மாற்றங்களை சுமந்து வரும் துல்ஹஜ்…

அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி), (எம்.ஏ.)

விரிவுரையாளர், ஜாமிஆ ஆயிஷா ஸித்தீக்கா – மாவனல்லை

துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் முக்கியத்துவமும் முன்பைவிட இன்று அதிகம் பேசப்படுகின்றது. சமூகத்தில் இஸ்லாமிய உணர்வுகளின் ஆரோக்கிய நிலைக்கு இதுவோர் அடையாளம். குறிப்பாக, நாம் அடைந்திருக்கும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் ஸூரதுல் பஜ்ரில் அல்லாஹ் சத்தியம் செய்து கூறும் தினங்களாகும். நற்கருமங்கள் புரிவதற்கு வேறு எந்த நாட்களையும் விட அதிசிறந்த நாட்களாக நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட நாட்கள் இவை.

இஸ்லாத்தில் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் பெருநாள் தினங்கள் நற்கருமங்களுடன் இறுக்கமாகத் தொடர்புபட்டுள்ள பாங்கும் இங்கு நோக்கத்தக்கதாகும். ரமழானை அடுத்து நோன்புப் பெருநாள் அமைவது போல, ஹஜ் எனும் பெரும் கடமையோடு இணைந்ததாக ஹஜ்ஜ§ப் பெருநாள் அமைகிறது.  நோன்புப் பெருநாள் முப்பது நாட்களின் நல்லமல்களைக் கடந்து வருகிறது| ஹஜ்ஜ§ப் பெருநாள் நன்மைகளுக்குரிய பத்து நாட்களைக் கடந்து எம்மை அடைகிறது.

எனினும், நன்மைகளின் வசந்தமாக ரமழான் உணரப்படுவது போல் துல்ஹஜ்ஜின் முதல் பத்து தினங்கள் உணரப்படுவதில்லை. பெற்றோரைப் பொறுத்த வரையில் இது தொடர்பில் ஒரு முக்கிய பங்கும் பொறுப்பும் இருக்கின்றன. நாம் மனது வைத்தால், துல்ஹஜ் பத்து தினங்களையும் ஒரு பயிற்சிப் பாசறையாக, பிள்ளைகளின் தர்பியாவுக்கான சிறந்த காலமாக எம்மால் மாற்றி அமைத்திட  முடியும்.

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போதும்கூட, அவர்களை தன்னோடு ஒரு பிரயாணத்தில் இணைத்துக் கொள்ளும் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘சிறுவனே! நான் உனக்குச் சில விடயங்களை கற்றுத் தருகிறேன்…’ என ஆரம்பித்து ஈமான் மற்றும் இறை அவதானம் சார்ந்த பல அம்சங்களைக் கற்றுக் கொடுத்ததைக் காண்கிறோம். குழந்தைகளுக்கான தர்பிய்யா வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

கொவிட் 19 எமக்கு விட்டுச் செல்லும் படிப்பினைகளுள் மிக முக்கிமானது குடும்ப உருவாக்கம் சார்ந்த அம்சமாகும். உழைப்புக்காக சதாவும் ஓடிக்கொண்டிருக்கும் எமக்கு, குடும்பத்தோடு குழந்தைகளோடு கழிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால், தொற்று நோய் காலத்தில் நிர்ப்பந்தமாக வீட்டில் முடக்கப்பட்டோம். வீடுகள் மஸ்ஜிதுகளாக மாறின; பிள்ளைகளோடு அமர்ந்தோம்| இபாதத்களில் கூட்டாக ஈடுபட்டோம்; பயிற்றுவிப்புக்களை மேற்கொண்டோம்.

இந்த அனுபவங்களின் ஊடாக, இப்போது எம்மை அடைந்திருக்கும் துல்ஹஜ் முதல் பத்து நாட்களையும் நமது பிள்ளைகளுக்கான மற்றுமொரு பயிற்சிப் பாசறையாக மாற்றுவோம்.

பெரியவர்களைப் பொறுத்தவரையில் அமல்களுக்குரிய சிறப்புகளையும் நன்மைகளையும் கேட்ட மாத்திரத்திலேயே இபாதத்களில் ஈடுபடுவதற்கு உற்சாகம் ஏற்பட்டு விடும். சிறார்களைப் பொறுத்தவரையில், வித்தியாசமான வடிவங்களில் அவர்களுக்கே உரிய பாணியில் அந்த உற்சாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, எமது வீட்டுச் சூழலுக்கு ஏற்ற வகையில் சிறியதொரு திட்டமிடலை மேற்கொண்டால் இதனை வெற்றிகரமாக அடைந்து கொள்ள முடியும்.

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களுக்கென்று விஷேடமாக இபாதத்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை. இக்காலத்தில் எல்லா இபாதத்களும் சிறப்பானவைதான். அது நோன்பு, தொழுகை, குர்ஆனுடனான உறவு, திக்ர், சதகாக்கள், மார்க்கத்தைப் படிக்கும் முயற்சிகள், பிறருக்குச் செய்யும் உதவிகள் என பல்வகைப்பட்டதாக அமையலாம். எனவே, எமது குழந்தைகளுக்கு இத்தினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களுடன் இணைந்து ஒரு நேரசூசியை ஏற்படுத்தி இத்தினங்களின் உச்ச பயன்களை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சிறார்களுக்கு போட்டிகள் என்றால் பிடிக்கும். எழுத்து, பாட்டு, கவிதை, வீடியோக்களை உருவாக்குதல் என நன்மைக்கான போட்டிகளை ஏற்படுத்தி, பெருநாள் பரிசுகளோடு அவற்றை சம்பந்தப்படுத்தி உற்சாகமூட்டலாம்.

ஒரு சகோதரர் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது. ஜுமுஆ, பெருநாள் குத்பாக்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அங்கு அவர்கள் தூங்கிவிடாதிருக்க அவர் ஒரு வழிமுறையை மேற்கொண்டார். குத்பாவில் பேசப்படும் விடயங்களைக் குறிப்பெடுத்து வந்து அவற்றை வீட்டில் பரிமாற வேண்டும்| அன்பளிப்புகள் காத்திருக்கும் என்று அவர் தனது சிறார்களுக்குக் கூறினார். அவர் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

இவ்விதமாக துல்ஹஜ்ஜை எமது குழந்தைகளின் சுபாவங்களுக்கு ஏற்ற விதத்தில் வேறுபட்ட விதங்களில் நாம் திட்டமிடலாம். அல்லாஹ்விடம் உருக்கமாகப் பிரார்த்தித்து திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.

‘தியாகம்’ என்பது பாசறையின் தொனிப்பொருளாக அமையட்டும். மாற்றங்களை சுமந்து வரும் காலமாக ஹஜ் காலத்தை இன்ஷா அல்லாஹ் மாற்றிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *