ஆரோக்கியமிக்க சமூகத்தின் விமர்சனப் பிரஜை
அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர்
விரிவுரையாளர் ; இஸ்லாஹிய்யா மகளிர்; கல்லூரி
“எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்குரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள். ஆனால், எது பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழைக்காதீர்கள். மேலும் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.” (அல்மாயிதா: 2)
இறைநம்பிக்கையாளர்களே உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்” என ஆரம்பிக்கும் ஸூரா மாயிதாவின் இரண்டாவது வசனத் தொடரின் இறுதிப் பகுதியை இங்கு நினைவூட்டுகின்றோம்.
சமுதாய வாழ்வில் தனி மனிதர்களை சமூகத்துடன் நெய்கின்ற பரஸ்பர ஒத்துழைப்பு, குழுச் செயற்பாடு, கூடி சாதித்தல், இணைந்து பலவீனங்களைப் போக்குதல், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்தல், ஆலோசனை கூறல், வழிகாட்டுதல் முதலான விழுமியங்கள் இரத்தினச் சுருக்கமாக இரண்டே இரண்டு குர்ஆனிய பதப்பிரயோகங்களுடன் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
அல்பிர்- நன்மையானவை, அத்தக்வா- இறையச்சம் சார்ந்தவை. இவ்விரண்டிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழையுங்கள். ‘அல்பிர்’ என்பது மனிதர்களுக்கு நன்மை பயப்பவை (உலக வாழ்வுடன் சார்ந்தவை), அத்தக்வா வாழ்வின் எல்லாப் பொழுதுகளிலும் இறைவனைப் பயந்து அவனது கட்டளைகளை ஏற்று வாழ்தல் (மறுமை நலன் சார்ந்தவை). மார்க்க விவகாரங்களில் நற்குண, பண்பாடு சார் அம்சங்களில் நாட்டின் பிரஜைகள் என்ற நிலையை எய்தல், அடுத்தவர்களை பலப்படுத்துதல், அனுபவப் பகிர்வில் பங்கு கொள்ளல் என்பவற்றினூடாக ஒத்துழைத்தல்.
இங்கு அல்குர்ஆன் தக்வாவுக்கு முன்னால் ‘பிர்’ நல்லவை, நன்மை பயப்பவை என்ற சொல்லை முற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கு பயனளிப்பவர்களே தக்வா உள்ளவர்களாக இருப்பார்கள். ஒன்று மற்றையதை வேண்டி நிற்கிறது. இவ்விரண்டும் இணையும்போதே ஒரு முஸ்லிமின் இஸ்லாம் முழுமை பெறும்.
நன்மையானவற்றிலும் இறையச்சத்திலும் பரஸ்பரம் ஒத்துழையுங்கள்” எனும் ஏவல் குடும்ப வாழ்வில், ஏனைய முஸ்லிம்களுடன், ஏனைய சமூகங்களுடன், தேசத்துடன் என நான்கு தளங்களில் பின்பற்றப்பட வேண்டியதும் பிரயோகிக்கப்பட வேண்டியதுமாகும். இங்கு ‘ஒத்துழையுங்கள்’ என ஏவலாக கூறப்பட்டுள்ளது. அது ஒரு மேலதிக உபரியான செயலாக கருதப்படவில்லை. மாறாக, அடிப்படைக் கடமைசார் அம்சமாக நோக்கப்படுகிறது. ஒரு முஸ்லிம் தனக்குள் மாத்திரம் வாழும் தனித்தவனல்ல; சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் ஒரு சமூகப் பிராணியாவான் என்ற இஸ்லாத்தின் சமூகவியல் எண்ணக்கரு வெளிக்கொணரப்படுகிறது.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் அன்புக்குரியவர் மனிதர்களுக்கு மிகவும் பயனளிப்பவரே” என்ற வாக்கின் மூலம் சமூகப் பிரக்ஞையை ஏற்படுத்தினார்கள். இன்னுமோர் அறிவிப்பில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல், ஒரு முஸ்லிமை மகிழ்வூட்டுவதாகும்; அவனது கஷ்டத்தை அகற்றுவதாகும்; அவனது கடனை நிறைவேற்றுவதாகும்; அவனது பசியைப் போக்குவதாகும்” என்றார்கள். (ஸில்ஸிலதுஸ் ஸஹீஹ்)
நல்லவற்றில் பரஸ்பரம் ஒத்துழையுங்கள்” என்பது மானசீக, உள்ளார்ந்த தேவைகளையும் சட ரீதியான தேவைகளையும் வேண்டி நிற்பதாகும். மனிதர்கள் எப்போதும் ஏனையவர்களின் கணிப்பை, அங்கீகாரத்தை ஆசிப்பவர்கள். எனவே, அவர்களது வயதிற்கும் பின்னணிக்கும் ஏற்ப அவை வழங்கப்பட வேண்டும். மனிதன் எப்போதும் சுதந்திரமாக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் செயற்படவும் விரும்புபவன். அவனுக்கு வரையறைகளுடன் கூடிய சுதந்திர அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். மனிதர்களின் கல்வி பெறும் தேவை, சுகாதாரமும் ஆரோக்கியமானதுமான வாழ்வுத் தேவைகள், வறுமையிலிருந்து பாதுகாக்கப்பட்ட பொருளாதார தேைவகள் நிறைவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த மானுட தேவைகள் நிறைவுசெய்யப்பட பரஸ்பர ஒத்துழைப்பு தவிர்க்க முடியாததாகும்.
ஒரு முஸ்லிம் தனது குடும்பத்துடன், சமூகத்துடன், சகோதர சமூகங்களுடன் இத்தகைய விழுமியங்களுடன் வாழ வேண்டியவன் என்ற அறிவுப்புலத்தையும் மனவலிமையையும் பெற்றிருக்க வேண்டியவன். அதற்காக அவன் வீட்டில், மஸ்ஜிதில், பாடசாலையில் பயிற்றுவிக்கப்பட வேண்டியவன். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்படி கூறினார்கள்: நான் எனது சமூகத்தில் சில கூட்டங்களைக் கண்டேன். அவர்கள் ஒளியாலான மேடைகளில் இருந்தார்கள். அவர்கள் கண்பார்வையை பறிக்கும் மின்னலைப் போன்று நரகத்தின் மீது போடப்பட்ட பாலத்தில் அதிவேகமாக நகர்ந்தார்கள். அவர்கள் நபிமார்களோ ஷுஹதாக்களோ ஸித்தீக்கின்களோ அல்ல.
தமது கரங்களால் மனிதர்களின் தேவைகளை நிறைவுசெய்து வைத்தவர்கள். ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டில் ஒரு நல்ல பிரஜையாக வாழ்வது போல் விமர்சனப் பிரஜையாகவும் வாழ்வான். தனது கண்களை மூடிக் கொண்டு அனைத்தையும் சரிகாண்பவனாகவோ பிழை காண்பவனாகவோ இருக்க மாட்டான். எனக்கேன் இது வெல்லாம்” என்ற சுத்த சுயநலவாதியாகவும் இருக்க மாட்டான். ஆரோக்கியமான முஸ்லிம் சமூகம் தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொள்வது போல் தாம் வாழும் ஏனைய சமூகங்களுடன் உறவாடி ஒத்துழைத்து விமர்சனப் பிரஜைகளாக இருப்பர். அவர்களது கல்வியியலாளர்கள், பொருளியல் நிபுணர்கள், சட்ட அறிஞர்கள், அரசியல் ஞானம் படைத்தோர் மற்றும் சமூகவியலாளர்கள் ஆக்கபூர்வ விமர்சகர்களாக இருப்பர். முன்மொழியப்படும் செயல் திட்டங்களையும் நடைமுறையில் அமுலாக்கத்தில் இருக்கின்றவற்றையும் பகுப்பாய்வு செய்து நாடு வளம் பெறுவதற்கும் சகல அழிவுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் ஆலோசனை கூறிக் கொண்டிருப்பார்கள்.
ஒரு முஸ்லிம் தனது துறைசார் ஆற்றலை, நிபுணத்துவத்தை வெறும் தொழில் முதலீடாக அல்லது ஓய்வூதிய நிலையில் மெல்லினப்படுத்திவிட மாட்டான். படைத்துப் பரிபாலிக்கும் ஏக இரட்சகனுக்கு ஏனையவர்கள், ஏனையவற்றை ஒப்பாக்கும் செயல்களிலும் ஆத்மிக, ஒழுக்க விழுமியங்களுக்கு மாற்றமான விடயங்களிலும் மனித உரிமைகளை மீறும் செயல்களிலும் ஒத்துழைக்காதீர்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனை மிக வன்மையானதாகும் என்ற அச்சத்துடனும் விழிப்புடனும் வாழ்பவர்கள்தாம் முஸ்லிம்கள்.
-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-