அருளே அனைத்தினதும் அடிப்படை!

இஸட்.ஏ.எம். பவாஸ்

அளவற்ற அருளாளனான அல்லாஹ் தன் அருளை வானத்திலும் பூமியிலும் அவை இரண்டுக்கும் இடைப்பட்டவற்றிலும் கொட்டிக் குவித்து வைத்துள்ளான். விண்ணிலிருந்து மண்ணை நோக்கி அவன் இறக்கிக் கொண்டிருக்கின்ற அனைத்து அருள்களும் அவனுடைய படைப்புக்களிடம் சென்றடைவதற்கு யாரும் இடையூறாக இருக்கக் கூடாது என்று அவன் விரும்புகிறான். அல்லாஹ்வின் அருளை வேண்டுமாறு அவன் ஆணையிடுவதுடன் அவனுடைய அருளில் நிராசை அடைவதையும் எச்சரிக்கிறான். அல்லாஹ் பேரருளாளனாக இருப்பது போல் அவனுடைய கருணை எனும் பண்பு  படைப்புக்களிடம் இருக்க வேண்டும் என்றும் அவன் எதிர்பார்க்கிறான்.

இந்த நாட்டின் முஸ்லிம் சமூகமும் சகோதர சமூகங்களும் அரசாங்கமும் இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமையும் அருளாகப் பார்க்கும் நிலை ஏற்பட வேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த ஒரு முஸ்லிமையும் தொல்லையாகவோ, இடையூறாகவோ, மோசடி செய்பவராகவோ, நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பவராகவோ கண்டு கொள்ளக் கூடாது. அதற்கு ஏற்ற விதமாகவே நமது எண்ணங்களும் இலக்குகளும் மனோபாவமும் சொல்லும் செயலும் பணிகளும் அமைய வேண்டும். முஸ்லிம்களோடு ஒரு விதமாகவும் முஸ்லிமல்லாதவர்களோடு மற்றொரு விதமாகவும் மக்களோடு ஒரு விதத்திலும் அரசாங்கத்தோடு இன்னொரு விதத்திலும் இரகசியத்தில் ஒரு முகத்துடனும் பகிரங்கத்தில் பிறிதொரு முகத்துடனும் ஒரு முஸ்லிம் நடந்து கொள்ள முடியாது. பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தனது பலத்தைக் காண்பிப்பதற்காகவோ, உலகத்தின் குறுகிய அடைவுகளுக்காகவோ, தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்துகின்ற ஒருவரின் சொல்லும் செயலும் இருக்க முடியாது.

அவர் நன்மையையும் தீமையையும் நன்மையாலேயே எதிர்கொள்வாரே தவிர, நன்மையை நன்மையாலும் தீமையைத் தீமையாலும் எதிர்கொள்ள மாட்டார். தன்னைப் புகழ்பவனையும் இகழ்பவனையும் அவர் எப்போதும் அன்பினாலேயே அரவணைப்பார். தன்னை ஒருவர் பாராட்டினால் அந்தப் பாராட்டுக்கு தான் எவ்வளவு அருகதையுடையவர் என்று அவர் சிந்திப்பார். தன்னை ஒருவர் விமர்சித்தால் தனது உண்மை நிலையை மறுபரிசீலனை செய்வார். அல்லது விமர்சிப்பவரின் அறியாமையை அனுதாபத்தோடு பார்ப்பார்.

அருளே அனைத்தினதும் அடிப்படை அல்குர்ஆன் சில ஸூராக்களில் ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக குறிப்பிட்ட ஒரு சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துவதுண்டு. ஸூரதுல் கஃப் அப்படிப்பட்ட ஒரு ஸூராவாகும். அதில் ‘அருள்’ என்ற சொல் பல்வேறு விதங்களில் பல தடவைகள் கையாளப்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் குகையில் தஞ்சம் அடைந்தபோது “எங்கள் இறைவனே! உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்குவாயாக! எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கித் தருவாயாக!’ எனப் பிரார்த்தித்தனர்.” (18: 10)

இங்கு அவர்கள் நேர்வழிக்கு முன்பு அருளை வேண்டியது நோக்கத்தக்கதாகும். ஏனெனில், அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் அனைத்துமே அவனுடைய அருளை அடிப்படையாகக் கொண்டவையாகும். மேலும், இஸ்லாத்திற்காக கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்துக் கொண்டு வாழ்வதற்கு நீங்கள் தீர்மானித்து விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கருணை பொழி

வான் என்று அவர்களுள் ஓர் இளைஞர் கூறினார்: இக்குகையில் நீங்கள் ஒதுங்குங்கள். உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்கு விரிவாக்குவான். உங்கள் காரியத்தைப் பயன்மிக்கதாக்கி உங்களுக்கு எளிதாக்குவான்.” (18: 16)

குகைத் தோழர்களின் வரலாற்றையும் இரு தோட்டங்களின் சொந்தக்காரர் பற்றிய சரிதையையும் கூறிவிட்டு, இஸ்லாத்தை ஏற்காதவர்களுடனும் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களுடனும்கூட அவன் மன்னிப்புடனும் கருணையுடனும் நடந்து கொள்கிறான் என்று குறிப்பிடப்படுகிறது. உமதிறைவன் மிக்க மன்னிப்பவன்; கருணையுடையவன். அவர்கள் சம்பாதித்தவற்றுக்காக அவன் அவர்களைத் தண்டிப்பதாக இருந்தால் வேதனையை அவர்களுக்கு விரைவுபடுத்தி இருப்பான்.” (18: 58)

அதாவது, யாராவது தவறிழைக்கும்போது அவர் தவறு செய்யும் வேளையிலேயே அவரைப் பிடித்துத் தண்டிப்பது இறைவனின் வழிமுறை கிடையாது. அவன் அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் கொண்டவன். குற்றவாளிகளைத் தண்டிப்பதில் அவன் அவசரப்படுவதில்லை. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பையும் கால அவகாசத்தையும் நீட்டிக் கொண்டே இருக்கின்றான். அல்குர்ஆனில் வேறு இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்:

“மனிதர்கள் சம்பாதித்தவற்றுக்காக அவர்களை அல்லாஹ் உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால் பூமியின் மேற்பரப்பில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்.” (35: 45)

நிச்சயமாக உமதிறைவன் மனிதர்கள் அநியாயம் இழைத்தபோதிலும் அவர்களை மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.” (13: 6)

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அன்னாருடைய பணியாளரும் கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்தித்தது பற்றி கூறும்போது சொன்ன முதலாவது செய்தி இதுவாகும்: அவ்விருவரும் எமது அடியார்களில் ஒருவரை அங்கே கண்டனர். அவருக்கு நாம் நம்மிடமுள்ள அருளை வழங்கி, நம்மிடமிருந்து அறிவையும் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்.” (18: 65)

கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய முக்கிய பண்பாக அறிவுக்கு முன்னால் கருணை குறிப்பிடப்படுகிறது. அறிவுடன் கருணை ஒன்றிணையும்போதுதான் ஓர் ஆசிரியரின் ஆளுமை முழுமைத்துவம் பெறுகிறது. எப்போது அறிவுடன் கருணை இல்லையோ அப்போதுதான் உலகத்தில் அழிவுகளும் அநீதிகளும் அக்கிரமங்களும் அடக்குமுறைகளும் தீவிரவாத செயற்பாடுகளும் அரங்கேறுகின்றன.கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மனித அறிவு ஏற்றுக் கொள்ளாத சில வித்தியாசமான செயற்பாடுகள் மூலம் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவற்றுள் பேரதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்த செயல்தான் ஒரு சிறுவனைக் கொலை செய்ததாகும். அதற்கான நியாயத்தை அவர் இவ்வாறு சமர்ப்பித்தார்: இவனை விட பரிசுத்தமான, மிகச் சிறந்தவனையும் கருணையில் மிக நெருக்கமானவனையும் அவ்விருவருக்கும் அவர்களின் இறைவன் பகரமாகக் கொடுக்க வேண்டுமென நாம் நாடினோம்.” (18: 81)

அதாவது, இவனை விடத் தூய்மையான குழந்தையை அவர்களுக்கு இறைவன் வழங்க வேண்டும்; இவன் மீது காட்டிய அன்பை விட அக்குழந்தை மீது கூடுதல் அன்பை அவர்கள் காட்ட வேண்டும் என்று விரும்பினோம்.

கடும் பசியுடன் பயணித்துக் கொண்டிருந்த மூஸா, கிழ்ர் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகிய இருவருக்கும் ஒரு பிடி உணவுக்கவளம் கூட கொடுக்க மறுத்த கருமிகளோடும் அவர்கள் எப்படி கருணை உணர்வோடு நடந்து கொண்டார்கள் என்பதையும் அவதானிக்கலாம். விழுந்து கிடந்த சுவர் அந்நகரத்தில் இருந்த இரண்டு அநாதைச் சிறுவர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. அதன் கீழ் அவ்விருவருக்கும் சொந்தமான ஒரு புதையல் இருந்தது. பசித்திருந்த இருவரின் பசி தீர்க்கக்கூட முன்வராதவர்கள் புதையலைக் கண்டு கொண்டால் அபகரிக்காமல் விட்டு விடுவார்களா? அதிலிருந்து பாதுகாக்கவே சுவரை நிமிர்த்தினார்கள்.

அவ்விருவரும் பருவ வயதை அடைந்து உமதிறைவனின் அருளால் அவ்விருவரும் தமது புதை

யலைத் தாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என உமதிறைவன் நாடினான்.” (18: 82)

மாபெரும் ஆட்சியாளரான துல்கர்னைன் மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது பின்தங்கிய ஒரு சமூகத்தை சந்தித்தார். துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எனவே, எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் நீர் ஒரு தடுப்பை ஏற்

படுத்துவதற்கு ஏதேனும் கூலியை நாம் உமக்கு ஏற்படுத்தட்டுமா?” என அவர்கள் கேட்டனர். எனது இறைவன் எதில் எனக்கு வசதியை ஏற்படுத்தி இருக்கிறானோ அது மிகச் சிறந்ததாகும். எனவே, நீங்கள் உடல் பலத்தால் எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நான் ஒரு தடுப்பை ஏற்படுத்துகிறேன்” என அவர் கூறினார்.  (18: 94 – 95)

துல்கர்னைன் அங்கு சென்றபோது அந்த மக்கள் முஸ்லிம்களாக இருக்கவில்லை. தனது பொறியியல் பணிக்கான கூலியைக்கூட அவர் பெற்றுக் கொள்ள மறுத்தமையே அவருடைய கருணைக்குப் போதுமான சான்றாகும். அந்த மாபெரும் மதிலை நிர்மாணித்து முடித்த பின் அவர் கூறிய

வார்த்தை இதுதான்: இது எனது இறைவனிடமிருந்துள்ள அருளாகும்.” (18: 98) அல்லாஹ்வின் ஏனைய அனைத்துப் பண்புகளையும் விட்டு விட்டு கருணையைத்தான் அவர் நினைவூட்டுகிறார். ஏனெனில், அந்த மக்கள் வேண்டி நின்ற முதலாவது அம்சம் கருணையாகும்.

இன்று சர்வதேச ரீதியாக ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு கடன் வழங்கினால் அல்லது வேறுஉதவிகள் புரிந்தால் நிச்சயமாக அதற்குப் பின்னால் உலகத்தின் அடைவுகள் எதிர்பார்க்கப்பட்டே இருக்கும். உதவியளிக்கப் பெற்ற நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும் அதன்வளங்களைச் சுரண்டுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கும். இத்தகைய பின்புலத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே கருணைப் பார்வை அறவே இல்லாமல் போனதற்கான அடையாளமாகும்.அருள் பற்றிய விசாலப் பார்வைஇறை நம்பிக்கையின் விளைவாக வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், இழப்புக்கள் ஆகிய அனைத்திலும் அல்லாஹ்வின் அருளே மறைந்துள்ளது. அவ்வாறே இஸ்லாமியத் தூதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் மீதும் அல்லாஹ் தனது மன்னிப்பு, கருணை, அன்பு, பரிவு முதலான பண்புகளைப் பொழிந்து கொண்டுள்ளான். அவன் யாரையும் உடனடியாகத் தண்டிக்காமல் நீண்ட அவகாசத்தைக் கொடுத்துப் பார்க்கிறான்.

அருள் அல்லது கருணை எனும் பண்பு ஒவ்வொரு தனி மனிதனில் இருந்தும் ஆரம்பித்து முழு உலகிலும் வியாபித்து விரிவடைய வேண்டும் என்பது அல்லாஹ்வின் பெரு விருப்பமாகும்.ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பிள்ளைகள் பெற்றோருக்குக் கருணையுடன் பணி புரிபவர்களாக இருக்க வேண்டும். குடும்பங்கள் தங்களுக்கிடையில் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ளாமல் அருளையும் அன்பையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டினரும் தங்களைச் சுழவுள்ள முஸ்லிமான, முஸ்லிமல்லாத வீட்டினருடன் நேசமிக்க உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். இன்னும் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினர்களான அயலவர்கள், அந்நிய அயலவர்கள், அருகிலுள்ள நண்பர்கள், பாதையில் சந்திப்பவர்கள், உங்கள் அடிமைகள் ஆகியோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வம் கொள்வோரை நேசிக்க மாட்டான். அவர்கள் கஞ்சத்தனம் செய்து பிற மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டுகின்றனர். மேலும்  அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியதை மறைக்கின்றனர்.” (4: 36-37)

சமூக வாழ்வில் முஸ்லிம்களின் நடத்தை அருளை அடிப்படையாகக் கொண்டமைய வேண்டும். சமூகத்திலுள்ள அநாதைகள், விதவைகள், வறியவர்கள், தேவையுள்ளவர்கள், வயோதிபர்கள், நிரந்தர நோயாளிகள், அங்கவீனர்கள் போன்ற அனைவருடனும் கருணை உணர்வோடு கருமமாற்ற வேண்டும். பிறர் தயவை வேண்டி நிற்கின்ற பலவீனர்களின் தேவைகளை இனங்காண்பதும் அவற்றின் தீர்வுகளுக்காகத் திட்டங்கள் தீட்டுவதும் இலக்குகளை வகுப்பதும் இஸ்லாமிய பணியின் ஓர் அங்கம் மட்டுமன்றி, மனித குலத்தின்பால் நாம் சுமந்துள்ள தார்மிகப் பொறுப்புமாகும். துர்ப்பாக்கியமான உள்ளத்திலிருந்துதான் கருணை என்ற உணர்வு உருவாகாமல் போகிறது” (அத்திர்மிதி) என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் மனிதர்கள் மீது கருணை புரியவில்லையோ அவர் மீது அல்லாஹ்வும் கருணை புரிவதில்லை.” (அல்புகாரி)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கருணை புரிபவர்கள் மீது கிருபையுள்ள இறைவன் கருணையைப் பொழிகிறான். எனவே, நீங்கள் பூமியில் இருப்பவர்கள் மீது கருணை புரியுங்கள்; வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணை புரிவான்.” (அத்திர்மிதி)

அல்குர்ஆனில் எந்த இடத்திலும் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லது முஸ்லிம்களுடன் நீதியாக நடப்பவர்களுக்கு மட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு மட்டும் கருணை காட்டுமாறு கூறவில்லை. மனித சமூகம் முழுவதற்கும் இனம், மதம், நிறம், கலாசாரம், மொழி போன்ற எந்த வேறுபாடுமின்றி பாசத்துடன் பணியாற்றுமாறு இஸ்லாம் போதிக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மனித குலம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனித குலத்திற்கு அதிக நன்மை செய்பவர்தான் அல்லாஹ்விடத்தில் அதிக அன்பிற்குரியவராவார்.” (மிஷ்காத்)

மனித சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கருணைப் பார்வையில் மனிதனாகப் பிறந்த யாரையும் பாகுபடுத்தியோ கூறுபோட்டோ நோக்கக் கூடாது. அந்தப் பிரிவினர், இந்தக் கூட்டத்தினர், அறிமுகமானவர், அந்நியர், நமது மதத்தவர், பிற மதத்தவர், உள்நாட்டவர், வெளிநாட்டுக்காரர் என்ற எந்தப் பேதமுமின்றி நம் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் நாம் அருளாகத் திகழ வேண்டும். ஒரு சாராரை அரவணைத்தும் மற்றொரு சாராரைப் புறக்கணித்தும் ஒரு குழுவினரை கருத்தில் கொண்டும் இன்னொரு பிரிவினரை ஒதுக்கித் தள்ளியும் இருப்பவர்கள் அருளைப் பொழிபவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீங்கள் பிறர் மீது கருணை புரியாத வரையில் இறைநம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒவ்வொருவரும் கருணை புரிந்து கொண்டுதானே இருக்கின்றனர்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இப்படிப் பதிலளித்தார்கள்: இங்கு கருணை புரிவது என்பது பரஸ்பர அனுதாபம் கொள்வது, உங்களுக்கு மத்தியில் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கிடையே நீங்கள் புரியும் கருணையைக் குறிப்பிடவில்லை. மாறாக, மனித இனத்தில் ஒவ்வொரு பொதுமகனுடனும் நீங்கள் கருணையாக நடந்து கொள்ள வேண்டும்.”  (அத்தபராணி)

அருளாக மிளிர்ந்த அண்ணலார் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாவார். அன்னாரின் வழிமுறையைப் பின்பற்றுவதாக அடித்துச் சொல்பவர்கள்கூட ‘மனித சமூகம் முழுவதற்கும் நாம் அருளாகத் தென்பட வேண்டும்’ என்ற கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட நோக்கத்தை அல்லாஹ் கூறுகிறான்: நபியே!அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.” (21: 107)

மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி தம் சமூகத்தாரை அழிவு இல்லத்தில் தள்ளி விட்டவர்களை நபியே! நீர் காணவில்லையா?” (14: 28)

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பாளர்களுக்கு எதிராகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” எனக் கூறினார்கள். (ஸஹீஹு முஸ்லிம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஜுபைர் இப்னு முத்இம் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: நான் கோபத்தில் யாரையேனும் ஏசியிருந்தாலோ, சபித்திருந்தாலோ நானும் ஆதமின் ஒருவன்தான். நீங்கள் கோபம் கொள்வதைப் போன்றுதான் நானும் கோபம் கொள்கிறேன். இருப்பினும், என்னை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருளாகவே அனுப்பியுள்ளான். எனவே, இறைவா! அவரை நான் ஏசியதை அல்லது சபித்ததை மறுமை நாளில் அவருக்கு அருளாக மாற்றி விடுவாயாக!” (அத்தபராணி)நபிகளாருடைய சமூகத்தினருக்கு துன்பமும் அல்லலும் தருகின்ற எந்த ஒன்றும் அன்னாருக்குப் பெரும் பாரமாகவும் வருத்தமாகவும் தோன்றியது. நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது. உங்கள் விடயத்தில்அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார். இறைநம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமும் உடையவராவார்.  (9: 128)

தவறிழைத்த தம் தோழர்களுடனேயே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் அல்குர்ஆன் கூறுகிறது. நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள்.” (3: 159)

-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *