கருத்தியல்களும் முஸ்லிம்களும்!

இஸ்லாம் ஒன்றாக இருந்தபோதிலும் இஸ்லாத்தின் பெயரால் காலத்திற்குக் காலம் தோன்றிய கருத்தியல்கள் வெவ்வேறு திசைகளில் முஸ்லிம்களை அழைத்துச் சென்றிருக்கின்றன என்பது ஒரு வரலாற்று உண்மை. இதுஇஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் சம்பந்தப்பட்டதொரு பிரச்சினை மாத்திரமல்ல, உலக சமூகங்கள் அனைத்திலும் இந்தப் பிரச்சினை இருந்தெ வந்திருக்கின்றது; இன்றும் இருக்கிறது. எனினும், நாம் இங்கு முஸ்லிம்களின் மத்தியில் காணப்படும் கருத்துக்களையே பேசுபொருளாக்கிக் கொள்கிறோம்.

கருத்தியல்கள் தானாக உருவாகுவதில்லை. முரண்பாடான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும்போது குறித்ததொரு சூழலில் மக்களை வழிநடத்த முனைபவர்கள் தமது முன்னுரிமைகளின் அடிப்படையில் மக்களை தங்களோடு வைத்துக் கொள்வதற்கும் அவர்களது ஆதரவுகளையும் உதவிகளையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கும் அவர்களை வழி நடத்தி வெற்றி பெறுவதற்குமானதோர் உந்துசக்தியாகவே கருத்தியல்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு பலரால் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்துமிருக்கின்றன. மற்றொரு காலத்தில் முகவரியற்றுப் போயுமிருக்கிருக்கின்றன. எவ்வாறாயினும் கருத்தியல்கள் தொடர்பில் எமது கவனத்திற்குரிய அம்சம் இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்படும் ஒரு கருத்தியல் எந்தளவு தூரம் இஸ்லாத்தின் இயல்புக்கு நெருக்கமானதாக இருக்கிறது? அல்லது இஸ்லாத்தின் இயல்பிலிருந்து தூர விலகி நிற்கிறது என்பதே.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் குர்ஆனாலும் சுன்னாவாலும் மெருகூட்டப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. வரிக்கு வரி குர்ஆனும் சுன்னாவும் அத்தகைய கருத்தியல்களை அலங்கரித்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை தங்கியிருப்பது அவற்றில்ல. மாறாக, இஸ்லாத்தின் இயல்புக்கும் குறித்த கருத்தியல்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கம் எத்தகையது என்பதிலேயே அது தங்கி இருக்கிறது. இதற்கான உதாரணம் ஒன்றை அல்குர்ஆன் எமக்குத் தந்து இருக்கிறது. நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பற்றியும் அன்னாரைப் பின்பற்றி நடந்த சமூகத்தைப் பற்றியும் குறிப்பிடுகின்றபோது அல்குர்ஆனின் 57: 27வது வசனம் அந்த உதாரணத்தைப் பிரஸ்தாபித்திருக்கின்றது.

“…நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில் அன்பையும் கருணையையும் (நாம்) ஏற்படுத்தினோம். (உலக இன்பங்களை துறந்து விடக்கூடிய) துறவறத்தை நாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி அவர்களே அதனை புதிதாக உண்டு பண்ணிக் கொண்டார்கள். அவ்வாறு இருந்தும் அதனை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை.”

இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு அவசியமானதொரு பற்றற்ற தன்மையையை போதித்திருப்பது உண்மையே. பேராசைகள் மிகைத்து… அவற்றால் வரம்பு மீறல்கள் அதிகரித்து… குழப்பங்கள் நிறைந்ததொரு சூழல் உலகை ஆட்கொள்ளதிருப்பதற்கு உதவும் வகையிலும்… மறுமையின் இன்பங்களை மறக்கச் செய்யாதிருக்கும் வகையிலும் போதிக்கப்பட்டதே அந்தப் பற்றற்ற தன்மை.

எனினும் பற்றற்ற தன்மையைப் போதிக்கும் வேத வரிகள் மற்றும் தூதர் மொழிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தங்களது விருப்பம் போல் அவற்றுக்கு விளக்கம் கொடுத்து மனித வாழ்க்கைக்கானதொரு கருத்தியலை உருவாக்கி விட்டார்கள் குறித்த சமூகத்தவர்கள் என்பதையே நாம் மேலே பார்த்த 57: 27ஆவது வசனம் எடுத்துக் கூறுகிறது. அதாவது வாழ்க்கைக்கு அவசியமாக இந்த பற்றற்ற தன்மையை… வாழ்க்கையைத் துறந்து விடுகின்ற பற்றற்ற தன்மையாக அவர்கள் மாற்றி விட்டார்கள். பற்றற்ற தன்மையை அல்லது துறவறத்  தன்மையை அனுசரிக்க வேண்டிய முறையில் அவர்கள் அனுசரித்திருந்தால் இந்தத் தவறை செய்திருக்க மாட்டார்கள் என்பதையே 57: 27 வசனம் குறிப்பிடுகின்றது.

உண்மையில் பற்றற்ற தன்மை என்பது வாழ்க்கையின் மூன்று இடங்களில் இருக்க வேண்டியதாகும். மனித வாழ்க்கையை சீர்படுத்தக்கூடிய பற்றற்ற தன்மை அதுவே.

01. மறுமை நம்பிக்கைக்கு உரம் ஊட்டும் வகையில்…

02. சட்டத்திற்குப் புறம்பான (ஹராமான) வழிகளில் பொருள் சேர்க்கும்… புகழ் சேர்க்கும் ஆசைகளை கட்டுப்படுத்தும் வகையில்…

03. அவசியப்படும்போது தன்னிடம் இருக்கும் தனது சொந்தப் பணத்தையோ பொருளையோ பொது நலன்களுக்காக விரும்பி செலவு செய்யும் வகையில்…

பற்றற்ற தன்மை ஒரு மனிதனை இவ்வாறு வழிநடத்துமானால் இஸ்லாம் வலியுறுத்துகின்ற பற்றற்ற தன்மை அவனிடம் இருக்கின்றது என்று கொள்ள வேண்டும். 

எனினும் குறிப்பிட்ட இந்த மூன்று இடங்களுக்குமப்பால் சென்று பற்றற்ற தன்மையை முழு வாழ்க்கைக்குமுரியதாக மாற்றும் ஒரு கருத்தியலை உருவாக்கினார்கள் குறித்த சமூகத்தவர்கள். அதனால் வாழ்க்கையைத் துறந்து செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது நாங்கள் அவர்கள் மீது கடமையாக்கிய விடயமல்ல. அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய விரும்பி அவர்களே அவர்கள் மீது கடமையாக்கிக் கொண்டதொரு வாழ்க்கை முறையாகும். அனுசரிக்க வேண்டிய முறையில் பற்றற்ற தன்மையை அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது இந்த தவறையே குறிக்கிறது எனலாம்.

குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பில் இஸ்லாம் முன்வைக்கின்ற வழிகாட்டல்கள் மற்றும் போதனைகளைத் தொகுத்து ஒன்றிணைத்து ஒரு கருத்தியலை மனிதர்கள் உருவாக்க முடியும். அதன் விளைவாக அந்தக் கருத்தியல் இஸ்லாத்தின் கருத்தியலாகவே பார்க்கப்படும். குறிப்பிட்ட கருத்தியல் சர்ச்சைகள் அற்றதாக இருந்தால் அதனை ஒருவரும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். சர்ச்சை நிறைந்ததாக இருந்தால் அதனை ஆதரிப்பதற்கு ஒரு சாரார் இருப்பது போல் அதனை எதிர்ப்பதற்கும் ஒரு சாரார் முற்படுவார்கள்.

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சீடர்களில் சிலர் துறவறக் கருத்தில் ஒன்றை உருவாக்கி இஸ்லாம் காட்டாத திசையில் ஒரு சாராரை வழிநடத்தியது போல் இன்றைய முஸ்லிம்களில் சிலரும் வெவ்வேறு கருத்தியல்களை உருவாக்கி ஒவ்வொரு குழுவினரை வழிநடத்திக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அவற்றுள் சில கருத்தியல்கள் சர்ச்சைக்குரியவையாகப் பார்க்கப்படுவதில்லை. மற்றும் சில கருத்தியல்கள் சர்ச்சைக்குரியவையாகப் பார்க்கப்படுகின்றன.

உலகம் இத்தகைய கருத்தியல்களை எவ்வாறு பார்க்கிறது? அவற்றுள் எவற்றை ஆதரிக்கின்றது? எவற்றை எதிர்க்கின்றது? என்றும் ஒரு பார்வை எங்களுக்கு அவசியமானதே. இருப்பினும் அதற்கப்பால் சென்று குறித்த கருத்தியல்கள் தொடர்பில் மற்றொரு பார்வையை செலுத்த வேண்டிய கடப்பாடும் எமக்கிருக்கிறது.  

அதுதான் முஸ்லிம்கள் உருவாக்கிய அவ்வாறான கருத்தியல்கள் எவ்வளவு தூரம் இஸ்லாத்தின் இயல்புக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. அல்லது துறவறக் கருத்தியல் போன்று இஸ்லாம் காட்டாத திசையில் மக்களை வழிநடத்துகின்ற கருத்துகளாக இருக்கின்றன என்பதாகும்.

இங்கு நாம் இரண்டு கருத்தியல்களை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம். காரணம், அந்தக் கருத்தியல்கள் உலகின் பார்வையிலும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன. இஸ்லாத்தின் பார்வையிலும் பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டியவையாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஜிஹாத் தொடர்பான கருத்தியல். மற்றையது இஸ்லாமிய அரசியல் தொடர்பான கருத்தியல்.

இந்தக் கருத்தியல்களின் தற்போதைய வடிவங்களும் இஸ்லாம் காட்டிய வடிவங்களும் ஒன்றா? அல்லது இஸ்லாம் காட்டாத ஒரு வடிவம் அவற்றிற்கும் கொடுக்கப்பட்டு அதன் மூலம் தவறான வழியில் சிலர் அழைத்துச் செல்லப்படுகிறார்களா? என்ற கேள்விகள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

ஜிஹாத் பற்றி இஸ்லாம் 

ஜிஹாத் பற்றி சுருக்கமாகச் சொல்வதாயின் அது சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளையே குறிக்கும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவில் ஓர் அரசாங்கத்தை ஸ்தாபித்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலேயே யுத்தம் செய்வதற்கான அனுமதி வசனம் 22: 39 (அல்குர்ஆனில்) முதன் முதலாக இறக்கியருளப்படுகிறது. காரணம் ஓர் ஆட்சித் தலைவர் என்ற வகையில் எதிரிகளின் அச்சத்திலிருந்து தனது தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அன்னாருக்கு இருந்தது. மதீனாவுக்கு முற்பட்ட 10 வருடங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் இருந்த வேளையில் தொடர்ச்சியாகப் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் அன்னாரும் அன்னாரது தோழர்களும் முகம் கொடுத்திருந்த போதிலும் தங்களைத் துன்புறுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது திருப்பித் தாக்குவதற்கோ நபிகளார் அனுமதி வழங்கவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் சில நபித் தோழர்கள் நபிகளாரிடம் வந்து இனியும் தங்களால் பொறுமையோடு இருக்க முடியாது என்றும் தாக்கினால் திருப்பித் தாக்க வேண்டுமென்றும் அனுமதி கோரினர். அதற்கு உடன்படாத நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் நல்லதொரு சூழல் உருவாகும் வரை ஆபிரிக்க நாடான ஹபஷாவிற்குச் சென்று புகலிடம் பெற்றுக் கொள்ளுமாறும் நல்லதொரு சூழல் உருவாகியதன் பின்னர் திரும்பி வருமாறும் கூறினார்கள்.

நபிகளாரின்  இந்த அணுகுமுறை  ஜிஹாத் பற்றிய இலகுவான, சிக்கலற்ற  புரிதலையே  தருகின்றது.  அதாவது ஆட்சி அதிகாரத்தை சட்டபூர்வமாகப் பெற்ற ஓர் அரசாங்கமே பாதுகாப்புக் கருதி போரிடுவதற்கு உரித்துடையதாக இருக்கின்றது.  அவ்வாறில்லாதபோது குழப்பமான சூழ்நிலையிலும் பொறுமை காப்பதோடு சாத்வீகமான வழிமுறைகளைக் கொண்டே பிரச்சினைகளை அணுக வேண்டும் என்ற ஒழுங்கைத்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

எனினும் இன்றைய உலகில் இந்த இலகுவான சிக்கலற்ற புரிதலிலிருந்து ஜிஹாத் பற்றிய கருத்தியலை வெகுதூரம் நகர்த்திச் சென்றுள்ளன சில தீவிரவாதக் குழுக்கள். உடன்படாதவர்களைத் தாக்கியழித்தல், முரண்படுவோருக்கு பாடம் புகட்டுதல், எதிரிகள் என்று  கருதப்படுவோரை  அச்சத்தோடு வாழச் செய்தல், கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில்  விமானம் போன்றவற்றை கடத்தல் மற்றும் மனிதர்களை  பணயக் கைதிகளாக வைத்திருந்து பின்னர் அவர்களை கொலை செய்து விடுதல், பழிவாங்குவதற்காக அப்பாவி மக்களை தாக்கியழித்தல் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துதல் போன்ற இன்னோரன்ன மிலேச்சத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய தீவிரவாத குழுக்கள் ஜிஹாத் என்ற பெயரில் முன்னெடுக்கின்றன. 

துறவறம் பற்றிய கருத்தியல் இஸ்லாத்தின் எளிய போதனைகளிலிருந்து விலகிச் சென்று எவ்வாறு ஒரு சாராரை உலகில் (Passive ஆக்கி) செயலூக்கமற்ற நிலைக்குக் கொண்டு செல்கிறதோ அதேபோல் இஸ்லாத்தின் இலகுவான எளிய போதனைகளிலிருந்து விலகிச் செல்லும் ஜிஹாத் பற்றிய பிழையான கருத்தியல் உலகில் மற்றொரு சாராரை (Active ஆக்கி) கொடுமைகள் செய்யத் தூண்டுகிறது.

ஜிஹாத் பற்றிய இத்தகைய கருத்தியலோடு இணைந்ததாகவும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தும் விதமாகவும் சமாந்தரமாகச் செல்கின்ற மற்றொரு பிழையான கருத்தியல்தான் இஸ்லாமிய அரசு என்ற எண்ணக்கருவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

நபிமார்களின் சரித்திரங்களில் ஆட்சியதிகாரம் 

ஆட்சியதிகாரம் என்பது அனைத்து நபிமார்களாலும் வலியுறுத்தப்பட்ட கண்டிப்பானதோர் இலக்காக இருக்கவில்லை. இறுதி நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த இலக்கை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டுச் செல்ல வேண்டிய கடப்பாட்டுடன் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் மனித வாழ்க்கையில் எந்தவொன்றையும் முன்மாதிரியின்றி விட்டுச் செல்ல முடியாது. அவ்வாறு விட்டுச் சென்றால் அந்தக் குறையை நிரப்புவதற்கு மற்றுமொரு நபி உலகிற்கு அனுப்பப்பட மாட்டார். 

அந்த வகயில் அன்னாரைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு சகல துறைகளிலும் நபியவர்கள் ஒரு Benchmark ஆகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்று கூற முடியும். எனினும், அன்னாரைப் பின்பற்ற விரும்புகின்றவர்கள் தாம் வாழும் சூழலைக் கருத்திற் கொண்டுதான் இறுதி நபியின் முன்மாதிரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் முன்னைய நபிமார்களின் சரித்திரங்களிலிருந்தும் சூழலை அடிப்படையாகக் கொண்ட படிப்பினைகளைப் பெறலாம். 

ஆட்சியதிகாரம் இருந்த சூழல், இல்லாத சூழல் எனப் பல்வேறுபட்ட சூழல்களில் இறுதி நபியும் ஏனைய நபிமார்களும் வாழ்ந்திருக்கிறார்கள். சூழல்கள் வேறுபடுவதற்கேற்ப அவர்களது நடைமுறைகளும் அணுகுமுறைகளும் வேறுபட்டிருக்கின்றன என்பதே வரலாறு. 

இவ்வாறு பல்வேறுபட்ட சூழல்களில் வாழ்ந்தவர்கள் ஒரே விதமான முன்மாதிரிகளைத் தந்து விட்டுச் செல்லவுமில்லை. ஒவ்வொரு நபியும் வேறுபட்ட முன்னுதாரணங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றுள் தமக்குப் பொருத்தமான வழிகாட்டல்களைத் தரும் முன்மாதிரிகளை அடையாளப்படுத்த வேண்டிய கடமைப்பாடு பின்வருகின்ற சமுதாயங்களுக்கு இருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். 

எனினும், தமது சூழலைக் கருத்திற் கொள்ளாமல் முன்னொரு காலத்திலிருந்த சூழலையும் அந்த சூழலில் பேசப்பட்ட இஸ்லாமிய அரசு பற்றிய கருத்தியலையும் அச்சொட்டாகப் பிரதியெடுத்து தமது சூழலுக்கும் பொருந்துகின்ற வேலையை சிலர் செய்ய முயற்சிக்கின்றனர். அதன் விபரீதமான விளைவுகளை அவர்கள் சிறிதும் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. 

சகோதர சமூகத்தைச் சேர்ந்த ஒரு புத்திஜீவி கேட்கிறார். ‘இலங்கையை தாருல் ஹர்ப் என்று முஸ்லிம்கள் கருதுகின்றீர்களா? அதாவது இலங்கையை ஒரு யுத்த பூமியாகக் கருதி இங்குள்ள ஏனைய சமூகங்களோடு போரிட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலா முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? தீவிரவாதிகள் அவ்வாறுதான் கூறுகிறார்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ 

முஸ்லிம்களது வரலாற்றுக் காலத்தின் ஆரம்பப் பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த இஸ்லாமிய அரசு பற்றிய கருத்தியல் பிரயோகம் ஒன்றுதான் ‘யுத்த பூமி’ என்ற பொருளைத் தரும் ‘தாருல் ஹர்ப்’ என்ற சொற்றொடராகும். 

அன்றைய கருத்தியலும் அதனை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்களும் இன்றைய உலகிற்கு எந்த வகையிலும் பொருத்தமற்றவை என்பதை நாம் உணர வேண்டும். குறித்த சொற்பிரயோகம் (தாருல் ஹர்ப்) குர்ஆனிலோ நபிமொழிகளிலோ வந்ததல்ல. அது அக்கால உலக ஒழுங்கிற்குள் பயன்படுத்தப்பட்ட பிரயோகங்களுள் ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதுதான் உண்மை. 

என்னிடம் தாருல் ஹர்ப் பற்றி வினாத் தொடுத்த குறித்த சகோதரரிடம் நான் இவ்வாறு கூறினேன்: ‘இலங்கையை ‘தாருல் ஹர்ப்’ என்று பார்ப்பதற்கு என்னால் முடியாது. மாறாக, அல்குர்ஆனின் 60ஆம் அத்தியாயத்தின் எட்டாவது வசனத்தினூடாகவே நான் இலங்கையைப் பார்க்கிறேன். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் ஏனைய மக்களோடும் ஏனைய மக்கள் முஸ்லிம்களோடும் சிநேகபூர்வமாக வாழ்ந்திருக்கிறார்கள். அத்தகைய மக்களோடு சிநேகபூர்வமாகவும் ஒத்துழைப்புக்களோடும் நடந்து கொள்ளுமாறே அவ்வசனம் வலியுறுத்துகின்றது. அது மட்டுமல்ல, போர் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடும் போரிடும் அனுமதியை எங்களுக்குத் தருவதில்லை. காரணம், இஸ்லாத்தின் பார்வையில் ஓர் ஆட்சித் தலைவருக்கே போரைப் பிரகடனம் செய்ய முடியும். அது நினைத்தவர்கள் நினைத்தவுடன் மேற்கொள்ளும் ஒரு கைங்கரியமல்ல’ என்று நான் விரிவாக விளக்கினேன்.

எனினும், இஸ்லாமிய அரசு பற்றிய பிழையான கருத்தியலும் அந்தக் கருத்தியலோடு தொடர்பான விளக்கங்களுமே தற்போது சகோதர சமூகத்தவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. சூழலை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாத்தின் நடைமுறைகளை எவ்வாறு விளங்கலாம்? செயற்படுத்தலாம்? என்ற தெளிவு இல்லாதவர்கள் கொடுத்த விளக்கம்தான் அது. 

ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் சிந்தனைப் பிரகாரம் இஸ்லாமிய அரசு என்பது எப்போதும் முஸ்லிமல்லாதவருக்கு எதிரானதாகவும் ஈவிரக்கமின்றி தண்டனைகளை அமுல் செய்வதாகவுமே இருக்கின்றது. நினைத்தபோது தாக்குதல் தொடுப்பதற்கு வசதியாக நினைத்த பிரதேசங்களை அவர்கள் யுத்த பூமியாகப் பிரகடனம் செய்து கொள்வார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். இன் தீவிரவாத சிந்தனைகளால் பாதிப்படைந்தவர்களும் இதே நிலைப்பாட்டுடன்தான் உலகமெங்கும் தொழிற்படுகின்றார்கள். அவர்களால் இஸ்லாம் பற்றிய படுமோசமானதொரு பிரதிமை உலகில் இன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற ஆபத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும். அதன் மறுபக்கமாக பிழையான திசைகளில் வழிநடத்தக் கூடிய கருத்தியல் விடயத்தில் முஸ்லிம் சமூகம் விழிப்பாக இருக்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட வேண்டும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 

முன்னாள் தலைவர்- இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, 

தலைவர்- இஸ்லாமிய சிந்தனைகளுக்கான மத்திய நிலையம

அல்ஹஸனாத்- மார்ச், 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *