ஜனாஸா நல்லடக்கம் ஒரு மார்க்கக் கடமை!
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மரணித்தபோது வானவர்கள் அவர்களை தண்ணீரினால் ஒற்றைப்படக் குளிப்பாட்டினார்கள். அவருக்காக புதைகுழி ஒன்றைத் தயார் செய்தார்கள். இதுவே ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சந்ததிக்கான (நல்லடக்க) வழிமுறையுமாகும் எனவும் அவர்கள் கூறினர். (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
இறைவனின் பிரதிநிதியான மனிதனை இறைவன் உயிர் வாழும்போதும் மரணித்ததன் பின்னரும் கண்ணியப்படுத்தியுள்ளான். வானவர்கள் மூலம் குளிப்பாட்டப்பட்டு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கண்ணியமாக நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இறைவன் மனிதனை அழகுற வடிவமைத்து படைத்து கண்ணியப்படுத்தினான்.
நிச்சியமாக நாம் மனிதனை மிகவும் அழகாக வடிவமைத்ததுப் படைத்தோம். (ஸூரா அத்தீன்: 4)
ஆதமின் சந்ததிகளை நாம் கண்ணியப்படுத்தி, அவர்களை தரையிலும் கடலிலும் சுமந்து அவர்களுக்கு தூய்மையானவற்றை வாழ்வாதாரமாக வழங்கி நாங்கள் சிருஷ்டித்த அநேகமான படைப்புகளைவிட அவர்களை மேன்மையாக்கி வைத்தோம். (ஸூரா ஆலு இம்ரான்: 70)
இறைவனின் ரூஹிலிருந்து ஊதப்பட்டு, மண்ணால் படைக்கப்பட்ட சிரேஷ்டமான ஒரு பிறவியே மனிதன். எனவேதான், இஸ்லாம் மரணித்த மனிதனுக்கு உயிரோடுள்ள மனிதர்கள் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளை கட்டாயக் கடமையாக விதித்துள்ளது. இது அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த முடிவாகும்.
மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்டுதல், கபனிடல் (வௌ்ளைத் துணியால் உடலை மறைத்தல்) தொழுகை நடத்துதல், நல்லடக்கம் செய்தல் என்ற நான்கு செயற்பாடுகளும் சமூகக் கடமையாகும் (பர்ளு கிபாயா). தேவையான அளவு மனிதர்கள் சேர்ந்து இக்கடமையைச் செய்ய வேண்டும். ஒருவர் இறந்து விட்டால் அவரை நல்லடக்கம் செய்வது அவர் சார்ந்த குடும்பத்தாரின் பொறுப்பு மட்டுமல்ல, அது சமூகத்தின் தார்மிகக் கடமையுமாகும்.
இவ்வகையில் நான்காவது கடமையான நல்லடக்கத்திற்கு பிரதியீடாக தகனம் செய்யலாகது. இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையின்படி மறு உலகில் இறைவன் பாவிகளை நரகில் இட்டு எரிப்பான். அவனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு.
முஹம்மத் இப்னு ஹம்ஸா அல்அஸ்லமிய்யு அவர்கள் தங்கள் தந்தை வழியாக செவிமடுத்து அறிவிக்கின்றார்கள். நெருப்பைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் நெருப்பினால் வேதனை செய்ய முடியாது என இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூதாவூத்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இராணுவ ரீதியான நடவடிக்கையின்போதுகூட வன்மத்தை வளிப்படுத்தியதில்லை’ வன்முறையில் இறங்கியதுமில்லை. ஜீவகாருண்யத்தில் அவர்களை மிகைத்து நின்ற ஒரு மனிதனைக் காண முடியாது. நாங்கள் ஒரு முறை எறும்புப் புற்றை எரியுட்டியதைக் கண்ட இறைதூதர் (ஸல்லல்லாஹஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை எரித்தது யார்? என வினவினார்கள். அதற்கு நாங்கள்தான் எனக் கூறினோம். நெருப்பைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் நெருப்பினால் வேதனை செய்யக் கூடாது என வன்மையாகக் கண்டித்தார்கள். (அபூதாவூத்)
மனிதன் உயிரோடு இருக்கின்றபோது எரியூட்டுவதும் அவன் இறந்ததன் பின்னர் எரியுட்டுவதும் சமமே. அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மரணித்தவரின் எலும்பை முறிப்பதானது அவர் உயிரோடு இருக்கும்போது எலும்பை முறிப்பது போன்றதாகும். (இப்னு ஹிப்பான்)
இஸ்லாமியர்கள் தங்களது வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களை, பிரச்சினைகளை அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிமுறை என்ற உரை கல்லில் உராய்ந்து பார்த்த பின்னரே தீர்த்துக் கொள்வர். இவ்வகையில் முஸ்லிம்களின் இறந்த உடலங்களைத் தகனம் செய்வதை உயிரோடு வைத்து தீ வைத்துக் கொளுத்துவதாகவே முஸ்லிம்கள் கருதுவர். இது அவர்களது உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தும் செயற்பாடாகும்.
இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்தல் என்பது இஸ்லாமியர்களின் கலாசார அடையாளமல்ல. நல்லடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என்ற அந்தஸ்தை உடைய தெரிவுரிமைக்குரிய பாரம்பரிய விவகாரமுமல்ல. மாறாக, இது இறைவனின் நியதி. இயற்கை விதி வரலாற்றுத்தொன்மை மிகு காலப் பகுதியிலிருந்து நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்காறு. அல்குர்ஆனில் நல்லடக்கம் பற்றிய ஆதாரக் குறிப்புகளே இடம்பெற்றுள்ளன. மனிதனது இறந்த உடலத்தை தகனம் செய்வதற்கான ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பும் அல்குர்ஆனில் பதிவாகவில்லை.
ஏனெனில், அது குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருந்த காலப் பிரி
வில் அரபுத் தீபகற்பத்தில் தகனம் செய்யும் வழக்காறு நடைமுறையில் இருந்ததில்லை. அறியாமைக் கால சமூகச் சூழலில் அன்றிருந்த ஆண்களின் சிந்தனைப் பாங்கை அல்குர்ஆன் இவ்வாறு பதிவு செய்துள்ளது:
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி சொல்லப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து, கோபத்தை விளங்குகிறான். பெண் குழந்தை பிறந்தது என அவனுக்கு கூறப்பட்ட இந்த கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராதும் மறைந்து கொண்டு திரிகிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா. (ஸூரதுந் நஹ்ல்: 58-59)
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கின்ற வன்மம் நிறைந்த பாவச் செயல் வழக்காறாகக் காணப்பட்டதை மேற்படி திருமறை வசனம் பதிவு செய்துள்ளது. ஆனால், அந்தச் சமூகச் சூழலில் உயிரோடு எரித்ததாகவோ உயிர் பிரிந்ததன் பின்னர் உடலங்களை எரியூட்டியதாகவோ நிகழ்வுகள் பதிவாகவில்லை.
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் பிர்அவ்னுக்கும் இடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தை அல்குர்ஆன் பதிவு செய்துள்ளது. அதிலும் நல்லடக்கம் என்ற விழுமியமே அழுத்திப் பேசப்பட்டுள்ளது.
பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர் நாம் உங்களை சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்து நாம் உங்களை வெளிப்படுத்துவோம். (இவ்வாறு பிர்அவ்னிடம் மூஸா கூறினார்). (ஸூரா தாஹா: 55)
அவ்வாறே, அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற வரலாற்று நிகழ்வொன்றும் நல்லடக்கம் செய்தலை வலுவூட்டுவதாக அமைகின்றது. ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது இரு புதல்வர்களும் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவர் அடுத்தவரை கொலை செய்து விடுகிறார். கொலையாளி கொல்லப்பட்டவரின் பிரேதத்தை என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றபோது அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி மண்ணுக்குள் புதைக்கின்ற செயற்பாட்டை கற்றுக் கொடுத்தான். (பார்க்க: அல்மாயிதா- 31)
எனவே, மரணித்தவர்களின் உடலங்களை நல்லடக்கம் செய்தல் இறைவனின் நியதியாகும். இயற்கையோடு இயைந்து செல்லும் இந்நியதிக்கு முரணான மனித செயற்பாடுகளே இயற்கைச் சமநிலையை சீரழித்து விடுகின்றன.
நாம் மேலே பதிவு செய்த வலுவான ஆதாரங்கள் இறந்தவர்களின் உடலங்களை நல்லடக்கம் செய்வதே மார்க்கத்தின் அடிப்படை விதி என்பதை வலுவுட்டுகின்றன. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல ஏனைய மதக் குழுவினரும்கூட தத்தமது மத அடிப்படை விதிகளை இறுக்கமாகப் பின்பற்றி வாழுவது அடிப்படைவாதமுமல்ல’ தீவிரவாதமுமல்ல. ஒருவரது ஆழமான மார்க்கப்பற்று அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது. மேலும் மனித உயிர்களின் பாதுகாப்புக்கு உறுதுணையாக மார்க்கத்தின் அடிப்படைகள் அமைய வேண்டும். உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றபோது மார்க்கத்தின் சில விதிவிலக்கும் நெகிழ்வுத் தன்மையும் அதில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது அது ஒரு வரட்டு தத்துவமாக இருக்குமே தவிர வாழ்வாங்கு வாழ வைக்கும் வாழ்க்கை நெறியாக இருக்காது.
இந்த வகையில் இறந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்யும்போது நோய்க்கிருமிகள் அழியாது நோய்த்தொற்று அதிகரிக்கக்கூடிய ஏதுநிலைகள் காரணமாக அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக விஞ்ஞானபூர்வமாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிபுணர் குழு அல்லது சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தீர்மானத்திற்கு வருகின்றபோது அதனை மறுபரிசீலனை செய்து நெகிழ்ச்சித் தன்மையோடு காலத்தின் கட்டாயத்தை கருத்திற் கொண்டு நவ யுகத்திற்கு ஏற்புடைய புதிய தீர்வுகள், தீர்ப்புக்கள், மாற்றீடுகளின்பால் செல்வதற்கு இஸ்லாமிய சட்டத் துறைப் பரப்பில் வாயில்கள் திறந்தே உள்ளன.
நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணித்தவரின் உடலத்தை எரியூட்டுவதன் மூலம் மட்டுமே உயிர்கள் காவுகொள்ளப்படுவதை தடுக்க முடியும். அதனைத் தவிர வேறு வழி இல்லை என்ற தீர்மானத்திற்கு நிபுணர்கள் குழு வருகின்ற பட்சத்தில் உடலங்களை தகனம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. இதற்கு சில சட்ட அடிப்படைகள் வலுச் சேர்க்கின்றன. உதாரணமாக, நிர்ப்பந்த நிலைமைகள் தடைசெய்யப்பட்டவற்றை ஆகுமாக்கும் என்ற விதி தகனம் செய்யப்படுதல் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் மேலே பதிவிட்ட நிர்ப்பந்த நிலையின்போது அது ஆகுமாக்கப்படுகின்றது. சட்ட அடிப்படை விதிகள் சிலவற்றை இங்கு பதிவு செய்தல் பொருத்தம் என நாம் கருதுகின்றோம்.
1. நிர்ப்பந்த நிலைமைகள் தடைசெய்யப்பட்டவற்றை ஆகுமாக்கும்.
2. தீங்குகள் அகற்றப்பட வேண்டும்.
3. பொதுவான தீங்குகளை தடுத்துக் கொள்ளும் நோக்குடன் தனிப்பட்ட தீங்குகளை சகித்துக் கொள்ளல்.
4. படுமோசமான தீங்கு சிறு தீங்கின் மூலம் அகற்றப்படுதல்.
5. அகற்றப்பட வேண்டிய இரு தீங்குகளில் முதலில் எதனை அகற்றுவது என்ற முரண்பாடு ஏற்பட்டால், அவ்விரண்டில் ஆகப் பெரிய தீங்கு கருத்திற் கொள்ளப்பட்டு சிறு தீங்கைச் செய்வதன் மூலம் அந்தப் பெரிய தீங்கு அகற்றப்படல்.
6. நலன்களை ஈட்டிக் கொள்வதை விட தீங்குகள் தடுக்கப்படல் முதன்மையானது.
மேற்படி சட்ட அடிப்படை விதிகளை இமாம் ஸர்கஸி, இமாம் சுயுத்தி, அஷ்ஷெய்க் அஹமத் ஸர்கா ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.
இந்த சட்ட அடிப்படை விதிகள் இஸ்லாமிய ஷரீஆ வளமானது’ நெகிழும் தன்மை மிக்கது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன. இஸ்லாமிய ஷரீஆ மாறா விதிகளை மட்டும் உள்ளடக்கிய ஒன்றல்ல. மார்க்கம் உயிர், சொத்து, செல்வம், சிந்தனை, மானம், பரம்பரை, முதலானவற்றை பாதுகாப்பதே இஸ்லாமிய ஷரீஆவின் உயர் குறிக்கோளாகும். தொற்றுநோய் பரம்பலின் மூலம் உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றபோது இறந்தவர்களுக்கான உரிமைகளை விட உயிரோடு இருப்பவர்களுக்கான உரிமையே முதன்மைப்படுத்தப்படும். இச்சட்ட விதி பின்வரும் நிகழ்வில் இருந்து பெறப்பட்டதாகும்:
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது அவர்களிடம் சென்றார்கள். அப்போது அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்த தருணத்தில் இருந்து இன்று இரவு முடிவடைவதற்குள் எனக்கு மரணம் சம்பவித்துவிடும் என நான் எதிர்பார்க்கிறேன் எனக் கூறிவிட்டு, தான் அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அது நோய்வாய்ப்பட்ட பின்னர் அணிந்த ஆடையாக இருந்ததோடு அதில் குங்குமத்தின் அடையாளமும் காணப்பட்டது. பின்னர் அவர்கள் இந்த ஆடையை கழுவி இதனோடு மேலதிகமாக இரு துணிகளை சேர்த்து என்னை கபனிடுங்கள் என இறுதி உபதேசம் செய்தார்கள். அப்போது நான் இது கந்தலாகிப் போன பழைய ஆடை ஆயிற்றே எனக் கூறினேன். அதற்கு அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மரணித்தவரை விட உயிரோடு உள்ளவரே புதிய ஆடை அணிவதற்கு மிகவும் அருகதையானவர். இந்தக் கபன் துணியானது மரணித்தவரின் உடலில் இருந்து கீழ் ஜலங்களுக்கே உரித்தானது என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு வருவதற்கு முன் அந்திப் பொழுதில் மரணமானார்கள். காலையாவதற்கு முன்னர் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். (அல்புகாரி)
இஸ்லாமியர்கள் இஸ்லாத்தின் பொதுவான அடிப்படைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இவ்வகையில் அவர்கள் தொற்று நோயால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்கின்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். ஏனெனில், நல்லடக்கம் செய்தல் என்பது சாதாரண உலக விவகாரமல்ல. நல்லடக்கம் செய்வதை வல்ல அல்லாஹ்வின் பண்பாக திருமறை குறிப்பிடுகின்றது.
பின்னர் அவனை அல்லாஹ் மரணிக்கச் செய்து மண்ணறைக்குள் புகுத்துகின்றான். (ஸூரா அபஸ: 21)
எனவே, நல்லடக்கம் என்பது பாரம்பரிய பழக்கவழக்கமல்ல. அது இறைவனின் பண்பு. அவன் அறிமுகம் செய்து வைத்த வரலாற்றுத் தொன்மைமிக்க ஒரு விழுமியம். அது ஓர் இறை நியதி. இயற்கையின் நியதி. மார்க்கத்தின் அடிப்படை. ஆனாலும், முழு மனித சமுதாயத்தின் பாதுகாப்பு அல்லது வாழ்வுரிமை என்று வருகின்றபோது இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ந்து கொடுத்து முஸ்லிம்களை வழிப்படுத்தும். தொற்று நோயால் இறந்தவர்களை எரியூட்டுவதே நோய்ப் பரம்பல் விசாலித்துச் செல்லாமல் இருப்பதற்கு ஒரே தீர்வு! என்ற முடிவை துறைசார் நிபுணர்களும் மார்க்க அறிஞர்களும் ஏகோபித்த கருத்தாக முன்வைத்தால் இஸ்லாமியர்கள் தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்வார்கள்.
இஸ்லாமியர்கள் மார்க்கத்தின் அடிப்படைகளைப் பின்பற்றி வாழ விரும்புகிறார்கள். இது இன்று வாழ்கின்ற முஸ்லிம்களின் இரத்தத்தில் கலந்து விட்ட ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது நிறமூர்த்த விவகாரமாகும். ஆயிரம் வருடத்திற்கு அதிகமாக இந்நாட்டில் நாம் அனுபவித்து வந்த அடிப்படை உரிமையாகிய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை வல்ல இறைவன் மீண்டும் பாதுகாத்துத் தருவானாக!