மாறும் உலகில் மாறாத உள்ளம்

இஸட்.ஏ.எம். பவாஸ் BACC (Hons)

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், மலேசியா

அல்லாஹ் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் அற்புதமான சமநிலையைப் பேணி, அழகுற நிர்வகித்து வருகிறான். அதற்காக அவன் பாரிய ஏற்பாடுகளை நிர்மாணித்துள்ளான். ஒன்று மற்றொன்றில் தங்கி வாழும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளான். அந்த நோக்கத்திற்காக பல படைப்புகளை ஜோடிகளாக அமைத்துள்ளான். ஒன்றை மீட்டி மற்றொன்றை வெளிப்படுத்துகிறான். ஒன்றை மறைத்து இன்னொன்றை வெளிக்கொணர்கிறான். இரவைப் பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். இப்போது பூமியைக் காய்ந்த, வரண்ட கட்டாந்தரையாக ஆக்குகிறான்.

வேறு சிலபோது காற்று, இடி, மின்னல் முதலானவற்றுடன் இணைந்து வானத்திலிருந்து பெரும் மழையை இறக்கி, இறந்த பூமியை உயிர்ப்பித்து பசுமையாக்குகிறான். காடுகளும் மலைகளும் ஆறுகளும் சமுத்திரமும் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. திடீரென அனர்த்தங்களும் அழிவுகளும் பாதிப்புகளும் சேதங்களும் அவற்றில் தோன்றுகின்றன. இவை யாவும் காரணமின்றி நடைபெறுவதில்லை. மாறி மாறி வரும் இந்த நிகழ்வுகள் உலகத்தின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாதவையாகும்.

உலக நியதிகளைப் புரிந்து கொள்ளுங்கள்

மனித வாழ்க்கையையும் அல்லாஹ் இப்படித்தான் அமைத்துள்ளான். நீண்ட காலம் வாழ்க்கை செழிப்புமிக்கதாக உள்ளது. நாம் நினைத்தபடியே அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறுகின்றன. இப்படி இருக்கையில் நமது கற்பனைக்கும் எட்டாத விதத்தில் நிலைமை தலைகீழாக மாறுகிறது. பல வருடங்களாக ஈட்டிய இலாபத்தை சில மாதங்கள் ஏற்படுத்திய நட்டம் அழித்து விடுகிறது.

செல்வச் செழிப்பில் மிதந்தவர்களை வறுமையின் கோரப்பிடி ஆட்கொண்டு விடுகிறது. நீண்ட காலமாக தீட்டிய திட்டங்கள் ஒரு தருணத்தில் தவிடுபொடியாகிறது. ஓர் இழப்பு மற்றும் பல இழப்புகளுக்கு வழியமைத்து விடுகிறது. ஒரு தொங்கலில் ஏற்பட்ட சேதம் இன்னும் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒன்றை பெறத் தவறியதால் கிடைக்கவிருந்த மற்றும் பல வாய்ப்புகள் கைநழுவிச் செல்கின்றன. ஒரு பிரச்சினையுடன் வேறு பல பிரச்சினைகளும் ஒன்றிணைந்து மனித இருப்பையே மாற்றி விடுகின்றன.

ஓர் ஏக்கத்தில் இருந்து விடுபடும்போது இன்னோர் ஏக்கம் மனிதனை தழுவிக் கொள்கிறது. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்போது மற்றொரு பிரச்சினை தாவிக் கொள்கிறது. உலக வாழ்க்கையின் இத்தகைய நிகழ்வுகளும் காரணம் ஏதுமின்றி நடைபெறுவதில்லை. காற்று, இடி, மின்னல், மழை போன்றவற்றின் மூலம் பூமியை அல்லாஹ் வளப்படுத்தி செழிப்பாக்க விரும்புவது போல் துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், நெருக்கடிகள் போன்றவற்றின் மூலம் மனித உள்ளத்தை வளப்படுத்தி, செழிப்பாக்க விரும்புகிறான்.

மனிதனை அவனது இறைவன் சோதித்து, அவனை கண்ணியப்படுத்தி அவனுக்கு அருள் புரிந்தால் அவன்,என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தி விட்டான்” என்று கூறுகிறான். இன்னும் அவன் அவனை சோதித்து அவனது வாழ்வாதாரத்தை அவனுக்கு நெருக்கடியாக்கி விட்டால் என் இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்” எனக் கூறுகிறான்.” (89: 15 – 16)

இந்த இரு நிலைகளிலும் மனிதனின் உள்ளமும் சிந்தனையும் சிதைவுறாமல் திடமாக இருக்கிறதா என்பதைத்தான் அல்லாஹ் நோட்டமிடுகிறான்.

மனிதன் பொதுவாக எதையும் அடைந்துகொள்ள அவசரப்படுகிறான். ஓர் அருளை அல்லாஹ் தனக்காக ஏன் பிற்படுத்துகிறான் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறான். நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். நலனை அடைந்து கொள்வதில் மனிதர்கள் அவசரப்படுவது போல் அவர்களுக்கு தீங்கு விளைவிக்க அல்லாஹ்வும் அவசரப்பட்டால் அவர்களது தவணைக் காலம் அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும்.

செழிப்பில் மகிழ்ச்சியும் துயரத்தில் விரக்தியுமா?

விளிம்பில் நின்று அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் உள்ளான். எனவே, அவனுக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் அதனால் அமைதி அடைகிறான். அவனுக்கு ஏதேனும் ஒரு சோதனை நேர்ந்து விட்டால் நிராகரிப்பு எனும் தன் திசையில் திரும்பி விடுகிறான்.” (22: 11)

எம்மிடமுள்ள ஏதேனும் ஓர் அருளை நாம் மனிதனுக்கு சுவைக்கச் செய்து பின்னர் அவரிடமிருந்து அதனைப் பிடுங்கிக் கொண்டால் நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து நன்றி கெட்டவனாகி விடுகிறான். அவனுக்கு நேர்ந்த துன்பத்திற்கு பின்னர் அருளை நாம் அவருக்கு சுவைக்கச் செய்தால் என்னை விட்டும் துன்பங்கள் நீங்கி விட்டன” என கூறுகிறான். நிச்சயமாக அவன் அகமகிழ்ச்சியும் அகந்தையும் கொள்பவனாவான். எனினும், எவர்கள் பொறுமையாக இருந்து நல்லறங்களும் புரிகின்றார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.” (11: 9- 11)

மேற்கூறிய வசனங்களில் அல்லாஹ் மனிதன் குறித்தும் அவரிடமுள்ள மட்டமான குணங்கள் குறித்தும் தெரிவிக்கிறான். இறையருள் பெற்ற நல்லடியார்கள் இதிலிருந்து விதிவிலக்கானவர்கள் என்றும் அல்லாஹ் விவரிக்கிறான். மனிதனுக்கு இன்பத்திற்குப் பின் துன்பம் வந்தால் எதிர்காலத்தைப் பற்றி அவநம்பிக்கையும் நிராசையும்தான் அவனுக்கு ஏற்படுகின்றன. கடந்த காலத்தில் தான் எந்த ஒரு நன்மையையும் காணாதவனைப் போன்று செய்ந்நன்றி மறந்தவனாகவும் இறையருளை மறுப்பவனாகவும் அவன் மாறிவிடுகிறான். இனிமேல் தனக்கு விடிவு காலமே இல்லை என்பதைப் போன்று அவன் நடந்து கொள்கிறான்.

நிச்சயமாக மனிதன் பெரும் பதற்றக்காரனாக படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் தீங்கு நேர்ந்தால் பதற்றமடைகிறான். மேலும் அவனுக்கு நன்மை ஏற்பட்டால் பிறருக்கு வழங்காது தடுத்துக் கொள்கிறான். தொழுகையாளிகளைத் தவிர.” (70: 19 – 22) அதாவது அவனுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் பதற்றத்திற்கும் திடுக்கத்திற்கும் ஆளாகிறான். கடுமையான பீதியினால் உள்ளம் நொந்து போகிறான். அதன் பிறகு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று நிராசையடைகிறான். அவனுக்கு வளம் வந்தால் கடும் கஞ்சனாக ஆகிறான். அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏதேனும் அருள் கிடைத்தால் அதனைக் கொண்டு மற்றவர்கள் மீது கஞ்சத்தனம் காட்டுகிறான். அதிலிருந்து அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய உரிமையைக்கூட செலுத்த மறுக்கிறான். அல்லாஹ் யாரை இந்த இழி குணங்களிலிருந்து பாதுகாத்தானோ, நட்பேறு அளித்தானோ, நன்மையின் பக்கம் வழிகாட்டினானோ அதற்கான வழிகளையும் அவர்களுக்கு எளிதாக்கி கொடுத்தானோ அத்தகையவர்களைத் தவிர. அவர்கள்தான் தொழுகையாளிகளாவர்.

இன்ப- துன்பங்களில் மனிதனது உள்ளம் மாற்றத்திற்குள்ளாகும் மற்றுமொரு விதத்தைக் குர்ஆன் இப்படி சித்திரிக்கிறது:

மனிதனுக்கு ஏதேனும் ஒரு துன்பம் நேர்ந்து விட்டால் அவன் தன் இறைவன்பால் மீண்டவனாக அவனை பிரார்த்திக்கிறான். பின்பு தன்னிடமிருந்து ஏதேனும் அருட்கொடையை அல்லாஹ் அவனுக்கு வழங்கினால் இதற்கு முன்னர் தான் அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்ததை மறுந்து விடுகிறான்.” (39: 8)

தேவை ஏற்படும்போது மிகவும் பணிவுடன் இறைஞ்சுகிறான். இணை-துணையற்ற ஏக இறைவனிடம் உதவி கேட்கிறான். அல்லாஹ் அவனது துயரத்தை நீக்கி விடுகிறான். மேலும் அவனுக்கு அருள்களை அள்ளிக் கொடுக்கிறான். இந்த வசனத்திலுள்ள கவ்வலஹு” என்ற பதம் மனிதனை ஓர் அருளினால் போர்த்தி, அதற்கு மேல் இன்னோர் அருளினால் போர்த்தி, பின்னர் அதற்கு மேல் மற்றோர் அருளினால் போர்த்தி அல்லாஹ் தனது அருள் வாசல்களை அகலத் திறந்து விடுவதை சுட்டுகிறது. ஆனால், இந்த செழிப்பான சுழலில் மனிதனின் நிலைப்பாடு என்ன? முன்னர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததையும் பணிந்ததையும் மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் மறுத்து விடுகிறான்.

இதே கருத்தை குர்ஆன் இன்னொரு ஸூராவில் இப்படி குறிப்பிடுகிறது: மனிதனுக்கு துன்பம் நேர்ந்து விட்டால் அவன் தனது விலாப் புறத்தில் சார்ந்தவனாக அல்லது உட்கார்ந்தவனாக அல்லது நின்றவனாக நம்மை அழைக்கிறான். நாம் அவனது துன்பத்தை அவனை விட்டும் நீக்கி விட்டால் தனக்கு நேர்ந்த துன்பத்திற்காக எம்மை அழைக்காதவன் போன்று செல்கிறான்.” (10: 12)

மனிதனுக்கு நெருக்கடிகள் தோன்றும்போது பதற்றமும் கலக்கமும் அடைந்து அவன் அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபடுகிறான். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டும் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் என எல்லா நிலைகளிலும் அந்த நெருக்கடிகளைத் தன்னை விட்டு அகற்றுமாறு இறைவனிடம் மன்றாடுகிறான். ஆனால், அவனது துன்பத்தை அல்லாஹ் அகற்றி, நெருக்கடியைப் போக்கி விட்டால் அலட்சியமாக நடந்து கொள்கிறான். விலகி வெகுதூரம் போகிறான். ஏதோ இதற்கு முன் தனக்கு எதுவுமே நேர்ந்திராததைப் போன்று அவன் செயல்படுகிறான்.

அடுத்து இத்தன்மையுள்ள மனிதனை இகழ்ந்துரைக்கும் வகையில், இவ்வாறே வரம்பு மீறுவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருப்பவை அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது” (10: 12) என்று தெரிவிக்கின்றான். யாருக்கு நல்வழியையும் சீரான பாதையையும் நன்மை செய்வதற்கான வாய்ப்பையும் அல்லாஹ் அருளியுள்ளானோ அவர்கள் இதிலிருந்து விதிவிலக்குப் பெறுவர்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஸுஹைப் பின் ஸினான் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளரின் நிலை வியப்பூட்டுவதாக அமைந்துள்ளது. அவருக்கு அல்லாஹ் எதை விதித்தாலும் அது அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகிறது. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுமாயின் உடனே அல்லாஹ்வுக்கு நன்றி

செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துக்கம் ஏற்பட்டால் உடனே பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாகவே அமைகிறது. இது இறைநம்பிக்கையாளருக்கு தவிர வேறு யாருக்கும் வாய்ப்பதில்லை.” (முஸ்னத் அஹ்மத்)

நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் அவன் புறக்கணித்து தூர விலகிச் செல்கிறான். அவனுக்குத் தீங்கு நேர்ந்து விட்டால் நீண்ட பிராத்தனை உடையவனாக இருக்கிறான்.” (41: 51)

அருள்களை அனுபவிக்கும்போது அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் புறக்கணிக்கிறான். அவனுடைய ஆணைகளுக்கு இணங்காமல் தற்பெருமை கொள்கிறான். இது ஃபிர்அவ்னைப் பற்றி அல்லாஹ் கூறிய செய்தியைப் போன்றதாகும்.

தனது படைகளின் பக்கபலத்தால் அவன் புறக்கணித்து திரும்பினான்.” (51: 39)

அவனுக்குத் துன்பம் நேர்ந்து விட்டால் நீண்ட பிரார்த்தனை உடையவனாக மாறிவிடுகிறான். நீண்ட பிரார்த்தனை என்றால் ஒரே ஒரு விஷயத்திற்காக நீண்ட நேரம் பிரார்த்தனை செய்வதாகும். அதற்காக அகலமான வார்த்தைகளை கையாளுகிறான். அல்கவாமுல் அரீழ்” என்பது சொற்கள் அதிகமாகவும் கருத்துக்கள் குறைவாகவுமுள்ள வார்த்தைகளாகும். அவர்களது பிரார்த்தனையை அல்லாஹ் துஆஉன் அரீழுன்” என்று குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் நாடியதே நடக்கும்

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நாடியதைத் தவிர எந்தவொரு தீமையையோ, நன்மையையோ எனக்கு நான் செய்து கொள்ள சக்தி பெற மாட்டேன் என நபியே நீர் கூறுவீராக!” (10: 49)

அல்லாஹ் உமக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு ஏதேனும் நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுத்து விடுபவன் யாருமில்லை. தனது அடியார்களில் தான் நாடுவோருக்கு அதை ஏற்படுத்துகிறான். அவன் மிக்க மன்னிப்பவனும் மிக்க அன்புடையவனுமாவான்.” (10: 107)

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: நான் ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது அன்னார், சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன். அவற்றை நீ உன் மனதில் வைத்து பாதுகாத்துக் கொள். அல்லாஹ்வை உன் மனதில் இருத்தி விடு. அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை உன் மனதில் இருத்திப் பாதுகாத்தால் நீ அவனை உனக்கு முன்னால் காண்பாய். நீ எதையும் கேட்டால் அல்லாஹ்விடமே கேட்பாயாக. உதவி தேடினால் அவனிடமே உதவி தேடுவாயாக. அறிந்து கொள்! முழு மனித சமூகமும் ஒன்றுசேர்ந்து உனக்கு ஏதாவது நன்மை செய்ய நினைத்தாலும் அல்லாஹ் உனக்கென எழுதியவற்றைத் தவிர வேறு எந்த நன்மையையும் அவர்களால் செய்துவிட முடியாது. அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உனக்கு ஏதும் தீங்கிழைக்க நினைத்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்தவற்றை தவிர எந்தத் தீங்கையும் அவர்கள் செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன” என்று கூறினார்கள். (அத்திர்மிதி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *