பாராட்டல்

அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி), (எம்.ஏ.)

தலைவர், இஸ்லாமிய கற்கைள் பீடம்- ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா

பிறரின் குறைகள் எமக்குத் தென்படும் அளவுக்கு நிறைகள் புலப்படுவது குறைவாகும். அப்படியே பிறரின் நலன்கள் விளங்கினாலும் அதனைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் பழக்கமும் அரிதாகவே காணப்படுகின்றது.

அல்குர்ஆன் நபிமார்களை, ஸாலிஹீன்களைப் புகழ்ந்து பேசுகின்றது. நபியவர்கள் தனது சஹாபாக்களை பலபோது புகழ்ந்திருக்கிறார்கள்; பாராட்டியிருக்கிறார்கள்; உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். பாராட்டுவது இஸ்லாத்தின் பார்வையில் கூடாது என்ற ஒரு மனப்பதிவும் பலரிடத்தில் காணப்படுகிறது. இதில் ஒருபக்க உண்மை இருந்தாலும் நாம் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். புகழ்வது இரு சந்தர்ப்பங்களில் தடுக்கப்படுகின்றது. ஒருவரை நாம் புகழ்வதன் மூலம் அவரது இஃலாஸ் எனும் அல்லாஹ்வுக்காகப் பணி புரியும் மனோநிலை பாதிக்கப்படுதல் பலருக்கும் மத்தியில் ஒருவரை புகழ்வதாலும் புகழ் அல்லது பாராட்டு விழாக்களை நடந்து இந்நிலை ஏற்படக்கூடும். இரண்டாவது போலியாகப் புகழ்வது. ஒருவரிடம் இல்லாத ஒன்றைச் சொல்லி அவரைப் புகழ்வது. இவை இரண்டும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட புகழாரங்களாகும்.

இதற்கு மாற்றமாக, ஒருவரின் நல்ல செயலை, முன்மாதிரி விடயங்களை, நடத்தையை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் வகையில் அவரைப் பாராட்டுவது மார்க்கம் அனுமதித்த ஒன்றாகும். அவரது இஃலாஸை பாதுகாக்கும் வகையில் எமது பாராட்டைத் தனிப்பட்ட வகையில் அமைத்துக் கொள்வது பொருத்தமானது.

நாம் சேவைகளைப் பெறுகின்ற ஒரு கடைக்காரர், மீன் வியாபாரி, ஆட்டோ சாரதி, தலைமுடி திருத்துபவர், வங்கி மற்றும் காரியாலயங்கள் முதலான இடங்களில் நாம் பலபோது தரமான சிறந்த சேவைகளைப் பெறுகிறோம். அச்சந்தர்ப்பங்களில் நாம் அவர்களைத் தட்டிக்கொடுத்து பாராட்டும்போது அவர்கள் உற்சாகமடைவர். தொடர்ந்தும் நன்மைகள் செய்வர். அனைத்துக்கும் மேலாக உள அமைதியும் மகிழ்ச்சியும் அடைவர். ஒரு மனிதனின் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதும் சதகாவாகும்.

பாராட்டுதல் எனும் பண்பு எமது குடும்ப மட்டத்திலும் வியாபிக்க வேண்டும். குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி சிறப்பாக செயற்படும்போது பரஸ்பரம் பாராட்டுவதும் நன்றி தெரிவிப்பதும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் அன்பை விதைக்கும்; உறவுகளைப் பலப்படுத்துவதும். அவ்வாறே பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களைக் கண்டிக்கின்ற நாம்இ அவர்கள் நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும்; பரிசுகள் கொடுத்து உற்சாகமூட்ட வேண்டும். இவ்விடயத்தில் வெளி உலகில் தாராளத்தன்மையோடு நடக்கும் நாம் எமது குடும்பத்தில் அதனை சரியாக வெளிப்படுத்த தவறுகிறோம்.

அடுத்தவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தும்போது அதற்குப் பின்னால் சுயநல அடைவுகளை இலக்காகக் கொள்ளாமலும் அல்லாஹ்விடம் நன்மைகளை எதிர்பார்த்தும் நாம் அதனைச் செய்ய வேண்டும். எமது வார்த்தைகள்இ செயற்பாடுகள் மூலம் பிறர் நன்மை அடையும் வகையில் அல்லாஹ் எம்மை வழிநடத்துவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *