பதாவா

கலாநிதி முஹம்மத் முபீர் (இஸ்லாஹி), அதிபர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. (Mufeer96@gmail.com)

கேள்வி: ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றதா? அதனை வேறு இடங்களில் நிறைவேற்ற முடியுமா?

பதில்: கூட்டுத் தொழுகைகள் (இமாம் ஜமாஅத்தாக தொழப்படுகின்ற) பெரும்பாலும் மஸ்ஜிதுகளில்தான் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் ஜனாஸா தொழுகையும் மஸ்ஜிதில் நிறைவேற்றப்படுகின்றது. ஆனால், ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதில்தான் நிறைவேற்ற வேண்டும்ளூ அங்கு தொழுதால்தான் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுவதற்கில்லை. அப்படி கூறுவதற்கு இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் ஓர் இறுக்கமான போக்கைக் கொண்டதுமல்ல. மாறாக, இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் கால, இட, சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடக் கூடியளவு நெகழ்ச்சித் தன்மையைக் கொண்டதாக இருப்பது இஸ்லாத்தின் தனிச் சிறபம்சமாகும்.

இதனடிப்படையில் இன்று கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக ஜனாஸாத் தொழுகையை மஸ்ஜிதினுள் நிறேவேற்றுவது சாத்தியமற்றதாக அல்லது மிகவும் கஷ்டமான ஒன்றாக மாறியுள்ளது.

எனவே, தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு வீட்டில், மஸ்ஜிதுக்கு வெளியே, வெட்ட வெளியில் அல்லது மையவாடியில் என்று சுத்தமாக இருக்கக்கூடிய எந்த இடத்திலும் ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

‘எனக்கு பூமியை தொழுமிடமாகவும் சுத்தமானதாகவும் ஆக்கித் தரப்பட்டிருக்கின்றது.’ (ஸஹீஹுல் புகாரி)

ஆகவே, மஸ்ஜித்களில் ஜனாஸா தொழுகையை நிiவேற்ற முடியாமல் போகின்ற பகுதிகளில் சுகாதார வழிமுறைகளைப் பேணி சுத்தமான, பொருத்தமான ஓர் இடத்தில் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

கேள்வி: ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுவதற்கு குறைந்தபட்ச எண்ணிக்கையைக் கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்று நிபந்தனை இருக்கின்றதா?

பதில்: ஜனாஸா தொழுகை பர்ளு கிபாயாவாகும். ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்து நிறைவேற்றினால் அக்கடமை நிறைவேறி விடும். அதனை பலர் சேர்ந்து இமாம் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதாயின் குறைந்தது இரண்டு பேர் இருந்;தால் போதுமானதாகும். ஒருவர் இமாமாகவும் அடுத்தவர் மஃமூமாகவும் இருந்து ஜமாஅத்தாக ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற முடியும்.

இருந்த போதிலும், தொழுகையில் கலந்து கொள்கின்றவர்களின் எண்ணிக்கை கூடுகின்றபோது மூன்று ஸப்புகளாக இருந்து ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுவது முஸ்தஹப்பான வரவேற்கத்தக்க ஸுன்னாவாகும். உதாரணமாக, தொழுகைக்கு மொத்தமாக ஏழு பேர்தான் இருக்கின்றார்கள் என்றால் ஒருவர் இமாமாகவும் அடுத்தவர்கள் அனைவரும் ஒரு ஸப்பில் இருந்து தொழாமல், இரண்டு இரண்டு பேராக மூன்று ஸப்புஹளில் நின்று தொழ வேண்டும். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ‘ஒரு முஃமின் மரணமடைந்து அவருக்காக முஸ்லிம்களில் மூன்று ஸப்புகளில் இருந்து தொழுதால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.’ (அபூதாவூத்)

இந்த ஹதீஸை அறிவிப்புச் செய்கின்ற மாலிக் இப்னு ஹுபைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஜனாஸா தொழுகை;கு வருகை தருகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போதெல்லாம் அவர்களை மூன்று ஸப்புகளாக ஆக்கி தொழுகை நடத்துவதில் கூடிய கவனம் செலுத்துபவராக இருந்தார்கள்.

எனவே, இக்கட்டான இக்காலகட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டவர்களே ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியும் என்ற வரையறை இருப்பதனால் ஜனாஸாத் தொழுகைக்கு வருகை தருபவர்கள் ஒரு ஸப்பில் நிற்காது மூன்று ஸப்புகளில் நின்று தொழுகையை நிறைவேற்றி மேற்கூறப்பட்ட ஸுன்னாவை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *