ஸூரதுல் இஃலாஸ் விளக்கம்

அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி), விரிவுரையாளர், கதீஜதுல் குப்றா மகளிர் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட.

‘கூறுவீராக! அவன் அல்லாஹ் ஏகன். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையும் இல்லாதவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை (அவன் யாருடைய சந்ததியும் இல்லை; அவனுக்கு யாரும் சந்ததி இல்லை). மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இல்லை.’ (112: 1-4)

இஸ்லாத்தின் அடிப்படைக் கலப்பற்ற ஏகத்துவக் கொள்கை இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ள இவ்வத்தியாயம் ‘உளத்துய்மை’ (ஸூரதுல் இஃலாஸ்) எனப் பெயர் பெற்றுள்ளது. திருக்குர்ஆனின் ஏனைய அத்தியாயங்களைப் பொறுத்தவரை பொதுவாக, அவற்றில் இடம்பெற்றுள்ள ஏதேனுமொரு சொல் அவற்றின் பெயர்களாக சூட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த அத்தியாயத்தில் ‘அல்-இஃலாஸ்’ எனும் சொல் எங்குமே இடம்பெறவில்லை. இவ்வத்தியாயத்தின் மையக்கருத்து கவனத்தில் கொள்ளப்பட்டு ‘உளத்துய்மை’ (ஸூரதுல் இஃலாஸ்) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வத்தியாயம் இறக்கிவைக்கப்பட்ட பின்னணி பின்வருமாறு பதிவாகியுள்ளது:

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ‘உங்கள் இறைவனின் குலம் என்ன என்று எங்களுக்குக் கூறுங்கள்’ என வினவினார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் இந்த அத்தியாயம் இறங்கியது. (அத்-தபராணி)

இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வத்தியாயத்திற்கு முன்வைத்துள்ள விளக்கவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: ‘யூத அறிஞர்கள் சிலர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தார்கள். ‘முஹம்மதே! உமது அதிபதியின் தன்மையை எமக்கு கூறும்;. நாங்கள் உம் மீது நம்பிக்கை கொள்ளக்கூடும். அல்லாஹ் தன் தன்மையை தவ்ராத் வேதத்தில் எடுத்துரைத்துள்ளான். அவன் எந்தப் பொருளால் ஆனவன்? அவன் எந்த இனத்தைச் சேர்ந்தவன்? தங்கத்தால் ஆனவனா? செம்பால் ஆனவனா? பித்தளையால் ஆனவனா? இரும்பால் ஆனவனா? அல்லது வெள்ளியால் ஆனவனா? அவன் என்ன உண்ணுகின்றான்? அவன் என்ன பருகுகின்றான்? எவரிடத்திலிருந்து இந்தப் பிரபஞ்சத்தை அவன் வாரிசாகப் பெற்றான்? அவனுக்குப் பின் அவனது வாரிசாகப் போவது யார்? என்றெல்லாம் கேள்விகள் தொடுத்தார்கள். இதற்கு பதில் கூறும் வகையில்தான் இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்டது.         (அஸ்பாபுந் நுஸூல் அல்-வாஹிதீ)

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நஜ்ரான் தேச  கிறிஸ்தவர்களின் குழு ஒன்று ஏழு பாதிரியார்களுடன் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்தது. அந்தக் குழுவினர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ‘இறைவன் எப்படி உள்ளான்? எந்தப் பொருளால் ஆனவன்? என்று எமக்கு கூறும்!’ எனக் கேட்டனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘என் இறைவன் எந்தப் பொருளாலும் ஆனவன் அல்ல. அவன் எல்லாப் பொருட்களையும் விட்டு தனித்தவன்’ என்று பதிலளித்தார்கள். அப்போதுதான் வல்ல இறைவன் இந்த அத்தியாயத்தை இறக்கியருளினான் என  சில தப்ஸீர் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

விக்கிரக ஆராதனையில் ஈடுபட்ட குறைஷிகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தொடுத்த வினாக்களுக்கு பதிலாக இவ்வத்தியாயம் மக்காவில் இறக்கி வைக்கப்பட்டது என்பது முபஸ்ஸிரீன்களின் கருத்தாகும். அதன் பிறகு மதீனாவில் சில சமயம் யூதர்களும் சில சமயம் கிறிஸ்தவர்களும் சில சமயம் அரபு நாட்டின் பிற குலத்தாரும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இத்தகைய கேள்விகளைக் கேட்டனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட மக்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த இறைவனை வணங்கி அவனுக்கு அடிபணியுமாறு அழைத்துக் கொண்டிருந்தார்களோ அந்த இறைவனின் இயல்புத் தன்மை என்ன என்று நபியவர்களிடம்  விசாரித்த வண்ணம் இருந்தனர். இதனால்,

எல்லா சந்தர்ப்பங்களிலும் கேள்வி கேட்டவர்களுக்கு இறைவனின் கட்டளைப்படி இந்த அத்தியாயத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலாக எடுத்தோதி வந்தார்கள் என்பது தெளிவாகின்றது.

இந்த அத்தியாயம் அருளப்பட்டதற்கான பின்னணி குறித்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள  கருத்துக்களை சற்று நோட்டமிட்டால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏகத்துவ அழைப்பை புதுப்பித்தபோது உலகின் சமய கருத்தோட்டங்கள் என்னவாக இருந்தன என்று தெளிவாகின்றது.  விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மரம், கல், பொன், வெள்ளி முதலிய பல்வேறு பொருள்களினால் செய்யப்பட்ட உருவம், உடல் அமைப்பு கொண்ட விக்கிரகங்களை தெய்வங்களாகக் கருதி வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில்  பெரும்பாலானோர் இறைவன் மனித வடிவில் வெளிப்படுகிறான், மனிதர்களில் சிலர் அவனது அவதாரமாக விளங்குகின்றார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

‘ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டோம்’ என்பதாக வாதிட்டுக் கொண்டிருந்தவர்கள்கூட இறைவன் ஒரு குமாரனை வைத்திருந்தான் என நம்பினர். மேலும் ஒரே இறைவனையே நம்புவதாக சொல்லிக் கொண்டிருந்த இன்னும் சிலர் இறைவனை  சடத்துவம், உடலமைப்பு, மனிதத் தன்மைகள் ஆகியவற்றை சேர்த்தே நம்பி வந்தார்கள். எந்தளவுக்கெனில், இறைவன்  தன் அடியான் ஒருவனுடன் குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார், ஒரு மகனுக்கு உயிர் தந்தையாகவும் இருந்தார் எனவும் நம்பினர். அத்தோடு நெருப்பு, நட்சத்திரங்களை வணங்கும் மக்களும் பல்வேறுபட்ட நம்பிக்கைக் கொள்கை கோட்பாடுகளைக் கொண்டிருன்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் இணை, துணையற்ற ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அவர்களின் உள்ளங்களில் ஏக இறைவனைப் பற்றி கேள்விகள் எழுவது இன்றியமையாததாக உள்ளது. இவ்வாறான வினாக்களுக்கான தெளிவான விடைகள் இவ்வத்தியாயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நான்கு இரத்தினச் சுருக்கமான வசனங்களில் இஸ்லாத்தின் முதன்மையான அடிப்படைக் கோட்பாடு (ஏகத்துவம்) பற்றி தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கப்பட்டுள்ளமை இவ்வத்தியாயத்தின் அற்புதங்களில் ஒன்றாகும்.

இவ்வத்தியாயத்தில் காணப்படும் மற்றுமோர் அழகு, அற்புதம் என்னவென்றால் இதில் இடம்பெற்றிருக்கும்  ஒவ்வொரு வசனமும் முன்னுள்ள வசனத்திற்கு விளக்கமாக, தொடர் கேள்விகளுக்கு பதிலாகவும் அமைந்திருப்பதை அவதானிக்க முடியுமாக உள்ளது. இதனை பின்வரும் கேள்வி – பதில் அமைப்பில் அவதானிக்க முடியும்.

கேள்வி:        வணக்கத்திற்கு பொருத்தமான கடவுள் யார்?

பதில்: (اللَّهُ هُوَ) அவன் அல்லாஹ்.

கேள்வி:        அல்லாஹ் என்றால் யார்?

பதில்:           (أَحَدٌ) அவன் ஏகன்.

கேள்வி:        ஏகன் என்றால் யார்?

பதில்:           (الصَّمَدُ) எவரிடத்தும் எத்தேவையும் இல்லாதவன்.

கேள்வி:        எத்தேவையும் இல்லாதவன் (الصَّمَدُ) யார்?  எப்படியானவன்?                      

 பதில்:          (يُولَدْ وَلَمْ يَلِدْ لَمْ) அவன் யாரையும் பெறவில்லை; அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.

கேள்வி:        பிள்ளையும் இல்லாத பெற்றோரும் இல்லாதவனா? அது எப்படி?

பதில்:           (أَحَدٌ كُفُوًا لَهُ يَكُنْ وَلَمْ) அவனுக்கு நிகரானவர் எவருமே இல்லை.

இஸ்லாத்தின் முதன்மையான அடிப்படை இறை கோட்பாட்டின் ஏகத்துவத்தை விளக்கும் இந்த அத்தியாயத்தில் ‘வாஹித்’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘அஹத்’ எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. இவ்விரு சொற்களின் பொருளும் ‘ஒன்று’ என்பதாகும். எனினும், அரபு மொழியில் வாஹித் எனும் சொல் தன்னுள் பலவற்றை வைத்திருக்கும் எல்லா பொருள்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக,  ஒரு மனிதன் (واَحِدٌ اِنْسَانٌ), ஓர் இனம் (واَحِدٌ جِنْسٌ), ஓர் உலகம் (واَحِدٌ عَالَمٌ) இவை அனைத்துமே ‘வாஹித்’ எனக் கூறப்படுவதுண்டு. ஆனால், இவற்றில் அடங்கியிருப்பவை எண்ணற்றவையாகும். ‘அஹத்’ எனும் சொல் எல்லா விதத்திலும் ஒன்றாகவே இருக்கக்கூடிய எந்த வகையிலும் ஒன்றுக்கு மேற்படாத பொருளுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் அரபு மொழியில் இச்சொல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாக கையாளப்படுகின்றது.

மக்கள் இந்த அத்தியாயத்தை அதிகமாக ஓத வேண்டும்;, இந்த அத்தியாயத்தை பொது மக்களிடையே பரவச் செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பலவிதங்களில் இவ்வத்தியாயத்தின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தியுள்ளார்கள்.

அபூ ஸஈத் அல் குத்ரி (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன் தோழர்களிடம், ‘உங்களில் யாராவது ஒரே இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓத முடியுமா?’ எனக் கேட்டார்கள்.  அவர்கள், ‘இறைதூதர் அவர்களே, எங்களில் யாருக்கு இது சாத்தியம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘குல் ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ் ஸமத் (ஸூரதுல் இஃலாஸ்) குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதி’ எனக்  கூறினார்கள்.’ (ஸஹீஹுல் புகாரி)

‘இந்த அத்தியாயம் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்குக்கு சமமானது’ எனும் அண்ணலாரின் இந்தக் கருத்துக்குப் பல பொருள்களை தப்ஸீர் கலை விரிவுரையாளர்கள் விவரித்துக் கூறியுள்ளனர். அதில் ஒரு கருத்து, புனித திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் வாழ்க்கை நெறியின்  அடிப்படை மூன்று கோட்பாடுகள் ஆகும்.

01.       ஏகத்துவம்

02.       இறை தூதுத்துவம்

03.       மறுமை

இந்த அத்தியாயம் தூய ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்ததன் காரணமாக அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை திருக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்று கூறினார்கள் என விளக்கமளித்துள்ளனர்.

மேலும் ஒட்டுமொத்த அல்குர்ஆனும் மூன்று பிரதான விடயங்களைக் கையாள்வதைக் காண முடியும். அவையாவன:

01.       ஏகத்துவம்

02.       ஏவல் – விலக்கல் (சட்ட திட்டங்கள்)

03.       சம்பவங்கள் (வரலாறுகள்)

இவ்வத்தியாயம் ஏகத்துவத்தை உள்ளடக்கிய ஓர் அத்தியாயம் என்பதால் இது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமானது என்பது இன்னும் சில தப்ஸீர் கலை விரிவுரையாளர்களின் கருத்தாகும்.

இந்த அத்தியாத்தை நேசிப்பவரை அது சுவனத்தில் நுழையச் செய்யும் என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது:

குபா பள்ளியில் அன்ஸார்களில் ஒருவர் அங்குள்ள மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். அவர் தொழுகையில் (பாத்திஹா ஸூராவுக்குப் பின்) ஓத ஆரம்பிக்கும் ஒவ்வொரு ரக்அத்திலும் ‘குல்ஹுவல்லாஹ்’வை ஓதி முடித்து விட்டு வேறு ஸூராவை ஆரம்பிப்பார். அம்மக்கள் அவரிடம் ‘நீங்கள் குல்ஹுவல்லாஹ்வை ஆரம்பிக்கிறீர்கள்| பின்னர் இது போதாது எனக் கருதி வேறு ஒரு ஸூராவையும் ஓதுகிறீர்கள். இப்படிச் செய்யாது குல்ஹுவல்லாஹ்வை மட்டும் ஓதுங்கள் அல்லது வேறு ஒரு ஸூராவை ஓதி விட்டு குல்ஹுவல்லாஹ்வை விட்டு விடுங்கள்’ எனக் கூறினர். ‘நான் இவ்வாறு ஓதும் முறையை விட மாட்டேன். நான் உங்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் இமாமாக இருந்து தொழுகை நடத்துகின்றேன். விருப்பமில்லையென்றால் விட்டுவிடுகிறேன்’ என்றார். ஆனால், அந்த மக்களோ அவரை தங்களில் சிறந்தவராகவும் அவரல்லாதவர் தங்களுக்கு தொழுகை நடத்துவதை வெறுப்பவர்களாகவும் இருந்தனர்.

இவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இத்தகவலை அறிவித்தனர். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் ‘நண்பரே! உம்முடைய நண்பர்கள் கூறுவது போல நீர் செய்வதில் எது உனக்குத் தடையாக உள்ளது? என்றும் ஒவ்வொரு ரக்அத்திலும் கட்டாயமாக இதை ஓத வேண்டுமென்று விருப்பம் ஏற்பட்டது ஏன்?’ என்றும் கேட்டார்கள். அதற்கு அவர் ‘திண்ணமாக இதனை நான் விரும்புகிறேன்’ என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘இதனை நீர் விரும்புவது உம்மை சுவனத்தில் நுழையச் செய்யும்’ என்றார்கள். (அல்புகாரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *