தலைமைக்கு அருகில் இருப்பவர் ஒரு வகையினர்

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)

சிரேஷ்ட விரிவுரையாளர, இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: தேசத் தலைவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவருக்கு வாய்மைமிகு அமைச்சர் ஒருவரை  நியமிப்பான். அந்த அமைச்சர் அந்த தலைவர் மறந்துவிட்ட விவகாரம் குறித்து அவருக்கு நினைவூட்டுவார். மறந்து விடாமல் அவர் ஒரு விவகாரத்தை நினைவுகூர்ந்தால் (அவ்விவகாரத்தில்) அமைச்சர் அவருக்கு உதவுவார். மேலும், அல்லாஹ் தேசத் தலைவருக்கு நன்மையல்லாத ஒரு விடயத்தை நாடினால் அவருக்கென ஒரு கெட்ட அமைச்சரை நியமிப்பான். அந்த தலைவர் ஒரு விவகாரம் குறித்து மறந்து விட்டால் அந்த அமைச்சர் அதனை அவருக்கு நினைவூட்ட மாட்டார். தலைவர் நினைவுகூர்ந்தாலும் அவருக்கு இவர் உதவி செய்ய மாட்டார்.’ (அபூதாவூத்)

ஒரு தேசத்தின் அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் வளமானதும் சுபிட்சமானது மான நிலை என்பன அதன் அரச இயந்திரத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. குறித்த ஓர் இயந்திரத்தின் ஒவ்வொரு கூறும் அடுத்த கூறுடன் பொருத்தமாக இணைக்கப்பட்டு இயங்குகின்றபோதே நாம் எதிர்பார்க்கும் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறே தேசத் தலைமை என்பது தனி மனிதனுடன் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல. தேசத் தலைவரும் அவருக்கு வாய்க்கப் பெறுகின்ற அமைச்சர்களினதும் தகைமைஇ தராதரத்தைப் பொறுத்தே பிரஜைகளின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படும். இதனையே மேற்குறித்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நல்லுள்ளம் படைத்த தேசத் தலைவருக்கு அல்லாஹ் நலவை நாடினால் அவருக்கு அவன் வழங்குகின்ற சன்மானம் வாய்மை மிகு அமைச்சராகும். தேசத் தலைவரின் தீர்மானங்களிலும் அவரது கட்டளைகளிலும் ஓர் அமைச்சரின் வகிபாகம் இன்றியமையாததாகும். குறிப்பாகஇ தலைமை என்பது கலந்தாலோசனை என்ற ஜனநாயகப் பண்பியல்பை அத்திவாரமாகக் கொண்டதாகும். இஸ்லாம் இதனை இறை விசுவாசிகளின் பண்பியல்பாகக் குறிப்பிடுகின்றது. தங்களுக்கு மத்தியில் கலந்தாலோசனை செய்து கொள்வது அவர்களது பண்பியல்பாகும்.’ (அஷ்ஷூரா: 38) மேலும்இ இதனை தலைமைக்கு கட்டளையாகப் பிறப்பிக்கின்றது. குறித்த விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக!’ (ஸூரா ஆலுஇம்ரான்: 159)

அரச தீர்மானங்ளைகளை அமுலுக்கு கொண்டு வருவதும் அதனை மேற்பார்வை செய்வதும் அதனை மதிப்பீடு செய்வதும் அமைச்சர்களின் தார்மிகக் கடமையாகும். இவ்வகையில் பிரஜைகளின் நலன்களோடு நேரடி தொடர்பில் உள்ளவர்கள் அமைச்சர்களே. அவர்களது விழுமியம் சார் அரச நிர்வாக சேவைகளே குடிமக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வல்லது. அப்படியானால் தலைவர் அருகே இருக்கின்ற அமைச்சர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இருப்பது அவசியமாகும். விழிப்புணர்வுமிக்கதும் ஆக்கபூர்வமானதும் விமர்சனத்திற்குரியதுமான அரச நிர்வாக நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

அமைச்சுப் பதவி என்பது தொழில் மைய சந்தையல்ல. தனது சொந்தப் பணத்தை முதலீடு செய்து இலாபம் பெறுகின்ற வர்த்தக வாணிப நடவடிக்கையல்ல. இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் முதலானவற்றிலிருந்து தூர விலகி தனது அரசியல் வாழ்விலும் தனது தனிப்பட்ட வாழ்விலும் கறை படியாத கரங்களையுடைய மக்கள் பிரதிநிதிகள் ஒரு தலைமைக்குக் கிடைப்பது இறைவனின் நாட்டத்திற்கு உட்பட்டதாகும்.

அமைச்சுப் பதவியாக இருக்கலாம் அல்லது அதற்குக் கீழுள்ள பதவி நிலைகளாக இருக்கலாம். அங்கே பதவி தாங்குனர்களாக வீற்றிருப்பவர்கள் சுயநலவாதிகளாக இருக்க முடியாது. சரியோ, பிழையோ தலைமையின் தீர்மானங்களுக்கு வக்காலத்து வாங்குகின்றவர்களாகவும் இருக்க முடியாது. இவர்களுக்கு தலைமையை நோக்கிய கழுகுப் பார்வை அவசியமாகும்.

உலகை வியாபித்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குலபாஉர் ராஷிதூன் என்றும் நல்லாட்சியாளர்கள் சுக்கானை தங்கள் கைகயால் பிடித்து அரசு நிர்வாகக் கப்பலை செலுத்தியபோது அதன் திசைகாட்டிகளாக அக்கால ஆளுனர்களும் அமைச்சர்களும் இருந்தனர். தகைமையும் தராதரமும் உள்ள மனிதர்களையே தங்கள் அருகே கலீபாக்கள் வைத்துக் கொண்டனர். அதற்கு நல்லதொரு சான்றாதாரத்தை பதிவு செய்கின்றோம்.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபா உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிரியாவின் ஹிம்ஸ் பிரதேசத்திற்கு ஆளுனராக ஸயீத் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை நியமிக்கின்றார்கள். ஒரு சமயம் ஹிம்ஸ் பிரதேச மக்கள் கலீபா அவர்களை நோக்கி வந்தனர். கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஏழை மக்களின் விபரங்களை அவர்களிடம் கோரினார். அப்போது அம்மக்கள் ஏழை மக்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை கொடுத்தனர். அதிலே ஸயீத் இப்னு ஆமிர் அவர்களின் பெயரும் காணப்பட்டது.

அப்போது கலீபா அவர்கள் ஸயீத் இப்னு ஆமிர் என்பவர் யார்’ எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள் எங்கள் தலைவர்தான் அவர்’ என விடையளித்தனர். அதிர்ச்சியுற்ற கலீபா அவர்கள் 1000 பொற்காசுகளுள்ள ஒரு பணமுடிச்சை அவர்களிடம் கொடுத்துஇ உங்கள் தலைவரிடம் இதனை ஒப்படைத்து விடுங்கள்’ என்றார்கள்.

அந்த பணமுடிச்சை மக்கள் அவரிடம் ஒப்படைத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட ஸயீத் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்றார்கள். இதனை செவியுற்ற அவர்களது மனைவி என்ன நேர்ந்தது உங்களுக்கு? ஏதாவது அனர்த்தங்களா? அல்லது கலீபா மரணமடைந்து விட்டாரா?’ என வினா தொடுத்தார்கள்.

அதற்கு ஸயீத் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்,அவை அனைத்தையும் விட பெரிய அனர்த்தமொன்று நிகழ்ந்து விட்டது. என்னுடைய மறு உலக வாழ்வை நாசப்படுத்தக் கூடிய உலகம் என்னில் புகுந்து விட்டது’ என்றார்கள். அதிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளுங்கள்’ என அவர்களது மனைவி கூறினார்கள். உண்மையில் அவர்களது மனைவிக்கு தீனார் விடயம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அப்படியானால் அதிலிருந்து நான் விடுபடுவதற்கு எனக்கு உங்களால் உதவ முடியுமா?’ என ஸயீத் கேட்டார்கள். ஆம்’ என அவர்ளது மனைவி பதில் கூற உடனே அந்த தீனார்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள். சிறிது காலத்தின் பின்னர் உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிம்ஸ் பிரதேச மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக அங்கே விஜயமொன்றை மேற்கொண்டார்கள். அங்கு மக்களை சந்தித்த கலீபா, அவர்களின் கவர்னராகிய ஸயீத் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அந்த மக்கள் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசிவிட்டு தாங்கள் விரும்பாத மூன்று பண்புகள் அவரிடம் உள்ளதாக கலீபாவிடம் முறையிட்டனர்.

உடனடியாக கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரை வரவழைத்து மக்களையும் ஒன்று திரட்டி உங்கள் தலைவர் குறித்து என்ன முறைப்பாட்டை முன்வைக்கின்றீர்கள்?’  எனக் கேட்டார்கள்.  அப்போது மக்கள் இவர் நண்பகல் ஆகும்வரை மனிதர்களிடம் வர மாட்டார்கள்’ எனக் கூறினர். ஸயீத் இப்னு ஆமிரைப் பார்த்த கலீபா இதற்கு பதிலளிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தைக் கூறுவதற்கு எனக்கு விருப்பமில்லை. (எனினும் கூறுகிறேன்). எனது குடும்பத்திற்கென்று ஒரு பணியாளர் இல்லை. குடும்பத்தாருடன் சேர்ந்து மா அரைத்துப் பிங்நை்து அது புளிக்கும் வரை காத்திருந்து அவர்களுக்கு ரொட்டி சுட்டுக் கொடுக்கும் வரை காத்திருப்பேன். பின்னர் வுழூ செய்து விட்டு மக்களிடம் வருவேன்’ (எனவே காலதாமதமாகிறது)’ எனக் கூறினார்கள்.

பின்னர் கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவர் குறித்து வேறு எந்த முறைப்பாட்டை முன்வைக்கின்றீர்கள்?’ எனக் கேட்டார்கள். இவர் இரவில் யாருக்கும் விடையளிப்பதில்லை’ எனக் மக்கள் முறைப்பட்டனர். அப்போது ஸயீத் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக!

அதனையும் பகிரங்கமாக அறிவிக்க நான் விரும்பவில்லை. (எனினும் அதனையும் நான் கூறிவிடுகிறேன்) நிச்சயமாக பகல் பொழுதை மக்களுக்காக வகுத்துள்ளேன். இராப் பொழுதை அல்லாஹ்வுக்காக அமைத்துள்ளேன்’ என்றார்கள்.

‘வேறு என்ன முறைப்பாட்டை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?’ என கலீபா அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஹிம்ஸ் பிரதேச வாசிகள், இவர் மாதத்தில் ஒரு நாள் யாரையும் சந்திப்பதில்லை’ என முறைப்பாடு செய்தனர். இதற்கு நீர் என்ன கூறுகின்றீர்? என கலீபா வினவ ஸஈத் இப்னு ஆமீர் அவர்கள் எனது உடையை கழுவித் தருவதற்கு ஒரு பணியாளர் எனக்கு இல்லை. நான் அணிந்திருக்கும் உடையை தவிர வேறு உடை எனக்கு இல்லை. எனவேஇ அந்த நாளில் எனது உடையை  கழுவி அது உலரும் வரை காத்திருந்து அணிந்து கொண்டு அந்திப் பொழுதில் மக்களை வந்தடைவேன்’ என விளக்கமளித்தார்கள்.

இவ்விளக்கங்களை செவிமடுத்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உம்மைப் பற்றிய எனது நல்லபிப்பிராயத்தை தோல்வியுறுச் செய்யாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என அல்லாஹ்வைப் புகழ்ந்து பிரார்த்தித்தார்கள். இது கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்கள் சேவைக்காகத் தெரிவு செய்த ஒரு கவர்நரின் பேணுதலான தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்பு. அல்லாஹுத் தஆலா இரண்டாவது கலீபாவுக்கு நன்மையை நாடினான். எனவே, அரச நிர்வாக இயந்திரத்தை இயக்கக் கூடிய நல்லவர்களை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யக் கூடிய தீட்சண்யமான அறிவை வழங்கினான். எனவே, அங்கு நல்லாட்சி மலர்ந்தது.

ஒரு ஜனநாயக அரசியல் முறைமையின் கீழ் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு அல்லது பிரதமருக்கு வாக்குப் பெறுகின்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது செயலாளர்கள் இவர்களின் கீழ் கடமையாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசாங்கத்தின் வரப் பிரசாதங்களுக்காக தலையாட்டும் பொம்மைகளாக இருக்க முடியாது. தலைமையின் நெளிவு, சுளிவுகளை சுட்டிக் காட்டி நெறிப்படுத்துகின்ற உத்தமர்களாக இருக்க வேண்டும். இதன்போது தலைமை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க முடியும். அதன் இயங்கு தன்மையை தீர்மானிக்கின்ற மாற்றத்தின் முகவர்களாக தலைமைக்கு அருகில் இருக்கின்றவர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக பாரளுமன்றம் என்பது நாட்டுக்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்படுகின்ற. சட்ட மூலங்கள் விவாதிக்கப்படுகின்ற ஒரு–ஆநபய நிறுவனம். அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் தொழிற்பட வேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்களாக அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள்  மக்கள் ஆணையைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்கள். எனவேஇ நிறைவேற்றப்பட இருக்கின்ற சட்ட மூலங்கள் குறித்து ஆக்கபூர்வமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டும். நாட்டின் நலனும் மக்கள் நலனுமே அவர்களது இலக்காக இருக்க வேண்டும்.

இவ்வகையில் எதிர்க்கட்சி என்றால் எதிலும், எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பதும், ஆளுங்கட்சி என்றால் எல்லா சந்தர்ப்பங்களிலும் தலையசைத்து பச்சைக் கொடி காட்டுவதும்தான் பாராளுமன்ற சம்பிரதாயமாக அமைந்தால் நாடு குட்டிச் சுவராகிவிடும். ஜனநாயக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கான வரப்பிரசாதங்கள் தாராளமாக, ஏராளமாக உள்ளதுன. இங்கு பாராளுமன்ற பிரதிநிதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை பதிவிடுவது பொருத்தமாக அமையும்.

சம்பளம்:

நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம்: 54,285.00

பிரதி அமைச்சர் ஒருவரின் சம்பளம்: 63,500.00

இராஜாங்க அமைச்சரின் சம்பளம்: 65,000.00

சபாநாயகரின் சம்பளம்: 68,500.00

பிரதமரின் சம்பளம்: 71,500.00

சம்பளத்திற்கு மேலதிகமாக

அலுவலக கொடுப்பனவு : 100,000.00

போக்குவரத்து கொடுப்பனவு: 100,000.00

தொலைபேசி கொடுப்பனவு: 50,000.00

கையடக்கத் தொலைபேசிக் கொடுப்பனவு: 50,000.00

இலவச அஞ்சல் கொடுப்பனவு: 3,50,000.00

சாரதி மன்றும் விருந்தோம்பல் கொடுப்பனவு: 45,000.00

பாராளுமன்ற கூட்டங்களுக்கு கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு 2500 ரூபா வழங்கப்படும்.

ஒரு மாதத்தில் குறைந்தது 8 நாட்களுக்கு அமர்வு நடைபெறுகிறது. அதன்படி மாதத்திற்கு 20,000.00 பெறப்படுகிறது.

ஒருங்கிணைப்பு செயலாளருக்கு 218 லீற்றர் எரிபொருளுக்கு 17,440.00

•          இராஜாங்க ஃ அமைச்சரவை அமைச்சு ஊழியர்களுக்கு 5 வாகனங்கள் மற்றும் பிரதி அமைச்சு ஊழியர்களுக்கு 3 வாகனங்கள்.

•          கூடுதலாக சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு கட்டணமில்லாத உரிமங்கள் கிடைக்கின்றன. ரூபா 30-40 லட்சத்திற்கு வாங்கிய வாகனங்களை ரூபா 25 மில்லியனுக்கு விற்கலாம்.

•          பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்படும்போது ரூபா 50 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் காப்பீட்டுத் தொகை ரூபா 20 இலட்சம்

•          கூடுதலாக, ஓர் ஆடம்பர உத்தியோகபூர்வ வீடு

•          காலை உணவு மற்றும் மதிய விஷேட உணவிற்கு பாராளுமன்றம் 150 ரூபா மாத்திரமே அறவிடுகிறது.

•          5 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுதியம் கிடைக்கிறது

•          கொழும்பிலுள்ள முன்னணி பாடசா

•          லைகளில் குழந்தைகளுக்கு அனுமதி

•          ஏ.ஐ.P வெளிநாட்டுப் பயணம், உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குமிம் மற்றும் பயணத்திற்கான சிறப்பு விஷேட சலுகைகள்.

இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பேரும் பொதுமக்களின் வரிப் பணத்தால் 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகின்றார்கள் (தகவல்: லங்காதீப)

மக்கள் பிரதிரிநிதிகளின் வரப்பிரசாதத்தின் நீள அகல ஆழத்தை இங்கு பதிவிட்டிருந்தோம். அப்படியானால் ஒரு மக்கள் பிரதிநிதியின் தொண்டு சிறக்கவே இத்தனை சலுகைகள். இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் பிரதிநிதியின் பாராளுமன்ற செயற்பாடுகள் விழிப்புணர்வுமிக்கதாகவும் அறிவுபூர்வமானதாகவும் விமர்சனப் பார்வையுடன் கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும்.

குறிப்பாக மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்ற அமர்வுகளின்போது தேச நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கூர்மைப்படுத்தப்பட்ட அவதானத்தைச் செலுத்தி ஆக்கபூர்வமான கருத்துக்களைச் சமர்ப்பணம் செய்வோராக இருந்தல் வேண்டும். அரசறிவியல் பின்புலம் கொண்ட, அரச நிர்வாக இயந்திரத்தின் சுக்கானைப் பிடித்திருக்கும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் திசை காட்டியாகச் செயல்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சரவை இறைவனால் நன்மை நாடப்பட்ட குழுவாகும். முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் வரப்பிரசாதங்களுக்கு அப்பால் நின்று பாராளுமன்றில் கருத்துத் தெரிவிப்போராக இருக்க வேண்டும்.

ஆனால் வரப்பிரசாதங்களையே இலக்காகக் கொண்டு தொழிற்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தலைமைக்கு ஞபாகமூட்ட மாட்டார்கள். முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் மாட்டார்கள். தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்ளும் வேட்டைப் பிராணியின் வேட்டையே அவர்களில் ஆதிக்கம் செலுத்தும். இத்தகைய மனித மாதிரிகளை தாங்கள் அருகே வைத்திருக்கும் தலைமைக்கு இறைவன் நன்மையை நாடவில்லை என்றே அர்த்தம்.

அக்கால இஸ்லாமியத் தலைமை நல்லவர்களையும் வல்லவர்களையும் தன் அருகே வைத்திருந்தது. கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) தங்களது சபைக்கு பிரசன்னமானால் முதலாவதாக அபுல் ஹஸன் (அதாவது அலீ இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) எங்கே?’ எனக் கேட்பார்கள். அலீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்ற ஞானவான்களே இஸ்லாமியத் தலைமையின் திசை காட்டிகளாக இருந்தார்கள். எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் இந்தத் தேசத்தின் தலைமைக்கு வழிகாட்டல்களையும் நல்லாலோசனைகளையும் வழங்குவதோடு அதன் நெளிவு, சுளிவுகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து கனவான் அரசியல் செய்பவர்களாகவும் உரிமைக் குரல் எழுப்பும் மக்கள் பிரதிநிதிகளாகவும் மட்டுமன்றி கடமையுணர்வும் பொறுப்புணர்வும் தேசப்பற்றுமுள்ள மனிதர்களாகவும் தங்களை தரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *