தர்மம் செய்யும் ஆண்களும்… தர்மம் செய்யும் பெண்களும்…

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்

மனிதர்கள் அனைவரும் கஷ்டங்களற்ற சிறந்ததொரு நல்வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் விரும்புகிறது. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவர்கள் பூரண மகிழ்ச்சியையும் பாதுகாப்பு உணர்வையும் பெற்று அமைதியான வாழ்வை ஓட்ட வேண்டும் என்றும் இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவ்வாறில்லாமல் நாள்தோறும் வாழ்வாதாரத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு அதிலேயே மூழ்கிப் போனால் தாம் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிதல், இறையுணர்வை ஏற்படுத்திக் கொள்ளல், அல்லாஹ்வுடனான உறவை வளர்த்தல், நிலையான மறுமை வாழ்க்கைக்கு தயாராகுதல் முதலானவற்றில் எவ்வித கரிசயையும் அற்றவர்களாக ஆகிவிடுவர்.

ஓர் ஏழை அல்லது தேவையுள்ளவர் செல்வந்தர்கள் மூலமாக கவனிக்கப்படும்போது தான் இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்படவில்லை; தன் மீது இந்த சமூகம் உதவிக் கரம் நீட்டுகிறது; தன்னுடைய பிரச்சினைகள் பற்றி அலட்டிக் கொள்கிறது என்ற நல்லெண்ணம் அவரிடத்தில் உருவாகிறது.

வருமானப் பங்கீடு சமமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் அதன் அங்கத்தவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்குத் கட்டுப்பட்டவர்களாகவும் சமூகத்தின் எழுச்சிக்கு பங்களிப்புச் செய்பவர்களாகவும் ஆக்கப் பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள். இது இஸ்லாம் தனி மனிதர்களிடம் எதிர்பார்க்கும் உயரிய இலக்காகும்.

இதனால்தான் ஸகாதிற்கு அப்பாலும் சென்று தான தர்மங்களின் முக்கியத்துவத்தை அல்குர்ஆனும் ஸுன்னாவும் அடிக்கடி வலியுறுத்துகின்றன. இந்த உயர் பண்பு குடும்பத்திலுள்ள கணவன்- மனைவி, பிள்ளைகள் ஆகிய அனைவரிடமும் இருக்க வேண்டும். இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சீரான குணத்தையும் புகழத்தக்க பண்பையும் அல்லாஹ் இவ்வாறு எடுத்தியம்புகின்றான்:

‘அவர் தனது குடும்பத்தாருக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவக் கூடியவராக இருந்தார்.’ (19: 55)

‘நிச்சயமாக தர்மம் செய்யும் ஆண்களுக்கும் தர்மம் செய்யும் பெண்களுக்கும் அல்லாஹ்வுக்கு அழகிய முறையில் கடன் வழங்கியோருக்கும் அவை பன்மடங்காக்கப்படும். மேலும் அவர்களுக்கு கண்ணியமான கூலியும் உண்டு.’ (57: 18)

தங்களது செல்வங்களை தேவையுள்ளவர்களுக்கும் வறுமையில் வாடுவோருக்கும் தர்மம் செய்யக்கூடிய ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் இங்கு பாராட்டுகிறான். அவர்களது தர்மத்திற்கு கைம்மாறாக ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி வழங்கப்படும். அது எழுநூறு மடங்கு வரையில் அதிகப்படுத்தபடும். அதற்கும் மேலாக கண்ணியமான கூலி என்பது நற்கூலியும் இறுதியில் சென்றடையும் கண்ணியமான இடமுமாகும்.

‘இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் இறைநம்பிக்கையாளர்களான பெண்களும் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர்; தீமையை விட்டும் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்.’ (9: 71)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக நுஃமான் இப்னு பஷீர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதிலும் கருணை புரிவதிலும் பரிவு காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது ஓர் உடலின் நிலையைப் போன்றதாகும். உடலின் ஓர் உறுப்பு நோயுற்றால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்து கொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது.’ (அல்புகாரி, முஸ்லிம்)

இதுதான் முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்றவர்களுடனுள்ள உறவும் தொடர்புமாகும். செல்வந்தர்கள் ஏழைகளின் இன்ப-துன்பங்களில் பங்கெடுக்க வேண்டும். சமூகத்தில் யாரும் ஒரு வேளைகூட பசியில் இருப்பதை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அதற்கு நேரெதிரான பண்பை நயவஞ்சகர்கள் கொண்டுள்ளார்கள் என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது.

‘நயவஞ்சகர்களான ஆண்களும் நயவஞ்சகர்களான பெண்களும் சிலர் மற்றும் சிலரைச் சார்ந்தோரே! அவர்கள் தீமையை ஏவி நன்மையை விட்டும் தடுக்கின்றனர். நல்லறங்களில் செலவு செய்யாமல் தமது கைகளைப் பொத்திக் கொள்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை மறந்தனர்ளூ அவனும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளாவர்.’ (9: 67)

மறுமையில் சிலர் தாங்கள் நரகம் சென்றதற்கு முக்கிய இரண்டு காரணங்களைக் கூறுவார்கள். ‘குற்றவாளிகளிடம் ‘உங்களை ஸகர் எனும் நரகில் நுழைவித்தது எது?’ எனக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாம் தொழுகையாளிகளில் இருக்கவில்லை. மேலும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை’ எனக் கூறுவார்கள்.’ (74: 41- 44) இதற்கு முந்தைய ஸூராவில் அல்லாஹ்வின் உபதேசம் இப்படி அமைந்துள்ளது: ‘நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனை வழங்குங்கள். உங்களுக்காக நீங்கள் எந்த நன்மையை முற்படுத்தினாலும் அதை அல்லாஹ்விடம் மிகச் சிறந்ததாகவும் மகத்தான கூலியுடையதாகவும் பெற்றுக் கொள்வீர்கள்;.’ (73: 20)

இன்றைய சூழலில் பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் அல்லது தொழில் இருந்தும் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. பலர் பெறுகின்ற ஊதியம் நாளாந்த செலவினங்களை சமாளிக்க முடியாத நிலைக்கு அவர்களைத்த தள்ளியிருக்கிறது. சிலர் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிறரிடம் கையேந்த விருப்பமில்லாமல் கண்ணியமாக வாழ்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் கண்டறிந்து உதவி, ஒத்தாசைகள் புரிவது வசதி படைத்தவர்களின் தார்மிகப் பொறுப்பும் கடமையும் ஆகும். (Highlight Point)

‘தாம் எதைச் செலவு செய்வது? என்று உம்மிடம் கேட்கின்றனர். ‘தேவைக்கு போக மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக.!’ (2: 219)

முஆத் இப்னு ஜபல், ஸஅலபா (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவரும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹிவின் தூதரே! எங்களிடம் செல்வம் இருக்கிறது. அதேநேரத்தில், எங்களுக்கு குடும்ப உறுப்பினர்களும் அடிமைகளும் உள்ளனர். நாங்கள் பிறருக்காக செலவு செய்ய வேண்டும் என்றால் எதைச் செலவு செய்ய வேண்டும்?’ என்று வினவினார்கள். அப்போதுதான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை அருளினான். (தப்ஸீர் இப்னு கஸீர்)

இந்த வசனத்தில் நீதமுள்ளது என்பதைக் குறிக்க ‘அல்அஃப்உ’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) ‘உம்முடைய குடும்பத்தாருக்கு போக மேலதிகமானது’ என்று பொருள் கூறினார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹகீம் இப்னு ஹிஸாம் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ‘தன்னிறைவு பெற்ற நிலையில் தேவைக்குப் போக எஞ்சியதை வழங்குவதே சிறந்த தர்மமாகும். கீழுள்ள வாங்கும் கையை விட மேலுள்ள வழங்கும் கையே சிறந்தது. நீ யாருக்கு செலவழித்தாக வேண்டுமோ அவர்களிலிருந்தே உனது தர்மத்தை தொடங்கு.’ (அல்புகாரி, முஸ்லிம், அபூதாவூத், முஸ்னது அஹ்மத்)

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு பொற்காசு இருக்கிறது’ என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘அதை உனது தேவைக்கு செலவிட்டுக் கொள்’ என்று சொன்னார்கள். மீண்டும் அந்த மனிதர் ‘என்னிடம் மற்றொரு பொற்காசு உள்ளது’ என்றார். ‘அதை உனது மனைவிக்காக செலவு செய்’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் ‘என்னிடம் இன்னொரு பொற்காசும் உள்ளது’ என்றார். ‘அதை உன் பிள்ளைகளுக்குச் செலவிடு’ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அவர் ‘என்னிடம் மற்றொரு பொற்காசும் உள்ளது’ என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘அதை யாருக்கு கொடுப்பது என்று நீயே தீர்மானித்துக் கொள்’ என்று கூறினார்கள். (அபூதாவூத், அந்நஸாஈ, முஸ்னத் அஹமத்)

‘தமக்குத் தேவை இருந்தபோதும் தம்மை விட அவர்களையே முற்படுத்துவார்கள்’ (59: 9) என்று இறைநம்பிக்கையாளர்களின் அதி உயர்ந்த பண்பையும் குர்ஆன் அடையாளப்படுத்துகிறது.

முஹம்மத் இப்னு இஸ்ஹாக் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார்: மதீனாவில் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். எங்கிருந்து தங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பெற்று வாழ்கின்றனர் என்பதையும் அவர்களுக்கு யார் வழங்குகிறார்கள் என்பதையும் அவர்களில் எவரும் அறிய மாட்டார். அலி இப்னு ஹுஸைன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மரணம் அடைந்ததும் அக்கூட்டத்தார் தங்களுக்கு கிடைத்து வந்தது கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகினர். அலி இப்னு ஹுஸைன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களே இரவு நேரங்களில் தங்களிடம் வந்து உதவிகளை செய்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டனர். அன்னார் இறந்த பின் முதுகு மற்றும் புஜங்களில் ஏழைகள் மற்றும் விதவைகளின் வீடுகளுக்கு தோற்பைகளை சுமந்து கொண்டு வந்து கொடுத்ததால் ஏற்பட்ட தழும்புகளும் வடுக்களும் இருப்பதை கண்டார்கள். (இஷ்திராகிய்யதுல் இஸ்லாம்- முஸ்தஃபா ஸிபாஈ)

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் பிறருக்கு உதவி செய்வதில் தாராள மனம் படைத்தவராக இருந்துள்ளார். ஒரு முறை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) ஓர் இலட்சம் வெள்ளி நாணயங்களை தர்மம் செய்தார்கள். அன்று அவர் அணிந்திருந்த பழைய ஆடையைத் தவிர வேறு ஆடை அவரிடம் இருக்கவில்லை. அன்று நோன்பும் நோற்றிருந்தார். அவரது பணிப் பெண் ‘நீங்கள் நோன்பு திறப்பதற்கு உணவுப் பொருள் வாங்க சில நாணயங்களை எடுத்து வைத்திருக்கலாமே!’ என்று கூறியபோது, ‘நீ முன்பே நினைவூட்டி இருந்தால் அவ்வாறு செய்திருப்பேன்’ என்று ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் பதிலளித்தார். பசியோடு இருந்த நிலையில்தான் ஓர் இலட்சம் நாணயங்களை தர்மமாக வழங்கினார்கள். ஆனால், தம்மை மறந்து மக்களை நினைவில் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *