உறவின்றி அமையாது உலகு!

படைத்த இறைவனுடனான உறவுக்கு அடுத்ததாக எமது உறவானது, எம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தை, எம்மோடு கூடப் பிறந்த சகோதர-சகோதரிகள், எமக்காகப் பிறந்த கணவன்-மனைவி, எமக்குப் பிறந்த பிள்ளைகள், எமது பிள்ளைகளுக்காகப் பிறந்த மருமகன்-மருமகள், எமது இரத்த பந்தங்கள், அயல் வீட்டார், ஊர் மக்கள், நாட்டு மக்கள்… என மனிதர்களுடனான உறவும் எம்மைச் சூழவுள்ள மண், நீர், காற்று, தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் என இயற்கைச் சூழலுடனான உறவும் சட்டம், பொதுச் சொத்துக்கள், பொது ஒழுங்குகள், அரசாங்கம்… என நாட்டுடனான உறவும் எமது உறவு என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றன. 

மனிதர்களின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவே பல விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்த, உணர்வு சார்ந்த ஆன்மா சார்ந்த, சமூகம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, அரசு சார்ந்த என்று மனிதர்களது வாழ்வியல் தேவைகளுக்கேற்ப உறவுகளும் விரிகின்றன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட உறவு முறை தனக்குரிய பொறுப்புக்களை செய்யாதபோது பல உறவுகள் செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. 

வித்தியாசமான இயல்புகளையும் விருப்பு வெறுப்புக்களையும் உடைய பல்வேறு மனிதர்களோடும் சுற்றாடலின் பல்வேறு கூறுகளோடும் நாட்டின் வித்தியாசமான நிறுவனங்களோடும் சமகாலத்தில் உறவு முறைகளைப் பாதுகாத்து அதற்குரிய கடமைகளை நிறைவேற்றுவது சிரமமான, வெற்றிகரமான வாழ்க்கைக்கான தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். 

எமது கையிலிருப்பது ஒரேயொரு பந்துதான் என்றால் அதனை வீசிப் பிடித்து விளையாடுவது இலகுவானதாக இருக்கும். ஆனால், எமது கையில் பல பந்துக்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே நேரத்தில் வீசிப் பிடிக்க வேண்டும். என்றாலும், ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாது என்றால் அது எவ்வளவு கஷ்டமோ அதே போல்தான் ஒரே காலத்தில் பல உறவுகளைக் கையாளுதல் என்ற சூழலும் அமையப் பெற்றிருக்கிறது. உறவுகளை சரியான முறையில் கையாளுதல் வேண்டும். அதில்தான் தனி மனிதர்கள் முதல் முழு உலகத்தினது பாதுகாப்பும் சுபிட்சமும் தங்கியிருக்கிறது. 

உறவுகளின் முக்கியத்துவத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் இஸ்லாம் விளக்குகின்றது. இஸ்லாம் என்றாலே அது உறவுகளின் மொழிதான். இறைவன், மனிதன், பிரபஞ்சம் இவற்றுக்கிடையிலான உறவுகள், அவற்றின் வகிபாகங்கள், அதனைக் கையாளுவதற்கான வழிகாட்டல்கள், வரையறைகள் என்பவற்றின் தொகுப்பே இஸ்லாம் என்று கூற முடியும்.

மனிதர்களோடுள்ள உறவு:

மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள். எனவே, அவர்கள் சகோதரர்கள் என்பது மனிதர்கள் குறித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். 

“மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்.” (ஸூரதுந் நிஸா: 01)

அவ்வாறே மனிதர்கள் கண்ணியமானவர்கள். தெரிவுச் சுதந்திரமுடையவர்கள். எனவே, மனிதர்களோடு நீதியாக நடக்க வேண்டும்; அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பொதுவாக மனித உறவுகளைப் பற்றி கூறும் இஸ்லாம், மேலும் கொள்கைச் சகோதரர்கள், இரத்த உறவுகள், பெற்றோர்- பிள்ளை, அயல் வீட்டார் முதலானோருடனான உறவுகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் எமக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது.

இயற்கையோடுள்ள உறவு:

இறைவன் இந்தப் பூமியை எமக்காகப் படைத்து நாம் வாழும் வகையில் அதனை சீராக்கி இருக்கின்றான். எனவே, அதனைப் பாதுகாக்க வேண்டும்; வளப்படுத்த வேண்டும் என இறைவன் எம்மைப் பணிக்கின்றான்.

“அவனே உங்களை பூமியிலிருந்து படைத்தான். ஆதனை வளப்படுத்துமாறு வேண்டிக் கொண்டான்.”  (ஸூரதுல் ஹூத்)

இவ்வாறு பொதுவாகக் குறிப்பிட்ட இஸ்லாம் குறிப்பாக மண், நீர், காற்று, மிருகங்கள், பறவைகள், தாவரங்கள்… என அனைத்து விதமான இயற்கை வளங்களோடும் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகளையும் வழிகாட்டல்களையும் வரையறைகளையும் தனித்தனியாக எமக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது. 

வாழும் நாட்டோடுள்ள உறவு:

நாடு என்பது நிலம், மக்கள், சட்டம், அரசாங்கம் என்பவற்றின் தொகுப்பாகும். நாம் வாழும் நாடு பாதுகாப்பான, சுபிட்சமான நாடாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனையாகும். 

“அவர்கள் இந்த இஸ்லாத்தின் அதிபதியை அடிபணிந்து வணங்கட்டும். அவனே அவர்களை பசியிலிருந்து காப்பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும் அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதியை வழங்கினான்.” (ஸூரதுல் குரைஷ் 3-6)

மேலும் நாட்டு குடிமக்களாகிய நாம் ஆளும் கட்சியின், எதிர்க் கட்சியின் அங்கத்தவர்களாகவோ ஆதரவாளர்களாகவோ அல்லது சிவில் சமூகத்தின் அங்கத்தவர்களாகவோ அல்லது நாட்டின் சாதாரண குடிமகனாகவோ இருந்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல பணிகளுக்கு துணை நிற்பதும் பிழையான அல்லது பயனற்ற தீர்மானங்களை ஜனநாயக வழியில் சுட்டிக் காட்டி, சட்டபூர்வமான எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதன் மூலமும் நாட்டுக்குச் செய்ய வேண்டிள கடமைகளை நிறைவேற்றுமாறு இறைவன் எமக்கு வழிகாட்டியிருக்கின்றான். 

‘எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்குரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள். ஆனால், எது பாவமானதாகவும் வரம்பு கடந்தததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள்.” (ஸூரதுல் மாஇதா: 02)

இந்த வகையில் உறவு முறைகளை உரிய முறையல் பாதுகாத்து அதற்குரிய கடமைகளைச் செய்து, அதனால் வரும் கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ்பவரே வெற்றியாளராக இறைவனை சந்திப்பார் என்றும் இதற்கு மாற்றமாக மனிதர்களுக்கும் நாட்டுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பயனற்றவராக வாழ்ந்து அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாது வாழ்பவர் தோல்வியடைந்தவராகவே இறைவனை சந்திப்பார் என்பதனையும் இறைதூதரின் பின்பவரும் கூற்று சுட்டிக் காட்டுகின்றது:

ஒரு தடைவ ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டபோது இறைவனின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘முஸ்தரீஹூன் மின்ஹு’ எனக் கூறினார்கள். இதற்கான விளக்கம் என்னவென்று அவர்களது தோழர்கள் வினவியபோது,

“நல்ல மனிதர் உலக வாழ்க்கையின் கஷ்டங்கள், துன்பங்களை முடித்துக் கொண்டு இறைவனின் அருளை நோக்கிச் செல்வார் என்றும் தீய மனிதர் உலகை விட்டுப் பிரியும்போது மனிதர்களும் நாடும் தாவரங்களும் ஏனைய உயிரினங்களும் மகிழ்ச்சியடையும்” என்றும் விளக்கமளித்தார்கள். 

இந்த நபிமொழியினூடாக உலகில் வாழ்ந்து மரணிக்கும் அனைவரையும் இரு தரப்பாக இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வகைப்படுத்தி இருக்கிறார்கள். முதுல் சாரார், மனிதர்களோடும் இயற்கையோடும் உயிரினங்களோடும் வாழும் நாட்டோடும் உள்ள உறவுகளைப் பாதுகாத்து, அதற்குரிய கடமைகளைச் செய்து அதனால் வரும் கஷ்டங்களைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து முடிப்போர்.

இரண்டாவது சாரார், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் வாழும் நாட்டுக்கும் பயனின்றி வாழ்ந்து தோல்வியுற்றவர்களாக வாழ்க்கையை முடித்துக் கொள்வோர்.

எனவே, உறவுகளை மேம்படுத்தி, அதற்குரிய கடமைகளைச் செய்வதனூடாக அழகியதோர் உலகம் செய்வோம்.

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி

அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

அல்ஹஸனாத்- மார்ச் 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *