மனித மென்பொருள் பாதுகாப்பு
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி) அதிபர், கதீஜதுல் குப்றா பெண்கள் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட
‘ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (7: 26)
கணினி மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகும். வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software) என இரு முக்கிய அம்சங்களைக் கொண்டு இயங்கும் கணினி, பல்வேறு வகைகளில் மனிதனுக்கு பயனளித்து வருகிறது. மனிதனின் கண்டுபிடிப்பாகிய கணினிக்கும் அகிலங்களின் இரட்சகன் அல்லாஹுத் தஆலாவின் சிரேஷ்ட படைப்புக்களில் ஒன்றாகிய மனிதனுக்கும் இடையில் ஒரு சில ஒற்றுமைகளைக் காண முடியும். அவற்றைக் கண்டறிவதற்கு மனிதன் மற்றும் கணினிக்கிடையிலான அடிப்படைக் கூறுகளை சிறிது அறிந்திருப்பது அவசியமாகும்.
கணினி இரு முக்கிய அம்சங்களைக் கொண்டு இயங்குவதைப் போன்று மனிதனும் இரு முக்கிய கூறுகளைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளதை புனித அல்குர்ஆன் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒன்று களி மண்ணினால் படைக்கப்பட்ட உடல். மற்றது, களி மண்ணினால் படைக்கப்பட்ட உடலை இயக்கும் ரூஹ். கணினியில் புலன்களால் அடைந்து கொள்ளக்கூடிய வன்பொருளை ஒத்ததாகவே மனிதனின் உடல் இருக்கின்றது. புலன்களால் அடைந்து கொள்ள முடியாத கணினியின் மென்பொருளை ஒத்ததாகவே மனிதனின் ரூஹ் அமைந்துள்ளது.
மனிதனின் ஆரம்பம் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
‘அவன் ஒவ்வவொரு பொருளின் படைப்பபையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து துவக்கினான்.’ (32: 7)
‘களி மண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். இதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள். பின்னர் கியாமத் நாளில் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.’ (23: 12-16)
இவ்வாறு களி மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனை எவ்வாறு இயக்கவைத்தான் என்பதை பின்வருமாறு அல்லாஹுத் தஆலா விளக்குகின்றான்:
‘பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவிகளையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.’ (32: 9)
கணினி கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதன் இயக்க அமைப்பு (Operating System) வளர்ச்சி கண்டு காலத்திற்கு காலம் தேவைப்படும் மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது. சுமார் 20 – 30 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்க அமைப்பு (Operating System) இன்றைய கணினிகளுக்குப் பொருந்தாது மாத்திரமல்ல, மனிதனின் கணினித் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் இல்லை. கணினி வன்பொருள்களின் நிலையும் இவ்வாறுதான். சுமார் 20- 30 வருடங்களுக்கு முன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வன்பொருட்களை இன்று விலை கொடுத்து வாங்க யாரும் விரும்ப மாட்டார்கள். காரணம், அவை காலத்தின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாக இல்லை.
அகிலங்களின் இரட்சகன் அல்லாஹுத் தஆலாவின் படைப்பாகிய மனிதனின் உடல் அமைப்பிலும் இயக்க அமைப்பிலும் சிந்திப்பவர்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன. முதல் மனிதன் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அதே உடல், உயிர் அமைப்பை இன்றும் என்றும் அல்லாஹுத் தஆலா மனிதனுக்கு வழங்கிக் கொண்டிருப்பான். மனிதனின் உடல் அமைப்பிலும் இயக்க அமைப்பிலும் எந்த வகையான இற்றைப்படுத்தல்களும் தரமுயர்த்தல்களும் (Upgrades) புதுப்பித்தல்களும் கிடையாது.
‘படைப்பவன், படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ண முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன். நீங்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான். அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.’ (16: 17-20)
கணினியின் வன்பொருள், மென்பொருள் இரண்டும் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். வெப்பம், குளிர், தூசு போன்றவற்றின் தாக்கங்களிலிருந்து கணினியின் வன்பொருள் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். இது மிகவும் இலகுவான விடயமாகும். கணினியின் மென்பொருளை வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். இது இலகுவான விடயமல்ல.
கணினி இரு வித்தியாசமான வகையில் பாதுகாக்கப்பட வேண்டியதைப் போன்று மனிதனும் இரு வித்தியாசமான பாதுகாப்பின் பால் தேவையுள்ளவனாக உள்ளான். களி மண்ணினாலான உடம்பு வெப்பம், குளிர் முதலானவற்றிலிருந்து பாதுகாக்கப்படுவது போன்று மனிதனது ரூஹ், ஆன்மா அல்லது உள்ளம் பாதுகாக்கப்படுவதும் அவசியமாகும். உடலைப் பாதுகாப்பதைப் போன்று உள்ளத்தைப் பாதுகாப்பது இலகுவான விடயமல்ல.
மனிதனுக்குத் தேவைப்படும் இவ்விரு வகையான பாதுகாப்புக்கள் பற்றி நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட வசனம் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதை உணர்கின்றோம். இந்த வசனத்தில் மனிதன் தனது உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் இரு வகையான பாதுகாப்புக்கள் பற்றி அல்லாஹுத் தஆலா விளக்கி, உள்ளத்தைப் பாதுகாப்பதுதான் மிகவும் சிறந்தது எனக் குறிப்பிடுகின்றான்.
நாம் அணியும் ஆடைகள் யாவும் எமது உடலை மாத்திரமே மறைத்துப் பாதுகாக்கும். உள்ளத்தை ஒருபோதும் மறைத்துப் பாதுகாக்க மாட்டா. நாம் எமக்காக வாங்கி வைத்த விலையுயர்ந்த எந்த ஆடையும் எமது மரணத்தின் பின் எமக்கு அணிவிக்கப்ட மாட்டா. எமது மண்ணறைக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் முடியாது. மஃஷரில் அவை எமக்கு உள்ளத்திற்கு அணிவிக்கும் தக்வா எனும் ஆடை நிச்சயமாக எமது மண்ணறையிலும் மஃஷர் மைதானத்திலும் எமக்கு உதவும்.
‘நிச்சயமாக அல்லாஹுத் தஆலா உங்கள் உருவங்களையோ உடல்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்.’ (முஸ்லிம்)
உளத்தூய்மை, உளப் பாதுகாப்பு எனும் உயரிய நோக்கங்களுக்காகவே அல்லாஹுத் தஆலா மனிதனின் மீது கடமைகளை விதியாக்கியுள்ளான். உதாரணமாக நோன்பை விதியாக்கிய நோக்கம் பற்றி அல்லாஹுத் தஆலா பின்வருமாறு விளக்குகின்றான்:
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’ (2: 183)
அல்லாஹுத் தஆலா மனிதன் மீது விதியாக்கிய கடமைகளை முழுமையாக கடைபிடித்து, அவன் விலக்கியவற்றை முழுமையாக தவிர்ந்து கொள்வது தக்வாவாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் விட்டுச் சென்ற ஸுன்னாவை முழுமையாகக் கடைபிடித்து விரும்பத்தகாதவற்றை (மக்ரூஹான) முற்றாக தவிர்ந்து நடப்பது தக்வாவின் உச்ச கட்டமாகும்.
கணினி மென்பொருளைப் பாதுகாக்க வைரஸ் பாதுகாப்பு (Virus Guard) தேவைப்படுவது போன்று மனித மென்பொருளைப் பாதுகாக்க தக்வா எனும் பாதுகாப்பு அவசியத் தேவையாக உள்ளது. இறையச்சமுள்ள முத்தகீன்களாக வாழ்ந்து, மரணித்து அல்லாஹுத் தஆலாவின் திருப்தியைப் பெற்று சுவனம் செல்லும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் அல்லாஹுத் தஆலா தந்தருள்வானாக!(மீள்பிரசுரம்)