சோதனை: ஓர் ஆன்மிக உளவியல் நோக்கு!

எஸ். ஆப்தீன், உளவளத்துணை உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம், அக்கரைப்பற்று

“அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் சோதிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 2: 286)

அறிமுகம்

இவ்வுலகில் மனிதர்களுக்கான வழிகாட்டியாக இறைவனால் அருளப்பட்ட புனித திருமறையில் இறைவன் மனிதர்கள் பற்றி குறிப்பிடுகின்ற மிக முக்கியமான கருத்தாக இவ்வசனம் அமைந்துள்ளது. 

இவ்வசனத்திலுள்ள கருத்தாழத்தையும் அதன் தத்துவத்தையும் அதிலுள்ள உளவியல் பார்வையையும் மனிதன் விளங்கிக் கொள்பவனாக இருந்தால், இவ்வுலகில் அவனது வாழ்க்கையை மிக அற்புதமானதாகவும் கருத்துள்ளதாகவும் அமைத்துக் கொள்வான்.

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள எல்லா உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களை விடவும் மனிதனை இறைவன் உயர்ந்த படைப்பாக கருதுகின்றான். ஏனெனில், மனிதனுக்கு ‘ஆத்மா’ கொடுக்கப்பட்டுள்ளதுடன் பகுத்தறிவையும் வழங்கியுள்ளமையினால் ஆகும். இவ்வாறு படைத்த இறைவன், மனிதனை கண்ணியப்படுத்துவதற்காக இவ்வுலகில் மனிதனுக்கு தனது ‘பிரதிநிதி’ என்ற அந்தஸ்த்தையும் வழங்கியுள்ளான்.

இவ்வாறு மனிதனைப் படைத்த இறைவன் அவன் எப்படிப்பட்டவன், அவனது உற்பத்தி மூலம், இயல்பு மற்றும் குணாம்சங்கள், அவனது நடத்தைக் கோலங்கள், அவனது முடிவு என்பன பற்றியும் அவன் வாழுகின்ற இவ்வுலகம், அதன் தன்மைகள் பற்றியும் விரிவாக விபரிப்பதுடன், மனிதன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான நடைமுறைச் சாத்தியமான வழிகாட்டல்களையும் அப்படி வாழ்ந்தால் அவன் அடையப் போகும் மறுவுலக வெகுமதிகள் பற்றியும் அவன் அப்படி வாழாதவிடத்து அவனது கைசேதம் பற்றியும் மனிதனுக்கு வழங்கியுள்ள இறைவழிகாட்டலான புனித திருக்குர்ஆனில் விபரித்துள்ளான்.

உண்மையில் ஒரு பொருளை இவ்வுலகில் உருவாக்குகின்ற உற்பத்தி நிறுவனம் அல்லது ஒரு தனி நபர், அப்பொருள் பற்றியும் அதன் தன்மை, இயல்பு, அதனமைப்பு, இயக்கப்பாடு, அதன் பயன்பாடுகள், அதனை உபயோகிக்கும் முறைமை, ஆயுட்காலம் மற்றும் அதனை தவறாகக் கையாண்டால் அதிலேற்படும் பாதிப்புக்கள் என்பன பற்றிய முழு விபரத்தையும் விபரித்து உள்ளடக்கிய வகையில் ஒரு குறிப்பேட்டினை அதனுடன் அறிமுகப்படுத்துவதனை நாம் பார்க்க முடியும்.

இறைவன் படைத்த மனிதனால் இவ்வாறு ஒன்றினைச் செய்ய முடிகின்றதென்றால், மனிதனுட்பட இப்பிரபஞ்சத்தையே படைத்த இறைவனால் மனிதனின் யதார்த்தத்தைப் பற்றி விபரிக்கின்ற திருமறையான அல்குர்ஆனின் கூற்றுக்களானது அற்புதமானதும் கருத்தாழமானதுமாகும்.

அந்த வகையிலேயே மேற்படி வசனமானது மனிதனின் ஒரு யதார்த்த நிலைமையைப் பற்றி விபரிக்கின்றது. அதாவது, மனிதன் சோதனைக்கு உள்ளாக்கப்படும்போது, குறிப்பாக, மனிதன் விரும்பாத நிலையில் சோதனைகளை எதிர்கொள்ளும்போது மனிதனுடைய மனமானது அதனை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் கொண்டதாகவே எப்போதும் இருக்கும். அவ்வாறான நிலைமையின் போது மனிதன் கவலை, சோகம், துயரம், மனக்குழப்பம், சஞ்சலம், நிம்மதியிழத்தல், அமைதியற்றிருத்தல் போன்ற மனநிலையில் இருப்பான். 

இவ்வாறான நிலைமையிலுள்ள மனிதனைப் பார்த்து இறைவன் சொல்கின்ற ‘எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் சோதிக்க மாட்டேன்’ என்ற செய்தியானது ஒரு பெரும் உளவியல் மருந்தாக அமைகின்றது. ஓர் உண்மையான இறை விசுவாசி இச்செய்தியைக் கொண்டு மன ஆறுதலடைவான் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை எனலாம். ஏனெனில், அந்தச் செய்தியானது சோதனையால் பாதிப்படைந்த நிலையிலுள்ள மனிதனது மனதிற்கு ஒரு ஆற்றுப்படுத்தலை வழங்குவதாகவே அமைந்துள்ளது. நீங்கள் இவ்வுலகில் சந்திக்கின்ற சோதனைகள் எல்லாம் நீங்கள் தாங்கக் கூடிய சக்தியை, கொள்ளளவைப் பெற்றுள்ளீர்கள், அதனை நான் உங்களுக்குள் வைத்துள்ளேன் என்பதனை மனிதனுக்கு ஞாபகப்படுத்துவதாக அவ்வசனம் அமைந்துள்ளது. அவன் அதனைத் தாங்குவதற்காகப் பெற்றுள்ள உள்ளார்ந்த ஆற்றலை, இயலுமையை அவனுக்கு சுட்டிக்காட்டுகின்றது.

அந்த வகையில் இக்கட்டுரையானது மனிதன் பல வழிமுறைகளில் சோதிக்கப்படுவான் என்பதனையும் சோதனைக்கான நோக்கங்களையும் சோதனையின் வடிவங்களையும் சோதனையினால் மனிதனில் ஏற்படும் விளைவுகளையும் சோதனையின்போது மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் உள்ளடக்கியுள்ளது.

மனிதனை சோதிப்பதற்கான நோக்கங்கள்

இவ்வுலக வரலாற்றில் நபிமார்களில் ஆதம் (அலை) தொடக்கம் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மனிதனுக்கு வழிகாட்டிகளாக அனுப்பப்பட்ட அத்தனை தீர்க்கதரிசிகளும் இறைவனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

“உங்களுக்கு முன்னே சென்றுபோனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் (சோதிக்கப்பட்டனர்). நிச்சமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது (என்று நாம் ஆறுதல் கூறினோம்)” (அல்குர்ஆன் 2:214).

அந்த வகையில், பின்வரும் பிரதானமான காரணங்களுக்காக இறைவன் மனிதனை சோதிக்கின்றான்.

1. மனிதர்களின் தரத்தைப் பரீட்சித்தல்

சோதனைகள் ஒரு தனி மனிதனுக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு அல்லது ஒரு சமூகத்திற்கு இறைவனின் புறத்திலிருந்து காலாகாலமாக ஏற்படுத்தப்படலாம். இந்த சோதனைகளை இறைவன் ஏற்படுத்துவதன் நோக்கம் மனிதனின் தரத்தை பரீட்சிப்பதற்காகவாகும். இவ்வாறான சோதனையான நிலைமைகளை மனிதன் ஏற்றுக்கொண்டு தாங்கிக் கொள்கின்றானா? அல்லது அவற்றை ஏற்க முடியாது நிர்க்கதி நிலையை அடைகின்றானா? அவனது தரத்தை அதிகரிக்கின்றானா? அல்லது தரமிழக்கின்றானா? என பரீட்சிப்பதே ஆகும்.

“அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும் ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான். அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், மிக்க மன்னிக்கிறவன். (அல்குர்ஆன்- 67: 02) என்ற யதார்த்தத்தை இறைவன் திருமறையில் வெளிப்படுத்துகின்றான்.

2. மனிதர்களை உணரச் செய்து திருந்தச் செய்தல்

மனிதன் இவ்வுலகில் படைத்த இறைவனை மறந்து, வந்த நோக்கத்தையும் மறந்து, இறையுணர்வில்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நிலையில், மனம் போன போக்கில் வாழத் தலைப்படும்போது இறைவன் சோதனைகளைக் கொண்டு மனிதர்களை உணரச் செய்வான்.

“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீய செயல்களின் காரணமாக கடலிலும் தரையிலும் நாசமும் குழப்பங்களும் தோன்றின. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்), அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கின்றான்.” (அல்குர்அன் 30: 41)

“நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும் அம்மக்கள் பணிந்து நடப்பதற்காக,  நாம் அவர்களை வறுமையாலும் பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.” (அல்குர்ஆன் 07: 94)

சோதனைகளுக்குப் பின்னர் உணர்வு பெற்று திருந்தாதவர்களுக்கு, இறைவன் அவர்களுக்கு சில இன்பங்களை அனுபவிக்கச் செய்துவிட்டு, அவர்களை அப்படியே வேரறுத்து விடுவான் என்பதனைப் பற்றி இறைவன் விபரிக்கும் போது,

“அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட சோதனைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அவர்களுக்கு முதலில் எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம். பின்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தவேளை, நம் வேதனையைக் கொண்டு அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.” (அல்குர்ஆன் 6: 44)

3. உண்மையாளர்களையும் பொய்யர்களையும் பிரித்தறிதல்

இவ்வுலகில் உண்மையான விசுவாசி யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதனை அறிந்து கொள்வதற்காக, அவர்களை வெளிக்காட்டுவதற்காக சோதனைகள் இறக்கப்படுகின்றன. இது பற்றி இறைவன் விபரிக்கும்போது,

“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவதனால் மட்டும் அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம். ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சமாக அல்லாஹ் அறிவான். இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.” (அல்குர்அன் 29: 23)

4. நல்லடியார்களைத் தூய்மைப்படுத்தி உயர்வைப் பெற்றுக் கொடுத்தல்

பொன் என்ற உலோகம் பொன்னாக இருக்கும் வரை அதன் பெறுமதி குறைவு. அதனை நெருப்பில் உருக்கி, நன்றாகக் காய்ச்சிய பின்னர், தங்க வடிவமைப்பாளன் வேண்டிய விதத்தில் அதனை வடிவமைத்து, பாவனைக்கு விடுவதற்காக காட்சிப்படுத்தும்போது அதன் பெறுமதியானது விலை மதிக்க முடியாது. இதே போன்றதுதான் சிறந்த மனிதர்களின் நிலையும்.

இவர்கள் மற்றவர்களை விடவும் சற்று அதிகமாகவும் கடுமையாகவும் சோதிக்கப்படுவார்கள்.  

“யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம்: அல்புகாரி (5645)

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் இறைதூதர் அவர்களிடம் “யா ரஸூலல்லாஹ் மனிதர்களில் அதிகம் சோதிக்கப்படுபவர் யார்?” என வினவினேன். அதற்கவர்கள் “நபிமார்கள், அதற்குப் பிறகு அடுத்தடுத்த அந்தஸ்திலுள்ளவர்கள். ஒவ்வொருவரும் அவர்களின் மார்க்க பற்றுதலுக்கேற்ப்ப சோதிக்கப்படுவார்கள். ஒருவர் மார்க்கத்தை திடமாகப் பின்பற்றுகின்றார் என்றால், அவரின் சோதனையும் கடுமையாக அமையும். அதேபோன்று ஒருவர் சாதாரணமாக மார்க்கத்தை பின்பற்றுகின்றார் என்றால், அவரின் சோதனையும் இலகுவாக அமையும். மேலும் அந்த நல்லடியார் எந்த பாவங்களுமற்ற நிலையில் பூமியில் நடந்து செல்லும்வரை அவர் இவ்வாறு சோதிக்கப்ட்டுக் கொண்டே இருப்பார்” என்றார்கள். (ஆதாரம்: அத்திர்மிதி)

சோதனையின் வடிவங்கள்

இவ்வுலகிலுள்ள மனிதர்கள் பலவிதமான நிலைகளில் வாழுகின்றனர். அப்படி பலவிதமான அமைப்பில் படைத்திருப்பது இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். இவ்வாறு மனிதர்களை மாத்திரமல்ல, இவ்வுலகிலுள்ள உயிரினங்கள் உயிரற்றவைகள் என்பனவற்றை எல்லாம் இவ்வுலகில் பல்வகைத்தன்மைகளில் படைத்திருப்பதன் மூலம் இவ்வுலகத்தின் இயக்கப்பாட்டில் ஒரு சமனிலையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

“மேலும் வானையும் பூமியையும் அவற்றிற்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 21: 16)

மனிதன் இவ்வுலகில் வாழும்போது பல விதமான வடிவங்களில் சோதிக்கப்படுவான் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. அந்த வகையில், சோதனை என்பது ஒரு மனிதனுக்கு ஆக்கத்தினூடாகவும் அல்லது இழப்பினூடாகவும் வர முடியும். 

மனிதர்களைப் பொறுத்தவரை இறைவன் ஒரு சாராருக்கு செல்வாக்கான நிலைமைகளை அதாவது பட்டம், பதவி, அழகு, அந்தஸ்த்து, பணம், சொத்துக்கள் வசதி வாய்ப்புக்கள், நல்ல பிள்ளைகள், நல்ல குடும்பம், நல்ல மனைவி, தலைமைத்துவம், நிருவாகத் திறன், அறிவு, திறன், மனப்பாங்கு போன்ற அம்சங்களையும் மனிதர்களின் ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், விருப்பங்கள் என்பனவற்றை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றால் போல் அமைத்துக் கொடுத்து அவர்களை இவ்வுலகில் வாழ வைத்திருக்கின்றான். இதுவும் சோதனைகள்தான் என அல்குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

“உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்கு) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது.” (அல்குர்ஆன் 64: 15)

ஒரு சாராருக்கு வறுமை, நோய், பட்டினி, பயம், முரண்பாடுகள், பிரச்சினைகள், யுத்தங்கள், பதற்றம், அச்சம், இழப்புக்கள், சேதங்கள், உயிராபத்துக்கள், குறைபாடுகள், ஏமாற்றங்கள், நிராசைகள், அதிருப்தி நிலைகள், குடும்ப முரண்பாடுகள், தொழில் பிரச்சினைகள் போன்றனவற்றைக் கொண்டும் சோதிக்கின்றான். இது பற்றி இறைவன் அத்திருமறையில் குறிப்பிடும்போது,

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்புக்களாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்குர்ஆன்: 2 – 155) 

அச்சம்

மனிதனை அச்சத்தால் சோதிப்பதானது ஒரு கடினமான சோதனையாகும். இந்த அச்சமானது அவனது மனதில் ஏற்படுகின்ற மனவெழுச்சி சார்ந்த ஒரு சாதாரண உணர்வாகும். இது அளவு கடந்து செல்லும்போது மனிதன் தனது நிலையிலிருந்து பிறழ்வதனைக் காண முடியும்.

உலகில் மனிதன் பலவிதமாக அச்சம் கொண்டிருப்பதனை அன்றாடம் அவதானிக்க முடிகிறது. ஒரு மனிதனை அச்சப்பட வைக்கின்ற காரணிகளாக உலகில் அதிகாரம், அடக்குமுறை, ஆயுதம், மரணம், அச்சுறுத்தல், நோய், அழிவுகள் போன்ற ஏராளமான விடயங்கள் காணப்படுகின்றன. 

ஒரு மனிதன் அல்லது ஒரு சமூகம் தொடர்ந்தேர்ச்சியாக இவ்வாறான அச்சப்பாடான ஒரு சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுமாக இருந்தால், அது காலப்போக்கில் நலிவடைந்த சமூகமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

பசி:

இறைவன் மனிதனை சோதிக்கின்ற இன்னுமொரு விடயம்தான் அவனுக்கு கடும் பசியை ஏற்படுத்துவது. பசி ஒரு மனிதனில் ஏற்படுகின்ற இயல்பான ஒரு உணர்வாகும். மனிதனின் கட்டுப்பாட்டை மீறினால் மரணம் வரை அவனைக் கொண்டு செல்லக்கூடியது. இன்று உலகில் பல நாடுகள் உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படை வசதிகளின்றி பட்டிணிச்சாவினை எதிர்கொண்டுள்ளதனைக் காண முடியும். 

வறுமையைக் கொண்டு ஏற்படுத்தப்படும் சோதனையானது ஒன்றில் இயல்பான ஒன்றாக இறைவனால் தனி மனிதன், குடும்பம் அல்லது ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தப்படலாம் அல்லது வல்லரசு நாடுகள் தனது கட்டுப்பாட்டிற்குள் வராத நாடுகளை, தனது கொள்கைகளை தீர்மானங்களை ஏற்று கீழ்ப்படியாத நாடுகளை பழிவாங்குதவற்காக, அந்நாட்டில் வறுமையை அல்லது பட்டினியை ஏற்படுத்தவதற்காக பொருளாதார ரீதியிலான தடைகளை விதிப்பதனைக் காண முடியும். 

இவ்வாறான வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் பசி அல்லது பட்டினியை எதிர்கொள்கின்ற தனிமனிதனாக அல்லது குடும்பமாக அல்லது ஒரு சமூகமாக சோதிக்கப்படும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக பல பஞ்சமா பாதகங்களைக் கையாண்டு முயற்சிப்பதனைக் காண முடியும். அல்லது அதற்கு முகங்கொடுக்க முடியாது உயிரை மாய்ப்பதனையும் காண முடியும்.

“வறுமை இறை நிராகரிப்பிற்கு இட்டுச் செல்லும்”  என்ற நபிகளாரின் பொன்மொழி கூட பசியினால் சோதிகப்படுவதன் கொடூரத்தை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

இழப்புக்கள்:

மனிதன் சோதிக்கப்படுகின்ற இன்னுமொரு வழிமுறைதான் அவனது உயிர், உடைமை, மானம், கௌரவம், அந்தஸ்த்து, பதவி, அதிகாரம்,  போன்றனவற்றில் அவ்வப்போது ஏற்படுத்தப்படுகின்ற இழப்புக்களாகும். மனிதன் இழப்புக்களை எதிர்கொள்கின்ற நேரம் அதற்கு முகங்கொடுக்க முடியாது திணறுவதனை உணரமுடியும்.

உதாரணமாக, தான் உயிருக்கு உயிராக நேசித்த ஒரு மனிதனை, தனது பொருளாதாரத்தை, தனது பதவியை இழக்கின்ற போது, மனிதன் தனது உயிரையே மாய்க்கின்ற நிலைமையை இவ்வுலகில் காண முடியும். 

பிணி:

மனிதன் சோதிக்கப்படுகின்ற இன்னுமொரு வழிமுறைதான் அவனது உயிருக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலான பிணிகளைக் கொண்டு சோதிப்பது. இவ்வுலகில் தொற்று நோய்களைக் கொண்டும் தொற்றா நோய்களைக் கொண்டும் மனிதன் சோதிக்கப்படுவான். இதில் தொற்று நோய்களைக் கொண்டு உலகில் பல கட்டங்களில் மனிதன் சோதிக்கப்பட்டிருக்கின்றான்.

இன்று உலகம் ‘கொரோனா கோவிட் 19’ என்ற வைரஸ் கிருமியைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகில் சுமார் 200இற்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக வல்லரசு நாம்தான் என தம்பட்டமடித்த ஜாம்பவான் நாடுகள்கூட திண்டாடிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உச்சத்தை அடைந்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் இன்றைய நவீன உலகமானது செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றது. சுகாதாரத்தில் உச்ச நிலையை அடைந்த நாடுகள் கூட இயலாமைக்குள் அகப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்துள்ளன. ஒரே குடும்பத்திற்குள்ளேயே அதன் அங்கத்தவரை தனிமைப்படுத்தும் அளவிற்கு நிலைமை விகாரமடைந்து கொண்டிருக்கின்றது. பாதிக்கப்ட்ட நாடுகளின் அரச நிருவாகங்கள், பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகள் முடக்கப்ட்டுள்ளன. மனிதர்களினது கூட்டான செயற்பாடுகள் அனைத்தும் அவர்களது ஆரோக்கியம் கருதி தடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சோதனைகள் மனிதனைப் பொறுத்தவரையில், தனி மனித அடிப்படையில்  அல்லது முழுக் குடும்பத்திற்கும் அல்லது ஒரு சமூகமாக சோதிக்கப்பட முடியும்.

சோதனையின்போது மனிதனின் நிலையும் விளைவுகளும்

இவ்வாறு மனிதன் பல நோக்கங்களுக்காக சோதிக்கப்படுவதனை விளங்கிக் கொள்ளாமல், அதன் யதார்த்தத்தை அறிந்து கொள்ளாமல் சோதனைகளை சந்திக்கும் பொழுது, மனிதனின் நிலை எப்படியிருக்கும் என்பது பற்றியும் இறைவன் கூறிக் காட்டுகின்றான்.

“இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியுமில்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக்கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால், அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகின்றான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்.” (அல்குர்அன் 22: 11)

மேலும், இன்று உலகில் வாழுகின்ற பெரும்பாலான மனிதர்கள் இவ்வாறான சோதனைகளைக் கண்டு அவற்றுக்கு முகங்கொடுக்க முடியாமல், தன்னுடைய நிம்மதி, சந்தோசம், அமைதி, ஆறுதல் என்பனவற்றை இழந்தவனாக சோர்விழந்து, தன்னிலை மறந்து தவிக்கின்றான். இவை யாவும் மனிதனின் பலவீனத்தின் வெளிப்பாடாகும்.

இதன் காரணமாக சோதனைகளுக்கு முகங்கொடுங்க முடியாது உள அமைதியை இழந்தவனாக திண்டாடும் மனிதன் ஒன்றில் “தன்னைத்தானா இறைவன் தொடர்ந்து சோதிக்க வேண்டும்? நான்தானா அவனுக்கு கிடைத்தது? அல்லது எனக்குத்தானா இந்தப் பிணி வர வேண்டும்?” என்பன போன்ற விரக்தியான மனநிலையுடன் கூடிய வாசகங்களை பெருமூச்சு விட்டவனாக பிறரிடம் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டவனாக இருப்பான்.

அது மாத்திரமன்றி, உளநலப் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றான். இதன் காரணமாக அவனில்,  உளநெருக்கீடு, பதற்றம், தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, உறவுச் சிக்கல்கள் போன்ற உளப் பிரச்சினைகளும் மிதமான உளக் கோளாறுகளான மிதமான மனச்சோர்வு, பதகளிப்பு, மெய்வெளிப்பாடு, மனவடு, நெருக்கீட்டின் பின்னரான மனவடு நோய் போன்றனவற்றாலும் பாதிப்படைவான். மேலும், மனச்சோர்வு, பித்து போன்ற மனோபாவக் கோளாறுகளும் உளமாய நோய் போன்ற பாரிய உளநோய்களுக்கும் அவன் ஆட்பட வாய்ப்புள்ளது. 

மேலும் நடத்தைப் பிறழ்வுகளுக்கு உட்பட்டு, போதைப் பாவனை அல்லது தற்கொலை போன்ற தன்னைத்தானே அழித்துக் கொள்கின்ற அபரிமிதமான தீர்மானங்களையும் மேற்கொள்கின்றான். 

இவ்வாறான உளப் பிரச்சினைகளினதும் உள நோய்களினதும் தாக்கமானது, அதன் வீரியமானது அவனது சோதனைக்கு முகங்கொடுக்கின்ற தாங்குதிறனிலும் அவனது மனப்பலத்திலும் அவனுக்கு கிடைக்கின்ற குடும்ப, சமூக ஆதரவிலும் தங்கியுள்ளது. 

இன்று உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அல்லது மிதமான உளநோய்களால் பீடிக்கப்பட்டு உளவளத்துணை உதவி தேடி வருவோரையும் அல்லது பாரிய உளநோய்களால் பாதிக்கப்பட்டு உளமருத்துவ சேவையைப் பெறுவோரையும் ஆழமான அவதானத்திற்கு உட்படுத்தினால், இதில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட சோதனைக்கு முகங்கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் என்பது புலனாகின்றது.

இது பற்றி இறைவன் திருமறையில் பிரஸ்தாபிக்கும்போது, அதாவது சோதனைகள் ஏற்படும் போது மனிதர்களின் நிலைமை தொடர்பாக இறைவன் ஒரு யதார்த்தத்தை படம்பிடித்துக் காட்டுகின்றான். 

மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கின்றான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் “எனது அறிவால் இது எனக்கு தரப்பட்டது” எனக் கூறுகின்றான். அவ்வாறல்ல, அது ஒரு சோதனை! எனினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 39: 49)

ஒரு மனிதனைப் படைத்த இறைவன் அவனது இயலுமைகளை நன்கறிந்தவன். அவன் ஒரு மனிதனை சோதனைக்கு உட்படுத்தும் விதம் அவனால் தாங்க முடியுமான அம்சங்களைக் கொண்டு மாத்திரம் சோதிப்பதாகும். அதனால்தான் தனது திருமறையில் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

“அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் சோதிக்க மாட்டான்.” (அல்குர்ஆன் 2: 286)

ஆனால், பலவீனமான மனிதன் இறைவனின் இந்நியதியை புரியாது சோதனைக்கு முகங்கொடுக்க முடியாதவனாக திண்டாடுகின்றான். 

இந்த சோதனையை இவனால் தாங்கிக் கொள்ள முடிம். அதற்கான தாங்குதிறன் இவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என படைத்தவன் அவர்களைப் பற்றி மதிப்பிடுகின்றான். ஆனால், மனிதன் தனது கொள்திறனை அறியாதவனாக, தன்னிலை மறந்தவனாக, இவ்வாறான சோதனைகளுக்கு தன்னால் முகங் கொடுக்க முடியாது என்றும் அதற்கான தாங்குதிறன் தன்னிடமில்லை எனவும் தன்னைக் குறைத்து மதிப்பிடுகின்றான்.

சோதனைகளின்போது இறை விசுவாசிகளின் நிலைமை:

நாம் மேலே விவரித்த சோதனைகளின் நோக்கங்கள் என்ற பகுதியில் குறிப்பிட்ட ‘நல்லடியார்களைத் தூய்மைப்படுத்தி உயர்வைப் பெற்றுக் கொடுத்தல்’ என்ற நோக்கங்களில் ஒன்றாகிய, இறை விசுவாசிகளை இறைவன் சோதிக்கின்றபோது, அவர்களின் நிலைமை எவ்வாறிருக்கும் எனில், அவர்கள் இறைவனின் வசனங்களில் பரிபூரணமான நம்பிக்கை கொண்டு, எவ்வாறான சோதனைகளையும் தாக்குப் பிடிப்பார்கள். இது பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவுத் பின்வருமாறு சிலாகித்துப் பேசுகின்றன.

“அவர்கள் தங்களுக்கு ஏதேனும் துன்பங்கள் நேரிடும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். அவனிடமே நிச்சமாகத் திரும்பிச் செல்வோராக இருக்கிறோம் எனக் கூறுவார்கள்.” (அல்குர்ஆன் 2:156)

“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கின்றது.” (அல்குர்ஆன் 94:06)

“ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் – அவரது காலில் குத்திவிடும் முள்ளின் வேதனை வரை அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை.” (ஆதாரம்: அல்புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “இறை நம்பிக்கையாளனின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்று விட்டால் அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை விசுவாசியின் நிலையும் அவ்வாறே). தீயவன் உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ் தான் நாடும்போது அதை (ஒரேயடியாக) உடைத்தும் (சாய்த்து) விடுகின்றான்.” (ஆதாரம்: அல்புகாரி)

சோதனைகளின்போது மனிதன் செய்ய வேண்டியவை

01. சோதனையைப் புரிந்து கொள்ளலும் அதனை ஏற்றுக் கொள்ளலும்:

சோதனைகள் ஏற்படும்போது மனித இயல்பானது அதனை ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில் மனிதனுக்கு வருகின்ற சோதனைகளை எதிர்கொள்ள வேண்டுமானால், அதனைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதற்கான மனநிலையை தன்னில் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். இவ்வாறான தன்மை ஒரு மனிதனில் மன விரக்தியை ஏற்படுத்தாது. மாறாக அம்மனிதனில் அதனை எதிர்கொண்டு வாழ்வதற்கான உந்துதல்களை ஏற்படுத்தும்.

சந்தோஷமான நிலைமைகளாக இருக்கலாம் அல்லது துக்ககரமான நிலைமைகளாக இருக்கலாம். அவை எதுவானாலும் இறைவனின் புறத்திலிருந்துதான் தமக்கு கிடைக்கும் என்பதனையும் இறைவனின் நாட்டமில்லாமல் எதுவும் நடைபெறாது என்பதையும் அவன் உறுதியாக நம்ப வேண்டும். இது பற்றி அல்குர்ஆன் தெளிவாகப் பேகின்றது.

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்.” (அல்குர்ஆன் 9: 51) 

சோதனையை தெளிவாக பகுப்பாய்வு செய்தல்: 

அடுத்து மனிதன் சோதனையை எதிர்கொண்டு அதனை தாண்டி தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டுமானால், தனக்கு ஏற்படுகின்ற சோதனையின் இயல்பு, தன்மை, அளவு, அதன் பரிமானங்கள், தாக்கத் திறன், பாதிப்பை ஏற்படுத்தும் மட்டங்கள், என்பன போன்ற விடயங்களடங்கிய வகையில் அதனை சரியாக பகுப்பாய்வு செய்தல் வேண்டும். 

மேலும் அதனால் ஏற்படும் இழப்புக்கள், அதிலுள்ள ஆக்கங்கள் என்பன பற்றியும் ஆராய்ந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில், உலகில் எந்தவொரு சோதனையிலும் ஒரு அழிவும் ஆக்கமும் இணைந்தே இருக்கும் என்பது யதார்த்தமானதாகும்.

தெளிவான பகுப்பாய்வானது அச்சோதனைக்கு எதிர்நீச்சல் செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும்.

தன்னைத் தயார்படுத்திக் கொள்ளல்:

சோதனையின் வடிவம், தன்மை மற்றும் அதன் இயல்புகளை அறிந்துகொண்ட மனிதன், தன்னிடமுள்ள ஆற்றல்கள், திறமைகள், வளங்கள் என்பனவற்றை பயன்படுத்திக் கொண்டு அந்த சோதனைக்கு முகங்கொடுத்து வாழ்வதற்கான தயார்படுத்தல்களைச் செய்து, தனது வாழ்வில் அமுல்படுத்த வேண்டும். இதற்காக அவன் அவனைச் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் சமூகத்தினது ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அல்லாஹ்வை நெருங்குதல்:

தமது ஈமானை பலப்படுத்திக் கொண்டு, அல்லாஹ்வுக்கு முற்றிலும் அஞ்சி, மேலும் பொறுமையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு மனிதன் முனைய வேண்டும். அதே போன்று தன்மீது கடமையாக்கியுள்ள கடமைகளை செவ்வனே தவறாது செய்வதற்கும் இறைவனை சந்தோசப்படுத்துகின்ற சிறிய சிறிய நற்கருமங்களை செய்வதற்கும் அவன் ஈடுபாடு காட்டுதல் வேண்டும்.

“விசுவாசிகளே! தொழுகை மூலமும் பொறுமை மூலமும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.”  (அல்குர்ஆன் 2: 153)

மேலும், தன்னை சுயவிசாரணை செய்து, தான் செய்த பாவங்கள், விட்ட தவறுகள் என்பனவற்றை வரிசைப்படுத்தி, இறைவனிடம் முன்வைத்து பட்சாதாபப் பட்டு, பாவமீட்சி பெறுவதற்கும் அம்மனிதன் முனைதல் வேண்டும்.

மேலும், தன்னை சூழ்ந்துகொண்டுள்ள சோதனையைக் கடப்பதற்கான மன பலம், உடல்பலம், பௌதிகப் பலங்கள் என்பனவற்றை இறைவனிடம் சதா கேட்டு இறைஞ்சுதல் வேண்டும். அத்தோடு, தற்போது தான் சந்தித்துள்ள சோதனையிலிருந்து தன்னை விடுவிப்பதற்கும் அதனை வெற்றி கொள்வதற்கும் அதற்கெதிராக எதிர்நீச்சல் செய்வதற்குமான ஆற்றல்களையும் இயலுமைகளையும் இறைவனிடம் இறைஞ்சி கேட்டுப் பெறல் வேண்டும்.

மனிதன் தாங்கு திறனுடையவனாக (Resilience) இருத்தல்: 

சோதனைகளின்போது மனிதனில் இறைவன் எதிர்பார்க்கின்ற ஒரு விடயம்தான் அவன் தாங்குதிறன் உடையவனாக இருத்தல் வேண்டும். எல்லோரும் தாங்கு திறனை அதிகளவில் கொண்டவர்களாக இருக்க முடியாது. தாங்குதிறன் குறைவானவர்கள் உளநலப் பாதிப்பிற்கு உட்படுகின்ற சாத்தியக்கூறுகள் அதிகம். அதனை இயல்பாகப் பெற்றிருத்தல் அல்லது பயிற்சிகள் மூலமாக வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

தாங்குதிறனானது பல்வேறு பிரச்சினைகளுக்கு பலவிதமாக முகங்கொடுத்து வாழ்ந்து, அதன்போதான நெருக்கீடுகளைக் கையாண்டு, அதன் விளைவாக நிறைகாண் மனப்பாங்குடன் வாழக்கூடிய நிலையிலுள்ளவர்களில் அதிகரித்துக் காணப்படும்.

முடிவுரை:

இவ்வுலகம் ஒரு சோதனைக் களம். மனிதர்கள் அனைவரும் இவ்வுலகில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு முறையில் இறைவனால் சோதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான நிலைமைகளில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்று பின்வாங்கிச் சென்று தன்னையும் தனது வாழ்வையும் பிழையான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் ஊடாக வழிநடத்திக் கொள்வதன் மூலமாக இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடையாது சோதனை பற்றிய இறைவனின் நிர்ணயத்தினை, நியதியினை நம்பி ஏற்றுக் கொண்டு அதற்கு முகங்கொடுத்து வாழ்வதற்கான இயலுமைகளையும் திறன்களையும் தன்னில் வளர்த்துக் கொண்டு, சோதனையின் மூலமாக தன்னை நல்ல முறையில் புடம்போட்டுக் கொண்டு இறைவன் விரும்புகின்ற, எதிர்பார்க்கின்ற தாங்குதிறனுள்ள மனிதனாக வாழ்வதற்கு முனைதல் வேண்டும். அப்போதுதான் இவ்வுலகையும் வெற்றிகொள்ள முடியும்; மறுமையில் இறைவனின் அன்புக்குரியவர்களாகவும் ஆக முடியும். 

உசாத்துணை: 

1. சங்கைமிக்க குர்ஆன் (மொழிபெயர்ப்பு), மன்னர் ஃபஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகம், சவூதி அரேபியா.

2. உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் (2013), ஸூரா பகரா மொழியாக்கம், அல்குர்ஆன் கற்கைகள் திறந்த கல்லூரி, அகுரணை.

3. முகம்மது மஹ்தூம் (2013), ‘பல்வேறு வகை சோதனைகளும் அதன் நலன்களும்’ www.jaffnamuslim.com

4. தயா சோமசுந்தரம், சா.சிவயோகன் (2010), தமிழ் சமுதாயத்தில் உளநலம், சாந்திகம், யாழ்ப்பாணம்.5. மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் (2013), ‘மகிழ்வுடன்’ உயிரிழை, வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *