சோதனைகளுக்குப் பின் சாதனை படைக்கும் குழந்தைகள்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்

அல்குர்ஆன் விபரிக்கும் மூஸா மற்றும் யூஸுப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோரது வரலாற்றில் ஒன்றோடொன்று ஒத்துப் போகின்ற நிறைய விடயங்கள் இருக்கின்றன. இருவரது சரிதைகளும் அல்குர்ஆனில் குழந்தைப் பருவத்தில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளன. இருவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். இருவரது பெற்றோரும் தமது குழந்தைகளின் பிரிவுத் துயரை எதிர்கொண்டவர்கள். இவ்விரு இறைதூதர்களும் சொந்த நாட்டைத் துறந்து வேறு புமியில் தங்களது வாலிபத்தைக் கழித்தவர்கள். இறுதியில் இரண்டு இறைதூதர்களும் சமூகத்திலும் பிராந்தியத்திலும் மகத்தான பணியாற்றியவர்கள்.

1.         குழந்தையின் பிரிவுத்துயருக்கு மூஸா, யூஸுப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய இருவரின் பெற்றோரும் உள்ளடக்கப்பட்டார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது விடயத்தில் இறைகட்டளை நேரடியாக வந்தது. மூஸாவுக்குப் பாலூட்டுவீராக! அவர் குறித்து நீர் அஞ்சினால் அவரை ஆற்றில் போட்டு விடுவீராக! நீர் அஞ்ச வேண்டாம்’ துக்கப்படவும் வேண்டாம். நிச்சயமாக நாம் அவரை உம்மிடமே திருப்பிக் கொண்டு வந்து அவரை நம் தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம் என அவரின் தாயாருக்கு நாம் அறிவித்தோம்.  (28: 7)

இன்னும் மூஸாவின் தாயாரின் உள்ளம் மூஸாவின் நினைவிலிருந்து வெறுமையாக்கப்பட்டது. அவர் நம்பிக்கையாளர்களில் ஆக்குவதற்காக அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தி இருக்காவிட்டால் அவர் குறித்த செய்தியை வெளிப்படுத்த முற்பட்டிருப்பார். (28: 10)

யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது விடயத்தில் அன்னாரது ஒரு சகோதரர் ஆலோசனை வழங்கினார். நீங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் அவரை ஆழமான கிணற்றில் போட்டு விடுங்கள். அவரை பிரயாணிகள் சிலர் எடுத்துக் கொண்டு செல்வார்கள் என அவர்களில் ஒருவர் கூறினார். (12: 10)

யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இழந்த துயரத்தில் அவரது தந்தை யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) யூஸுபின் மீதுள்ள என் துக்கமே! என்று கூறினார். கவலையால் அவரது இரு கண்களும் வௌ்ளை படர்ந்து விட்டன. எனினும், அவர் துக்கத்தை அடக்கிக் கொண்டார். (12: 84)

2.         மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது தாயார் தன் புதல்வியிடம் குழந்தை பற்றிய தகவலை அறிந்து வருமாறு கூறினார்.

அவரின் சகோதரியிடம் அவரை நீ பின்தொடர்ந்து செல் என்று தாய் கூறினாள்.  (28: 11)

யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தந்தையும் அவ்வாறே கூறினார். எனது புதல்வர்களே! நீங்கள் சென்று யூஸுபையும் அவரது சகோதரரையும் நன்றாகத் தேடிப் பாருங்கள். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். ஏனெனில், நிராகரிக்கும் கூட்டத்தினரே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள். (12: 87)

அதாவது, அவர்கள் தம் நோக்கமும் இலட்சியமும் நிறைவேற அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதைக் கைவிட்டுவிடக் கூடாது என உத்தரவிட்டார். ஏனெனில், இறையை மறுக்கும் கூட்டத்தார் தவிர வேறு யாரும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையிழக்கவோ ஆதரவிழக்கவோ மாட்டார்கள்.

3.         இரு குழந்தைகளும் அரச குடும்பங்களால் வசீகரிக்கப்பட்டன. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பற்றி, பின்னர் தமக்கு எதிரியாகவும் கவலை ஏற்படுத்துபவராகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். (28: 8)

உண்மையில், குழந்தை மூஸாவை எடுப்பதன் மூலம் அவர் தங்களுக்கு விரோதியாகவும் கவலையாகவும் மாற வேண்டும் என்பது குழந்தையை எடுத்தவர்களின் நோக்கமாக இருக்கவில்லை.

யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அடிமைச் சந்தையில் எவ்வாறு அமைச்சரால் கொள்வனவு செய்யப்பட்டார் என்பதை அல்லாஹ் கூறுகிறான்:

பின்னர் ஒரு பயணக் கூட்டம் வந்து தமக்கு தண்ணீர் எடுத்து வருபவரை அனுப்பி வைத்தனர். அவர் தனது வாளியைக் கிணற்றில் போட்டதும் ஒரு நற்செய்தி! இதோ ஓர் அழகிய சிறுவன் எனக் கூறினார். அவர்கள் அவரை வியாபாரப் பொருளாக மறைத்துக் கொண்டனர். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். அற்ப மதிப்புள்ள குறிப்பிட்ட சில வௌ்ளி நாணயங்களுக்கு அவரை இவர்கள் விற்றனர்.         (12: 19 – 20)

4.         மூஸா, யூஸுப் (அலைஹிமுஸ்ஸலாம்)

ஆகிய இருவரையும் பெற்றுக் கொண்டவர்கள் குழந்தைப் பாக்கியமற்ற தம்பதிகளாகவே இருந்தனர். எனவே, அவர்கள் இக்குழந்தைகளை பெரும் பாக்கியமாகக் கருதி பரவசமடைந்தனர். இது எனக்கும் உனக்கும் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும். இது எமக்குப் பயனளிக்கலாம் அல்லது இதை நாம் பிள்ளையாக எடுத்துக் கொள்ளலாம் என ஃபிர்அவ்னின் மனைவி கூறினாள். (28: 9)

பிறிதொரு ஸூராவில் அல்லாஹ் கூறுகிறான்: மூஸாவே! காண்போர் உள்ளத்தில் உம் மீது அன்பையும் என்னிடமிருந்து சொரிந்தேன். (20: 39)

அமைச்சரும் தன் மனைவிக்கு இதே வார்த்தைகளைத்தான் கூறினார். எகிப்தில் இவரை வாங்கியவர் தனது மனைவியிடம் இவரின் இருப்பிடத்தை கண்ணியமாக வைத்துக் கொள். இவர் எமக்குப் பயனளிக்கலாம் அல்லது இவரை நாம் பிள்ளையாக எடுத்துக் கொள்ளலாம். (12: 21)

5.         இரு நபிமார்களையும் பயிற்றுவித்து, அவர்களது உள்ளத்தை உறுதி மிக்கதாக ஆக்கி, அவர்களது ஆளுமையை விருத்தி செய்ததன் நோக்கத்தை அல்லாஹ் குறிப்பிடுகிறான்: மூஸாவாகிய அவர் வாலிபத்தை முழுமையாக அடைந்து வலிமை பெற்றபோது அவருக்கு நாம் ஞானத்தையும் அறிவையும் வழங்கினோம். இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம். (28: 14)

யூஸுபாகிய அவர் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்தபோது அவருக்கு நாம் ஞானத்தையும் அறிவையும் வழங்கினோம். இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம். (12: 22)

ஞானம் என்பது மெய்யறிவு, பேருண்மையைப் பற்றிய விஷேடமான ஞானத்தைக் குறிக்கிறது. இது நேரடியாக வஹியின் மூலமாக நபிமார்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அறிவுப் பலத்திலும் உடல் பலத்திலும் முழுமை பெற்றபோது அதிகாரத்தையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் அல்லாஹ் வழங்கினான். நபித்துவத்தின் மூலம் அந்த சமுதாய மக்களிடையே அவர்களை அல்லாஹ் தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டான். தீர்மானங்கள் எடுக்கும் ஆற்றல்கள் மட்டுமன்றி, அதிகாரம் செலுத்தும் நிலைமையையும் வழங்கி, மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளிலும் விவகாரங்களிலும் தீர்ப்பு வழங்குகின்ற திறமைகளையும் தகுதிகளையும் அவன் வழங்கினான்.

6.         பிறகு இரு பிள்ளைகளும் தத்தமது பெற்றோருடன் ஒன்றிணையும்படியும் அல்லாஹ் செய்து விட்டான். அந்தப் பாக்கியம் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு குறுகிய காலத்திலும் யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகும் கிட்டியது.

அவரது தாய் கண்குளிர்ச்சி அடைவதற்காகவும் கவலையடைந்து இருப்பதற்காகவும் நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அவரை அவனிடம் மீட்டுக் கொடுத்தோம். (28: 13)

அவர்கள் யூஸுபிடம் நுழைந்தபோது அவர் தனது பெற்றோரை தன்னோடு அணைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் நாட்டப்படி அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள் எனக் கூறினார். (12: 99)

7.         இவை அனைத்தையும் பின்னாலிருந்து இயக்கிய ஒருவன் இருக்கவே செய்கிறான். அவனது அறிவை மிகைத்து வேறெதுவும் நடைபெறுவதில்லை. அத்தகைய வல்லமை மிக்க அல்லாஹ் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற, யாரும் அறிந்திராத விபரங்களை தன் இறுதித் தூதருக்கு அறிவித்தான்.

மேலும் மூஸாவுக்கு நாம் கட்டளைகளை விதித்தபோது நீர் தூர் மலையின் மேற்குப் பகுதியில் இருக்கவில்லை. (28: 44)

இவை மறைவான செய்திகளில் உள்ளவையாகும். அவற்றை நாமே உமக்கு வஹியாக அறிவிக்கிறோம். அவர்கள் யூஸுபுக்கு சுழ்ச்சி செய்தவர்களாக தமது விடயத்தில் ஏகமனதாக முடிவு எடுத்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (12: 102)

குர்ஆனில் வேறு சரிதைகளில் அல்லாஹ் கூறுகிறான்: இது மறைவான செய்திகளில் உள்ளதாகும். நாம் இதை உமக்கு வஹியாக அறிவிக்கிறோம். அவர்களில் யார் மர்யமைப் பொறுப்பேற்பது? என்று அறிந்து கொள்ள அவர்கள் தமது பேனாக்களைப் போட்டபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (3: 44)

இதற்கு முன்னர் நீரோ உமது சமூகமோ அவற்றை அறிந்தவர்களாக இருக்கவில்லை (11: 49) என்று நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகம் பற்றிக் குறிப்பிடுகிறான்.

எங்கள் குழந்தைகள் மூலமாக நாம் சோதிக்கப்படுகிறோம் என்று நீங்கள் கூறினால் அதற்குப் பின்னால் அல்லாஹ் நம் கற்பனைக்கு எட்டாத அருள்களை மூடி மறைத்து வைத்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் சிறுபராயத்திலிருந்து கடுமையான பயிற்றுவிப்புகளுக்கு உட்படுத்தப்படும்போது சமூகத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் ஆற்றலையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். நபிமார்களின் அந்தஸ்தை எமது குழந்தைகள் அடைய முடியாவிடினும் சமூகத்தில் பாரிய பணிகளைச் சுமந்து மனித குலத்திற்கும் தேசத்திற்கும் சேவையாற்றக் கூடிய புத்திஜீவிகளாகவும் நலன்விரும்பிகளாகவும் தொண்டு புரிபவர்களாகவும் தோற்றம் பெறுவது பெரும் பாக்கியமாகும்.

நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் அல்லாஹ் எதிர்பார்க்கின்ற அதியுயர்ந்த நிலையான இஹ்ஸானை அடைய வேண்டும். எனவே, அறிஞர்கள், மார்க்கப்பற்றுள்ளவர்கள், சிந்தனையாளர்கள் போன்றோருடன் சிறுவயதிலிருந்தே நமது குழந்தைகளுக்கு தொடர்பையும் நல்லுறவையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களது வழிகாட்டலிலும் கண்காணிப்பிலும் பிள்ளைகளை வளரவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *