இரவுகள் கூறும் இறை செய்தி!

மௌலவி எம்.எச்.எம். முனீர்
அதிபர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி புத்தளம்

‘நகரும் இரவின் மீது சத்தியமாக! அறிவுடையோருக்கு இனியும் சத்தியம் தேவையா?” (ஸூரதுல் பஜ்ர்: 4-5)
அல்குர்ஆனின் 89ஆவது அத்தியாயமாகிய ஸூரதுல் பஜ்ரின் ஒளியில் இரவு மற்றும் இரவின் மகத்துவம் குறித்து கருத்தாட விரும்புகின்றோம். தர்பிய்யாவுக்கும் தஃவாவுக்குமான 14 முறைமைகளை முன்வைக்கும் இந்த ஸூராவின் இன்னுமொரு தனி மனித பயிற்றுவிப்புக்கான முறைமை இங்கு பகிரப்படுகிறது.
பஜ்ரின் தோற்றத்தோடு ஆரம்பித்த புதிய ஒரு நாளின் முதல் பகுதி (பகல்) சூரிய அஸ்த்தமனத்துடன் முடிவுற்று இரண்டாம் பகுதி (இரவு) தோற்றம் பெறுகிறது. புவிப் பந்தில் ஏற்படும் இவ்விரண்டு தொடர்ந்தேர்ச்சையான பௌதிக மாற்றம் வெறும் ஒளியும் இருளும் என்பதற்கு அப்பால் மனித உணர்வில், சிந்தனையில், நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
ஒரு முஸ்லிம் தனது புதிய நாளின் முதல் பகுதிக்குள் பஜ்ர் தொழுகை மற்றும் பஜ்ரின் பிரார்த்தனைகளுடன் பிரவேசிப்பது போல், அதன் இரண்டாம் பகுதிக்குள் அலாதியான தயார்படுத்தல்களுடன் பிரவேசிக்கின்றான்.
‘இறைவா, உனது இரவு முன்னோக்கிக் கொண்டிருக்கிறது. உனது பகல் பின்னோக்கிச் செல்கிறது. இது உனது அழைப்பின் சத்தம். என்னை மன்னித்துக் கொள்வாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நீதான் மன்னிக்கக் கூடியவனும் அன்பு காட்டக் கூடியவனுமாவாய்” எனத் தொடங்கி பல்வேறுபட்ட ஆத்மிக அரவணைப்புக் கோஷங்களுடன் இரவுக்குள் பிரவேசிக்க இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழி காட்டினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையுடன் இரவு நகர்கிறது. அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இருப்பினும், இரவுப் பொழுதுகளை இறை வழிபாட்டில், இறை தியானத்தில் இறை உவப்பை பெற்றுத் தரும் ஏனைய காரியங்களில் ஈடுபடவும் இரவின் இனிய பொழுதுகளை வீணாக்கி விடவும் மனிதனால் முடியும். அல்குர்ஆன் கையாண்டுள்ள ‘அல்லைல்’ (இரவு) என்ற சொற்பிரயோகத்தினூடாக ஒரு முஃமினின் நம்பிக்கைக் கோட்பாட்டில் ஈமானிய, செயல் ரீதியான அர்த்தங்களை நிலைபெறச் செய்கிறது. இரவு, பகலை மாறி மாறி வரச் செய்வதுவும் பகலுக்குள் இரவை வரச் செய்வதும் பகலை இரவால் மூடுவதும் இரவின் நேரத்தை வரையறுப்பதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தையும் நாட்டத்தையும் ஞானத்தையும் சார்ந்ததாகும். அல்குர்ஆன் கூறும் இரவுகளை 4 கண்ணோட்டங்களில் அவதானிக்க முடியும்.

 1. ஏகத்துவத்திற்கு சான்று கூறும் இரவுகள்
  ‘வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (ஆலு இம்றான்: 190)
  ‘அவனே இரவை சுருட்டி பகலை (விரிக்கின்றான்). அவனே பகலை சுருட்டி இரவை (விரிக்கின்றான்). சூரியனையும் சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான்.” (அஸ்ஸுமர்: 5)
  ‘நிச்சயமாக அல்லாஹ் இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைய வைக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 61)
  ‘இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கினோம். இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம்.” (அல்இஸ்ரா: 12)
  புவியோட்டின் மீது வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், கடலின் மேற்பரப்பில் அடியின் ஆழத்தில் வாழ்பவை அனைத்தும் இரவின் இருளுக்குள் இன்னுமொரு பௌதிக மானுசிக மாற்றத்தை நோக்கி நகர ஆரம்பிக்கின்றது. இந்த சமாந்தர சமநிலைத் தன்மையை தொடர்ந்தேர்ச்சியாக நிருவகித்துக் கொண்டிருப்பவன் யார்? சூரிய அஸ்தமனத்துடன் குளிர்ச்சியுடன் கூடிய ஒளியைத் தரும் பிறை நிலா பல படித்தரங்களையும் தரிப்பிடங்களையும் கடந்து பூரண நிலையை எய்தி பின்னர் மெல்லத் தேய்ந்து ‘உர்ஜூனுல் கதீம்” (பழைய பேரீச்சங் குலையின் பாழையைப் போல்) நோக்கிச் செல்லும் இந்தக் காட்சியை காண்கின்றோம். இவை அனைத்துமே அல்லாஹ்வோடு வேறொரு கடவுளில்லை. இபாதத்தில், எண்ணங்களில், வெளிப்படுத்தலில், அன்பு வைத்ததில், பிரார்த்திப்பதில், நேர்ச்சைகள் செய்வதில், அறுத்துப் பலியிடுவதில் வாழ்க்கைகான சட்ட ஒழுங்குகளை வழங்குவதில் தவக்குல் வைத்தலில் அவனை மாத்திரமே சார்ந்து நில்லுங்கள் என்கிறது. இரவுக் காட்சிகளின் வாசிப்பு ஈமானில் ஊட்டத்தை வழங்கி புதிய செயல்களின்பால் தூண்டி நல்லடியார்களுக்கிடையே அல்லாஹ்வை நோக்கிய போட்டி நிலையைத் தோற்றுவிக்கின்றது.
 2. இறைநேசர்களின் இனிய இரவுகள்
  ‘(அல்லாஹ்வுக்கு இணை வைப்பவன் சிறந்தவனா?) அல்லது எவர் மறுமையைப் பயந்து தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து இரவு காலங்களில் நின்றவனாகவும் சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றாரோ அவரா?…” (அஸ்ஸுமர்: 09)
  ‘இரவின் ஒரு பாகத்திலும் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் அவனைத் துதி செய்வீராக!” (காப்: 40)
  ‘இரவு காலங்களிலும் பகலின் இரு முனைகளிலும் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருங்கள். இதனால் நீங்கள் திருப்தி அடையலாம்.” (தாஹா: 130)
  ‘இரவிலும் அவனுக்கு சிரம் பணிந்து வணங்கி, இரவின் நெடுநேரம் அவனை துதி செய்து கொண்டிருப்பீராக!” (அல்இன்சான்: 26 )
  ‘எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு) உதவிடும் நோக்கில் இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் பரகசியமாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி இறைவனிடம் அவர்களுக்கு உண்டு.” (அல்பகரா: 274)
  ‘அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதி நின்று, சிரம் பணிந்து வணங்குகின்றனர்.” (ஆலு இம்ரான்: 113)
  ‘பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவின் ஒரு பாகத்திலும் நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாகும்.” (ஸூரதுல் ஹூத்)
  அல்லாஹ்வின் பெயரால் எழுந்து நின்று தனது பகற் பொழுதின் அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாத்திற்கு சார்ந்து நின்ற முஸ்லிம்கள் இரவின் இனிய பொழுதுகளில் ஆத்மிக இன்பம் காண காத்திருக்கிறார்கள். நீண்ட நேர வாசிப்பு, ஆய்வு முயற்சிகள், எழுத்தாக்கங்கள், தஃவா மற்றும் கல்வியில் கலந்துரையாடல்கள், பிந்திய இரவுப் பொழுதில் இஸ்திஃபார், திலாவத், திக்ர், தஸ்பீஹ், தஹஜ்ஜுத், பிரார்த்தனைகள்ஸ என இரவுப் பாடசாலையின் மாணவர்களாய் இறைவனுக்கு முன்னாள் தனித் தனியே காட்சியளிக்கிறார்கள்.
  அல்குர்ஆனிய கவிஞர் அல்லாமா இக்பால் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் வார்த்தைகளில் இப்படி சொல்வோம்.
  ‘இரவின் புருஷர்களே! முயலுங்கள்!
  எத்தனையோ சப்தங்கள் மறுதலிக்கப்படுவதில்லை
  யாரிடம் உறுதியும் முயற்சியும் உண்டோ
  அவர் இரவுத் தொழுகைக்காக துயிலெழுவார்.”
 3. இறைநேசர்களின் ஓய்வுக்கும் தூக்கத்திற்குமான இரவுகள்
  ‘அவனே சுகம் அடைவதற்காக இரவை ஆக்கினான்.” (அல்அன்ஆம்: 96)
  ‘இரவில் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் பகலின் அவனுடைய அருளை தேடிக் கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.” (அர்ரூம்: 23)
  ‘நபியே! நீங்கள் கேளுங்கள் பகலை கியாம நாள் வரை நீடிக்கும்படி அல்லாஹ் செய்து விட்டால் நீங்கள் இளைப்பாறக் கூடியது இரவை உங்களுக்கு கொண்டுவரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கிறானா?” (அல்கஸஸ்: 72)
  கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்வதற்காக ஹலாலான சம்பாத்தியத்திலும் அழைப்புப் பணியிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டும் பன்முக செயற்பாடுகளிலும் மனித சமூகத்தின் பல்வேறு நலன்களை கவனிப்பதிலும் தமது பகல் பொழுதில் ஓய்வில்லாது உழைத்தவர்கள் இரவின் அமைதிக்குள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள்.
  இரவுத் தூக்கத்திற்காக உடல், உளச் சுத்தத்துடன் படைத்தவனை துதி செய்து அன்றைய பொழுது குறித்த சுய விசாரணையுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் பாவ மன்னிப்புக் கோரியவர்களாகவும் தூங்குகிறார்கள்.
 4. இறைநேசர்களின் இல்லறப் பொழுதுகள்
  ‘நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுடைய ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.” (அல்பகரா: 187)
  ‘நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக்கினோம்.” (அந்நபஉ: 12)
  இறை நெறியின் வாழ்வொழுங்கை சகல விவகாரங்களிலும் பேணி நாகரிகமாக, கண்ணியமாக வாழும் தம்பதிகள் தமது இயல்பூக்கத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பொழுது இரவு. அதன் மூலம் கருணைமிக்க இரட்சகனின் திருப்தியையும் அவனது கூலியையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
  குறிப்பு: கலாநிதி ஸலாஹ் சுல்தான் அவர்களின் ஸூரா பஜ்ருக்கான விளக்கத்தை தழுவி எழுதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *