பதற்றம் களைவோம்! நிதானம் அணிவோம்!

அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி), விரிவுரையாளர், கதீஜதுல் குப்றா மக, வடதெனிய, வெலம்பொட

நிச்சயமாக மனிதன் பதற்றக்காரனாக படைக்கப்பட்டுள்ளான்.  அவனுக்கு துன்பம் ஏற்பட்டால் (பொறுமையிழந்து) திடுக்கிடுகிறான். அவனுக்கு நன்மை (வசதி வாய்ப்புகள்) ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.” (70: 19-21)

நிச்சயமாக மனிதன் பதற்றக்காரனாக படைக்கப்பட்டுள்ளான்” என்று மனிதனின் இயல்பை அல்லாஹுத் தஆலா இங்கு விளக்குகின்றான்.

‘ஹலூஅன்’ எனும் சொல்லுக்கு ‘பதற்றக்காரன்’ எனும் மொழிபெயர்ப்பு பூரணமானதல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். இச்சொல்லுக்குப் பொருத்தமான தனிச் சொல்லை அரபு அல்லாத மொழிகளில் கண்டுகொள்வது கடினமாகும். இவ்வாறான ஆழமான அர்த்தங்களைக் கொண்டுள்ள சொற்களுக்கான விளக்கத்தை புனித அல்குர்ஆனில் நாம் கண்டுகொள்ள முடியும்.

‘ஹலூஅன்’ எனும் சொல்லுக்கு அல்குர்ஆன் பின்வருமாறு விளக்கமளிக்கிறது: துன்பம் ஏற்பட்டால் மனிதன் (பொறுமையிழந்து) திடுக்கிடுகிறான். அவனுக்கு நன்மை (வசதி வாய்ப்புகள்) ஏற்பட்டால் கொடுக்காமல் தடுத்துக் கொள்கிறான்.

இன்ப, துன்பங்களின்போது மனிதன் நிதானமிழந்து விடுவதை இவ்வசனம் விளக்குகிறது.  நிதானத்தைக் கடைபிடிக்கும் விடயத்தில் மனிதர்களை நான்கு பிரிவினராக வகைப்படுத்த முடியும்:

1.         இன்பத்திலும் துன்பத்திலும் நிதானம் இழக்கின்றவர்கள்.

2.         துன்பத்தின்போது மாத்திரம் நிதானம் இழக்கின்றவர்கள்.

3.         இன்பத்தின்போது மாத்திரம் நிதானம் இழக்கின்றவர்கள்.

4.         இன்பத்திலும் துன்பத்திலும் நிதானமாக இருப்பவர்கள்.

இதில் நான்காம் வகையைச் சார்ந்த இன்பத்திலும் துன்பத்திலும் நிதானமாக இருக்கும் மனிதர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான மனிதர்கள் ஆவார்கள்.

நிச்சயமாக மனிதன் பதற்றக்காரனாக படைக்கப்பட்டுள்ளளான்” எனக் குறிப்பிட்டு விட்டு, அல்லாஹுத் தஆலா சில மனிதர்களுக்கு விதிவிலக்களிக்கின்றான். அவர்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டவர்களாவர்:

  • தொழுகையாளிகளைத் தவிர. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்.” (70: 22,23)
  • அவர்களது செல்வங்களில் யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.” (70: 24, 25)
  • அவர்கள் தீர்ப்பு நாளை நம்புவார்கள்.” (70: 26)
  • அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள். அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.” (70: 27, 28)
  • தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்கள் மீதே தவிர, அவர்கள் தமது கற்புகளைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் இழிவுபடுத்தப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் தேடுவோரே வரம்பு மீறியவர்கள்.” (70: 29-31)
  • அவர்கள் தமது அமானிதங்களையும் ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.” (70: 32)
  • அவர்கள் தமது சாட்சியங்களை நிலைநிறுத்துவார்கள்.” (70: 33)
  • அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.” (70: 34)

வாழ்வில் சகல துறைகளிலும் எல்லா நிலைகளிலும் பதற்றத்தைத் தவிர்த்து, நிதானத்தை கடைபிடிப்பவர்களின் பண்புகளைக் குறிப்பிட்டுள்ள இவ்வசனங்களில் ஆரம்பத்தில், தொழுகையில் நிலைத்திருப்பார்கள்” என்றும் இறுதியில், தொழுகையைப் பேணுவார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். மனிதன் நிதானமாக செயற்படுவதற்கு தொழுகை பிரதான காரணி என்பது இதன் மூலம் புலனாகின்றது. மேலும், அல்லாஹுத் தஆலா மனிதனின் இயல்பை ஸூரதுல் இஸ்ராவில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான்:

நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.” (17: 11)

பொதுவாக, மனிதர்கள் தமக்கெதிராகவோ தனது பிள்ளைகளுக்கெதிராகவோ பிரார்த்தனை புரிவதில்லை. ஆனால் கோபம், வெறுப்பு, பொறாமை முதலான உளநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதுண்டு. ஆனால், அல்லாஹுத் தஆலா அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன் என்பதனால் அவ்வாறான பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பதில்லை.

மனிதர்கள் நல்லவற்றுக்கு அவசரப்படுவது போல் அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப்பட்டிருந்தால் அவர்களின் காலக்கேடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும். நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவோம்.” (10: 11)

நாட்டுப் பிரஜைகள் அனைவரும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். குறிப்பாக, அசாதாரண சூழ்நிலைகளில் நிதானம் மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், ஒரு தனி நபர் நிதானமிழந்து செயற்படும்போது அதன் விளைவுகளை ஒட்டுமொத்த சமூகமும் வீணாக சுமக்க நேரிடலாம்.

மிகவும் இக்கட்டான, நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிதானத்தை கடைப்பிடித்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுமுக நிலையைத் தோற்றுவித்த மகத்தான தலைமைத்துவத்திற்கான அழகிய நன்முன்மாதிரிகளை ஸுன்னாவில் அவதானிக்க முடியும்.

வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிதானம் வலியுறுத்தப்பட்ட பல நபிமொழிகளை நாம் கண்டுகொள்ள முடியும்.

நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும்.” (அத்திர்மிதி)

இறை வழிபாடுகளில் பிரதான வழிபாடாகிய தொழுகைக்குச் செல்லும்பொழுதுகூட நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள்; நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்; கிடைத்ததைத் தொழுங்கள்; தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம்)

நிதானமிழந்து அவசரப்படுவது சுவனத்தை ஹராமாக்கும் செயலாக அமையக் கூடும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது:

ஒரு மனிதருக்கு காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே, அவனுக்கு சுவனத்தை நான் ஹராமாக்கி விட்டேன்” என்று அல்லாஹ் கூறி விட்டான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

கடந்த தசாப்தங்களில் காணப்படாத பதற்றம் பரவலாக சமகால மக்களிடம் காணப்படுவது அனைவராலும் உணரப்படும் விடயமாகும். தொழிநுட்பம் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நவீன உலகில் மனிதனுக்கு எதற்கும் நேரமில்லை என்ற நிலையில் எதை எடுத்தாலும் அதனை உடனடியாக முடிக்க வேண்டுமென்ற ஆவேசம், பதற்றம் காரணமாக மனிதன் பொறுமையிழந்து செயற்படுகின்றான். இந்நிலைக்கு சமூக வலைத்தளங்களும் ஏனைய ஊடகங்களும் உறுதுணையாக இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

அவசரப்பட வேண்டிய சந்தர்பங்களில் அவசரப்படுவதும்; பொறுமையாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பதும் நிதானமாகும். பொதுவாக, அனைத்து விடயங்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லும் இஸ்லாம், சில விடயங்களில் மாத்திரம் விரைவு, அவசரம் காட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறது. நன்மையைச் செய்வதில், தீமையைத் தடுப்பதில், நோன்பு துறக்கும்பொழுது, ஜனாஸாவை அடக்கம் செய்வதில், கடனை திருப்பிக் கொடுப்பதில், பாவமன்னிப்பு தேடுவதில்… அவசரம் காட்ட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

வாழ்வில் எல்லாத் துறைகளிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து செயற்பட வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *