முகமலர்ச்சியும் நற்பண்பும் அழகிய தொடர்பாடலின் மூலதனம்: நபிகளார் வாழ்வு தரும் பாடம்

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: உங்களது சொத்து, செல்வத்தின் மூலம் நீங்கள் மனிதர்களின் உள்ளங்களில் இடம்பிடிக்க முடியாது. உங்களிடமிருந்து வெளிப்படும் முகமலர்ச்சியும் நற்பண்பாடும் அவர்களின் உள்ளங்களில் இடம்பிடிக்கட்டும்.” (அல்பஸ்ஸார், அல்ஹாகிம்)

இவ்வுலகில் உள்ளங்களைத் தவிர உள்ள அனைத்தையும் இலகுவில் சம்பாதிக்க முடியும். வாழ்வாதாரங்கள் மூலம் உள்ளங்களைச் சம்பாதிப்பது சிரமசாத்தியமானதாகும். மனித உள்ளங்களை ஆகர்ஷிக்கின்ற சக்தி முகமலர்ச்சிக்கும் நற்பண்பாட்டுக்கும் உள்ளது என்ற செய்தியை இந்த ஹதீஸின் மூலம் பெற்றுக் கொள்கின்றோம்.

சமூக பரஸ்பர தொடர்புகளில் ஆரோக்கியம் அருகி வருகின்ற ஒரு காலப் பிரிவில் நாம் வாழ்ந்து வருகின்றோம். மனிதன் பணத்தையும் பண்டத்தையும் சம்பாதிப்பதில் அதீத ஆர்வம் காட்டி பேரிடரைச் சந்தித்துள்ளான்.

மனிதர்களைச் சம்பாதிப்பதில் தோல்வியடைந்துள்ளான். நமது இஸ்லாமிய வாழ்க்கை நெறி அழகிய தொடர்பாடலின் ஊடாக மனிதர்களைச் சம்பாதிப்பதற்கான வழிகாட்டலை முன்வைத்துள்ளது. அழகிய அணுகுமுறை ஒரு மனித விழுமியம் மட்டுமல்ல, அது ஒரு கட்டாயக் கடமை என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

நீங்கள் மனிதர்களுக்கு அழகிய வார்த்தைகளைக் கூறுங்கள்.” (ஸூரதுல் பகரா: 83)

அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் நளினமாக நடந்து கொண்டீர்…” (ஆலு இம்ரான்: 159)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வாழ்வியல் குறிப்புக்களில் அழகிய தொடர்பாடலுக்கான சான்றாதாரங்கள் நிரம்பியுள்ள இவ்விவகாரத்தில் அண்ணலாரின் நண்பர்கள் சான்று பகருவதற்கு முன்னர் அவரது எதிரிகள் சான்று பகர்ந்துள்ளனர்.

மக்காவை வெற்றி கொள்ளும் நோக்குடன் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பயணித்த பயணப் பாதையில் அபூ ஸுப்யானையும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமைய்யாவையும் சந்தித்தார்கள். அவ்விருவரும் இறைதூதருக்கு மிகவும் நெருக்கமான உறவுகள். ஆனாலும், மக்காவிலுள்ள மனிதர்களில் அவர்களுக்கு அதிகம் தொல்லை கொடுத்தவர்கள். அவ்விருவரையும் பழிவாங்காமல் அலட்சியப்படுத்திவிட்டு அண்ணலார் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

அப்போது அலி இப்னு அபீதாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூ ஸுப்யானிடம் இறைதூதரிடம் சென்று யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பார்த்து அவர்களது சகோதரர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உங்களுக்கு தீங்கிழைத்து விட்டோம். ஆனாலும் நிச்சயமாக அல்லாஹ்! எங்களை விட உங்களை மேன்மையாக்கி வைத்துள்ளான்” (ஸூரா யூஸுப்: 91) என்று கூறினார்கள் என்ற திருமறை வசனத்தைக் கூறுமாறு ஆலோங்னை வழங்கினார்கள். அபூ ஸுப்யான் அந்த வசனத்தைக் கூறவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலுக்கு இந்த வசனத்தை ஓதினார்கள் இன்றைய தினம் நான் உங்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தவில்லை. அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களில் மாபெரிய கருணையாளன்.”             (ஸூரா யூஸுப்: 92)

மக்கா வெற்றியின் பின்னர் நபிகளார் தன்னை எதிர்த்து மக்காவிலிருந்து வெளியேற்றியவர்களை மன்னித்துவிட்ட நிகழ்வு பிரபல்யமானது. கஃபாவுக்கு முன்னால் வந்து நின்ற இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உங்களை நான் என்ன செய்வேன் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” என வினவினார்கள். அதற்கு இணைவைப்பாளர்கள் நீர் சங்கைமிகு சகோதரர். மேலும் நீர் சங்கைமிகு சகோதரரின் மகன்” என்றனர். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உங்களுக்கு விடுதலையளிக்கப்படுகிறது. நீங்கள் செல்லலாம்!” எனக் கூறினார்கள்.

அல்மதீனதுல் முனவ்வரா என்ற தேசத்தின் பிரஜைகளே அங்கு வாழ்ந்த யூதர்கள். இறைதூதரின் அயல் வீட்டுக்காரராக ஒரு யூதர் இருந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழகிய தொடர்பாடல் மற்றும் பண்பாடுகளின் காரணமாக அவர் நபிகளார் போதனைகளையும் அவர் தூதையும் ஏற்றார்.

அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பத்து வருடன் சேவை செய்தார்கள். இக்காலப் பிரிவில் அவரைப் பார்த்து ‘ச்சே” என்று அண்ணலார் கூறியதில்லை. அனைத்து மனிதர்களின் முன்னாலும் முகம் மலர்ந்த நிலையில் நபியவர்கள் காணப்படுவார்கள். எந்தளவுக்கென்றால், அவர்கள் யாரை வெறுப்பாளர்களோ அவர்களது தீங்கிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கு அத்தகைய மனிதர்கள் முன்னிலையிலும் முகம் மலர்ச்சியுடன் காணப்படுவார்கள். இறை வேதங்களும் அவர்களது நற்குணம் பற்றி சான்று பகர்ந்தன. தௌராத்தில் கீழ்வருமாறு இடம் பெற்றுள்ளது:

நபியே! உம்மை சான்றுபகருகின்ற, நற்செய்தி கூறுகின்ற, அச்சமூட்டி எச்சரிக்கின்ற, எழுத வாசிக்கத் தெரியாத, சமூகத்தைப் பாதுகாக்கின்ற தூதராக நாம் அனுப்பியுள்ளோம். நீர் எனது அடியாரும் தூதருமாவீர். உமக்கு ‘அல்முதவக்கில்’ என்று நான் பெயர் சுட்டினேன். இவர் கடின சித்தமும் கரடுமுரடான சுபாவமும் உள்ளவரல்ல. கடைத் தெருக்களில் சப்தமிட்டு பேசுபவரும் அல்ல. தீமையைத் தீமையைக் கொண்டு தடுப்பவரல்ல. ஆனாலும் மன்னிக்கும் தயாள குணம் படைத்தவர்.” (அல் புகாரி)

நாம் மேலே குறிப்பிட்ட அண்ணலாரின் அழகிய தொடர்பாடல் மனித மனங்களை வசீகரிப்பதற்கான ஊடக சாதனமாக அமைந்தது. நவீன உலகிலும் அவர்கள் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த மாமனிதர்கள் நூறு பேரில் முதன்மையானவராக இருக்கின்றார்கள்.

அழகிய தொடர்பாடல் பல்வேறு வடிவங்களில் பிரதிபலிக்கக் கூடியது.

1.         முகமலர்ச்சியுடன் கூடிய சந்திப்பும் இதயபூர்வமான வரவேற்பும்

மனித மனங்களை ஆகர்ஷிக்கக்கூடிய ஆற்றல் முகமலர்ச்சிக்கும் வரவேற்புக்கும் உண்டு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். தன்னெதிரில் நிற்பவரின் அல்லது இருப்பவரின் மனோநிலையை முகபாவனை காட்டிக் கொடுத்துவிடும். முகமலர்ச்சி இதயசுத்தியின் விளைவாக அமைதல் வேண்டும். அது இயற்கையாக அமைதல் வேண்டும். இதனையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஸதகா’ என சிலாகித்தார்கள். உனது சகோதரனின் முகத்திற்கு முன் நீ புன்னகைப்பது ஸதகா” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அத்திர்மிதி)

முகமலர்ச்சியும் புன்னகையும் வரவேற்பும் இன்றைய கால காட்டத்தில் அரிதாக வருகின்றன. ஏனெனில், மனிதன் மனிதனோடு உள்ள உறவை வேரறுத்துக் கொண்டு கருவிகளுடனும் இயந்திரங்களுடனும் உறவைப் பலப்படுத்தி வருவதால் மனித விழுமியங்கள் வழக்கொழிந்து வருகின்றன. நாம் மேலே குறிப்பிட்ட விழுமியங்கள் வணிகமயப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வியாபாரியின் முகமலர்ச்சி, புன்னகை, வரவேற்பு வாடிக்கையாளர் சேவை என்ற வகையிலேயே அமைகின்றது.

ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் அல்லது வானொலி அறிவிப்பாளரின் புன்னகையும் உரையாடலும் நேயர் பெருமக்களை கவர்ந்திழுக்கும் வகையில் செயற்கையாக அமைத்து மின்னலைப் போல தோன்றி மறைந்து விடுகின்றன. வகுப்பறைச் சூழலில் மாணவர்கள் முன்னால் ஆசிரியரின் வதனம் வாடி வசந்தமிழந்து காணப்படுகிறது. அங்கு வரவேற்பு என்பது பஞ்சமாகவே உள்ளது. ஆனால், நபிகளார் தங்களுக்கு அறிமுகமில்லாதவர்களுடன் முதலில் அறிமுகமாகிக் கொள்வார்கள். பின்னர் மிகுந்த வரவேற்பு ஒன்று அங்கு நிகழும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் ஒரு குழுவினர் வந்தனர். அப்போது இவர்கள் யார்? இவர்கள் எந்த சமூகம்?” என நபியவர்கள் வினவினார்கள். இவர்கள் ரபீஆ கோத்திரத்தார்” என நபித்தோழர்கள் பதிலளித்தார்கள். எதுவித கைசேதமும் இழிவும் இல்லாத நியில் உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்” என இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்த்தி வரவேற்றார்கள்.

வந்தோரை வரவேற்றல் உறவுப் பாலத்திற்கான அத்திவாரக் கல் எனக் குறிப்பிடலாம். மரணத் தறுவாயில் இருக்கும் நல்லோரை வாழ்த்தி வரவேற்ற பின்னரே வானவர்கள் அவர்களது உயிர்களைக் கைப்பற்றிச் செல்கின்றனர்.

நல்லோரின் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் உங்கள் மீது சாந்தி சமாதானம் நிலவட்டும்! நீங்கள் ஙெ்ய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணமாக சுவனம் நுழையுங்கள்” எனக் கூறுவார்கள். (அந்நஹ்ல்: 32)

மரணத் தறுவாயில் இருப்போரை மனித இயல்புக்கு அப்பாற்பட்ட வானவர்களே இதயபூர்வமாக வரவேற்கின்றார்கள் என்றால் மனித இயல்புள்ளவர்கள் தங்களுக்கிடையே உள்ள வரவேற்பை சிரேஷ்டத்துவம் உள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? இன்றைய இளவல்கள் திறன்பேசியின் முகம் பார்த்துப் பழகி மனித முகம் பார்த்து வரவேற்கும் விழுமியத்தை இழந்து நிற்பது மனதுக்கு வேதனையளிக்கின்றது. இந்நிலையில் அழகிய தொடர்பாலும் நல்லுறவும் எம் சமூகச் சூழலில் வளர்ந்தோங்க முடியுமா?

2. அடுத்தவர்களின் விவகாரங்களில் கரிங்னை காட்டுவதும் சாத்தியமான சேவைகளை வழங்குவதும்

அழகிய தொடர்பாடல் மற்றும் நல்லுறவு வரை அடுத்தவர் விவகாரங்களில் கரிங்னை காட்ட வேண்டும். நவீன உலக ஒழுங்கில் நேர்மறையான பல்வேறு விடயங்கள் மனிதனது வாழ்வியலில் தாக்கம் செலுத்தி அவனை ஆக்கபூர்வமான பாதையில் வழிநடத்தி வருகின்றன. அதேவேளை எதிர்மறையான பண்புகளும் அவனது வாழ்வியலை ஆழமாக பாதித்துள்ளன. அவற்றில் பிரதானமானது, மனிதன் தனக்காக மட்டும் வாழப் பழகியுள்ளான். அவனது தேவைகள், சௌகரியங்கள் அவனுக்கு உரிய குறிக்கோளாக மாறியுள்ளன.

அடுத்தவர்களுக்காக வாழ்வது என்பது ஒரு தத்துவப் பேச்சாக மட்டும் எமக்கு மத்தியில் இருக்கின்றது. அடுத்தவருக்காக வாழுவது போன்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அந்த மாயைக்குப் பின்னால் சுயநலமே மறைந்துள்ளது. அடுத்தவருக்காக வாழும்போது ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்ந்ததாக உணருகின்றான். அடுத்தவர்களுக்கு இயன்றளவு சேவையை வழங்குவது அழகிய தொடர்பாடலுக்கான உத்தரவாதமாகும்.

நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மத்யன் பிரதேசத்திற்குச் சென்றார்கள். ஆனால், அந்தப் பிரதேசத்திற்கு அவர் அந்நியவர். இருப்பினும், முன்பின் அறிமுகமில்லாத இரு கன்னிப் பெண்களின் ஆடுகளுக்கு நீர் புகட்டும் சேவையை பேரம் பேசலின்றி வழங்கினார்கள். (பார்க்க: அல்கஸஸ்: 24) அவர்களது அழகிய தொடர்பாடலின் மூலம் நபி ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது குடும்பத்தாருடன் நெருங்கிய உறவு ஏற்பட்டு அவர்களது ஒரு மகளைத் திருமணம் முடிக்கும் பாக்கியம் பெற்றார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பும் வரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (அல்புகாரி, முஸ்லிம்) அடுத்தவருக்காக வாழ்தல் ஈமானின் முழு நிறைவான நிலை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

3. அடுத்தவர்களை இழிவுபடுத்தாமலும் சிரமத்திற்குள்ளாக்காமலும் வாழ்தல்

அழகிய தொடர்பாடலை துண்டித்து விடுகின்ற மற்றுமோர் அம்சமே பிறரை சிரமத்திற்குள்ளாக்குதல். பிறருக்கு தொந்தரவாக இருத்தல் ஈமானியப் பண்பல்ல.

இறைவிசுவாசிகளான ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை செய்ததாகக் கூறி துன்புறுத்துகின்றார்களோ அவர்கள் நிச்சயமாக (பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றார்கள்.”      (அல் அஹ்ஸாப்: 58)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான். இவன் அவனுக்கு அநியாயமிழைக்க மாட்டான். அவனை கையறு நிலையில் விட மாட்டான்.”

இங்கு நாம் பதிவு செய்த விழுமியங்கள் முஸ்லிம்களுடன் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களுடனும் பகிரப்படல் வேண்டும். பொதுவாக மனிதர்கள் தங்களுடன் ஏனைய மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றார்களோ அவ்வாறு அவர்களுடன் நமது நடைமுறைகளை அமைத்துக் கொள்வதே அழகிய தொடர்பாடலாகும். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

நரகப் பெரு நெருப்பிலிருந்து தூரப்படுத்தப்பட்டு சுவனத்தில் நுழைவிக்கப்பட வேண்டும் என யார் விரும்பினாரோ அவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆழமாக விசுவாசித்த நிலையில் அவருக்கு மரணம் வரட்டும். மேலும், தங்களுடன் ஏனைய மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மனிதர்கள் விரும்புகின்றார்களோ அவர் அவ்வாறு அவர்களுடன் நடந்து கொள்ளட்டும்” (முஸ்லிம்)

குறிப்பாக, சமூகத்திலுள்ள தொழிலகங்கள், நிறுவனங்கள், காரியாலயங்கள் முதலானவற்றில் பணியாற்றுகின்ற ஓர் உத்தியோகத்தர் தன் சகபாடிகளுடன் அழகிய தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும். அல்குர்ஆன் இவ்வாறு கட்டளையிடுகின்றது.

பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், உறவினர்களான அயலவர்கள், அந்நியவர்களான அயலவர்கள், எப்போதும் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள், வழிப்போக்கர்கள், உங்களிடம் இருக்கும் அடிமைகள் முதலானவர்களுடன் அழகிய தொடர்பாடலை பேணிவாருங்கள்.” (அந்நிஸா: 36)

ஓர் உத்தியோகத்தர் தன்னை பணிக்கு அமர்த்திய மேலதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுடன் அழகிய தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் குறித்த உத்தியோகம் அல்லது பணி தொடர்பில் அதிகம் அனுபவ அறிவுள்ளவர்கள். அவர்களது விருப்பங்கள், உத்தரவுகள் போன்றவற்றை ஓர்  உத்தியோகத்தர் அமுல்படுத்துவதில் அவர்களோடுள்ள இவரது அழகிய தொடர்பாடல் வெளிப்படும். மேலும் அவர்களோடுள்ள நல்லுறவு, அவர்களைப் பற்றிய இவரது நல்லபிப்பிராயம் ஆகியவற்றிலும் அழகிய தொடர்பாடல் பிரதிபலிக்கும். தனது மேலதிகாரிகள், பொறுப்பாளர்கள் குறித்து பொய்யான செய்திகளைப் பரப்பாமல் இருத்தல், அவர்களைப் பற்றி புறம் பேசாமல் இருத்தல், அவர்களைப் பற்றி பிறர் புறம் பேச அதனை ஙெ்விமடுக்காமல் இருத்தல் ஆகிய விடயங்களிலும் அழகிய தொடர்பால் வெளிப்படும்.

இவ்வழகிய தொடர்பாடல் சமூக நிவனங்களில் ஆரோக்கியம் இழந்து வருகின்றது. குறிப்பாக, ஆசிரியர்-மாணவர் தொடர்பாடல் வலுவிழந்து காணப்படுகின்றது. மாணவர்களின் இதயங்களில் அறிவுத் தீபமாய் ஆசிரியர்கள் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றனரா? கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளில் வெறும் தகவல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா? கல்வியை வணிகமயமாக்கி மாணவர்களின் உள்ளங்களில் ஆசிரியர் இடம்பிடிக்க முடியாது. இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதுபோல் முகமலர்ச்சியும் நற்குணமுமே மாணவர்களை ஓர் ஆசிரியருக்கு சம்பாதித்துக் கொடுக்க முடியும்.

கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஏனைய எல்லா சமூக சிறுவனங்களிலும் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கிடையே நிலவும் அழகிய தொடர்பாடலின் தரத்திற்கு ஏற்பவே சமூகத்திற்கு நலன் கிட்டும். அழகிய தொடர்பாடல் இன்றி வெறும் சுற்றுநிருபத்திற்கு இயங்கும் நிறுவனங்கள் விரைவில் வங்குரோத்து நிலையை அடையும். அவை மக்களின் காட்டமான விமர்சனத்திற்கு உள்ளாகும்.

எனவே, குடும்பங்கள் முதற்கொண்டு எல்லா சமூக நிறுவனங்களிலும் பணியாற்றுகின்ற உறுப்பினர்கள் முதல் நிலை சம்பாத்தியமாக பணத்தையும் பண்டத்தையும் மையப்படுத்தாமல் மனிதர்களை சம்பாதிப்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். அதற்காக முகமலர்ச்சி, நற்பண்பாடு ஆகியவற்றை மூலதனமாக இட்டு அழகிய தொடர்பாடலை இலாபமாகப் பெற முயற்சித்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *