நற்பண்பாடுகளை இலக்காகக் கொண்ட இறையச்சம்

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள். ஒரு தீமையைத் தொடர்ந்து ஒரு நன்மையைச் செய்! அந்த நன்மை அந்தத் தீமையை அழித்துவிடும். மேலும், மனிதர்களுடன் நற்பண்பாடு பேணி வாழ்வாயாக!” (அத்திர்மிதி)

இறையச்சம் மனித வாழ்வின் அத்திவாரம். அது அசைகின்றபோது தூய வாழ்வு மாசுபட்டு தீமைகள் பரவலாகும். அதனது பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே சாதனம் நற்செயல்களாகும். நற்பண்பாடு இறையச்சத்தின் அடைவு மட்டமாகும் என்ற சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சிறியதொரு ஹதீஸை விளக்கத்திற்கு எடுத்துள்ளோம்.

ஹதீஸின் ஆரம்பப் பகுதி ஒரு நபித் தோழருக்கான உபதேசமாக அமைகிறது. நீ அல்லாஹ்வைப் பயந்து கொள்” என்ற நபிகளாரின் கட்டளை அல்லாஹ் குறித்த வெறும் மனப் பயத்தைக் குறிக்கவில்லை. ஹதீஸின் மூலத்தில் ‘இத்தகி’ என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இச்சொல்லானது ‘தக்வா’ என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. தக்வா என்ற பதத்தின் அகல் விரிவான கருத்து மிகச் சரியாக எம்மால் உள்ளீர்க்கப்படாமலேயே அது பேசுபொருளாக்கப்பட்டுள்ளது.

‘தக்வா’ என்பது அரபு மொழி வழக்கில் ஓர் அடியானுக்கும் அவன் பயப்படுகின்ற அல்லது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்றுக்கும் இடையே அவன் ஏற்படுத்திக் கொள்கின்ற முற்காப்பு நடவடிக்கையைக் குறிக்கின்றது. அதாவது, இஸ்லாமிய பரிபாஷையில் ஓர் அடியான் தனக்கும் தனது இரட்சகனின் கோபம், அவனது வெறுப்பு, அவனது தண்டனை ஆகியவற்றுக்குமிடையே முன்னெடுக்கின்ற முற்காப்பு நடவடிக்கையைத் தக்வா என்ற பதம் குறிக்கின்றது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஓர் அடியான் தனது ரப்புக்கு கட்டுப்பட்டு செயற்படுவதும் அவனுக்கு மாறு செய்வதை விட்டும் தூரவிலகி வாழ்வதுமாகும்.

மேற்படி கருத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அறிஞர்களது கருத்துக்கள் அமைகின்றன.

ஹராமாக்கப்பட்டவற்றை தவிர்ந்து கடமையாக்கப்பட்டவற்றை நிறைவேற்றுவோர் ‘முத்தகூன்கள்’ ஆவர்.” (இமாம் ஹஸனுல் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ்)

தக்வா என்பது அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்து அவனது ஒளிப் பிரகாரத்துடன் அவனுக்குக் கட்டுப்பட்டு செயற்படுவதும் அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து அவனது ஒளிப் பிரகாசத்துடன் அவனுக்கு மாறு செய்வதை விட்டு விடுவதுமாகும்.”   (தல்கு இப்னு ஹபீப்)

தக்வா என்பது பகற் பொழுதுகளில் நோன்பு நோற்பதும், இராக் காலங்களில் நின்று வணங்குவதும், இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து செய்து அமல்களைக் குழப்பிக் கொள்வதும் அல்ல. மாறாக, தக்வா என்பது அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டு விடுவதும் அல்லாஹ் பர்ளாக்கியதை நிறைவேற்றுவதுமாகும். இதன் பின்னர் ஒருவருக்கு ஒரு நன்மை வழங்கப்பட்டால் அது நன்மைக்கு மேல் நன்மை வழங்கப்பட்ட நிலையாகும். (உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹிமஹுல்லாஹ்) ஒரு சமயம் உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், தக்வா என்றால் என்ன?” என்று உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வினவினார்கள். அதற்கு உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், இரு மருங்கிலும் முட்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் சென்றுள்ளீரா?” எனக் கேட்டார்கள். அதற்கு, ஆம்!” என உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதிலளித்தார்கள். அப்படியானால் எவ்வாறு அப்பாதையில் சென்றீர்? என மீண்டும் உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வினவினார்கள். நான் எனது ஆடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முட்களில் படாமல் சென்றேன்” என உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதுதான் தக்வா” என விளக்கமளித்தார்கள்.

நாம் மேலே பதிவு செய்த அறிஞர் பெருமக்களின் கூற்றுக்கள் தக்வாவின் யதார்த்த நிலையை எமக்கு தெளிவுபடுத்துகின்றன. அதாவது, உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவின் போதோ அல்லது ஒருவரின் மரணத்தின் போதோ மின்னலைப் போலத் தோன்றி மறைகின்ற அச்ச நிலையல்ல தக்வா. மாறாக, இறைவனது கூர்மைப்படுத்தப்பட்ட அவதானத்தின் கீழ் விரிந்து வியாபித்துக் கிடக்கின்ற, அவனது பாதுகாப்பு வலயத்திற்குள் அவன் இட்ட ஹராம் எனும் வேலியை நெருங்காமல் விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையே தக்வா.

தக்வா என்ற பதத்தை அல்லது அதிலிருந்து பிரிந்து வரும் பதங்களை ‘அல்லாஹ்’ என்ற மகோன்னதச் சொல்லுடன் இணைத்து அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவனளவில் ஒன்றுசேர்க்கப்படுவீர்கள்.” (அல்மாயிதா: 96)

மறுமை நாளுடன் சேர்த்து தக்வா என்ற பதம் அல்குர்ஆனில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நாளைக்குப் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் நீங்கள் அல்லாஹ்விடம் மீளக் கொண்டு செல்லப்படுவீர்கள்.” (ஸூரதுல் பகரா: 281)

எனவே, இறைவன் தன்னைக் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உள்ளுணர்வுடன் வாழும் மனிதர்கள் குடும்பங்களில் இருக்கின்றபோது, அந்தக் குடும்ப அங்கத்தவர்களை இயக்குவிக்கும் நெம்புகோலாக தக்வா தொழிற்படும். இதன்போது அந்தக் குடும்ப அங்கத்தவர்கள் தத்தமது கடமைகளையும் உரிமைகளையும் மிகவும் கச்சிதமாக நடைமுறை வாழ்வில் அமுலுக்குக் கொண்டு வருவதை எங்கிருந்தாலும், எந்நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள்” என்ற அருமைத் தூதரின் அழகிய உபதேசம் கடைத்தெரு வியாபாரியின் உள்ளத்தைத் தைக்கும். அவரது வர்த்தக வாணிப நடவடிக்கைகளில் அளவை-நிறுவையில், மோசடி, கலப்படம், பதுக்கல், சுரண்டல் போன்ற ஒவ்வாத செயற்பாடுகளில் வழக்கொழிந்து போகும். தான் பொருட்களை நிறுத்தும் அளந்தும் கொடுப்பதற்காக பயன்படுத்தும் தராசை விட அல்லது அளவுகோல்களை விட செயற்பாடுகளை மிகவும் துல்லியமாக நிறுக்கின்ற ‘மீஸானுல் ஹஸனாத்’ அவரது மனத்திரையில் வந்து போகும்.

எந்நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்ற இறைதூதரின் உபதேசம் வகுப்பறைச் சூழலில் ஓர் ஆசானை ஆதிக்கம் செலுத்தும். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் அமானிதம். இந்த வகுப்பறையிலும் அல்லாஹ்வின் பார்வை எனது உள்ளத்தை ஊடுருவி நிற்கிறது என்ற உள்ளச்சம் அவரை உசுப்பி விடுகிறது. மேலதிகாரிகளின் அல்லது அதிபரின் ஆணைகளுக்கு அல்லது அவர்களது திடீர் சோதனைகளுக்கு ஓர் ஆசிரியர் அஞ்சுவதை விட அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி, எடுக்கின்ற ஊதியத்திற்கு முறையாகக் கற்பிக்க வேண்டும் என்ற தூய எண்ணம் அவரின் உள்ளத்தில் உற்பத்தியாகின்றது.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் உள்ளங்களில் தக்வாவின் தராதரம் அதிகரிக்கும்போது அரச கருமங்களிலும் மக்கள் சேவையிலும் இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

இளைய தலைமுறையினரின் இதயப் பரப்பில் தக்வாவின் தாக்கம் இருந்திருக்குமெனில் தங்களது திறன்பேசி வாயிலாக அல்லது சமூக வலைத்தளங்களின் ஊடாக அசிங்கங்களை எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். தக்வா என்னும் ஆடையை அவர்கள் அணிந்திருந்தால் ஷைத்தானின் சரமாரியான தாக்குதலுக்கு உட்பட்டிருக்க மாட்டார்கள். மேலும் தக்வா என்னும் ஆடைதான் மேலானது.”   (அல்அஃராப்: 26)

நாம் மேலே தெளிவுபடுத்திய தக்வாவின் இன்னொரு பக்கத்தைப் புரட்டுவது பொருத்தமாக அமையும் என நாம் கருதுகின்றோம். அதனை தக்வாவின் கரு அல்லது சிரேஷ்ட நிலை அல்லது பேணுதல் என்ற சொற்களால் குறிக்க முடியும். அதாவது, ஓர் அடியான் ஹராமாக்கப்பட்ட ஒரு விடயம் தன்னால் நிகழ்ந்திட முடியும் என அஞ்சி ஆகுமாக்கப்பட்ட விடயத்தைக் கூட விடுவதற்கு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளும் மனேநிலையே தக்வாவின் முழு நிறைவான நிலையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியான் குற்றமுள்ள விடயத்திற்கு அஞ்சி குற்றமில்லாத விடயத்தை விடும் வரை இறையச்சமுள்ளோரின் தராதரத்தை அடைந்துவிட முடியாது.” (அத்திர்மிதி)

அண்ணலாரின் இந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சில அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருமாறு அமைகின்றன:

இறையச்சமுடையோர் தடுக்கப்பட்டவற்றுக்குப் பயந்து அநேகமான ஆகுமான விடயங்களை விட்டுவிடுகின்ற அளவு அவர்களுடன் தக்வா தொடர்ந்திருக்கும்.” (இமாம் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ்)

முத்தகூன் என்போர் தாங்கள் தடுக்கப்பட்டதைச் செய்ய நேரிடும் எனப் பயந்து ஆகுமாக்கப்பட்ட விடயங்கள் சிலவற்றை விட்டும் தூரவிலகி நிற்பர். இவர்களுக்கே அல்லாஹ் முத்தகூன் என பெயர் சுட்டியுள்ளான்.”  (மூஸா இப்னு அஃயுன்)

ஆனாலும், இறையச்சமுள்ளோர் மனிதர்களே! மனிதப் பலவீனத்தாலும் சூழல் தாக்கத்தாலும் சிலபோது அவர்களால் தீமைகள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகின்றது. அதன்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றுப் பரிகாரத்தையும் நபிகளார் பரிந்துரைக்கின்றார்கள். அதாவது, ஒரு தீமை அல்லது குற்றம் நிகழ்ந்து விட்டால் ஒரு நன்மையை சடுதியாகச் செய்து விட வேண்டும். அந்த நன்மை அந்தத் தீமையை அழித்துவிடும்.

அந்த நன்மை என்ன? என்பது குறித்து அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். சிலர் ‘தௌபா’ எனக் குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் இது பரவலான கருத்தில் நோக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். இவர்கள் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். ஒரு மனிதர் ஓர் அந்நியப் பெண்ணை முத்தமிட்டு விட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து நடந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பின்வரும் திருமறை வசனம் இறங்கும் வரை நபியவர்கள் அவருக்கு ஒன்றுமே கூறாது அமைதியாக இருந்தார்கள்: பகலின் இரு முனைகளாகிய காலை, மாலை வேளைகளிலும் இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். நிச்சயமாக நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இறைவனை நினைவுகூருவோருக்கு இது ஒரு நினைவூட்டலாகும்.” (ஹூத்: 114)

இவ்வகையில், தௌபாவை முதன்மைப்படுத்தி நாம் நிறைவேற்றுகின்ற ஐங்கடமைகளும் சுன்னத்தான நற்கருமங்களும் திக்ரு அவ்ராதுகளும் வுழூவும் தீமைகளை அழிக்கக் கூடியவையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று ஒரு நாளில் நூறு முறை கூறினால் அவரது பாவங்கள் கடல் நுரையைப் போல இருந்தாலும் அழிக்கப்பட்டு விடும்.” (அல்புகாரி, முஸ்லிம்)

மாலிக் இப்னு தீனார் குறிப்பிடுகின்றார்கள்: பாவத்திற்காகப் பச்சொதப்பப்பட்டு அழுவதானது காய்ந்த இலைகளை காற்று சொரிந்து விடுவதைப் போல பாவங்களை அழித்துவிடும்.” அதாஃ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: எவர் ஒருவர் திக்ரு மஜ்லிஸ் ஒன்றில் அமர்ந்தாரோ அவர் பத்து மோசமான மஜ்லிஸில் அமர்ந்ததற்கான குற்றப் பரிகாரமாக அமையும்.

ஆனாலும், பெரும் பாவங்கள் தவிர்க்கப்பட்டாலே நன்மைகள் தீமைகளை அழிக்கும் என்பது பெருமானாரின் நிபந்தனையாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: பெரும் பாவங்கள் தவிர்க்கப்பட்டால் ஐவேளைத் தொழுகை, இரண்டு ஜுமுஆக்கள், இரண்டு ரமழான்கள் ஆகியவற்றுக்கு இடையே நிகழ்ந்த தீமைகளுக்கான குற்றப் பரிகாரங்களாகும்.” (அல்புகாரி, முஸ்லிம்)

ஆகவே, தக்வாவின் தரம் குறைந்ததன் விளைவாக ஏற்படும் தீமைகளை சடுதியாக ஒரு நற்ஙசெயலைச் செய்து அழித்துவிட வேண்டும். அந்த நற்செயல் இவ்வாறுதான் அமைய வேண்டுமென்பது வரையறுக்கப்படவில்லை.

ஹதீஸின் இறுதிப் பகுதி நற்பண்பாடுகள் குறித்து பேசுகின்றது. தக்வாவின் அடைவு மட்டம் நற்பண்பாடாக அமைதல் வேண்டும். தக்வா என்பது அல்லாஹ்வுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளுடன் மட்டும் வரையறுக்கப்படுகின்ற ஒன்றல்ல. அது அடியார்களுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். இவ்வகையில் ஒரு ‘முத்தகி’ வடித்தெடுக்கப்பட்ட குணசீலனாக வாழ வேண்டும். இறைவனுக்கு அஞ்சி அவனை நெருங்கி வாழ்வதாகக் கூறும் அடியானிடம் பண்பொழுக்கம் இல்லையெனில் தக்வாவின் இலக்கை அவன் புரியாமல் வேறொன்றை விளங்கி வைத்துள்ளான் என்றே பொருள் கொள்ள வேண்டி வரும்.

இஸ்லாத்திற்கு அழகு சேர்ப்பதே நற்பண்பாடுதான். அது மீஸானுல் ஹஸனாத்தை கனதியாக்க வல்லது. இறைதூதரிடத்தில், அதிகமாக சுவனத்தில் நுழைவிக்கக் கூடியது எது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், இறையச்சமும் நற்பண்பாடும்” என பதிலளித்தார்கள். (அத்திர்மிதி, அபூதாவூத்) நபிகளார் இந்த ஹதீஸிலும் தக்வாவையும் நற்பண்பாட்டையும் இணைத்தே குறிப்பிட்டுள்ளார்கள். நற்பண்பாட்டை இலக்காகக் கொள்ளாத ஆன்மிகச் செயற்பாடுகள் போலியானது. இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை இவ்வாறு விளக்கினார்கள்:

நிச்சயமாக இறைவிசுவாசி நற்பண்பாடு மூலம் இரவில் நின்று வணங்குகின்ற, பகலில் நோன்பு நோற்கின்ற வணக்கவாளியின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்.” (அஹ்மத், அபூதாவூத்) தக்வாவின் தராதரத்தை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டிய தேவை சகலருக்கும் உண்டு. அதனை மனிதர்களுடன் நற்பண்பாடு பேணி கலந்து வாழ்வதன் மூலமே சாத்தியப்படுத்தலாம். இறையச்சத்தின் தராதரத்தைப் பராமரிக்க மனிதர்களை விட்டும் தூர விலகி, சந்தியாசி கோலம் பூணுவது பிழையான நிலைப்பாடாகும். இதனை கீழ்வரும் வரலாற்று நிகழ்வு தெளிவுபடுத்துகின்றது:

வரலாற்றுத் தொன்மை மிகு காலப் பகுதியில் வாழ்ந்த ஒரு நல்லடியார் அறிவிக்கின்றார்: நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தனியே அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹுத் தஆலா, உம்மை நான் தனித்திருக்கக் காண்கிறேனே! ஏன்?” எனக் கேட்டான்.

அதற்கவர்கள், உலகத்தாரின் இரட்சகனே! உனக்காக நான் மனிதர்களை வெறுத்து வந்துள்ளேன்” எனக் கூறினார்கள். அப்போது அல்லாஹ், மனிதர்களது முகங்களை எம்முடன் மட்டும் நீர் விட்டு வைத்து அதன் மூலம் எனது திருப்தியை அடையக் கூடிய ஒன்றை உமக்கு அறிவிக்கட்டுமா?” எனக் கேட்டுவிட்டு, மனிதர்களுடன் நற்பண்பாடு பேணி கலந்து வாழ்வீராக! எனக்கும் உமக்கும் இடையில் ஈமானைத் தடுத்து வைத்துக் கொள்வீராக!” என அல்லாஹ் குறிப்பிட்டான். (நூல்: ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்: இமாம் இப்னு ரஜப்)

மனிதர்களை விட்டு அந்நியமாகி அல்லாஹ்வுடன் அன்னியோன்னியமாகி விட முடியாது. எனவே, மனித வாழ்வின் அத்திவாரமாகிய தக்வாவைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தனி மனிதனையும் சேர்ந்ததாகும். தக்வாவின் சிரேஷ்ட நிலையை அடைந்த மனிதர்கள் அதிகமாக வாழும் சமூகச் சூழலே பாதுகாப்பானது. அச்சூழலில் குற்றங்களின் விகிதாசாரம் மிகவும் குறைந்து காணப்படும். சட்டங்களை மதிக்கின்ற கலாசாரமும் பரவலாகக் காணப்படும்.

எனவே, இறையச்சத்தை உள்ளத்தில் சுமந்து இறைவனது சட்ட வரம்புகளுக்குள் வாழ்கின்ற மனித மாதிரிகளை முஸ்லிம் சமுதாயத்திற்குள் அதிகமாக தோற்றுவிக்க வேண்டிய காலத்தின் தேவை எமக்கு உள்ளது. இவர்களே தேச நிர்மாணப் பணியின் அத்திவாரக் கற்களாக நாளை மாறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *