செழிப்பான நாளை ! வளமான தாய் நாடு!

எம்.எச்.எம். ஹஸன் ரம்ய லங்கா

சுதந்திரமான தேசம், சுயாதீனமான மக்கள், தன்னாதிக்கமுள்ள அரசாங்கம் என்ற எண்ணக்கருக்கள் இன்றைய காலகட்டத்தில் பெருமளவு பேசப்படுவதில்லை. சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில் ஏகாதிபத்திய நாடுகளின் குடியேற்றங்களாக இருந்த பல நாடுகளில் மட்டுமன்றி, சர்வாதிகார ஆட்சி புரிந்த எதேச்சதிகார மன்னராட்சி நிலவிய நாடுகளிலும் இந்த எண்ணக்கருக்கள் மக்களின் எண்ணங்களில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தின. என்றாலும், சுதந்திரத்தின் அருமையும் பெறுமதியும் விலையும் நன்கு விளங்குவதற்கு அடிமைத்துவமான அல்லது குடியேற்ற நாடொன்றில் வாழ்ந்த அனுபவம் வேண்டும்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் முதல் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றங்களாக ஆக்கப்பட்டன. நாடுகாண் பயணங்களின் விளைவாக கைப்பற்றப்பட்ட அத்தகைய நாடுகளை பல நூற்றாண்டுகளாக மாறி மாறித் தம் கைகளில் வைத்திருக்கும் ஆற்றலை ஐரோப்பிய நாடுகள் பெற்றிருந்தன. ஐரோப்பிய தேசியவாதத்தின் பின்னணியில் ஒவ்வொரு நாடும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் தமது சாம்ராஜ்ய பெருமையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு சாதனமாகவும் தனது தாய் நாட்டுக்குத் தேவையான செல்வங்களை தாரளமாகப் பெற்றுக் கொள்ளும் இலகு சந்தையாகவும் குடியேற்ற நாடுகளை வைத்திருக்கும் கலாசாரத்தை நிறுவியது எனலாம்.

ஐரோப்பிய நாடுகள் பொதுவாக ஏனைய எதேச்சதிகார நாடுகளின் குடியேற்றங்களாக இருந்ததில்லை. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றி வளர்ந்த தேசியவாத சிந்தனைகளும் அதற்கான முன்னெடுப்புகளுமே அவர்களது சுதந்திரப் போராட்டங்களாக அமைந்திருந்தன என்று கூறினாலும் பொருந்தும்.

ஒரு நாட்டின் பூகோள அமைவிடம், பௌதிக வளங்கள், முயற்சியாண்மையிலும் உழைப்பிலும் ஈடுபடக்கூடிய போதியளவு ஆரோக்கியமான சனத்தொகை, இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்படும் நிலை, நாட்டை நேசிக்கும் மக்கள், தொடர்ந்தேர்ச்சியான மனிதவள அபிவிருத்தி… போன்ற பல்வேறு விடயங்கள் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவு பாரம்பரியத்தைக் கொண்டிராத ஐக்கிய அமெரிக்கா வேறுபட்ட பல பிராந்தியங்களை ஒன்றிணைத்து ஐக்கிய அமெரிக்காவாக உருவானது. நான்கு வருடங்கள் பதவிக் காலங்கள் கொண்ட 45 ஜனாதிபதிகளைக் கடந்து இன்று 46ஆவது ஜனாதிபதி பதவியேற்கும் வரை ஒரே அரசியல் யாப்புடன் கூட்டாட்சி ஜனாதிபதி முறைமை ஆட்சியில் நிமிர்ந்து நிற்பதற்கான காரணங்களில் மேற்கூறிய அநேக விடயங்கள் பொருந்துவனவாக உள்ளன. உலக வரலாற்றில் முதல் சுதந்திரப் போராட்டம் நடந்து வெற்றி பெற்ற நாடும் அதுதான்.

ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 30 நாடுகள் ஒவ்வொன்றும் வௌ;வேறு மொழிகளைப் பேசும் வித்தியாசமான சமயப் பிரிவுகளைப் பின்பற்றும் நாடுகள், பிரித்தானியா விலகிச் சென்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இன்று ஒற்றுமையாக பயணிக்கின்றன. இந்தியா உலகின் மானிட அருங்காட்சியகம் (Human Museum) என்று வர்ணிக்கப்படும் நாடு. எண்ணற்ற மொழிகள், கலாசாரங்கள், சமயங்கள், 130 கோடிக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டு இன்று உலகில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. 1947இல் சுதந்திரம் கிடைத்ததையடுத்து தேசிய ஒற்றுமையை உருவாக்கும் விதத்திலான ஒரு குடியரசு யாப்பை 1951இல் நிறைவேற்றி பல்லின, பல மத, பன்மொழி, பன்மைக் கலாசாரங்களுக்கும் இடையே புரிந்துணர்வை, ஒற்றுமையை ஏற்படுத்தியதன் விளைவே இந்த வெற்றி என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஹொங்கொங் போன்ற நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் அரைவாசியைத் தாண்டும் வரையிலும்கூட அபிவிருத்தி குன்றிய நாடுகளாகவே கருதப்பட்டன. தேச ஒற்றுமை, இனங்களுக்கும் மொழிகளுக்குமிடையே சமத்துவம், ஒருவரை ஒருவர் மதித்தல், அனைவரும் சமமாகக் கருதப்படல் போன்ற எளிமையான கோட்பாடுகளும் முன்னேற்றமடைந்து இன்று பொருளாதார ஜாம்பவான்களாகத் திகழ்கின்றன. எமது நாடு பொருளாதார வளமிக்கதாக இருந்த காலத்திலும் நாம் கொழும்பிலுள்ள பின்தங்கிய சேரிப் பகுதிகளை கொரியா என்று தாழ்த்திப் பேசினோம். சுதந்திரம் பெற்று முதற் தடவையாக கொழும்பு விமான நிலையத்தினூடாக சிங்கப்பூரை நோக்கிச் சென்ற லீ குவான் யூ இலங்கையைப் போன்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது இலக்கு என்று பெருமையுடன் கூறினார்.

பிரித்தானியர் வெளியேறும்போது பல துறைகளில் இலங்கை உயர்வான இடத்தில் இருந்தது. எழுத்தறிவு வீதத்தில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. நாடளாவிய சிறந்த போக்குவரத்துப் பாதைகளும் புகையிரத மற்றும் வாகனப் போக்குவரத்து சேவைகளும் காணப்பட்டன. அரசாங்க வருமானத்தில் 40% ஈட்டும் விதமாக புகையிரத சேவை சிறப்பானதாக விளங்கியது. ஏற்றுமதித் துறையில் மெச்சத்தக்க ஒரு தரத்தில் காணப்பட்டது. சிறந்த தபால் சேவை, வங்கிச் சேவைகள், பொலிஸ் சேவை, இலவசக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி விடயத்தில் ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க இடத்தில் இருந்தது. வினைதிறனும் விளைதிறனும் கொண்ட துறைமுகம், விமான நிலையம் என்பன அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மட்டத்தில் காணப்பட்டன. அந்த வகையில் இலங்கையின் இன்றுள்ள நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் 72 வருட சுதந்திர ஆட்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இலகுவில் எடை போட்டுக் கொள்ளலாம்.

இலங்கை, இயற்கை வளங்கள் நிரம்பிய நாடு. அதன் புவியியல் அமைவிடம் சர்வதேச ரீதியாக முக்கியத்துவமானது. வரலாற்றுக் காலம் முதலே உலக வல்லரசுகளின் பார்வை இலங்கை மீது பதிவதற்கு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடமே காரணம். கொழும்புத் துறைமுகம் இந்து சமுத்திரத்தில் குறிப்பிடத்தக்க ஓர் ஏற்றுமதி மையமாகத் திகழ்கின்றது. எழுத்தறிவு வீதத்தில் இலங்கை ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக உள்ளது. தாய்-சேய் மரணம், தொற்று நோய்கள் பரவல், பாரிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்றிருத்தல், சுத்தமான குடிநீரைப் பெறும் வாய்ப்பு, தொடர்ந்தேர்ச்சியான மனித வள அபிவிருத்தி முதலான விடயங்களிலெல்லாம் இலங்கை ஒரு திருப்திகரமான நிலையிலேயே உள்ளது.

இந்தப் பின்புலத்தில் வைத்தே நாம் இலங்கையில் இம்முறை 2021 சுதந்திர தினத்தின் மகுட வாசகத்தை நோக்க வேண்டியுள்ளது. ‘செழிப்பான நாளை| வளமான தாய் நாடு’ என்பதை உச்சரிக்கும்போதே ஓர் இன்பம் பிறக்கிறது. ஒவ்வோர் இலங்கையனும் கனவு காணும் நிலை அது. அது வெறும் கற்பனையல்ல. அடைந்து கொள்ளக்கூடிய இலக்கு என்றே தெரிகிறது.

அவ்வாறாயின் எங்கோ பிரச்சினையுள்ளது என்பதுதானே அர்த்தம்! இலங்கை விவசாய நாடு என்ற எல்லைக்குள் நின்றாலும் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நாட்டினால் உலகத்தின் தேவைகளுக்காக உற்பத்தி செய்ய முடியாது. உணவுத் துறையில் சுயதேவை பூர்த்தி என்பதே வெற்றிகரமானதோர் இலக்குதான். கனரக இயந்திரங்கள், வாகனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய மூலப் பொருட்கள் இலங்கையில் இல்லை. வாகனங்களை, இயந்திரங்களை இயக்கும் எண்ணெய் வளமும் இல்லை. ஆனால் காரீயம், இல்மனைற், பொஸ்பேற் போன்ற அரிய வகை கனிய வளங்கள் நம் நாட்டிலுண்டு.

நாட்டைச் சுற்றி கடல் இருந்தும் மீனும் கருவாடும் இறக்குமதி செய்யப்படுகின்றன. தென்னை ஏற்றுமதி நாடாக இருந்த எமக்கு இப்போது தேங்காய் எண்ணெயையும் தேங்காயையும் இறக்குமதி செய்யும் நிலையேற்பட்டுள்ளது. வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கும் செழிப்பான பூமியில் இருந்து கொண்டு பழங்களை இறக்குமதி செய்கின்றோம். பசும்புல் தேசமாக இருந்தும் பால்மாவுக்காக வருடாந்தம் கோடிக்கணக்கான ரூபாய்களை வெளிநாட்டுச் செலாவணியாக இறைக்க வேண்டியேற்பட்டுள்ளது.

விஜயன் இலங்கைக்கு வந்தபோது குவேனி தறியில் துணி நெய்து கொண்டிருந்ததாக ஒரு செய்தி இருக்கிறது. ஆனால், நாம் ஆடைத் தேவைக்காக வெளிநாடுகளையே தங்கியிருக்கின்றோம். வாசனைத் திரவியங்களைத் தேடி அன்று ஐரோப்பியர் கீழைத்தேசங்களுக்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்தார்கள். இன்று ஏலக்காய், மஞ்சள், மிளகு, கறுவா என்று அன்றாடத் தேவைக்கே வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலை. நாட்டு வளங்களைச் சுரண்டி வருவாய் ஈட்டும் நோக்கில் வந்த ஐரோப்பியரின் ஆதிக்கத்திலேயே இலங்கை சிறப்பான பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டிருந்தத ஒரு நாடு, தேசியவாதிகளால் ஆளப்படும்போது விரலுக்கு விஞ்சிய வீக்கம் என்பது போல சக்திக்கு மீறிய படுகடன் சுமையாய் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மீண்டு வர இயலாதா? எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு செழிப்பான தேசத்தை வழங்க முடியாதா? என்ற கடினமான கேள்விக்கு விடை ‘முடியும்’ என்பதுதான். எப்படி முடியும்? என்பது எமது கையில்தான் உள்ளது.

தேசத்து மக்களிடையே என்ன கருத்து-வேற்றுமைகள் இருந்தபோதிலும் இனம், மொழி, சமயத்தால் வேறுபட்ட போதிலும் இது எனது நாடு, எனது பெற்றோரின் நாடு, எனது வாரிசுகள் வாழப்போகும் நாடு, இதன் முன்னேற்றமும் பின்னடைதலும் என்னையும் சாரும். அது என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என்ற உணர்வை ஏற்படுத்த முடியுமானால் அது செழிப்பான நாளையின் அடிப்படையாக அமையும். பிரித்தாளும் தந்திரம் கொண்ட பிரித்தானியர் என்று குறை சொன்னோம். இன்று நாமே பல குழுமங்களாகப் பிரிந்து நிற்கின்றோம். நாடு முன்னேற நாம் எல்லோரும் முன்னேற வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும். நாட்டுப்பற்று, தேசாபிமானம் என்பது நாட்டைப் பற்றிப் பெருமிதமடைவது மட்டுமல்ல. மாறாக, அதன் வெற்றியிலும் தோல்வியிலும் கரிசனை செலுத்துவதும் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் உணர்வுபூர்வமாக பங்கேற்பதும் நாட்டுக்கு எதிரான செயல்களின்பாலோ குறைந்தபட்சம் சிந்தனையின்பாலோ செல்லாதிருத்தல். எல்லா அநியாயங்களை விடவும் அக்கிரமங்களை விடவும் பாரதூரமானது, நாட்டுக்குத் துரோகமிழைப்பது என்ற கண்ணோட்டமும் அனைத்துக் குடி மக்களிடையேயும் ஆழப் பதிந்து விடுவதாகும். கடந்த 72 வருடங்களில் பதவியேற்ற அரசாங்கங்கள் நாட்டு மக்களிடையே பிரிவினையை வளர்க்கப் பாடுபட்ட அளவுக்கு தேசாபிமானத்தை தாபிப்பதற்கு முயற்சிக்கவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்தத் தவறுகளை உணர்ந்து திருந்தி நாட்டுப்பற்றைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளின்பால், சிந்தனைகளின்பால் செல்ல முடியும்.

இலங்கை நீர் வளம், நில வளம், கடல் வளம், மழை வளம் என்பன ஒருங்கிணையப் பெற்ற பூமி. பல்லாயிரம் வருடங்கள் செழிப்பாய் இருந்த இவ்வளங்கள் எதிர்காலச் சந்ததியினருக்குக் கிடைக்காமற் போய்விடுமோ என்று சிந்திக்கின்ற அளவுக்கு இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. சூழலுக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. காடழிப்பு, மண் அகழ்வு, உயிர்ப் பல்வகைமை கொண்ட விஷேட புவியியற் பிரதேசங்களை அழிக்கும் அளவுக்கு மிஞ்சிய இரசாயனச் சேர்க்கை, இயற்கையான நீர் நிலைகளை நிரப்புதல், சதுப்பு நிலங்களை வர்த்தக முயற்சிகளுக்காகப் பயன்படுத்தல், அரிதான உயிரினங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமை போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளினூடாக நம் தாய் நாட்டில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்படுகின்றன அல்லது சூறையாடப்படுகின்றன. ஒரு நாட்டின் செழிப்பு அதன் இயற்கை வளம், பௌதிக அமைப்பின் இயற்கை அழகில் தங்கியுள்ளது. இலங்கையின் இயற்கை அழகை உச்சளவில் பாதுகாக்க முடியுமானால் அதுவே இலங்கையின் வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டித் தரும் சுற்றுலாத் துறையின் அடிப்படையாக அமைந்து விடும்.

செழிப்பு என்பது பௌதிக வளத்தில் மட்டும் தங்கியுள்ள ஒன்றல்ல. மனிதம் காக்கப்படும் நாடே மகத்தான நாடு. மனிதர்கள் திருப்தியுடன் வாழ விரும்புகின்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய இளைஞர்களின் கனவு எதுவாக இருக்கின்றது? படித்தவர்கள், அதிகம் படித்தவர்கள், உயர் தொழில் வாண்மையுடையவர்கள் என்று பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடொன்றுக்குள் புகுந்து கொள்வதையே விரும்புகின்றனர். கை நிறையப் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் அதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியது. அதனை விட ஏதோ ஒரு பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. மனிதம் மதிக்கப்படுகின்ற, தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற இடங்கள் கிடைக்கப் பெறுகின்ற சமத்துவம், சகோதரத்துவம் பேணப்படுகின்ற ஒரு சமூகம் அந்த நாடுகளில் இருப்பதாக நம்பப்படுகின்றது. எல்லாப் பிரச்சினைகளும் விடயங்களும் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுத்துப் பார்க்கப்படும் ஒரு சமூக அமைப்புத் தோன்றினால் மட்டுமே மகிழ்ச்சிகரமான வாழ்வு கிட்டும். மகிழ்ச்சிகரமான திருப்தியான வாழ்க்கையில்தான் ஒவ்வொருவரினதும் இயலளவு (Capacity) உச்சளவில் பயன்படுத்தப்படும் நிலை தோன்றும். அதுவே நாட்டின் செழுமைக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

இந்தச் சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது சுதந்திர தினம் எதற்காகக் கொண்டாடப்படுகின்றது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். நாம் இன பேதம், மொழி பேதம், மத பேதம் பாராது ஒற்றுமையாக இருந்து, ஒரே கருத்தில் நின்று சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம் என்று கூறப்படுகின்றது. ஒரு துளி இரத்தம் சிந்தாமல் பெற்ற சுதந்திரம் என்று பெருமைப்படுகின்றோம். ஆனால் சுதந்திரம் பெற்று முப்பது வருடங்களில் தொடர்ச்சியாக முப்பது வருடங்கள் இரத்தம் சிந்திய நிலைமை ஏற்பட்டதையும் பார்க்கின்றோம். ஆயுதமேந்தும் யுத்தம் நின்று போனாலும் யுத்தம் செய்யத் தூண்டிய காரணங்கள் நிவர்த்தி செய்யப்படவில்லை. எப்போதும் ஓர் எதிரி இருந்தே ஆக வேண்டும் என்ற மனப்பாங்கு வலுக்கட்டாயமாக வளர்க்கப்படுவதையும் பார்க்கின்றோம். ஒற்றுமையாக சுதந்திரத்தைப் பெற்றவர்களுக்கு ஏன் ஒற்றுமையாக வாழ விருப்பமில்லை? ஏன் மனம் திறந்து பேச முடியவில்லை? ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் எதிரியாக, சந்தேகத்துடன் பார்க்கும் மனோநிலையை மாற்றும் வழிவகைகள் பற்றிச் சிந்தித்து, மனம் விட்டுப் பேசி, அதனைக் களையும் வழிவகைகளைக் காணத்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படல் வேண்டும். இந்த இலக்கை அடைய முடியுமாயின் செழிப்பான நாளை| வளமான நாடு என்ற எண்ணக்கருக்கு நிச்சயம் ஒரு பெறுமானம் வரும்.

அனைவருக்கும் 73ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *