தவக்குல்: யதார்த்தங்களை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்விடம் எல்லாக் காரியங்களையும் ஒப்படைத்து அவன் மீதே தவக்குல் வைப்பீர்களாயின் பறவைகளுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்குவது போல் உங்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குவான். அவை காலை வேளையில் வெறும் வயிற்றோடு பறந்து சென்று மாலை வேளையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்பி வருகின்றன.’ (அஹ்மத், அத்திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான், அல்ஹாகிம்)

தவக்குலின் யதார்த்த நிலை மற்றும் அதன் அடிப்படைகளைப் பற்றிப் பேசுகின்ற ஹதீஸ் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. மேற்படி ஹதீஸ் வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான மிகவும் உயர்ந்த வழிமுறையாகவும் அமைந்துள்ளது. ‘மேலும் அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்பவருக்கு கஷ்டத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியை அல்லாஹ் அமைக்கின்றான். அவர் நினையாதவாறு அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்.’ (அத்தலாக்: 2-3)

இத்திருமறை வசனத்தை அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஓதிக்காட்டிய நபியவர்கள் ‘மனிதர்கள் அனைவரும் இந்த வசனத்தைக் கடைபிடித்து வாழ்ந்தாலே அவர்களுக்கு இது போதுமானதாகும்’ எனக் கூறினார்கள். அதாவது, தக்வா, தவக்குல் ஆகிய இவ்விரு பண்புகளை நிலைநாட்டினால் அதன் மூலம் அவர்கள் தங்களது மார்க்க மற்றும் உலகியல் நலன்களை ஈட்டிக் கொள்ள போதுமானதாக இருக்கும். எனவே, தவக்குலின் யதார்த்த நிலையை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்தலாம்:

‘நலன்களை ஈட்டிக் கொள்ளுதல் மற்றும் ஈருலக தீங்குகளை தடுத்துக் கொள்ளுதல் விடயத்தில் உள்ளத்தால் அல்லாஹ்வின் மீது சார்ந்து நின்று, விவகாரங்கள் அனைத்தையும் அவனிடம் முழுமையாக ஒப்படைத்து, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தருவதற்கு முடியாது; தந்த ஒன்றை யாரும் தடுக்க முடியாது; அவனைத் தவிர வேறு யாரும் நன்மை செய்யவும் முடியாது; தீங்கிழைக்கவும் முடியாது என்று ஆழமாக விசுவாசம் கொள்வதாகும்.’

மேற்படி வரைவிலக்கணத்தின்படி, ‘தவக்குல்’ என்பது முழுமையாக உள்ளம் சார்ந்த பண்பாக அமைகின்றது. உலக வாழ்வில் நாம் ஓர் உன்னத இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கும்போது எம்மிடம் கட்டாயம் இருந்திட வேண்டிய கட்டுச்சாதனமே தக்வாவும் தவக்குலுமாகும். நாம் திட்டமிடுவதற்கு முன்னரே எம்மைப் பற்றி அல்லாஹுத் தஆலா திட்டமிட்டு தீர்மானித்து விட்டான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ‘வானங்கள், பூமியை அல்லாஹ் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்புக்கள் பற்றிய திட்டத்தை வரைந்து விட்டான்.’

இவ்வகையில், இறைவனின் திட்டமிடலுக்குள் அவனைச் சார்ந்து நின்று கொண்டு இறுதிப் பெறுபேற்றை அவனிடம் எதிர்பார்ப்பதே தவக்குலாகும். தவக்குல் என்பது ஈமானுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை. ஸயீத் இப்னு ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகின்றார்: தவக்குல் என்பது ஈமானின் ஒட்டுமொத்த வடிவமாகும். ‘இறுதி இலட்சியம் தவக்குலாகும்’ என வஹப் இப்னு முனப்பஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார். ‘ஓர் அடியான் தனது இறைவன் மீது தவக்குல் வைத்தால் அல்லாஹ்தான் தனது நம்பகத்தன்மைக்குரியவன் என்பதை அறிந்திருத்தல் வேண்டும்’ எனக் கூறுகின்றார் இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்).

உள்ளத்தால் அல்லாஹ்வை முழுமையாக சார்ந்திருத்தல் என்பது பௌதிகவியல் காரணிகளைப் பிரயோகிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முரணாக அமையாது. மேற்படி காரணிகளை அல்லாஹ் படைப்புக்களுக்கிடையில் நியதியாக அமைத்து வைத்துள்ளான். அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைப்பதுடன் இவற்றைப் பயன்படுத்துமாறும் அவன் கட்டளையிட்டுள்ளான். எனவேதான், உறுப்புக்கள் மூலம் அக்காரணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பது அவனுக்குக் கட்டுப்படுகின்ற காரியங்களில் ஒன்றாகவும் அவன் மீது உள்ளத்தால் தவக்குல் வைப்பது ஈமானாகவும் அமைகின்றன.

‘இறைவிசுவாசிகளே! நீங்கள் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.’ (அந்நிஸா: 71)

‘நீங்கள் அவர்களை எதிர்ப்பதற்காக (தேவையான முழு அளவினாலான) பலத்தை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.’ (அல்அன்பால்: 60)

‘ஜுமுஆத் தொழுகை நிறைவடைந்தால் பூமியின் பல பிரதேசங்களுக்கும் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்.’ (அல்ஜுமுஆ: 10)

எனவே, அல்லாஹ்வின் மீது உள்ளத்தால் சார்ந்திருப்பதும் பௌதிகவியல் காரணிகளைப் பயன்படுத்தி உழைப்பதும் முயற்சிப்பதும் தவக்குலின் முழு வடிவமாகும். இவ்விரு நிலைகளுக்கும் இடையில் எப்போதும் சமநிலை பேணப்படல் வேண்டும். இச்சமநிலை சரிந்தால் அது தவக்குலாகாது. இத்தத்துவத்தை விளக்குவதற்கே இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பறவையை உவமானமாகக் கூறுகின்றார்கள். பறவைகள் தமக்குரிய தீனி தங்களது கூடுகளுக்கு வந்துசேரும் என்று சோம்பிக் கிடப்பதில்லை. அவை காலை வேளையில் முழு நம்பிக்கையுடன் வெறும் வயிற்றுடன் பறந்து செல்கின்றன. அதன் நம்பிக்கைகள் வீண் போகாத வகையில் அவை வயிறு நிரம்பிய நிலையில் திரும்பி வருகின்றன.

தவக்குலின் ஆழ அகலத்தை சற்று விரிவாக விளங்குவதற்கு முயற்சிப்போம். ஓர் அடியானின் செயற்பாட்டை மூன்று வகையாகக் குறிப்பிட முடியும்.

ஒன்று, அடியார்கள் நரக விடுதலை பெற்று, சுவனம் பிரவேசிப்பதற்கு காரணமாக அமையும் விதத்தில் அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்காக அவன் கட்டளையிட்ட காரியங்கள்.

அல்லாஹ்வின் மீது முழு தவக்குல் வைத்து இவற்றை செயற்படுத்துவது அவசியமாகும். இக்காரியங்களை செய்து முடிப்பதற்காக அவனிடம் உதவி தேட வேண்டும். அவனின்றி இவற்றை நிறைவேற்றுவதற்குரிய பலத்தையோ, வலிமையையோ தருவோர் வேறு யாருமில்லை. அவன் நாடினால் அக்காரியம் நடக்கும். அவன் நாடாவிட்டால் அது நடைபெற மாட்டாது. மேற்படி காரியங்களில் குறைவைத்தவர் ஈருலக தண்டனைக்கு அருகதையானவர். எனவேதான், இவ்வாறு ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

‘தனது நற்செயலைத் தவிர வேறெதுவும் தன்னைக் காப்பாற்றாது என செயற்படுகின்ற மனிதனைப் போல செயற்படு! தனக்காக எழுதப்பட்டதைத் தவிர வேறொரு துன்பமும் ஏற்படாது என தவக்குல் வைத்துச் செயற்படும் மனிதனைப் போல தவக்குல் வை.’ (யூஸுப் இப்னு அஸ்பாத்)

இரண்டு, அல்லாஹுத் தஆலா இவ்வுலகில் பழக்கவழக்கங்களாக அமைத்து வைத்துள்ளவை.

இவற்றை தனது அடியார்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்துள்ளான். உதாரணமாக, பசிக்கும்போது உண்ணுவதுளூ தாகத்தின்போது நீர் அருந்துவதுளூ உஷ்ணத்திலிருந்து விடுபட்டு நிழல் தேடுவதுளூ தட்ப வெப்ப நிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது… முதலான செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாள்வது கட்டாயமாகும். இவற்றைப் பயன்படுத்த சக்தி இருந்தும் இவற்றை விட்டு விட்டு தனக்கு தீங்கு ஏற்படுகின்ற அளவுக்கு இதில் குறைவைத்தவர் வரம்பு மீறியவராகவும் தண்டனைக்குரியவராகவும் கருதப்படுவர்.

எனினும், அல்லாஹ் சிலருக்கு புறநடையாக ஏனையவர்களுக்கு வழங்காத உடற்பலத்தை வழங்கியுள்ளான். அந்த விஷேட ஆற்றலைக் கொண்டு சிலர் செயற்பட்டால் அவர்கள் மீது குற்றமில்லை. எனவேதான், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடர் நோன்பு நோற்றார்கள். ஏனையோருக்கு அதனைத் தடை செய்தார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள்:

‘நான் உங்களது உடலைப் போன்றவனல்ல. எனக்கு (இறைவன் புறத்திலிருந்து) உணவளிக்கப்படுகின்றதுளூ நீர் புகட்டப்படுகின்றது.’ (அல்புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

ஆரம்ப கால அதிகமான அறிஞர்கள் உணவையும் குடிப்பையும் சில நாட்களுக்கு விட்டுவிடுகின்ற அளவுக்கு மற்றையவர்களுக்கு இல்லாத உடல் வலிமையைப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களுக்கு எந்தவொரு தீங்கும் ஏற்பட்டதில்லை. இப்னு ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். அபுல் ஜவ்ஸாஃ என்பவர் 7 நாட்கள் தொடராக நோற்பார். பின்னர் இளைஞர் ஒருவரின் கரத்தை இறுக்கமாகப் பிடிப்பார். அந்தக் கரம் முறியப் பார்க்கும். இப்றாஹீம் அத்தய்மி என்பவர் இனிப்புப் பானத்தைத் தவிர வேறு எதனையும் சாப்பிடாமல் இரண்டு மாதங்கள் இருப்பார். ஹஜ்ஜாஜ் இப்னு பராபிஸா என்பவர் 10 நாட்களுக்கு அதிகமாக எதையம் குடிக்கவும் மாட்டார்ளூ உண்ணவும் மாட்டார். வேறு சிலர் தட்ப வெட்ப நிலையை அலட்டிக் கொள்வதில்லை. உதாரணமாக, அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குளிர் காலத்தில் கோடை கால உடையை அணிவார். கோடை காலத்தில் குளிர்கால உடையை அணிவார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரை விட்டும் உஷ்ணத்தையும் குளிரையும் போக்கிவிடுமாறு அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். (அஹ்மத், இப்னுமாஜா, அத்தபராணி)

நாம் மேலே பதிவு செய்த சிலரது புறநடையான செயற்பாடுகளைப் பொறுத்தவரை யாருக்கெல்லாம் அவ்வாறு செய்வதற்கு வலிமை உண்டோ அவர்கள் அவ்வாறு செய்வது அடிப்படையான கடமைகளைச் செய்ய முடியாதவாறு பலவீனப்படாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் மீது குற்றமாகாது. யாரெல்லாம் தங்களைத் தாங்களே வலிந்து கஷ்டப்படுத்திக் கொண்டு அடிப்படையான கடமைகளைச் செய்ய முடியாதவாறு பலவீனப்படுகின்றார்களோ அவர்கள் புறநடையான செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆட்சேபனைக்குரியதாகும்.

மூன்று, இவ்வுலகில் அல்லாஹ் பெரும்பாலும் பழக்கவழக்கங்களாக நிர்ணயித்த செயற்பாடுகள்.

சிலவேளை அல்லாஹ் நாடிய சிலருக்கு அவை உலக நடைமுறைக்கு முரணாக அமையும். உதாரணமாக, அல்லாஹ்வின் படைப்புக்களில் அநேகர் மருத்துவம் செய்வதிலிருந்து தேவையற்றிருக்க மாட்டார்கள். ஆனால், சிலர் மருத்துவம் செய்யாது தங்களது பலமான தவக்குலின் மூலம் சுகம் பெறுவர். அவ்வாறே, சிலர் வாழ்வாதாரத்தைத் தேடும் முயற்சியைக் கைவிட்டு விடுவர். ஆனால் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கப் பெறும். அவர்களது உண்மையான தவக்குலும் சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையான நம்பிக்கையுமே இதற்குக் காரணம். வாழ்வாதாரத்திற்கான வழமையான வழிமுறைகள் இவர்களுக்கு தேவைப்படாது. இவர்கள் வாழ்வாதாரத்தை தேடும் முயற்சியைக் கைவிடுவதற்கு அனுமதியளிக்கப்படுகின்றனர்.

வேறு சிலர் மிகவும் குறைந்தளவு தவக்குலை நிறைவேற்றி உள்ளங்களால் சடரீதியான காரணிகளை சார்ந்து நிற்பர். அந்தக் காரணிகளைப் பிரயோகிப்பதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு தங்களைத் தாங்களே களைப்படையச் செய்திருப்பர். ஆனால், அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டு மட்டிடப்பட்ட வாழ்வாதாரமே அவர்களிடம் வந்து சேரும். ஆனால், தங்களது உள்ளங்களால் முழுமையாகவே அல்லாஹ்வை சார்ந்து நின்று மிகவும் குறைந்தளவு சடரீதியான காரணிகளைப் பயன்படுத்துவோருக்கு அல்லாஹ் அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை அவர்களிடமே கொண்டு வந்து சேர்ப்பான். அவ்வாறே பறவைகள் காலையிலும் மாலையிலும் சிறகடித்துப் பறக்கின்ற ஒரு சிறு முயற்சியை மட்டுமே செய்கின்றன. ஆனால், அல்லாஹ் அவற்றுக்குரிய வாழ்வாதாரங்களை அவைகளிடம் கொண்டு வந்து சேர்க்கின்றான்.

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ஓர் அடியானுக்கும் அவனது வாழ்வாதாரத்திற்கும் இடையே ஒரு திரை உண்டு. அவ்வடியான் அதனை திருப்தியாக ஏற்றுக் கொண்டால் அவனிடம் வாழ்வாதாரம் வந்து சேரும். அவன் அத்திரையை கிழித்தெறிய முற்பட்டால் வாழ்வாதாரத்திற்கு மேல் வாழ்வாதாரம் அதிகமாக வந்து சேராது.’ ‘உண்மையாகவே நீ தவக்குல் வைத்தால் எதுவித சிரமமும் களைப்பும் இன்றி உன்னை நோக்கி வாழ்வாதாரம் வந்து சேரும்’ என சில ஆரம்ப கால அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸாலிம் இப்னு அபில் ஜஃத் என்பவர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது கூற்று ஒன்றை குறிப்பிடுகின்றார்: ‘நீங்கள் அல்லாஹ்வுக்காக வேலை செய்யுங்கள். உங்கள் வயிற்றுக்காக வேலை செய்யாதீர்கள். உலகின் எச்சில் பருக்கைகள் குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில், உலகின் எச்சில் பருக்கைகள் அல்லாஹ்வின் பார்வையில் அசுத்தமானவை. இந்தப் பறவைகள் தங்களுடன் சிறிதளவு வாழ்வாதாரம்கூட இல்லாமல் காலையிலும் மாலையிலும் பறக்கின்றன. அவை நிலத்தை உழுவதில்லைளூ அறுவடை செய்வதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு ரிஸ்கை வழங்குகின்றான். ‘எங்களது வயிறுகள் பறவைகளின் வயிறுகளை விட பெரியவை’ என்று நீங்கள் கூறினால் நான் சொல்வேன், மாடுகள், கழுதைகள் போன்ற மிருகங்கள் காலையிலும் மாலையிலும் சிறிதளவேனும் வாழ்வாதாரம் இன்றியே பயணிக்கின்றன. அவை உழுவதில்லைளூ அவை அறுவடை செய்வதில்லை. ஆனால் அவற்றுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்.’ (இப்னு அபித் துன்யா)

பௌதிகவியல் காரணங்களையும் ஏனைய வசதி வாய்ப்புக்களையும் பிரயோகிக்க முடியாத நிலையில் அல்லது குறைந்தளவு பிரயோகிக்க முடியுமான சந்தர்ப்பங்களில் கனதியான தவக்குல் வைத்தவருக்கு அல்லாஹ்வின் அருள் வாயில்கள் அகலத் திறக்கின்றன. இதற்கான நல்லதொரு சான்றாதாரமே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது தியாக வரலாறு. அவர்கள் தனது மனைவி ஹாஜரையும் அருமை மகன் பாலகன் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் பாலைவனப் பெருநிலப் பரப்பில் விட்டு விட்டு செல்லும்போது ஓரளவு ஈச்சம் பழமும் சிறிதளவு தண்ணீருமே இருந்தன. ஆனால், அவர்களது உள்ளம் முழுமையாக அல்லாஹ்வைச் சார்ந்திருந்தது. எனவே, அதனது நல் விளைவு ‘ஸம்ஸம்’ ஊற்று. அது ஒரு பேரற்புதம்!

நாம் வாழ்கின்ற பௌதிக உலகில் அநேகர் பௌதிகவியல் காரணிகளுக்கும் சாதனங்களுக்கும் வழிமுறைகளுக்கும் திட்டமிடல்களுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்து இறைவன் மீதுள்ள நம்பிக்கையை வெகுவாகக் குறைத்துக் கொள்கின்றனர். இதன் பின்னர் இலக்கை அடைய முடியாமல் தோல்வியைச் சந்திக்கும்போது அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். மனச் சோர்வடைந்து மன நோயாளியாகி விடுகின்றனர். ஈற்றில் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இது ஒரு வகை தீவிரவாத போக்காகும்.

இன்னும் சிலர் இறைநியதி பற்றிய தெளிவின்மையால் பௌதிகவியல் காரணிகளை அனுசரிக்காமல், இலக்கை அடைவதற்கான சாதனங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்தாமல், கனகச்சிதமான திட்டமிடல் எதுவும் இன்றியே அல்லாஹ்விடம் மன்றாடுகின்றனர். இதன்போதும் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதில்லை. இறை வழிபாட்டில் உயர் தரத்தை எட்டிப் பிடித்து விட்ட தம்பதியினருக்கு மத்தியிலும் சடுதியாக மனமுறிவு ஏற்பட்டு விடுகிறது ஏன்? குடும்பவியலில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய சிந்தனைகள், வழிமுறைகள் மற்றும் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வு என்ற அடைவு மட்டத்தை எட்டிப் பிடிப்பதற்கான சாதனங்கள் இவர்களால் பயன்படுத்தப்படவில்லை. எனவே, குடும்ப வாழ்வு தோல்வியில் முடிவடைகின்றது.

இவ்வாறே எமது சமூக, பொருளாதார, அரசியல், கல்வி நடவடிக்கைகளிலும் நாம் எதிர்பார்த்த பெறுபேறு கிட்டுவதில்லை. ஏனெனில், தவக்குலின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமலேயே நாம் பயணிக்கின்றோம். இறைவனின் மீது ஆழமான தவக்குல் வைத்த மனிதர்களும் திட்டமிடல் அதிகாரிகளும் இரு துருவ நிலையில் பயணிக்கின்றபோது ஒரு புள்ளியில் இவர்கள் சந்திப்பது குதிரைக் கொம்பாகவே அமையும்.

இவ்விரு சாராருக்கும் பெருத்தமான சிந்தனை ஒன்றை இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அவர்கள் உழைத்தாலும் முயற்சித்தாலும் எல்லா நிலைமைகளிலும் மிகவும் சிறந்தது எனக் குறிப்பிடுகின்றார்கள். மேலும் அவர்களிடம் ‘உழைக்காமல் வீட்டில் இருந்து கொண்டு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்துள்ளேன்’ என கூறுபவர் பற்றி வினவப்பட்டது. அத்றகவர்கள் ‘எல்லா மனிதர்களும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது அவசியமாகும். எனினும், உழைக்கும் பழக்கத்தை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’ என விளக்கமளித்தார்கள்.

நாம் வாழுகின்ற சமகாலத்தில் எமது சமூகச் சூழலில் தவக்குலின் முதல் பகுதியான உள்ளத்தால் அல்லாஹ்வை சார்ந்து நிற்றல் நலிவுற்றுள்ளது. உலக வஸ்துக்களின் மீதுள்ள அதீத நம்பிக்கை அதிகரித்துள்ளது. வீட்டில் திடீரென நோயுற்றால்கூட நா உதிரும் வார்த்தைகள்தான் என்ன? வைத்தியவர்களது பெயர்களும் அவர்கள் பணி புரியும் மருத்துவமனைகளின் பெயர்களும் தொலைபேசி இலக்கங்களும்தான் அவ்வீட்டில் அதிகம் உச்சரிக்கப்படுகின்றன. ‘ஹஸ்பியல்லாஹு வநிஃமல் வகீல்’ (அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்ளூ அவனே சிறந்த பாதுகாவலன்) என்ற தவக்குலைப் பறைசாற்றும் வார்த்தைகள் அரிதாகி விட்டன.

அன்றாட வாழ்வில் மருந்து மாத்திரைகள் உணவைப் போல உட்கொள்ளப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்துகின்ற நோயாளிகள் ஒருவேளை மருந்து மாத்திரைகளை தவறவிட்டு விட்டால் பதகளிப்புக்குள்ளாகின்றனர். எங்கே எமது தவக்குல்? மருந்து மாத்திரைகள் எமது உடலுக்குள் சென்று செரிமானம் அடைந்து நோயாளிகள் சுகம் காண இறைவன் நாட வேண்டும் என்ற நம்பிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா பரம்பலும் எமது இறைவிசுவாசத்திலும் தவக்குலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேற்படி பயங்கரத் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நாம் முதன்மையாக உள்ளத்தால் அல்லாஹ்வை சார்ந்திருத்தல் வேண்டும். அதன் பின்னரே சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். ஆனாலும், இந்த வழிமுறை தலைகீழாக மாற்றம் கண்டுள்ளது. தவக்குலின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அல்லாஹ்வை உள்ளத்தால் சார்ந்திருத்தல், சாதனங்கள் மற்றும் வழிமுறைகள் தோல்வி காணுகின்ற இறுதித் தறுவாயில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது தவறான சிந்தனைப் போக்காகும்.

எனவே, தவக்குலின் ஆழ, அகலத்தை சரியாகப் புரிந்து செயற்பட்டு எமது வாழ்வை மகிழ்ச்சிகரமான வாழ்வாக மாற்றியமைப்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *