முடங்கிக் கிடக்காமல் செயற்படுங்கள்!

ஒரு முஸ்லிமின் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். இறை நம்பிக்கைக்குப் பிறகு எப்போதும் ஒருவர் செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றே அல்குர்ஆன் அடிக்கடி வலியுறுத்துகிறது. ஒருவர் தனது ஆன்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் தன்னைச் சூழ இருப்பவர்களுக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் சிறந்தவராக இருக்க விரும்பினால் அவரது செயற்பாடுகளும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் முக்கியமானவை. சிறந்த தனி மனிதராகவும் நல்ல குடும்பத் தலைவராகவும் சமூக நலன்களுக்குப் பங்களிப்புச் செய்பவராகவும் நாட்டுக்குரிய நற்பிரஜையாகவும் வாழ விரும்பும் ஒருவர் தனது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் திட்டமிடுவதும் முன்னுரிமைப்படுத்துவதும் மிக அவசியமானதாகும்.

செயற்படாமல் முடங்கிக் கிடப்பதை இஸ்லாம் வெறுக்கிறது. சோம்பல், இயலாமை, அலட்சியம், பலவீனம் முதலான மனித ஆளுமையை சிதைக்கின்ற எந்தவொரு பண்பும் நம்மிடம் இருக்கலாகாது. பலவீனமான ஒரு முஸ்லிமை விட பலமான ஒரு முஸ்லிமிடம் பல நன்மைகள் இருக்கின்றன. 

“மேலும் அல்லாஹ் இரு மனிதர்களை உதாரணமாகக் கூறுகின்றான். அவர்களில் ஒருவன் எதனையும் செய்ய முடியாத ஊமை. அவன் தன் எஜமானில் தங்கி வாழ்பவன். அவர் அவனை எங்கு அனுப்பினாலும் நல்லதைக் கொண்டு வர மாட்டான். இவனும் மற்றும் நேரான வழியில் இருந்து கொண்டு நீதியைக் கொண்டு ஏவுகின்றவனும் சமமாவார்களா?” பார்க்க- (16: 75)

மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தன் தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அவை எடுத்துக்காட்டப்படும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். 

“நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள். உங்களது செயலை அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை நம்பிக்கையாளர்களும் அவதானிப்பர். மேலும் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவிப்பான் என்று நபியே! நீர் கூறுவீராக!” (9: 105)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ‘ஒரு மனிதன் ஆற்றும் செயல் உம்மைக் கவர்ந்தால் ‘நீங்கள் செயற்படுங்கள். உங்களது செயலை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறை நம்பிக்கையாளர்களும் பார்ப்பார்கள் எனச் சொல்வீராக’ என்று கூறினார்கள். (அல்புகாரி)

‘அல்லாஹ் ஓர் அடியாருக்கு நன்மையை நாடினால் அவர் இறப்பதற்கு முன்னரே அவரைச் செயற்பட வைத்து விடுவான்’ என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! அவரை எவ்வாறு அல்லாஹ் செயற்பட வைப்பான்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ‘நற்செயல்கள் புரியும் வாய்ப்பை அவருக்கு அல்லாஹ் வழங்குவான். பின்னர் அந்த நிலையிலேயே அவரைக் கைப்பற்றுவான்’ என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், அத்திர்மிதி)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுடைய செயல்கள் மரணித்து விட்ட உங்களுடைய உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் காட்டப்படுகின்றன. அவை நல்லவையாக இருந்தால் அதனால் அவர்கள் பூரிப்படைவார்கள். அவை நல்லவையாக இல்லையெனில், ”இறைவா! எங்களுக்கு நீ நல்வழி காட்டியதைப் போன்று அவர்களுக்கும் நல்வழி காட்டாதவரை அவர்களின் உயிரைப் பறித்து விடாதே!” என்று பிரார்த்தனை புரிவர். (முஸ்னது அஹ்மத் – இதன் அறிவிப்பாளர் தொடரில் அடையாளம் தெரியாத ஒருவர் இடம்பெற்றுள்ளார். இது இடையில் ‘தாபிஉ’ விடுபட்ட ‘முன்கதிஉ’ வகை ஹதீஸாகும்)

மிகச் சிறந்த செயல்கள் 

உங்களில் யார் மிக அழகிய செயலுடையவர் என்பதை சோதிப்பதற்காகவே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.” (11: 7)

“அவர்களில் மிக அழகிய செயலுடையவர் யார்? என உங்களை சோதிப்பதற்காகவே பூமியின் மீது உள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியிருக்கின்றோம்.” (18: 7)

“உங்களில் மிக அழகிய செயலுடையவர் யார்? என உங்களை சோதிப்பதற்காக அவனே மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.” (67: 2)

மேற் கூறிய மூன்று வசனங்களிலும் ‘அஹ்ஸனு அமலன்’ (மிக அழகிய செயலுடையவர்) என்று கூறப்பட்டுள்ளதே தவிர ‘அக்ஸரு அமலன்’ (அதிகமாக செயல்படுபவர்) என்று கூறப்படவில்லை. செயற்பாடுகளில் அதிகம் என்பதைவிட அழகுதான் முக்கியமானது. இங்கு அல்லாஹ் குறிப்பிடுகின்ற சோதனை அதிகமானவற்றுக்கும் குறைந்தவற்றுக்கும் மத்தியில் அல்ல. மேலும் நல்ல செயலுக்கும் தீய செயலுக்கும் இடைப்பட்டதுமல்ல. மாறாக, நல்லதுக்கும் மிக நல்லதுக்கும் இடைப்பட்டதாகும்.

மிக அழகிய செயலுடையவர் எப்போதும் தனது செயல்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னுரிமைப்படுத்துவார். காலத்தின் தேவையைக் கருத்திற் கொள்வார். முற்படுத்திச் செய்ய வேண்டிய செயலை முற்படுத்தியும் பிற்படுத்திச் செய்ய வேண்டிய செயலை பிற்படுத்தியும் செய்வார். தொழுகை பற்றி “நிச்சயமாக தொழுகை இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது” (4: 103) என்றும் நோன்பு பற்றி “பஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்” (2: 187) என்றும் அல்லாஹ் நேரத்திற்குக் கருமமாற்றுவதை வலியுறுத்துகிறான். ஒரு கடமையை விட ஓர் உபரியான வணக்கத்தை முற்படுத்தக் கூடாது. ஓர் அடிப்படையை விட்டு விட்டு ஒரு கிளை விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது. ஒரு சாதாரண செயலை நிறைவேற்ற ஒரு தடுக்கப்பட்ட செயலை செய்யலாகாது. ஒரு வெறுக்கத்தக்க விடயத்தைத் தவிர்ந்து கொள்ள ஒரு கடமையைப் பாழாக்கக் கூடாது. ஒவ்வொரு செயலையும் அதற்குரிய அந்தஸ்தில் வைத்துப் பார்க்க வேண்டும். 

நாம் வாழும் காலத்தையும் சூழலையும் தெளிவாகப் புரிந்து கொண்டு நமது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் பேச்சிலும் நடத்தையிலும் நடவடிக்கைகளிலும் பிற மனிதர்களோடு உள்ளும் புறமும் ஒன்று போல கருமமாற்ற வேண்டும். பிறருக்கு சிறந்த முன்மாதிரியாகவும் எடுத்துக்காட்டாகவும் சான்று பகரும் மனோபாவத்தோடும் செயற்பட வேண்டும். வேறுபட்ட நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் கலாசாரங்களும் நிறைந்த ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்ற பன்முகத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். பல்லின சமூகத்திற்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் சுயநலம் தழுவியதாகவோ இன உணர்வு மிக்கதாகவோ உரிமைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவோ இருக்கக் கூடாது. எமது நலன்புரிச் சங்கங்கள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், உதவித் தொகைகள், தான- தர்மங்கள், கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள், சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வூட்டல்கள் எதுவுமே முஸ்லிம்களுக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவையாக அமையலாகாது. எல்லா சமூகங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டே செயற்பட வேண்டும். அப்போதுதான் சமூகங்களுக்கிடையிலான உறவில் இருக்கின்ற விரிசல் பாரிய அளவில் குறையும். 

முஸ்லிம்கள் ஒருபோதும் சுயநலவாதிகளாக இருக்கக் கூடாது. மனித சமூகத்தில் அனைவருடைய இன்ப துன்பங்களிலும் இயலுமானவரை பங்கெடுத்து செயற்பட வேண்டும். இதை இன்னொரு வார்த்தையில் கூறினால் பிற மனிதர்களையும் வாழ வைத்து வாழ வேண்டும். 

நாம் இலங்கையில் சிறுபான்மையினராக வாழும்போது பெருபான்மை முஸ்லிம் நாடுகளில் வாழ்வது போன்று வாழ முடியாது. இந்த நாட்டின் சட்டங்களையும் ஒழுங்கையும் கலாசாரத்தையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் கருத்து வேறுபாடு இருந்தால் அதில் எந்தக் கருத்து நாம் வாழும் சூழலுக்கு மிகவும் பொருத்தமானதோ அதைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். 

அனைத்துக்கும் மேலாக முரண்பாடுகளை வேறுபாடுகளாகக் கருதாமல் எல்லா சமூகங்களும் உடன்படும் பொது விடயங்களில் ஒன்றிணைய வேண்டும். 

தமிழ் தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம், சிங்கள தேசியவாதம் என்று ஒவ்வோர் இனத்தாரும் சிந்திக்காமல் எல்லோருமாக ஒன்றுசேர்ந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் செழிப்புக்கும் எப்படிப் பங்களிப்பு செய்யலாம்? எவ்வாறு கைகோர்த்து செயற்படலாம்? என்று சிந்திக்க வேண்டும். எல்லா சமூகங்களும் ஒரு மேசையில் உட்கார்ந்து இன, மொழி, பிரதேச வேறுபாடுகளை மறந்து, சிறந்ததொரு சிவில் சமூகத்தை உருவாக்க செயற்பட வேண்டும். 

செயற்படுவதற்குக் கூலி நிச்சயம்

“எவர்கள் இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்களும் செய்கின்றார்களோ அத்தகைய அழகிய செயலுடையோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.” (18: 30)

“ஆணோ அல்லது பெண்ணோ இறை நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த மிகச் சிறந்தவற்றுக்காக அவர்களது கூலியை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.” (16: 97) மேலும் பார்க்க (43: 72), (16: 32)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்குப் பின்னால் சில நாட்கள் வரும். அவை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாட்களாகும். அதில் பொறுமை கொள்வது நெருப்புத் தணலைக் கையில் வைத்திருப்பது போலாகும். அந்த நாட்களில் செயற்படுபவர்களுக்கு அதனைப் போன்று செயற்படும் ஐம்பது பேரின் கூலி கிடைக்கும்.” (இப்னு மாஜா)

செயற்படுவோமா?

இஸட்.ஏ.எம். பவாஸ் BACC (Hons)
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், மலேசியா

அல்ஹஸனாத்- மார்ச் 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *