பல்லினவாத பின்னணியில் முஸ்லிம்களின் பங்காற்றுகை

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் –
தென்கிழக்கு ஆசியாவில் மதச் சார்பான அல்லது மதச்சார்பற்ற என்ற கருத்து இன்று பெரிதும் மேலோங்கியுள்ளது. மத ரீதியான, இன ரீதியான பெரும்பான்மை வாதம் என்பவற்றின் பிடியில் தென்கிழக்காசிய நாடுகள் பெரிதும் சிக்கியுள்ளன. மதவாத கருத்துக்கள் மேலோங்கிச் செல்லும் அதேவேளை அரசியல்வாதிகள் அதை தமது வாகனமாக மாற்றிக் கொள்ளும்போது நிலைமை மேலும் மோசமடைகின்றது. 1956இல் இருந்து இன, மத, மொழி சார்ந்த கடும்போக்கு அரசியலுக்கான வாய்ப்புள்ள நாடாக இலங்கை மாறி இருப்பது புதிய செய்தியல்ல. 1915 சிங்கள- முஸ்லிம் கலவரம் பெரிய அளவில் நடந்திருந்தாலும்கூட இணைந்து வாழும் அல்லது இணங்கிச் செல்லும் ஒரு பொறிமுறையை வரலாறு முழுக்க தாங்கள் நன்கறிந்திருந்த பொறிமுறையை முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைவர்களும் பயன்படுத்தினர்.

1915 கலகம் பெரிய அளவில் நடைபெற்ற கலகமாகும். பாரிய இழப்புக்களை முஸ்லிம்கள் சந்தித்திருந்தனர். இருந்த போதிலும் அடுத்த கட்ட நகர்வுக்கும் தேசிய அரசியலுக்கும் தேவையான ஆரோக்கியமான வழிகள் பற்றியே முஸ்லிம்கள் சிந்தித்தனர். இந்நிலைக்கு ஏன் ஆளாக்கப்பட்டோம்? என்ற கவலை இருந்தபோதும் நிலைமைகளை சீர்செய்ய அதிக அக்கறை காட்டப்பட்டது. அதற்கு அவர்களிடமிருந்த அரசியல் சூழலும் ஒரு முக்கிய காரணம் எனக் கொள்ள வேண்டும்.
‘ஐக்கிய இலங்கை’ என்ற ஒரு கருத்தை வெறும் அரசியல் இலாபத்துக்காக மட்டுமன்றி பொது இலட்சியத்தின் அடிப்படையில் சில சிங்களத் தலைவர்கள் முன்வைத்தனர். அதில் ஒரு கவர்ச்சி இருந்தது. முஸ்லிம்களும் அநேக சிறுபான்மையினரும் இதில் விடுதலைக்கான வழி இருப்பதாக உணர்ந்தனர். அன்றைய சிங்கள தேசியத் தலைவர்களோடு நாட்டின் மீட்சிக்காகவும் விடுதலைக்காகவும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்றனர். இன்னும் சரியாகச் சொல்வதானால் ஏனைய சிறுபான்மையினரை விட நிபந்தனையற்ற ஒத்துழைப்பை முஸ்லிம் தலைவர்கள் வழங்கினர். எல்லோரும் வாழக் கூடிய ஒருமைப்பாடான நாட்டை அவர்கள் விரும்பினர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது ஒரு புதிய செயற்பாடாக இருக்கவில்லை. பெரும்பான்மைச் சிங்கள இனத்தோடும் ஏனைய சமூகத்தவரோடும் பல நூறு வருடங்களாகப் பெற்ற அனுபவங்கள், அனுகூலங்கள், பரஸ்பர ஒத்துழைப்புக்கள், நட்புறவுகள் போன்ற தெளிவான கண்ணோக்கில் இருந்தும் யதார்த்தமான நடைமுறைகளில் இருந்தும் பார்க்கும்போதும் அது ஒரு வரலாற்றுபூர்வமான முடிவாகவே இருந்தது. பல நூற்றாண்டுகள் நீடித்த நல்லிணக்க வாழ்வின் சிறந்த விளைவுகள் ஆழ்மனதில் இருந்ததை முஸ்லிம்கள் உணர்ந்தனர். அது வரலாற்றிலிருந்து அவர்கள் அறிந்திருந்த பாடங்கள்.
பட்டுப் பாதை பற்றி இன்றும் நாம் பேசுகிறோம். பட்டுப் பாதை உள்ளிட்ட காரவன் பாதை, தவளம் பாதை போன்ற வணிகப் பாதைகள் எல்லாமே மனித உணர்வுகளினதும் கலாசாரப் பரிமாற்றங்களினதும் பாதைகளாகத்தான் உலகை ஆட்சி செய்துள்ளன. இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பும் குடியேற்றமும் வணிகத்தினதும் சமாதானத்தினதும் தூதுவர் என்ற இலட்சியத்தைத்தான் முதன்மைப்படுத்தி இருந்தன. வணிகத்துக்காக வந்தவர்கள், பாவா ஆதம் மலையைத் தரிசிக்க வந்தவர்கள், சூபி தரீக்கா கொள்கைகளோடு வந்தவர்கள், அமைதி வழியில் மார்க்கப் போதனைகளுக்காக வந்தவர்கள், வைத்தியர்களாக வந்தவர்கள், கடலோடிகள், சுழியோடிகள், முத்துக் குளிப்போர், யானை பிடிப்போர் என்பதுதான் இலங்கைக்கும் முஸ்லிம்களுக்குமான தொடர்புகளாகும். அச்சுறுத்தலோ நம்பிக்கை மோசடிகளோ இல்லாமல்தான் இந்தப் பூமியில் ஆயிரம் ஆண்டு கால வாழ்க்கை நிலைநாட்டப்பட்டது.
மறுபுறத்தில், நிரந்தரமான சமாதான வாழ்வுக்கு எழுதப்படாத ஒப்பந்தமாக இந்த நாட்டினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கை முறையும் விருந்தோம்பலும் அமைந்திருந்தன. சிங்கள மக்களும் சிங்கள மன்னர்களும் ஒப்பீட்டுக்கு இடமில்லாத நட்பையும் நல்லுறவையும் முஸ்லிம்கள் மீது காட்டினார்கள். இதனை வரலாற்றில் காணக் கிடைக்கும் அதிர்ச்சிக் காட்சி என்று லோணா தேவராஜா கூறுகிறார். ‘இலங்கையில் முஸ்லிம்கள்’ என்ற தனது நூலுக்கு அவர் வழங்கியிருக்கும் மற்றொரு தலைப்பு ‘ஆயிரம் வருட கால இன ஒற்றுமை’ (One Thousand years of Ethnic Harmony) என்பதாகும்.
இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை சிறப்பாகக் கூறும் நூலாக மட்டுமே இந்நூல் அறியப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த முஸ்லிம்- சிங்கள நல்லிணக்க வாழ்வை நிரூபிக்கும் சான்று கூறும் வாக்குமூலம்தான் அந்த நூல். தனது அறிவுக்கெட்டிய வரை தென் கிழக்காசியாவிலும் ஏன் முழு உலகிலும் காண்பதற்கரிதான இன நல்லிணக்க காட்சியாக சிங்கள- முஸ்லிம் உறவை வெளிப்படையாக அந்த நூல் விதந்து கூறுகிறது. நாட்டின் பொது நீரோட்டத்தில் இதயசுத்தியோடும் சந்தேகத்திற்கு இடமளிக்காமலும் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.
முஸ்லிம்கள் பற்றி லோணா தேவராஜா கூறும் வரலாற்று உண்மை இதுதான். பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் குணவர்த்தன அவர்களும் 1960களில் முஸ்லிம்கள் பற்றி எழுதிய கட்டுரைகளில் இதே கருத்தையே பிரதிபலித்திருந்தார். தேசிய நீரோட்டத்தில் ஒத்திசைவான வாழ்க்கைக்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பையே இத்தகைய வரலாறுகள் எமக்குக் காட்டுகின்றன.
அண்மைக் கால கலவரங்களில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள் மீது மோசமாக நடந்து கொண்டபோதும் பெரும்பான்மை மக்களிடையே முஸ்லிம்கள் மீது அனுதாபமும் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்கும் பக்குவமும் இருந்ததை முஸ்லிம்கள் உணராமலில்லை. பெரும்பான்மை இனப் புத்திஜீவிகளும் இடதுசாரிகளும் நடுநிலையாளர்களும் முஸ்லிம்கள் மீது காட்டும் அன்பும் ஆதரவும் பாரிய இக்கட்டான நிலைமைகளிலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததையும் முஸ்லிம்கள் மறுக்கவில்லை. அதேவேளை முன்னைய கலகங்களை விட அளுத்கம, திகண கலவரங்கள் அபாய அறிவிப்புக்களாக அமைந்தமை வருந்தத்தக்கதாகும். இயல்பான கைகலப்பு, சில ஊர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட கலகச் சூழல் என்பதையும் அவை தாண்டிச் சென்றிருந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களும் நம்ப முடியாத அவதூறுகளும் தேசியளவில் பரப்புரை செய்யப்படும் அபாய நிலைமை தெளிவாகத் தெரிந்தது. சமய ரீதியாகவும் இன ரீதியாகவும் இவை முன்னெடுக்கப்பட்டதை ஹலால் பிரச்சினை காலத்தில் நன்குணர முடிந்தது.
இது ஒரு நெருக்கடியை உருவாக்கி இருந்தது. ஹலால் கால எதிர்ப்பு உணர்வுகளை கள ஆய்வு மூலம் பதிவு செய்திருந்தால் மத மோதல்கள், இன வேறுபாடுகள் பற்றிய போலிச் செய்திகள் நாடு தழுவிய ரீதியில் பரப்பப்பட்டிருந்தன என்பதை தெளிவாக அறிய வாய்ப்பிருந்தது. இந்த நெருக்கடி நிலைமையை அமைதியாக கையாளவும் சுமுகமான உறவுகளைக் கட்டியெழுப்பவும் பரந்தளவில் முஸ்லிம்கள் செயற்பட்டனர். சமய இயக்கக் குழுக்களும் இயக்கம் சாராத அமைப்புக்களும் நாடு தழுவிய ரீதியில் நல்லிணக்க வாழ்வின் வெற்றிக்காக இரவு பகலாக பணியாற்றி இருந்திருக்கலாம். இக்காலப் பிரிவில் சமூக மட்டத்தில் வணிகத்தில் கல்வியில் என்னென்ன தாக்கங்கள் நிகழ்ந்திருந்தன? முஸ்லிம்கள் எதிர்நோக்கிய அவலங்களும் அச்ச நிலைமையும் எவ்வாறு இருந்தன? என்பதையும் துல்லியமாக அறிந்து இருக்க முடியும். இவை பற்றிய துல்லியமான ஆய்வுகள் இன்றுவரை எமது கைகளில் இல்லை. ஆயினும் இவ்வகையான செய்திகள் பதிவான சந்தர்ப்பங்களும் இருந்தன. இந்த நெருக்கடிகளின் துயரங்கள் எவ்வாறு இருந்தபோதும் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பும் முயற்சிகளிலேயே முஸ்லிம்கள் கவனம் செலுத்தினர். பெரும்பான்மை மக்களிடமும் இதற்கு வரவேற்பு இருந்ததை நாம் நன்கறிவோம். சமய இயக்க குழுக்களும் இயக்கம் சாராதவர்களும் பல்வேறு முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் புத்திஜீவிகளும் இளைஞர்களும் முன்னெடுத்த முயற்சிகள் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தோம். சிங்கள மக்களோடு புரிந்துணர்வை வளர்ப்பதும் சமாதானத்திற்கு ஆதரவளிக்கும் சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதும் இவற்றின் பிரதான நோக்கமாக இருந்தன. இளைஞர்கள் இதில் முன்னணியில் இருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன? ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவம் எல்லாவற்றையும் மாற்றி அமைத்தது. இனவாதம் பேசியோரும் சமய ரீதியில் வெறுப்புரைகளைப் பரப்பியோரும் இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தினர். பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள் என்று முன்னர் எதிர்வுகூறியவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கியது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது சாதாரண பெரும்பான்மை பொது மக்களும் நடுநிலையாளர்களும் ஐயத்திற்கும் அச்சத்திற்கும் நம்பிக்கை இழப்பிற்கும் உள்ளாக நேர்ந்ததுதான். பேரிடி ஒன்றினால் முஸ்லிம்களுக்கு அதுவரை இருந்து வந்த முக்கிய பாதுகாப்புச் சுவர் தகர்ந்து வீழ்ந்தது போன்ற அபாயநிலை நாடு முழுக்க உருவாகியிருந்தது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அபூபக்கர் அல்பக்தாதியின் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதுடன் இப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டது. சிங்கள மக்களின் நியாயமான சந்தேகங்களையும் நம்பிக்கை இழப்புக்களையும் சாதாரணமானது என ஒதுக்கிவிட முடியாது. தனது சமாதான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் பொறுப்பிற்கு தைரியத்துடன் முகங்கொடுக்கும் சூழலில் முஸ்லிம் சமூகம் இன்று உள்ளது. இது தட்டிக் கழிக்கக் கூடிய விடயமல்ல.
குறுகிய இனவாத பரப்புரைகள் ஏற்படுத்தியுள்ள வெறுப்புக்களையும் போலியான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தியிருக்கும் உறவுகளை விரிசல் அடையச் செய்யும் போக்குகளையும் நாம் நன்கு அறிந்துள்ளோம். இவற்றை மாற்றும் முயற்சியில் தேசத்திற்கு ஒரு பங்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.
பல்லின நாடொன்றில் வாழும் சமூகம் என்ற வகையில் முஸ்லிம்களுக்கும் ஒரு பொறுப்புள்ளது. அதேவேளை சவால்களும் உள்ளன. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் சமாதான நல்லெண்ண உணர்வுகளை சிதறடித்துள்ளன. எதுவுமே நடக்காதது போல் நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், சமூகம் தானாகவே முன்வந்து அந்தப் பிரச்சினைகளைக் கையாண்ட விதமும் சமாதான உணர்வுகளுக்கு உயிரூட்டி தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகளும் மறக்க கூடியவை அல்ல.
பல்லின சமுதாயத்தில் வாழ்வதன் பல்வேறு சவால்களையும் உச்சபட்ச சவால்களையும் சந்தித்து வரும் சூழலில் பன்மைச் சமூகம் பற்றிய விரிவான கலந்துரையாடல் இன்று தேவை. தென்கிழக்கு ஆசிய மிதவாத பாரம்பரியத்தைக் கொண்ட பிராந்தியம் என்று நம்ப முடியும். பல நூற்றாண்டுகளாக தென்கிழக்காசிய மக்கள் வெவ்வேறு சமய இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் தமக்கிடையே ஒற்றுமையை தற்காத்து வந்துள்ளனர்.
இந்தப் பிராந்தியத்தின் பல நவீன நாடுகள் பன்மைத்துவம் என்பதை தமது பிரதான அடிப்படையாக அங்கீகரித்துள்ளன. இனங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் சட்டபூர்வமாக்கி இருப்பதுடன் அரசியல் சாசனத்திலும் இதனை இந்த நாடுகள் இடம்பெறச் செய்துள்ளன.
எனினும் இன்று இந்த பன்மைத்துவமும் பாரம்பரிய ஒருமைப்பாடும் கேள்விக்குறியாக உள்ளன. வன்முறையும் வன்கொடுமைகளும் மோதல்களும் சமயத்தையும் இனத்தையும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகள் இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன.
சிரியா- ஈராக் நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். குழுவினர் பற்றி பல முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக கொண்ட நாடுகளும் அச்சத்தில் உள்ளன. முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் சம்பவங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் அதிகளவில் நடந்துள்ளன. ஆனால், நாம் அறிந்த வரையில் தென்கிழக்கு ஆசியாவின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளை முன்னோடியாக எடுத்துக் கொள்வதிலோ இந்த இயக்கங்களின் அங்கத்தவர்களாக சேர்ந்து கொள்வதிலோ காட்டும் ஆர்வம் அதிகமானதாக இல்லை. மிகச் சிறு குழுவினர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுடன் தொடர்பிருப்பதாக சிறிய அளவிலேனும் பரவும் இவ்வகை செய்திகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஆபத்தானவை. இப்பிராந்தியத்தில் அச்சத்தையும் பன்மைத்துவ தகர்வையும் இவ்வகை செய்திகள் கணிசமான அளவு உருவாக்கி உள்ளன. அவற்றுள் இலங்கையும் ஒன்று. இது பற்றி தீவிரமான உரையாடல்கள் இன்னும் எம்மிடையே நடந்துள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போதும் தீவிரவாத சக்திகளுடன் தொடர்பு உள்ளதாக பேசப்படும் சந்தர்ப்பத்தை எவ்வாறு தடுப்பது அல்லது இல்லாமல் ஆக்குவது? என்பது பன்மைத்துவ சமூக ஒழுங்கமைப்பொன்றில் இன்றைய நிலையில் இன்றியமையாத ஒரு வினாவாகும்.

அல்ஹஸனாத், பெப்ரவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *