சுவை

ஷாறா-

“ஒன்டு, ரெண்டு, மூனு….” கையிலிருந்த பச்சை நோட்டுக்களை வேகமாக எண்ணிக் கொண்டிருந்தார் ஜாபிர் நானா.

“என்ன தம்பி…. இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒம்பதாயிரத்து நானூத்தி எழுவது ரூவாதானா சேந்திருக்கு?”

பக்கத்திலிருந்த ஸியாத் நானா கேட்டார்.

“அல்ஹம்துலில்லா. நேத்தும் இருபத்திரெண்டாயிரத்து முன்னூறு ரூவா பேங்கில போட்டோமே. அல்லா நாடினது கெடச்சுது. அல்லா தராமலில்ல. எங்கட முயற்சி போதாததுதான் காரணம்.. இன்னம் நாலஞ்சு கடைக்கு ஏறிஎறங்குவோமே!” தனது சைக்கிளில் உற்சாகமாக ஏறினார்.

“காலித், நீங்களும் ஸியாது மாமாவோட வந்தா நல்லம்” என்று ஜாபிர் நானா கூறவும் ஓடி வந்து நகர்ந்து கொண்டிருந்த சைக்கிளில் தொற்றிக் கொண்டான் காலித்.

ஊரிலிருந்த அனாதையில்லம் குறைந்த வளங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறை வசதிகள் பிள்ளைகளுக்குத் தேவையான அளவில் இருக்கவில்லை.

எனவே, இரண்டு கழிப்பறைகளைக் கட்டுவதென நிர்வாகம் முடிவு செய்தது. நிதி திரட்டுவதற்கென ஒரு குழுவை நியமித்தது.

நிதி திரட்டுவதில் தம்மால் முடிந்தளவு உதவ முடியுமென பெட்டிக்கடை ஜாபிர் நானா, தையல்காரர் ஸியாது நானா, இளம் ஆசிரியர் காலித் என நான்கைந்து பேர் முன்வந்தனர்.

ஒரு சதத்துக்கும் வஞ்சகம் செய்யாதவர் எனப் பெயரெடுத்த ஜாபிர் நானா குழுவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இன்று மூன்றாவது நாளாக நிதி திரட்டல் தொடர்கிறது….

“அல்லாஹு அக்பர்… அல்லாஹு அல்லாஹு அக்பர்..”

பாங்கொலி காற்றைக் கிழித்துக் கொண்டு காதுகளில் பாய்ந்தது.

“இவ்வளவு சுருக்கா லுஹர் ஆயிட்டா?'”

நெற்றி வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்ட ஜாபிர் நானா மஸ்ஜிதை நோக்கி சைக்கிளைத் திருப்பினார்.

வயிற்றுக்குள் சுறுசுறென்றது. காலையில் சாப்பிட்ட காராத்தல் பாணுக்குப் பிறகு வாயை நனைக்கக் கூட இல்லை. வுழூ செய்து விட்டு ஒரு க்ளாஸ் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பினார்.

தொழுகைக்குப் பிறகு ஸியாது நானாவும் காலிதும் சாப்பாட்டுக்காக வீட்டுக்குக் கிளம்பினார்கள். ஜாபிர் நானா மட்டும்

தூணொன்றில் சாய்ந்து கொண்டார்.

வீட்டுக்குப் போக மனம் வரவில்லை.

அரைக்கொத்து அரிசி மட்டுமே வீட்டிலிருப்பதாக காலையில் மனைவி சொன்னது அவர் நினைவுக்கு வந்தது.

அதைச் சமைத்து சம்பலோடாவது மனைவியும் பிள்ளைகளும் சாப்பிடுவார்கள். தான் வீட்டுக்குப் போனால் தனக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடச் சொல்லி விட்டு மனைவி பட்டினி கிடப்பாள். அதை அவர் விரும்பவில்லை.

எழுந்து சென்று இன்னுமொரு க்ளாஸ் தண்ணீர் குடித்தார். அல்ஹம்துலில்லாஹ். வயிற்றைக் கொஞ்சம் கட்டுப்படத்திக் கொள்ள முடிந்தது.

மீண்டும் மஸ்ஜிதில் சந்திப்பதாகப் பேசிக் கொண்டதற்கிணங்க, சாப்பிடப் போன இருவரும் ஜாபிர் நானாவைத் தேடி வந்தனர். அவர் இன்னும் சாப்பிடவில்லை என்பதை அவர் முகம் சொல்லிவிட்டது.

“சாப்பிடப் போகல்லையா தம்பி?’ ஸியாத் நானாவின் கேள்விக்குப் பதிலளிக்காது மௌனமாக இருந்தார் அவர்.

“‘தெரிஞ்சிருந்தா எங்கட ஊட்டுக்குக் கூட்டிப் போயிருப்பேனே” ஆதங்கப்பட்டான் காலித்.

“கையில சேந்த காசிருந்ததுதானே! அதில இருந்து ஒரு பார்சலையாவது வாங்கித் தின்டீக்க ஏலுமே!”

ஸியாது நானாவின் பேச்சைக் கேட்டு எரிப்பது போலப் பார்த்தார் அவர்.

“இல்ல தம்பி! இந்த வேலைக்காகத்தானே மூனு நாளா நீங்க கடையத் தொறக்காம அலையுறீங்க. நான் இன்டைக்கு மட்டும்தான் வந்தன். மூனு நாளா தொடரா வாரவர் நீங்க. இந்த வேலைக்காகப் போற பயணத்துல ஒரு பார்சல வாங்கித் திங்கிறது பாவமில்ல. களவெடுக்கவா போறம்? மௌலவி கிட்டயும் ஹாஜியார் கிட்டயும் சொல்லிட்டாச் சரி. ஒரு எம்பது ரூவாதானே!”

ஸியாது நானாவின் நியாயத்தை ஜாபிர் நானா ஏற்றுக் கொள்ளவில்லை.

“எனக்குப் பசியில்ல.. வாங்க போவம்..”

சைக்கிளை வேகமாக மிதிக்கத் தொடங்கினார்.

மீண்டும் கடைகள், வீடுகள் என்று ஏறியிறங்க, கையில் பச்சை நோட்டுகளின் தொகை அதிகரித்தது. அனாதைகளின் விசயம் என்பதால் பலரும் மனமிறங்கினர்.

சேர்ந்த தொகையைக் கணக்கிட்டு நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்தனர். முதலிரண்டு நாட்களும் செய்தது போலவே இன்றைய தொகையையும் வங்கியிலிடும் பொறுப்பு ஜாபிர் நானாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தப் பணி முடிந்த பிறகுதான் அவரது மனம் நிம்மதியடைந்தது. வேகமாக சைக்கிளை மிதித்து வீட்டுக்குப் போனார்.

ஸலாம் சொல்லியவாறு வீட்டில் நுழைந்தவர் அப்படியே கதிரையில் உட்கார்ந்தார்.

காலையிலிருந்து அலைந்து திரிந்ததில் உடல் களைத்துப் போயிருந்தது. கால்கள் வலியெடுத்தன.

“பகல் சாப்பாட்டுக்கு வராம என்ன செஞ்சீங்க..?” கேள்விக் கணையோடு வெளியே வந்தாள் பாத்திமா.

“இண்டைக்கும் சல்லி சேக்குற வேலதான். ஊட்டுக்கு வர டைம் இருக்கல்ல.. இன்டையோட ஒருமாதிரி வேல முடிஞ்சி..”

மனைவியைப் பார்க்காமலே சொன்னார். தான் சாப்பிடவில்லை என்பதை அவள் கண்டுபிடித்து விடுவாளோ என்ற பயம் வேறு.

“தொண்ட காயுது புள்ளே கொஞ்சம் ப்ளேன் டீ ஊத்தித் தாங்களேன்.” பால் டீ கேட்டு வேலையில்லை என்பது அவருக்குத் தெரியும்.

பாத்திமா அவருக்கு அருகில் வந்து நின்றாள்.

“ஊட்டுல ஒரு மணி சீனியில்ல என்டு வெள்ளன போக முந்தி சொன்னதானே! இன்டைக்காவது கடையத் தொறந்து யாவாரத்தப் பண்ணி சாமானுகள வாங்கிக் கொண்டு வருவீங்கன்டு பார்த்தா, இன்டைக்கும் சமூக சேவ செஞ்சிட்டு வந்தீக்கிற…”

பாத்திமாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அவர் மீது எரிந்து விழ அவளுக்கு மனம் வரவில்லை. அவர் எவ்வளவு பொறுப்பான கணவர் என்பது அவளுக்குத் தெரியும்.

ஆனால் சமூகப் பணி என்று வரும்போது தன்னோடு சேர்ந்து குடும்பமும் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார். அந்த நேரங்களில்தான் அவளுக்கு எரிச்சல் வரும்.

“பாத்துமா கோவிக்க வேணாம்! இன்ஷ அல்லா நாளைக்குக் கடையத் தொறந்து யாவாரத்தப் பண்ணினா அரிசி, சீனி எல்லாம் வாங்கிக் கொண்டு வர ஏலுமாகும்.” அவர் ஆறுதல் கூறினார்.

“அதுசரி, நீங்க பகலெல்லாம் காஞ்சி காஞ்சி இருந்துட்டு வந்தும் ஒரு தேத்தண்ணியாவது ஊத்தித் தர வழியில்ல….'”அவள் புலம்பத் தொடங்கினாள்.

‘கொஞ்சம் பொறுத்துக்கொங்க பாத்துமா! எத்தீன்கள்ட விசயத்துக்காகத்தானே நான் போனது. அல்லா எங்களுக்கு பரக்கத் செய்வான். சரிசரி, சீனி இல்லாட்டி என்ன! சும்மா ஊத்திக் கொண்டு வாங்கோ!’

அவள் ஒன்றும் பேசாமல் போய் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்தாள். அதை வாங்கி ஒரு மிடறு பருகினார் அவர்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுக்காகவே வாழ்பவர்களுக்காக சுவனத்தில் அல்லாஹ் வழங்குவதாக அல்குர்ஆன் வர்ணிக்கும் உணவுகளும் பானங்களும் ஒவ்வொன்றாக அவர் நினைவுக்கு வந்தன.

களைத்துப் போயிருந்த அவரது உடம்பில் புதுத் தெம்பு பிறந்தது. முகத்திலிருந்த சோர்வு நீங்கியது.

“யா அல்லா! அந்தப் பாக்கியங்கள எனக்கும் ஏன்ட குடும்பத்துக்கும் தா நாயனே!” அவர் மனது ஏங்கியது.

சுவனத்துக் கற்பனையில் லயித்தபடி இன்னுமொரு மிடறு குடித்தார். அது தேனாய் இனித்தது.

பாத்திமா அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன மனுசன் இவர்! சீனியில்லாத தேத்தண்ணிய இப்பிடி ருசிச்சுக் குடிக்கிறாரே!”அவளுக்கு வியப்பாக இருந்தது.

அது ஈமானியச் சுவை என்பது அவளுக்கு இன்னும் புரியவில்லை.

(‘மல்லிகை இதயங்கள்’ சிறுகதைத் தொகுதியிலிருந்து… இது 2011 அல்ஹஸனாத் இதழில் வெளிவந்த சிறுகதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *