கடந்த இரண்டு வருடங்களில் கொண்டாடப்பட்ட சகல சமூகங்களதும் பெருநாட்கள்

-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-

பயங்கரவாத மனித வைரசுகள் சில நாட்டைத் தாக்கியதால் 2019இல் நாம் சந்தித்த ரமழான் நெருக்கடிகள் நிறைந்ததாக இருந்தது. பயங்கரமான கொரோனா வைரஸ் உலகை தாக்கியதனால் 2020இல் எம்மை வந்தடைந்திருக்கின்ற ரமழானும் நெருக்கடிகள் நிறைந்ததாக இருக்கின்றது.

இந்த இரு நெருக்கடிகளும் முஸ்லிம்களை மட்டுமல்ல, நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களையும் வெவ்வேறு வகையில் பாதித்த நெருக்கடிகளாக இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு அனைத்து சமூகங்களுக்கும் ஏற்பட்ட நெருக்கடிகளில் ஒன்றுதான் ஒவ்வொரு சமூகமும் தங்களது பெருநாட்களை வழமை போன்று கொண்டாட முடியாத நிலை இருந்ததாகும்.

உயிர்த்த ஞாயிறு தினம் என்பது கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி கொண்டாடுகின்ற ஒரு பெருநாளாகும். அந்தத் தினத்தில் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் மேற்கொண்ட மிருகத்தனமான தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவ சமூகம் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்தார்கள். ஈஸ்டர் தினமே அந்தத் தாக்குதலால் அல்லோலகல்லோலப்பட்டது. குறித்த தாக்குதலை தொடர்ந்து வந்த வெசாக் தினத்தையும் சிங்கள மக்கள் விமர்சையாக கொண்டாடவில்லை.

இம்முறையும் கொரோனா தொற்று காரணமாக சகல சமூகங்களதும் பெருநாள்கள் ஒரு முடக்கத்தில் சிக்கியிருந்ததை நாம் அவதானித்தோம். இதற்கான பழியை தீய நோக்கம் கொண்ட ஒரு சிலர் முஸ்லிம்களது தலையில் சுமத்த முயன்றதையும் நாம் மறந்திருக்க மாட்டோம்.

இந்நிலையில் புனித நோன்புப் பெருநாள் எங்களை எதிர்நோக்கியிருக்கிறது. ஏற்கனவே தமிழ் சிங்கள புத்தாண்டுகள் வீடுகளில் அமைதியாக கொண்டாடப்பட்டிருக்கின்றன. இவ்வருட உயிர்த்த ஞாயிறு தின கொண்டாட்டங்களும் தேவாலயங்களுக்குள் நடத்தப்பட்ட மதகுருமார்களின் தனிப்பட்ட ஆராதனைகளோடு முற்றுப்பெற்று விட்டன.

இந்நிலையில் முஸ்லிம்கள் தமது பெருநாட்களை எவ்வாறு கொண்டாடப் போகிறார்கள்? நாட்டின் பொருளாதாரம், மற்றும் அடிமட்ட மக்களின் வாழ்வாதாரம், தொடர்பான பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் தளர்த்துமாக இருந்தால், கொரோனா பிரச்சினை முற்றாகத் தீர்ந்து விட்டது என்றெண்ணி எமது சமூகம் பெருநாள் குதூகலத்தில் இறங்கிவிட மாட்டாது என்றே இதுவரையான அனுபவம் கூறுகின்றது. எனினும், இது குறித்த எச்சரிக்கைகள் நேர காலத்தோடு விடுக்கப்பட வேண்டிய தேவை சமூகத்தில் இருக்கவே செய்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் கொரோனாவின் ஆயுள் 3 மாதங்களே என்றும் அதன் பின்னர் பிரச்சினை முடிவடைந்துவிடும் என்றும் நோன்பின் இறுதிக் காலத்தை சிறப்பாக கழிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் நோய்த்தொற்று வரலாறுகளை கதையாக எழுதியிருக்கிறார்கள்.

இது போன்ற கதைகளால் சமூகம் நோன்பை சிறப்பிக்குமா? அல்லது நோன்பின் இறுதி நாட்களில் வழமை போன்று எமது பஜார்கள் சிறப்பிக்கப்படுமா? என்பது குறித்து சமூகம் எச்சரிக்கை அடைய வேண்டும். அதன்போது கடந்த இரண்டு வருடங்களாக ஏனைய சமூகங்கள் கொண்டாடிய பெருநாளின் தன்மைகள் பற்றியும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் கொண்டாடப் போகின்ற பெருநாள் நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கப் போகின்ற செய்தி பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும்.

கொரோனா தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட வைத்தியத் துறை சார்ந்த பலரும் தொடர்ச்சியாக விடுத்து வரும் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தவர்களாகவோ சமூக இடைவெளிகளைப் பேணி கொரோனாத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமான கட்டுப்பாடுகளை தளர்த்தியவர்களாகவோ நாம் இனங்காணப்படும் நிலை வந்துவிடக் கூடாது.

இத்தகைய அம்சங்கள் அடங்கலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் தனது பெருநாளைக் கொண்டாடுவதற்கு வழிகாட்டப்பட வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

அல்லாஹ் எமது கருமங்கள் அனைத்தையும் வாழும் சூழலுக்கும் வர இருக்கின்ற மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிவைப்பானாக.

04/05/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *