிறது. ‘நாஸிபத்’ என்பது பூமிக்குள் நடப்பட்டவர்களாகவும் தங்களது பாதங்களால் நிற்க முடியாதவர்களாகவும் சரிந்து விழக் கூடியவர்களாகவும் இருப்பதைக் குறிக்கிறது.

‘அவை கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழையும்.’ (88: 4)

அவர்கள் தாங்களாகவே நரகத்தில் நுழைவார்கள். அல்லாமா ஆலூஸி (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுவது போன்று அவர்கள் முழுமையாக நெருப்பால் சூழப்பட்டிருப்பது இழிவின் மற்றொரு நிலையாகும். ஏனெனில், அவர்கள் தங்களைத் தாங்களாகவே நரகத்தில் வீழ்த்திக் கொள்கிறார்கள். ‘தஸ்லா’ என்பதிலுள்ள ‘த’ முந்தைய வசனத்திலுள்ள முகத்தைக் குறிக்கிறது. மனிதனுக்கு ஓர் ஆபத்து நேரும்போது தன் கைகளைக் கொண்டு முதலில் பாதுகாத்துக் கொள்ள விரும்புவது அவனது முகமாகும். ஆனால், இந்த மனிதர்கள் விருப்பத்துடனேயே தங்களது முகங்களை நரகத்திற்குத் தாரைவார்க்க முன்வருகிறார்கள்.

பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு அரபிகள் ‘ஹமதிஷ் ஷம்ஸ்’ என்று கூறுவார்கள். ஹாமியத் என்பது சுட்டெரிக்கும் நரகமாகும். அதன் மற்றொரு பொருள் முழுமையாக சுட்டுப் பொசுக்காமல் தடுக்கும் நெருப்பு என்பதாகும். தொடர்ந்தும் வேதனையை அனுபவிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.

‘கொதிக்கும் ஊற்றில் இருந்து அவற்றுக்குப் புகட்டப்படும்.’ (88: 5)

மீண்டும் இங்கு மனிதர்கள் புகட்டப்படுவார்கள் என்று கூறாமல் முகங்களுக்குப் புகட்டப்படும் என்றே உரையாடல் தொடர்கிறது. இது இழிவின் இன்னொரு தாழ்ந்த நிலையாகும். ‘ஸிகாயா’ என்பது வாயைத் திறந்து மிருகங்களுக்குப் பானம் புகட்டுவதை சுட்டுகிறது. அச்சொல் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

நெருப்பில் வேதனையை அனுபவிக்கும் ஒருவருக்கு உடனடியாகத் தேவைப்படுவது தண்ணீராகும். தண்ணீர் புகட்டப்படும் நீரூற்றை ‘ஆனியத்’ என்று ஸூரா வரையறுக்கிறது. ‘அல்ஆன்’ என்றால் ‘இப்போது’ என்று பொருள். தண்ணீர் அதிகூடிய வெப்பத்தில் கொதித்து நுரைகளை வெளியே தள்ளும் நேரம் இப்போது வந்து விட்டது என்பது அதன் பொருளாகும். அந்த நீரூற்று நுரைகளை வெளிப்படுத்தும் அளவுக்கு கொதித்த பிறகுதான் தண்ணீரைக் கக்கிவிடும். அது முகத்தை நோக்கியே பீறிட்டுப் பாயும். நரகத்தில் இருக்கும் இந்த நீரூற்றின் ஒரேயொரு பணி கொதிக்கும் நீரை வெளியிடுவதாகும்.

‘முட்செடியைத் தவிர அவர்களுக்கு வேறெந்த உணவும் இல்லை.’ (88: 6)

‘ழரீஃ’ என்பது மிருகங்கள்கூட உண்ண விரும்பாத நீண்ட, கூர்மையான, நச்சுத்தன்மை கொண்ட ஒரு முட்செடியாகும். அந்தச் செடிக்கு அருகே மேயச் செல்லும் மிருகங்கள்கூட அவற்றின் முகங்கள் கீறிக் கிழிக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். ஒட்டகம் மாத்திரம்தான் அதை உண்ண முயற்சிக்கும்.

ஸக்கூம், ஃகிஸ்லீன், ழரீஃ என்று நரகத்திலுள்ள மூன்று வகையான உணவுகளை அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது. ழரீஃ என்பது அனைத்திற்குமான பொதுச் சொல்லாகும். நரகத்தில் இருக்கும் நெருப்பாலான முட்கள் நிறைந்த கள்ளிச் செடி பற்றி ‘நிச்சயமாக அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிவரும் ஒரு மரமாகும்’ (37: 64) என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. நரகில் கிடைக்கும் கொதிக்கும் நீர், சீழ், சலம் போன்றவற்றுடன் இதுவும் சேர்ந்து கொள்கிறது.

‘அது கொழுக்க வைக்கவும் மாட்டாதுளூ பசியைத் தீர்க்கவும் மாட்டாது.’ (88: 7) உணவில் சுவை இருக்க வேண்டும்ளூ அது உடலுக்குப் பயனளிக்க வேண்டும். இந்த இரண்டும் அங்கு வழங்கப்படும் உணவில் அறவே கிடையாது.

மகிழ்ச்சியுறும் முகங்கள்

‘அந்நாளில் சில முகங்கள் செழிப்புடன் இருக்கும். அவை தமது முயற்சி குறித்து திருப்தியுடன் இருக்கும்.’ (88: 8-9)

அந்த நாளில்தான் சில முகங்கள் மென்மையாகவும் இலகு நிலையிலும் இளைப்பாறியவாறும் புதுப் பொலிவுடனும் களைப்பின் எந்த சாயலும் இல்லாமலும் இருக்கும். தமது செயல்களும் முயற்சிகளும் அர்ப்பணங்களும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தந்தன என்ற பூரிப்பில் பூத்திருக்கும் முகங்கள்! உலகில் புரிந்த பணிகள் அல்லாஹ்வால் பாராட்டப்பட்டதால் பெருமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் முகங்கள்!

‘நாஇம்’ என்பது ஒரு பரிசைப் பெற்றுக் கொள்ளும்போது ஒருவரின் முகத்தில் தென்படும் மகிழ்ச்சியான நிலையாகும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அவர்களுக்கு இருந்தது. அதை மிகச் சிறப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றி முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். எனவே, அந்நாளில் அதன் விளைவுகள் அவர்களது முகத்தில் பிரதிபலிக்கும். வேறு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்:

‘அந்நாளில் சில முகங்கள் தமது இறைவனைப் பார்த்து மலர்ச்சியுற்றிருக்கும்.’ (75: 22-23)

‘அந்நாளில் சில முகங்கள் பிரகாசித்து மகிழ்வுடன் சிரித்துக் கொண்டிருக்கும்.’ (80: 38- 39)

தோல்விக்குரியவர்கள் தீய வழியில் முயன்று பாடுபட்டு உலகத்தில் களைப்படைந்து மறுமையிலும் களைப்படைந்த காட்சியை ஸூராவின் ஆரம்பத்தில் பார்த்தோம். நன்மக்கள் உலகத்தில் வியர்வை சிந்தி அல்லாஹ்வுக்காக களைப்படைந்து மறுமையில் செழிப்பான முகங்களோடு இருப்பார்கள்.

‘அவை உயர்ந்த சுவர்க்கத்தில் இருக்கும்.’ (88: 10)

உயர்ந்தவை என்பது அவற்றின் தூய்மையையும் துப்புரவையும் காட்டும் சொல்லாட்சிகளாகும். உயர்ந்த இடத்தில் இருக்கும்போது சுவனவாசி தான் உரிமை கொண்டுள்ள அனைத்தையும் ஒரே பார்வையில் பார்த்துப் பரவசம் அடைய முடிகிறது.

‘அவை அதிலே வீணான எவற்றையும் செவியுறாது. ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று அதில் உண்டு. அதிலே உயர்ந்த கட்டில்களும் ஒழுங்காக வைக்கப்பட்ட குவளைகளும் வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் விரிக்கப்பட்ட கம்பளங்களும் உள்ளன.’ (88: 11- 16)

தோல்வியுள்ளவர்களுக்கு ஒவ்வொரு துன்பத்திற்கும் மேலால் மற்றொரு துன்பம் காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது வெற்றியாளர்கள் இன்பங்களில் அதி உயர்ந்த இன்பத்தை அடைந்து விட்டார்கள் என்று நற்செய்தி பகரப்படுகிறது. அவர்களுக்காக அனைத்தும் தயார் செய்து கிரமமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விருந்தாளிகளாக சென்று அங்கு அமர வேண்டியதுதான். இவ்வாறாக அந்த சுவனத்து ஆடம்பர வாழ்க்கை காட்சிப்படுத்தப்படுகிறது.

பிரபஞ்ச அத்தாட்சிகளும் இறைதூதரின் பொறுப்பும்

‘ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது, வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது, மலைகள் எவ்வாறு நடப்பட்டுள்ளன, பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?’ (88: 17-20)

மறுமைச் சுற்றுலாவுக்கு நம்மை அழைத்துச் சென்ற ஸூரா இப்போது உலகுக்கு அழைத்து வந்து பிரபஞ்ச அத்தாட்சிகளை நோட்டமிடுமாறு அறைகூவல் விடுக்கிறது. பாலைவனப் பெருவெளியில் அரபிகளுக்கு மிகப் பரிச்சயமான இயற்கைச் சூழலை நினைவூட்டி படிப்பினை பெறுமாறு ஆணையிடப்படுகிறது. பாலைவனத்தில் ஒட்டகத்தில் அமர்ந்து பயணிக்கும் ஒருவன் தனக்கு மேலால் இருக்கும் வானத்தையும் முன்னால் தென்படும் மலைகளையும் தன் பாதங்களுக்குக் கீழ் இருக்கும் பூமியையும் தெளிவான சான்றுகளாகக் கண்டு கொள்ள முடியும் என்று அன்றைய மனிதனின் அறிவுத் தரத்திற்கு ஏற்றவிதமாக இங்கு ஸூரா சிந்திக்கத் தூண்டுகிறது. விஞ்ஞானமும் தொழிநுட்பமும் முன்னேற்றத்தின் உச்சத்தைத் தொட்டுள்ள இன்றைய நவீன உலகில் வானத்திலும் பூமியிலும் மனித வாழ்விலும் எண்ணற்ற அத்தாட்சிகள் நிம்பிக் கிடக்கின்றன. எனவே, அவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்த்த பிறகும் இறைநம்பிக்கை கொள்ளாத மனிதனைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

‘எனவே நபியே! நீர் உபதேசம் செய்வீராக! நீர் உபதேசம் செய்யக் கூடியவரே! நீர் அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். எனினும், எவன் புறக்கணித்து நிராகரித்தானோ அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் தண்டிப்பான். நிச்சயமாக அவர்களது மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரணை செய்வது நமது பொறுப்பாகும்.’ (88: 21-26)

விளைவுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தும் நினைவூட்டிக் கொண்டிருக்குமாறு இங்கு அல்லாஹ் தன் தூதருக்கு ஆறுதல் அளிக்கிறான். அதேவேளை மனிதர்களைப் பற்றிய கவலையுணர்வு அழைப்பாளர்களிடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் இந்த வசனத் தொடர் உணர்த்துகிறது. புறக்கணிப்பவர்களுக்கு ‘பெரிய வேதனை’ இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இதற்கு முந்திய ஸூராவில் ‘பெரு நெருப்பு’ இருப்பதாகக் கூறினான்.

இறைதூதுத்துவக் கண்ணோட்டத்திலிருந்து நோக்கும்போது இஸ்லாத்தின் சிறப்பம்சமான மத சகிப்புத் தன்மையையும் பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் மனோபாவத்தையும் உணர்த்துவதாகவும் இந்த வசனத் தொடரை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

‘நபியே! அவர்களுக்கு நாம் வாக்களிக்கும் சிலவற்றை உமக்கு நாம் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னர் உம்மை நாம் மரணிக்கச் செய்தாலும் உம்மீதுள்ள பொறுப்பு எடுத்துரைப்பதேயாகும். விசாரணை செய்வது நமது பொறுப்பாகும்’ (13: 40) என்று இன்னொரு ஸூராவில் அல்லாஹ் கூறுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *