பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்
பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்
அல்லாஹ் கூறுகிறான்: ‘அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக்கூடும்.’ (4: 19)
இல்லற வாழ்க்கையில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்; சிறந்த முறையில் உறவாடுங்கள். நீங்கள் அவர்களிடம் கனிவாக பேசுங்கள். உங்கள் தோற்றத்தையும் செயற்பாடுகளையும் இயன்றவரை அழகிய முறையில் அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
இஸ்லாம் குடும்பத்தை அமைதியின் இல்லமாகவும் ஆறுதலளிக்கும் தளமாகவும் பாதுகாப்பின் மையப் புள்ளியாகவும் கருதுகிறது. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமண பந்தமானது அன்பையும் கருணையையும் அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, குடும்ப வாழ்வில் கணவன்- மனைவி ஆகிய இருவரினதும் தேவைகள், தேட்டங்கள், உரிமைகள், ஆசைகள், உணர்வுகள், கண்ணோட்டங்கள் போன்றவை பரஸ்பரம் மதிக்கப்பட வேண்டும். அல்லாஹ் உருவாக்கிய குடும்பம் எனும் நிறுவனத்தில் யாரும் யாரையும் அடக்கியாள முடியாது.
மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: ‘மனைவியர்களாகிய இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக்கான உரிமைகளும் இருக்கின்றன.’ (2: 228)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது கூறிய சில வார்த்தைகள் பின்வருமாறு இருந்தன: ‘மக்களே கேளுங்கள்! பெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்கள் உங்களிடம் சிறைக் கைதிகளின் அந்தஸ்தில் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாக உங்களுக்கு மாறு செய்யும்போதுதான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். கேளுங்கள்! உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீது உங்களுக்கிருக்கும் உரிமை என்னவெனில், அவர்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் விரிப்பை மிதிக்கவிடக் கூடாது. மேலும் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் வீட்டினுள் வர அனுமதிக்கக் கூடாது. கேளுங்கள்! உங்கள் மீது அவர்களுக்கிருக்கும் உரிமை அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும் உடையும் அளிப்பதாகும்.’ (அத்திர்மிதி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹகீம் இப்னு முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ‘ஒரு மனைவிக்கு தன் கணவன் மீது என்னென்ன உரிமைகள் உள்ளன?’ என்று வினவினேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘நீங்கள் உண்ணும்போது அவளையும் உண்ணச் செய்யுங்கள். உடை வாங்கும்போது அவளுக்கும் உடை வாங்கிக் கொடுங்கள். அவளது முகத்தில் அடிக்காதீர்கள். அவளை சபிக்காதீர்கள். அவர்களுடன் தொடர்பை விட்டுவிட நேர்ந்தால் வீட்டில் மட்டும் தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள். இவையே உங்கள் மனைவிக்கிருக்கும் உரிமைகளாகும்’ எனக் கூறினார்கள். (அபூதாவூத்)
நீங்கள் எப்படி உண்கிறீர்களோ அவ்வாறே உங்கள் மனைவிக்கும் உணவளியுங்கள். நீங்கள் எந்தத் தரத்தில் துணிமணிகள் அணிகின்றீர்களோ அதே தரத்திலுள்ள ஆடைகளை அவளுக்கும் அணியக் கொடுங்கள். மனைவி மாறுசெய்யும் போக்கு கொண்டவளாகவும் தொந்தரவு செய்பவராகவும் இருந்தால் குர்ஆனின் அறிவுரைக்கேற்ப அவளுக்கு மென்மையாக உபதேசம் செய்யுங்கள். இருவருக்கும் இடையிலுள்ள மன வேறுபாட்டை வெளியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள இடமளிக்காதீர்கள். ஏனென்றால், தம்பதியினரின் முரண்பாட்டை வெளியே காட்டிக் கொள்வது கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: ‘மனைவியிடம் சிறந்தவராக விளங்குபவரே உங்களில் சிறந்தவர். உங்களிலேயே நான் என் துணைவியரிடம் சிறந்தவராக விளங்குகிறேன்.’ (அத்திர்மிதி)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இயல்பாகவே நல்ல குடும்பத் தலைவராக விளங்கினார்கள். அன்னார் தம் துணைவியரிடம் எப்போதும் சிரித்த முகத்தோடும் கொஞ்சலோடும் பழகுவார்கள். அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டு, குடும்ப செலவுகளுக்கு இயன்றவரை தாராளமாக வழங்குவார்கள். துணைவியரை சிரிக்கவைத்து மகிழ்வார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுடன் ஓட்டப் பந்தயம் நடத்தி அவர்கள் மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு முறை என்னுடன் நடத்திய ஓட்டப் பந்தயத்தில் அவர்களை நான் முந்திச் சென்று முதலாவதாக வந்தேன். இது எனக்கு சதை போடுவதற்கு முன்பு நடந்தது. பின்னர் ஒரு முறை எனக்கு சதை போட்ட பிறகு அவர்களுடன் நடந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டேன். அதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது அவர்கள் ‘அதற்கு இது சமம்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள். (அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்)
மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஷா தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு உறங்குவதற்கு முன்பு துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இது துணைவியாரின் மனதுக்கு இதமாக இருந்தது.
ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (33: 21)
‘நீங்கள் அவர்களை வெறுத்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக்கூடும்.’ (4: 19)
நீங்கள் ஒருபோதும் அவர்களை வீட்டிலிருந்து விரட்டி விடாமல் பொறுமையோடு அவர்களுடன் குடும்பம் நடத்துங்கள். அதனால் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு அதிகமான நன்மைகள் ஏற்படலாம்.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்: மனைவியரிடம் கணவன் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். அப்போது அவள் மூலம் அவனுக்கு குழந்தை பிறக்கலாம். அந்தக் குழந்தையில் அவனுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கலாம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ‘இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் ஒரு பெண்ணை அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடம் அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி அடையட்டும்.’ (ஸஹீஹு முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
மனைவியிடம் ஏதேனுமொரு குறைபாடு காணப்பட்டால் அதற்காக உடனே அவளுடைய உறவை துண்டித்துக் கொள்ள முடிவெடுக்காதீர்கள். ஒரு பெண்ணின் பழக்கங்களில் சில குறைகள் இருந்தாலும் அவளிடமுள்ள வேறு பல பழக்கங்கள் கணவனின் உள்ளத்தை கவரக் கூடியவையாக இருக்கலாம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்: ‘உலகத்தில் எனக்குப் பெண்களும் நறுமணமும் விருப்பமானவையாக ஆக்கப்பட்டன. எனது கண் குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டது.’ (முஸ்னத் அஹ்மத், அந்நஸாஈ)
பெண்கள் விருப்பமானவர்களாக ஆக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில், ஆண்கள் மூலமாக இந்த சமுதாயத்திற்கு தெரிய வராத பல இல்லற விஷயங்கள் பெண்கள் மூலமாகவே அதாவது, குறிப்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவியர் மூலமாக தெரிய வந்துள்ளன. நறுமணத்தை வானவர்கள் விரும்புவார்கள். அவர்களுடன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பேச வேண்டி இருப்பதால் அன்னாருக்கு அது விருப்பமானதாக ஆக்கப்பட்டது. உலகப் பொருட்களில் நல்ல மனைவியே மிகச் சிறந்தவள் ஆவாள். நல்லதொரு குடும்பம் ஒரு பெண்ணின் மூலமே துவங்குகிறது. அவளால் இந்த உலகில் மனித சமுதாயம் பல்கிப் பெருகுவதுடன் இவ்வுலக வாழ்வும் மறுவுலக வாழ்வும் முழுமையடைகிறது. மனித சமூகத்திற்கு பல நன்மைகள் தோன்றுகின்றன.
உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் உணவு சமைத்து ஒரு தட்டு உணவை எடுத்து வந்தேன். அப்போது நபியவர்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டில் இருந்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) ஒரு போர்வையை சுற்றிக் கொண்டு கையில் ஒரு கல் உலக்கையுடன் வந்து, அதன் மூலம் அத்தட்டை உடைத்து விட்டார். நபி (ஸல்லல்லாஹ§ அலைஹி வஸல்லம்) அவர்கள் உடைந்த அவ்விரண்டு பகுதிகளையும் எடுத்து ஒன்று சேர்த்தார்கள். ‘உங்களுடைய தாய் ரோஷமடைந்து விட்டார். நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இரண்டு தடவை கூறினார்கள். பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷாவின் தட்டை எடுத்து எனக்கு கொடுத்து விட்டு, என்னுடைய உடைந்த தட்டை ஆயிஷாவுக்கு கொடுத்தார்கள். (அந்நஸாஈ)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டில் இருந்தபோதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அன்னாரின் சில தோழர்களும் உண்பதற்காக ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்டையில் நபியவர்களின் மற்றொரு மனைவி நபியவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று ஒரு பதார்த்தத்தைச் செய்து அங்கே கொடுத்தனுப்பினார். இதைக் கண்ட ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்குக் கோபம் வந்தது. பணிப் பெண்ணின் கையிலிருந்த உணவுத் தட்டை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அடித்ததில் தட்டு விழுந்து உடைந்தது. பதார்த்தம் சிதறியது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அமைதியாக ஒன்றுசேர்த்து தோழர்களை உண்ணச் செய்தார்கள். பின்னர் உடைந்த தட்டுக்குப் பதிலாக நல்ல தட்டைக் கொடுத்தனுப்பினார்கள். (உம்மதுல் காரீ, பஃத்ஹுல் பாரீ)