தூய்மையானவை தவிர வேறெதுவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை!

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்| அவன் தூய்மையானவற்றைத் தவிர வேறெதனையும் அங்கீகரிப்பதில்லை. மேலும் அல்லாஹுத் தஆலா இறைதூதர்களுக்கு கட்டளையிட்டதையே இறை விசுவாசிகளுக்கும் கட்டளையிட்டான். அல்லாஹுத் தஆலா கூறினான்: ‘இறைதூதர்களே! (ஹலாலாக்கப்பட்டற்றில்) தூய்மையானதை உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள்.’ (ஸூரா முஃமினூன்: 51), ‘இறை விசுவாசிகளே! நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரமாக வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள்.’ (ஸூரதுல் பகரா: 172). பின்னர் நபியவர்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். ‘அவன் தலைவிரி கோலத்துடன், புழுதி படிந்த நிலையில் தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி, ‘யா ரப்! யா ரப்!’ என பிரார்த்தனை செய்து மன்றாடுகின்றான். அவனது உணவு ஹராம். அவனது குடிபானம் ஹராம். அவனது ஆடை ஹராம். அவனது உடல் ஹராத்தின் மூலம் போஷிக்கப்பட்டுள்ளது. அவனது வேண்டுதல்கள் எங்கனம் அங்கீகரிக்கப்படும்?’ என நபியவர்கள் வினவினார்கள். (ஸஹீஹு முஸ்லிம்)

அல்லாஹ் மனிதர்களிடமிருந்து தூய்மையானதையே ஏற்றுக் கொள்கின்றான் என்ற இஸ்லாத்தின் மூலதத்துவம் ஒன்றை நபியவர்கள் இந்த ஹதீஸில் விளக்குகின்றார்கள். ஏனெனில், அல்லாஹ் தூய்மையானவன்; இந்தப் பண்பு தனது அடியார்களிடம் பிரத்தியட்சமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பது இறைவனின் எதிர்பார்ப்பாகும். இங்கு தூய்மை என்பது மனித செயற்பாடுகளுடன் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. மனிதனது எண்ணங்கள், சிந்தனைகள், வார்த்தைப் பிரயோகங்கள், செயற்பாடுகள் அனைத்தும் தூய்மையாக அமைய வேண்டும்.

எமது உள்ளம் சார்ந்த, உடல் சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் சுழலும் புவிப் பந்தை விட்டும் அகன்று இறைவனிடம் சென்றடைகின்றன. ‘அவனை நோக்கி தூய நல் வார்த்தைகளும் தூய நற்செயல்களும் மேலுயர்ந்து செல்கின்றன.’ (ஸூரா பாதிர்: 10) பின்னர் அவை இறைவனால் தர நிர்ணயம் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பத்திரப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இறுதித் தீர்ப்பு நாளில் பெறுபேறுகள் வலது கரத்தில் அல்லது இடது கரத்தில் வழங்கப்படும்.

வகை தொகையின்றி நற்செயல் புரிய வேண்டும் என்ற சிந்தனைப் பாங்கை விட இறைவனால் அங்கீகரிக்கப்படத்தக்க வகையில் நற்செயல்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வகையில் ஓர் இறை விசுவாசி தனது உள்ளத்தையும் நாவையும் உடலையும் தூய்மையாகப் பேணி வருவான்.

தூய்மையானதும் அசுத்தமானதும் நிகராக மாட்டாது என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. ‘(நபியே!) கூறுவீராக! தூய்மையானதும் அசுத்தமானதும் சமமாக மட்டா. அசுத்தமானவை அதிகமாக இருப்பது உம்மை ஈர்த்தபோதும் சரியே…’ (ஸூரதுல் மாயிதா: 150)

தூய்மையானவை பொதுவான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். அவை உணவுப் பொருட்களுடன் மட்டும் வரையறை செய்யப்படலாகாது. ஆனாலும் நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ் குறிப்பாக ‘தய்யிபா’ என்ற பதத்தை உணவுடன் தொடர்புபடுத்தியே பேசுகிறது. அதாவது, மேற்படி ஹதீஸில் இறைதூதர்களும் இறைவிசுவாசிகளும் ஹலாலாக்கப்பட்ட தூய்மையான உணவை உட்கொள்ளுமாறு இறைவனால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எக்காலப் பிரிவில் வாழ்கின்ற முஸ்லிம்களாக இருப்பினும் அவர்கள் ஹலாலான உணவை உட்கொள்கின்ற விவகாரத்தில் கவனமாக செயற்படுவர். ஏனெனில், அது மறு உலக வாழ்வை தீர்மானிக்கின்ற விவகாரமாகும்.

ஹலால் உணவுக் கலாசாரம் சாமான்யமானதல்ல. எப்பொழுதெல்லாம் உணவு ஹலாலானதாக அமைந்ததோ அப்போதெல்லாம் நற்செயல் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட நற்செயலாகக் கருதப்படும். எப்பொழுதெல்லாம் உணவு ஹராமானதாக அமைந்ததோ அப்போதெல்லாம் அவை அங்கீகரிக்கப்படாத நற்செயலாக அமையும்.

அவ்வாறே, இறைவனுக்கும் அவனது அடியானுக்குமிடையேயான உறவுக் கயிறாகிய ‘துஆ’ அங்கீகரிக்கப்படுவதற்கு ஹலாலான உணவு உட்கொள்ளப்படுதல் முக்கியமான நிபந்தனையாகும். இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இறைதூதரிடத்தில் பின்வரும் இறை வசனம் ஓதிக் காண்பிக்கப்பட்டது: ‘மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலான, தூய்மையான உணவை உட்கொள்ளுங்கள்.’ (அல்பகரா: 169) அப்போது ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து நின்று ‘அல்லாஹ்வின் தூதரே! பிரார்த்தனைகள் உடனடியாக அங்கீகரிக்கப்படுகின்றவர்களில் ஒருவனாக என்னையும் அல்லாஹ் ஆக்கிவிட வேண்டும் என்று பிரார்த்தனை புரியுங்கள்’ என்றார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஸஃதே! உனது உணவை தூய்மையானதாக ஆக்கிக் கொள்வீராக! துஆ உடனடியாக அங்கீகரிக்கப்படுகின்றவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.’ ‘முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஓர் அடியான் ஹராமான உணவுக் கவளம் ஒன்றை வயிற்றுக்குள் போட்டால் அவனிடமிருந்து நாற்பது நாள் நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எந்தவோர் அடியானின் உடல் ஹராத்தின் மூலம் வளர்ந்ததோ அது நரகப் பெருநெருப்புக்கே தகுதியானது’ என விளக்கமிளத்தார்கள். (தபராணி)

முஸ்லிம்கள் ஹலால் உணவு பற்றி வெகுவாக அலட்டிக் கொள்வதற்கான அடிப்படைக் காரணமே பிரார்த்தனை உள்ளிட்ட சகல நற்செயல்களும் இறைவனிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதேயாகும். ஒரு நற்செயல் முழுமை பெறுவதற்கு கீழ்வரும் ஐந்து பண்புகள் அவசியம் என்ற கருத்தை அபூ அப்தில்லாஹ் அந்நபாஜி அஸ்ஸாஹித் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:

1.         அல்லாஹ்வை அறிந்து ஈமான் கொள்ளுதல்

2.         சத்தியத்தை அறிந்து கொள்ளுதல்

3.         நற்செயலை அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையோடு செய்தல்

4.         சுன்னாவின் அடிப்படையில் நற்செயல் புரிதல்

5.         ஹலாலான உணவை உட்கொள்ளல்

எனவே, நற்செயல் பரிபூரணம் பெறுவதற்கு ஹலாலை உண்ணுதல் இன்றியமையாத ஒன்றாகும்.

தான தர்மங்கள் ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் செய்யப்படுகின்றபோது மட்டுமே அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்படுகிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ‘சிறந்த ஹலாலான சம்பாத்தியத்தின் மூலம் ஒருவர் சதகா செய்தால் அதனை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொள்கிறான். தூய்மையானவற்றை தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை.’ (அல்புகாரி, முஸ்லிம்)

தனது சம்பாத்தியம் இறைவன் அனுமதித்த ஹலாலான வழியில் அமைந்ததா? இல்லையா? என விசாரணை செய்து கொள்ளாமலேயே தான தர்மம் செய்பவர் இவ்வுலகில் சமூக மாற்றத்தின் பிரதான பங்காளியாக இருப்பர். மறு உலகில் பேரிழப்பை சந்திப்பார். ஹராமான சம்பாத்தியத்தின் மூலம் தர்மம் செய்பவர் பற்றி அபூதர்தா (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் யாஸித் பின் மய்ஸரா (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியஇரு நபித் தோழர்கள் இவ்வாறு கருதுரைக்கின்றனர்:

‘ஹராமான வழியில் உழைத்து தர்மம் செய்பவர் அனாதையின் செல்வத்தை அபகரித்து விதவைக்கு ஆடை அணிவித்தவரைப் போன்றவராவார்.’ (நூல்: அஸ்ஸுஹ்த்- இமாம் அஹ்மத்)

தற்கால சமூகச் சூழலில் வசதி படைத்த சிலர் திரைமறைவில் தங்களால் நடைபெறும் பாவங்கள், குற்றங்கள், தில்லுமுல்லுகள், தகிடுதத்தங்களை மூடி மறைப்பதற்கு தான தர்மங்களை ஒரு கேடயமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபடுவோர் தங்களை கொடை வள்ளல்களாகவும் சமூக ஆர்வலர்களாகவும் வெளியுலகுக்கு காட்டிக் கொள்கின்றனர். தனிப்பட்ட வணக்க வழிபாடுகளிலும் ஈடுபாடு உடையவர்களாக உள்ளனர்.

ஒருவர் ஹராமான வழியில் சம்பாதிக்கிறார்; அநியாயம் செய்கின்றார். பின்னர் தௌபா செய்துவிட்டு ஹஜ் செய்கின்றார்; அடிமைகளை விடுதலை செய்கின்றார். இத்தகையவர் குறித்து இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வினவப்படடபோது அவர்கள் ‘கெட்டது கெட்டதை அழிக்காது’ என பதில் அளித்தார்கள். ஆனாலும் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘தூய்மையானவை கெட்டதை அழிக்கும்’ எனக் கூறினார்கள். அதாவது ஒருவர் ஹலாலாக உழைத்து தர்மம் செய்தால் அது அவரது பாவங்களை அழித்துவிடும்.

பொதுவாக தர்மத்தின் மூலம் சமூக மேம்பாடு இலக்காகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும், தர்மம் செய்பவரது உழைப்பு குறித்து யாரும் பெரிதுபடுத்துவதில்லை. அவரது மறு உலக வாழ்வு தொடர்பில் எந்தவொரு காரிசனையும் இன்றி பயனாளிகள் இருப்பார்கள். அவர் தொடர்ந்தும் ஹராத்தின் அடிப்படையில் தனது உழைப்பை அமைத்துக் கொண்டு வாழ்ந்துகொண்டு இருப்பார்.

இவ்வகையில் தான் தர்மத்தை இரு வகையாக வகுத்து நோக்கலாம்:

1.         மோசடிக்காரன் மற்றும் அபகரிப்பவன் தனக்காக செய்யும் தான தர்மம். இது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இது நற்செயல் அல்ல. இது ஒரு பாவம்.

பஸராவின் ஆளுநராக இருந்த அப்துல்லாஹ் இபுனு ஆமிர் என்ற மோசமான மனிதர் அடிமைகளை விடுதலை செய்வது குறித்து அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் ‘உம்மைப் போன்றவர்கள் ஒரு ஹாஜியின் ஒட்டகத்தைத் திருடி அதன் மூலம் அறப் போராட்டத்தில் ஈடுபடுவவோரைப் போன்றவர்கள். இந்த நற்செயல் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படுமா? ஏன சிந்தித்துப் பார்ப்பீராக!’ ஏன பதலளித்தார்கள்.

2.         தன்னால் அபகரிக்கப்பட்ட சொத்து செல்வத்தை அதற்கே உரியவரிடம் அல்லது அவரது வாரிசுகளிடம் ஒப்படைப்பது சாத்தியமாகவில்லையெனில்; அவர் அதனை சதகா செய்ய முடியும். ஆனால் அல்புழைல் இப்னு இயாழ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அந்த செல்வத்தை கடலில் எறிந்துவிட வேண்டும்’ எனக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், இக்கருத்து பொருத்தமானதல்ல. செல்வம் வீண் விரயம் செய்யப்படுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மேலே நாம் பதிவிட்ட அறிஞர் பெருமக்களினது கருத்துக்கள் தூய்மையான சம்பாத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. கெட்ட சம்பாத்தியத்தின் மூலம் சமூகப் பணி செய்வது, சமூக சேவைகளை முன்னெடுப்பது நிராகரிப்பாளர்களின் அறச் செயல்களுக்கு ஒப்பானதாகும். மறுமை நாளில் நிராகரிப்பாளர்களின் நல்லறங்களுக்கு எந்தப் பெறுமானமும் இருக்காது. ‘அவர்கள் செய்த நற்செயல்களின்பால் நாம் முன்னோக்கி வந்து அவற்றை தூசு துகள்களாக ஆக்கிவிடுவோம்’ (ஸூரதுல் ஃபுர்கான்: 23)

ஆகவே, எமது உணவும் எமது சதகாவும் ஹலாலாக அமையும்போது மட்டுமே அவை அங்கீகரிக்கப்படும்.

ஹதீஸின் இறுதிப் பகுதி துஆ அங்கீகரிக்கப்படாமல் தடுக்கப்படுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகிறது. அத்தோடு, துஆ செய்யும்போது பேண வேண்டிய ஒழுங்குகளையும் முன்வைக்கின்றது.

அளவு கடந்து ஹராத்தை உண்பதும் பருகுவதும் ஹராத்தின் அடிப்படையிலமைந்த ஆடைகளை அணிவதும் துஆ நிராகரிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே, நபித் தோழர்கள் இவ்விடயத்தில் மிகவும் பேணுதலாக வாழ்ந்துள்ளார்கள். ‘உமது பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றதே! அது எவ்வாறு?’ என ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘எனது வாயருகே உணவுக் கவளத்தை உயர்த்தும் போதெல்லாம் அது எவ்வாறு? எங்கிருந்து வந்தது? என்பதை நான் அறிந்து வைத்திருப்பேன் (அதுவே எனது துஆ உடனடியாக அங்கீகரிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.)’ என பதிலளித்தார்கள். அதாவது உணவு ஹலாலனாத? ஹராமானதா? என நான் அறிந்த பின்னரே சாப்பிடுவேன் என விளக்கமளித்தார்கள்.

வஹ்ப் இப்னு முனப்பஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்: ‘தனது பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமென்று விரும்புகின்றவர் தனது உணவை தூய்மையானதாக ஆக்கிக் கொள்ளட்டும்.’ ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள்: ‘நாற்பது நாட்கள் ஹலாலான உணவை உட்கொண்டவரின் துஆ அங்கீகரிக்கப்படும்.’ யூஸுப் இப்னு அஸ்பாத் (ரஹ்) பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்: ‘மோசமான உணவின் காரணமாக வானுலகை விட்டும் ஓர் அடியானின் துஆ தடுக்கப்படுகிறது என்ற செய்தி எமக்கு கிடைத்துள்ளது.’

மேலே பதிவு செய்யப்பட்ட முன்னோர்களின் கருத்துக்களும் நடைமுறை வாழ்வும் எம்மை நின்று, நிதானித்து ஹலால் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது. நீண்ட பயணம் மேற்கொள்கின்ற ஒரு மனிதனின் பரிதாபகரமான நிலையைக் கருத்திற் கொண்டு வல்ல ரஹ்மான் துஆக்களை உடனடியாக அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், அந்த துஆ தடைப்பட்டதற்கான பிரதான காரணம், அந்த மனிதனின் உணவும் குடிப்பும் உடுப்பும் ஹராமாக அமைந்ததேயாகும்.

ஆகவே, எமது வாழ்வு குறித்து நாம் சுவிசாரணை செய்து கொள்வது காலத்தின் கட்டயாமாகும். ஏனெனில், எமது வாழ்வாதாரம் எமது கரங்களுக்குக் கிட்டும் வழிமுறைகள் குறித்து தெளிவற்ற நிலை உள்ளது. அதாவது தடைசெய்யப்பட்ட தொழில் முயற்சிகள் மூலமாக கிடைக்கப் பெறுகின்ற வருமானம் மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்ட தொழில் முயற்சிகளை, விழுமியங்களை புறந்தள்ளி முன்னெடுத்து அதன் வாயிலாக ஈட்டுகின்ற வருமானமும் ஹராமானதே! தனது கடமைகளைச் செய்யத் தவறும் ஓர் அரச உத்தியோகத்தர் மாதாந்த வேதனத்தில் மட்டும் கவனக் குவிப்புடன் பணியாற்றி பெறுகின்ற வருமானத்தை இதற்கு உதாரணமாக கூற முடியும். ‘வட்டிக்கு எழுபது வாயில்கள் உண்டு’ எனக் கூறிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வட்டியை வியாபாரத்திலிருந்து வேறு பிரித்து, அறிய முடியாத வகையில் சிக்கல் நிறைந்ததாக எதிர்காலத்தில் அமையப் போகிறது என எச்சரித்தார்கள். இன்று அந்த நிலையை வர்த்தக சமூகமும் பொது மக்களும் எதிர்கொள்கின்றன. அப்படியென்றால் எமது நிலைதான் என்ன?

மேற்குறிப்பிடப்பட்ட அபாயகரமான சூழலிலிருந்து ஒரு முஸ்லிம் தன்னைப் பதுகாத்துக் கொண்டு வாழ்வது உள்ளங்கையில் தணலை வைத்துக் கொண்டு வாழ்வது போலாகும். ஆனாலும், இது ஓர் உளப் போராட்டமாகும். இதில் வெற்றி பெறுபவரின் நற்செயல்களே இறைவனிடம் அங்கீகரிக்கப்படும்.

இறுதியாக இந்த ஹதீஸில் பிரார்த்தனையின் ஒழுங்கு விதிகள் முன்வைக்கப்படுகின்றன:

1.         நீண்ட தூரப் பயணம் துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான பொருத்தமான சந்தர்ப்பமாகும். நபி வர்கள் கூறினார்கள்: ‘மூன்று வகையான துஆக்கள் சந்தேகமின்றி அங்கீகரிக்கப்படும். அநியாயம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை, பிரயாணியின் பிரார்த்தனை, பிள்ளைக்காக பெற்றோர் கேட்கின்ற பிரார்த்தனை.’ (அபூதாவூத், இப்னுமாஜா, அத்திர்மிதி)

2.         எளிமையான கோலத்தில் ஒருவர் பிரார்த்தனை புரிதல். தனது தோற்றத்தில் மற்றும் தனது ஆடையில் எளிமை பேணி பிரார்த்திக்கும்போது அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு காரணமாக அமைகிறது. நபியவர்கள் மழை தேடி தொழும்போது உள்ளச்சத்தோடும் பணிவோடும் கீழ்ப்படிவோடும் பிரார்த்திப்பார்கள். அடுத்த கணம் மழை பொழியும்.

3.         இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்திப் பிரார்த்தித்தல். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹுத் தஆலா வெட்க சுபாவம் உள்ளவன். அவன் பரோபகாரி. ஒருவர் தனது இரு கரங்களையும் அவனை நோக்கி உயர்த்திப் பிரார்த்திக்கும்போது அக்கரங்களை வெறும் கரங்களாக திருப்பி அனுப்புவதற்கு அவன் வெட்கப்படுகின்றான்.’ (அஹ்மத், அபூதாவூத், அத்திர்மிதி, இப்னு மாஜா). நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மழை தேடிப் பிரார்த்திக்கும்போது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்துவர்களாக இருந்தார்கள்.

4.         ‘ரப்’ என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப உச்சரித்து துஆ கேட்டல். ஓர் அடியான் ‘யா ரப்’ என்று நான்கு முறை சொன்னால் ‘என்னுடைய அடியானே! உனது அழைப்புக்கு விடையளிக்க தயாராகி விட்டேன். நீ கேட்டால் கொடுக்கப்படும்’ என அல்லாஹுத் தஆலா கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  (அல்பஸ்ஸார்)

எனவே, வாழ்வின் சகல விவகாரங்களிலும் தூய்மை பேணி, ஹலாலான அடிப்படையில் வருமான மூலங்களை உருவாக்கி, இறைவனிடம் பிரார்த்தித்து அவனோடுள்ள உறவை வலுப்படுத்தி வாழுவோமாக! அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *