நாற்பெரும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஸூரதுல் ஃபலக்

அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி), விரிவுரையாளர், கதீஜதுல் குப்றா மக, வடதெனிய, வெலம்பொட

“கூறுவீராக!  வைகறையின் (பிரபஞ்சத்தின்) அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.  அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்! இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது! முடிச்சுக்களில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும் மேலும்  பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும் அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).”

புனித அல்குர்ஆனில் கடைசியாக இடம்பெற்றிருக்கும் ஸூரதுல் ஃபலக், ஸூரதுந் நாஸ். ஆகிய இரண்டிற்கும் பொதுவானதொரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது முஅவ்விததைன் (المعوذتين – பாதுகாப்புத் தேடும் இரு ஸூராக்கள்) என்பதாகும்.

மனிதன் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் தீங்குகள் இரு வகைப்படும். ஒன்று, மனிதனின் உள்ளிருந்து உருவாகும் ஆபத்து. அடுத்தது, மனிதனுக்கு வெளியே இருந்து ஏற்படும் ஆபத்து. இவ்விரு வகையான ஆபத்துக்களிலிருந்தும் மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இவ்விரு அத்தியாயங்களும் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. المعوذتين என்று அழைக்கப்படும் இவ்விரு அத்தியாயங்களும் இவ்விரு வகையான ஆபத்துக்களில் இருந்தும் மனிதனைப் பாதுகாக்க நிச்சயம் உதவும். 

முதல் அத்தியாயமான ஸூரதுல் ஃபலக் மனிதனின் வெளிப்புறத்திலிருந்து அவனுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வேண்டுகோளை கற்றுத் தரும் ஓர் அத்தியாயமாகும். இரண்டாம் அத்தியாயமாகிய ஸூரதுந் நாஸ் மனிதனுக்கு உள்ளிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வேண்டுகோளை கற்றுத் தரும் ஓர் அத்தியாயமாகும்.

இவ்வத்தியாயங்களின் முதல் வசனத்தில் الْفَلَقِ بِرَبِّ أَعُوذُ قُلْ (வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்) எனும் பிரார்த்தனை கற்றுத் தரப்பட்டுள்ளது. இங்கு அல்ஃபலக் எனும் சொல்லுக்கு வைகறை எனும் மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அல்ஃபலக் எனும் சொல்லின் அடிப்படையை சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மொழி ரீதியாக இச்சொல் வெடிப்பு, பிளப்பு எனும் அர்த்தங்களை கொடுக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக அல்லாஹுத் தஆலா இப்பிரபஞ்சத்தை ஒரு பாரிய வெடிப்பின் மூலம் உருவாக்கினான் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹுத் தஆலா படைத்த அனைத்து படைப்புகளிலும் ஒரு வெடிப்பை அல்லது பிளப்பை நாம் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக, ஒரு  மனிதனின் ஆரம்ப உருவாக்கம் ஆணின் விந்தணு பெண்ணின் சினை முட்டையை பிளந்து சென்று கரு உருவாகுவதை அறிகின்றோம். சிசுவாக வளர்ச்சியடைந்து தாயின் கருவறையில் இருந்து ஒரு வெடிப்பின் மூலம் குழந்தை  வெளி வருவதை நாம் அறிகின்றோம்.

மனிதன் மாத்திரமன்றி எந்த ஒரு படைப்பாக இருப்பினும் இவ்வாறானதொரு வெடிப்பு அல்லது பிளப்பு இருப்பதை நாம் காண முடியும். வைகறை இரவைப் பிளந்து வருவதால் அது அல்ஃபலக் என்று அழைக்கப்படுவதுண்டு.

புனித அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களில் அல்லாஹுத் தஆலா தன்னை பாலிக்-  (வெடித்து முளைக்கச் செய்கின்றவன், வெளிப்படுத்துபவன்) என அறிமுகப்படுத்தி உள்ளான்.

நிச்சமாக அல்லாஹ்தான் வித்துக்களையும் விதைகளையும் வெடித்து முளைக்கச் செய்கின்றவன். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? (6: 95)

அவனே அதிகாலை நேர (வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்பவன். இரவை அமைதி தருவதாகவும் சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது (அனைத்தையும்) மிகைத்தவனாகிய மிக்க அறிந்தவனின் ஏற்பாடு. (6: 96)

எனவே, அல்குர்ஆனில் الفلق எனும் சொல்லுக்கு வைகறை என வரையறுக்கப்பட்ட அர்த்தத்தைக் கொடுப்பதை விடவும் அதனை ஒட்டுமொத்த பிரபஞ்சம் என மொழிபெயர்ப்பது மிகவும் பொருத்தம் என கருதுகின்றோம். ஏனெனில், இப்பிர

பஞ்சத்தின் அனைத்திற்கும் பின்னால் ஏதாவதொரு வெடிப்பு இருப்பதை அறிகின்றோம். அப்படியென்றால் இந்த வசனத்தை இப்பிரபஞ்சத்தின் அதிபதியின் பாதுகாப்பைத் தேடுகின்றேன் என மொழிபெயர்ப்பது மிகவும் பொருத்தம் எனக் கருதுகின்றோம்.

அடுத்து வரும் வசனங்ககளில் மனிதன் எதிர்கொள்ளும் நான்கு வகையான தீமைகள்,  ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்வதை அல்லாஹத் தஆலா எங்களுக்கு கற்றுத் தருகின்றான். அவையாவன:

1.         உயிரினங்களின் தீமைகள் (خَلَقَ مَا شَرِّ مِنْ)

2.         இரவின் இருள், நோய்க்கிருமிகள் போன்ற கண்களால் கண்டுகொள்ள முடியாத தீய சக்திகளின் தீமைகள் (وَقَبَ إِذَا غَاسِقٍ شَرِّ وَمِنْ)

3.         சுனியக்காரர்களின் தீமைகள் (الْعُقَدِ فِي النَّفَّاثَاتِ شَرِّ وَمِنْ)

4.         பொறாமைக்காரர்களின் தீமைகள் (حَسَدَ إِذَا حَاسِدٍ شَرِّ وَمِنْ)

முதல் பாதுகாப்பு அல்லாஹ் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவதாகும். பொதுவாக அல்லாஹுத் தஆலா படைத்த படைப்புக்கள் யாவற்றையும் நன்மைக்காகவே படைத்திருக்கின்றான். மனிதன் தனது இரட்சகனுக்கு மாறு செய்யும்போது தீயவனாக மாறி விடுகின்றான். ஏனைய உயிரனங்கள் அவை படைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு மாறு செய்யும்போது தீயவையாக மாறி விடுகின்றன. உதாரணமாக, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து வெளியேறி விட்டால் தீயதாக மாறி விடுகின்றன. இவ்வாறான நிலையில் அவனது படைப்புக்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

இரண்டாம் வகையான பாதுகாப்பு இரவின் இருளின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவதாகும். இரவின் இருளின் தீங்கிலிருந்தும் அந்த இருள் படரும்போது ஏற்படும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள வசனம்  وَقَبَ إِذَا غَاسِقٍ شَرِّ وَمِنْ என்பதாகும்.

பொதுவாக, மனிதன் இரவில் எதிர்கொள்கின்ற ஆபத்துக்கள், தீங்குகள் பகல் வேளைகளில் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை விடவும் படுமோசமானவையாகும். மனிதர்களால் அல்லாத ஏனைய படைப்புகள் மூலம் இவ்வாறான கொடிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த அரபுச் சொற்களுக்கு இது அல்லாத வேறு கருத்துக்களும் கொடுக்கப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இச்சொற்கள்  கண்ணால் கண்டுகொள்ள முடியாதவாறு  நடமாடும் அனைத்தையும் குறிக்கும் என்பது புனித அல்குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்தாகும். அதனடிப்படையில் எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத அனைத்து வகையான தீமைகளையும் குறிப்பதுடன் மனிதனினுக்கு பயங்கர பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள், நோய்க்கிருமிகளை குறிக்கும் என்பது அவர்களது கருத்தாகும்.

பொதுவாக, புனித அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கும் சொற்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓர் அர்த்தத்தை முன்வைப்பதை விடவும் வரையறை இல்லாத ஆழமான அர்த்தங்களை முன்வைப்பதே சாலச்சிறந்ததாகும். அந்த வகையில் இந்த சொல் எல்லா வகையான தீமைகளையும் உள்ளடக்கிய ஒரு சொல் என்பதனால் மனிதனுடைய புலன்களால் அடைந்து கொள்ளக் கூடிய, அடைந்து கொள்ள முடியாத அனைத்து வகையான தீங்குகளிலிருந்து பாதுகாப்புக்கான வழிகாட்டல் இந்த வசனத்தின் மூலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வகையான பதுகாப்பு முடிச்சுக்களில் ஊதுகின்ற சூனியக்காரர்களின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பதற்கான வழிகாட்டலாகும் (الْعُقَدِ فِي النَّفَّاثَاتِ شَرِّ وَمِنْ). இங்கு இடம்பெற்றுள்ள النَّفَّاثَاتِ எனும் சொல் சூனியக்கார பெண்களை குறிக்கும் சொல்லாகும். ஏனெனில், ஆண் சூனியக்காரர்களின் சுனியத்தை விடவும் பெண் சூனியக்காரர்களின் சுனியம் கடுமையானது என்பது சிலரது கருத்தாகும். இருப்பினும் முடிச்சுக்களில் ஊதும் ஆன்மாக்களை குறிக்கும் ஒரு சொல்லாக இதை எடுத்துக் கொள்வது பொருத்தம் என கருதுகின்றோம். அது ஆண் சூனியக்காரர்களையும் பெண் சூனியக்காரர்களையும் குறிக்கும்.

கடைசியாக நான்காவது தீமையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும் அவர்கள் பொறாமை கொள்ளும்போதும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (حَسَدَ إِذَا حَاسِدٍ شَرِّ وَمِنْ)

இங்கு பொதுவாக பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுகின்றேன் என்று கூறப்படவில்லை. மாறாக, பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம், பொறாமை என்பது மனிதர்களின் உள்ளங்களில் குடிகொண்டுள்ள ஒன்றாகும். பொறாமையை இரு வகையாக வகைப்படுத்த முடியும். அவையாவன: அங்கீகரிக்கப்பட்ட பொறாமை, அங்கீகரிக்கப்படாத பொறாமை. அதாவது, நல்ல பொறாமை, கெட்ட பொறாமை என்பதாகும்.

அங்கீகரிக்கப்பட்ட அல்லது நல்ல பொறாமை என்று கூறப்படுவது ஒருவன் இன்னொருவன் மீது ஓர் அருளைக் காணும்போழுது அந்த அருள் போன்ற ஒன்று தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசை வைப்பது நல்ல வகையான பொறாமையாகும். அதே மனிதனின்  அருள் நீங்கி தனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது அங்கீகரிக்கப்படாத அல்லது கெட்ட பொறாமை ஆகும்.

மனிதன் என்ற வகையில் பொறாமை ஏற்படுவது இயல்பானதாகும். எனவேதான் பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து என்று கூறப்படாது, அவர்கள் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்குகளிருந்து பாதுகாப்புத் தேடுகின்றேன் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்தியாயத்தின் மூலம் பாதுகாப்புத் தேடும் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பின்வரும் ஹதீஸ் மூலம் புரிந்து கொள்ள முடியும்:

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் குல் ஹவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பிந் நாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்றவரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *