தொற்றொதுக்கமும் ரமழான் எனும் தனிமைப்படுத்தல் முகாமும்!

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
சிரேஷ்ட விரிவுரையாளர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தொற்று நோய் பற்றி கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹுத் தஆலா அதனை தான் நாடியவர்களுக்கு வேதனையாக அனுப்புகின்றான். மேலும் அதை இறைவிசுவாசிகளுக்கு அருளாக அமைத்து விடுகின்றான். தொற்று நோயுள்ள பிரதேசத்திலுள்ள ஓர் அடியான் அல்லாஹ் தனக்காக எழுதி வைத்ததைத் தவிர வேறெந்த தீங்கும் தனக்கு ஏற்படாது என அறிந்துணர்ந்து பொறுமையுடன் அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்து வாழ்ந்தால் அவருக்கு ஒரு வீரத்தியாகிக்குரிய நற்கூலி உண்டு” எனக் கூறினார்கள். (ஸஹீ ஹுல் புகாரி)

இறைவனது மாறாத நியதிகளில் ஒன்றே நோய்கள். நோய்களை மருத்துவ உலகம் தொற்றும் நோய்கள் தொற்றா நோய்கள் என பாகுபடுத்தி பார்க்கின்றது. தொற்று நோய் குறித்த இறைவனின் பார்வையை ஹதீஸின் ஆரம்ப பகுதி பேசுகின்றது. நோய் பரம்பல் பிரதேசத்தில் வாழும் ஒரு அடியானின் ஆழ்மனப் பதிவு பற்றியும் தொற்றொதுக்கம் அல்லது தனிமைப்படுத்தப்படுதல் குறித்தும் ஹதீஸின் இறுதிப் பகுதி விளக்குகின்றது.

படுபயங்கரமான தொற்று நோய் இறைவனின் தண்டனையா? சோதனையா? இயற்கை அனர்த்தமா? என்ற தத்துவ சர்ச்சைகளுக்கு இந்த ஹதீஸ் முற்றுப்புள்ளி வைக்கின்றது. இறைவனுக்கு மாறு செய்து வரம்பு மீறி அநியாயம் இழைக்கின்ற பாவிகளுக்கு இது ஒரு தண்டனையாக அமையலாம். அவர்களது கொட்டத்தை அடக்கி மிதப்படுத்தி மனித வாழ்வில் சமநிலையை தொடர்ந்தும் பேணுவதற்கான இறைவனது ஏற்பாடாகவும் இது இருக்கக் கூடும்.
“நபியே அர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய பிள்ளைகளும் (பெருகியிருப்பது) உங்களை கவர்ந்திழுக்க வேண்டாம். அல்லாஹ் அவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகின்றான். அன்றி அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் அழிவதையும் நாடுகின்றான்.” ( ஸூரா அத்தொளபா: 55) ஆனாலும் இந்த இனக் குழுமத்திற்கு இந்த மதச்சார்பு சமுதாயத்திற்கு இந்த சமூகத் தரப்புக்கு தண்டனையாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது என மனிதர்களாகிய நாம் திட்டவட்டமாக தீர்ப்பளித்திட முடியாது. அவ்வாறான தீர்ப்பை வழங்குவதற்குரிய ஆழ்ந்த பரந்துபட்ட அறிவு ஞானம் எமக்கு கொடுக்கப்படவில்லை. அந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு அல்லாஹ்வே மிகத் தகுதியானவன். அவனின் வியாபகமான அறிவின் முன்னால் நாம் அற்ப பிறவிகள். இது ஒரு தண்டனையாகவும் இருக்கலாம் என அனுமானிக்கும் ஆற்றல் மடடுமே நமக்கு உண்டு. இந்த தொற்று நோய் முஃமின்களுக்கு அருளாக அமைகின்றது என்பது இறை தூதரின் தீர்ப்பாகும். இதனை ஒரு சாபக்கேடாக நாம் கருதுவது இறைதூதருக்கு முரண்படுவதாக அமைந்து விடும். ஒவ்வொரு சோதனையின் பின்புலத்திலும் ஒரு நலன் அல்லது ஒரு அருள் மறைந்திருக்கின்றது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “யாருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதிப்பான்.” (ஸஹீ ஹுல் புகாரி).
அந்த நன்மை நாம் சோதிக்கப்படுகின்றபோது புலப்படலாம். அல்லது காலம் கடந்து எமக்கு தென்பட முடியும். அதுவரை வேதனையை எதிர்கொள்ளும் ஆயுதம் தொழுகையும் பொறுமையும் ஆகும். “விசுவாசிகளே நீங்கள் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.” ( ஸூரதுல் பகரா: 153)
அருளாக அமைந்துவிட்ட தொற்று நோய்

 1. ஈமான் அதிகரித்தல்
  நோய் போன்ற பல்வேறு இடர்பாடுகளின்போது இறை விசுவாசிகளுக்கு ஈமான் அதிகரித்தல் முதன்மையான அருளாகும். “(நயவஞ்சகர்களான) மனிதர்கள் ‘அந்த முஃமின்களுக்கு மீண்டும் உங்களுக்கு எதிராக (எதிரணியினரான) மனிதர்கள் அணி திரளுகின்றார்கள். அவர்களுக்கு பயப்படுங்கள்’ என்று சொன்னபோது அவர்களுக்கு இறைவிசுவாசம் அதிகரித்தது. அல்லாஹ்வே எமக்கு போதுமானவன் அவனே சிறந்த பாதுகாவலன்” எனக் கூறினார்கள். ( ஸூரா ஆலு இம்ரான்: 173)
 2. சோதனைகள் பாவங்களுக்கு பரிகாரம்
  சோதனை சிறு பாவங்களுக்கான குற்றப் பரிகாரமாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுகின்ற நோய் அயர்வு ஆழ்ந்த மனக் கவலை எந்தளவுக்கென்றால் அவனது காலில் முள் தைத்தாலும் கூட அல்லாஹ் அவனது பாவங்களை அழித்து விடுகின்றான்.” (ஸஹீ ஹுல் புகாரி முஸ்லிம்)
  இது நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கான நபிகளாரின் சுப செய்தியாகும். இது முஃமினுக்கேயுரிய அருளாகும். வேறெவருக்கும் இந்த அருள் கிடையாது.
 3. இறை நெருக்கம் அதிகரித்தமை
  இந்த நோய்ப் பரம்பலானது இறைவனோடுள்ள உறவை வலுப்படுத்தியுள்ளது. தொழுகை திக்ரு அவராதுகள் துஆ தௌபா இஸ்திஃபார் நோன்பு ஸதகா முதலான வணக்கங்களினூடாக அல்லாஹ்வை நெருங்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது. அல்லாஹ்வின் பேராற்றலின் முன்னால் மனிதர்கள் அற்பமானவர்கள் என்ற அச்ச உணர்வை இந்த நோய்த் தொற்று ஏற்படுத்தி இறைவனை நெருங்க வைத்துள்ளது.
 4. பௌதிக உலகின் நியதிகள் பற்றி அறிவு அதிகரித்தமை
  இந்த நோய்த் தொற்றின் ஊடாக அறியாமைத் தொற்றிலிருந்து விடுபடும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இந்த பௌதிக உலகின் நியதிகள் பற்றியதும் பௌதிகவியல் காரணிகளை பயன்படுத்தி முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது பற்றியதுமான அறிவு அதிகரித்துள்ளது.
 5. வஹியின் வழித்துணை அவசியம்
  வஹியின் வழித்துணை இன்றி பகுத்தறிவும் புலனறிவும் அதிவேகப் பாதையில் பயணித்ததனால் ஏற்பட்ட கோர விபத்துக்களை அகவிழியாலும் புறவிழியாலும் பார்க்க முடிகிறது.
 6. தவக்குலின் யதார்த்த நிலையை புரிந்து கொண்டமை
  பிரபஞ்ச நியதிகளை அனுசரித்த வாழ்வானது தவக்குலுக்கு முரணானதல்ல எனும் பாடத்தை இத்தொற்று நோய் கற்றுத் தந்துள்ளது. அதாவது தொற்றொதுக்கம் அல்லாஹ்வின் கத்ருக்குட்பட்ட விடயம் என்ற புரிதல் ஏற்பட்டமை ஓர் அருளாகும்.
 7. கட்டுப்பாடான வாழ்வு
  பூகோளமயமாதல் நுகர்வுக் கலாசாரத்தை மனிதனுக்கு பரிசளித்தது. மனிதன் மிருகத்தின் நிலைக்கு தாழ்ந்து போனான். இயந்திரமயமான அவனது வாழ்வு இன்று இந்த நோய்த் தொற்றின் காரணமாக கட்டுப்பாடான வாழ்வாக மாறியுள்ளது. வீடடங்கிக் கிடக்கும் மனிதனது வாழ்வு எளிமை சிக்கனம் முதலானவற்றால் வளமாக மாறியுள்ளது. போதும் என்ற உளச் செல்வம் அறுசுவை உணவு இன்றி கஞ்சியுடன் காலம் கழிக்கலாம் என்ற துணிவைக் கொடுத்துள்ளது. படாடோபமான வைபவங்களைக்கூட நான்கு பேருடன் நடத்த முடியும் என்ற யதார்த்தத்தை மனிதன் இப்போது புரிந்துக் கொண்டுள்ளான்.
 8. விழுமியம் சார் வாழ்வு மலர்ந்துள்ளது
  அன்பு இரக்கம் மனித நேயம் மனிதாபிமானம் சகோதரத்துவம் போன்ற பண்பொழுக்கப் பயிர்கள் இனம் மதம் நிறம் மொழி என்ற வேலி தாண்டி வளர்ந்துள்ளன. தனது மகளின் திருமணத்திற்காக சேகரித்து வைத்த தங்க ஆபரணங்களை விற்று ஒரு நாளைக்கு 1500 பேருக்கு உணவளித்த சீதாக்காரிகளையும் இந்த அசாதாரண நிலை உற்பத்தி செய்துள்ளது. தொற்றொதுக்கப் பொறிமுறையால்; வாழ்விழந்த மிருகங்களுக்கும் உணவு பரிமாறிய ஜீவகாருண்ய உள்ளங்களையும் இந்த நோய் இனங்காட்டித் தந்துள்ளது.
 9. வளி மற்றும் சூழல் மாசடைதல் விகிதாசாரம் குறைந்துள்ளமை
  இராட்சத கம்பனிகளும் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டு போக்குவரத்தும் வெகுவாக குறைந்துள்ளதனால் வளி மற்றும் சூழல் மாசடைதல் விகிதாசாரம் குறைந்துள்ளது.
 10. மனிதனும் மிருகங்களும் ஒரு வகையான அமைதியை அனுபவித்தல்
  மனிதர்கள் பீதியினால் வீடுகளுக்குள் உறைந்துக் கிடப்பதனால் வீதி விபத்துக்களும் குறைந்துள்ளன. மிருகங்களும் பறவைகளும் மனிதர்கள் நடமாடும் இடங்களில் சுதந்திரமாக உலாவித் திரிகின்றன. இயந்திரமயமான வாழ்வு மனிதனுக்கு பரிசளளித்த உள நெருக்கீடுகளை இந்தத் தொற்றொதுக்கப் பொறிமுறை ஆற்றுப்படுத்தியுள்ளது.
  இவ்வாறு இந்த நோய்த் தொற்று விட்டுச் சென்ற அருட்கொடைகளை நிரல்படுத்தலாம். இவற்றை இயல்பு வாழ்க்கை உருவானதன் பின்னரும் பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மிகக் கடமை எமக்கு உண்டு. முஃமின்கள் இந்நோய்த் தொற்றை அருளாகவே பார்க்க வேண்டும்.
  தொற்றொதுக்கமும் ரமழானும்
  நாம் மேலே விபரித்துள்ள அருட்கொடைகளை நோய்த் தொற்று கொண்டு வந்து குவித்தாலும் அதனை வலிந்து வரவேற்க வேண்டாம் என்றே நபிகளார் நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியில் குறிப்பிடுகின்றார்கள். ஓர் அடியான் நோய் தொற்று பரம்பலடைந்துள்ள பிரதேசத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். அங்கிருந்த அவன் வெளியேறக் கூடாது என்பது இறைதூதரின் வழிகாட்டலாகும். ஒரு அடியான் நோய் காவியாக மாறிவிடக் கூடாது என்பதே இறைதூதரின் எதிர்ப்பார்க்கையாகும்.
  இதனை வலுப்படுத்துகின்ற ஹதீஸ் ஒன்று இவ்வாறு அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு பிரதேசத்தில் தொற்று நோய் பரவி இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டால் அப்பிரதேசத்திற்குள் செல்ல வேண்டாம். நீங்கள் வாழுகின்ற பிரதேசத்தில் பரவியிருந்தால் அங்கிருந்து வெளியேற வேண்டாம்.” (அல்புகாரி)
  இது வரலாற்றுத் தொண்மை மிகு முற்காப்பு நடவடிக்கையாகும். இதனையே இன்றைய மருத்துவ உலகம் “தொற்றொதுக்கம்” என அடையாளப்படுத்தியுள்ளது. அக்கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நோய்த் தொற்றின்போது அரச கட்டளையாக இப்பொறிமுறையை அமுலுக்குக் கொண்டு வந்தனர்.
  சிரியாவின் கவர்னர் பொறுப்பை ஏற்ற அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) தொற்று நோயால் மரணமானார்கள். பின்னர் முஆத் (ரழி) அவர்கள் அப்பொறுப்பை ஏற்று அவர்களும் தொற்று நோயால் மரணமானார்கள். அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார்கள்.
  “மனிதர்களே! இந்த தொற்று நோய் கொளுந்துவிட்டெரிகின்ற நெருப்பாகும். நீங்கள்தான் அதனது எரிகொள்ளிகள். எனவே நீங்கள் பிரிந்து சென்று மலைகளின் பால் தனிமைபட்டு விடுங்கள் அந் நெருப்பு அதற்குரிய எரிபொருளை காணாத அளவுக்கு. அதன்போது அது தானாக அணைந்துவிடும். இதனை செவியுற்ற மக்கள் அந்த அரச கட்டளையை அங்கீகரித்தனர். எல்லோரும் பாதுகாக்கப்பட்டனர். அல்லாஹ்வும் அவர்களை விட்டும் அந்த சோதனையை நீக்கி விட்டான்.” (அல்பிதாயா வந்நிஹாயா: இமாம் இப்னு கதீர்)
  இப்பொறிமுறையையே அதாவது தொற்றொதுக்கத்தை மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா இஸ்லாமிய உலகில் அன்று அறிமுகம் செய்தார்கள். தொற்றொதுக்கத்திற்கு உட்படுகின்ற அடியான் அல்லாஹ்வின் கத்ரை முழுமையாக விசுவாசித்து அவன் எழுதியதைத் தவிர வேறெதுவும் தனக்கு ஏற்படாது என்ற ஆழ்மனப்பதிவுடன் பொறுமைக் காத்து அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்து இருந்தால் அவருக்கு வீர மரணத்துக்குரிய கூலி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!
  தனிமைப்படுத்தல் என்பது எமக்கு புதிய ஒன்றாக தோன்றினாலும் இது எமது வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. ஹிராவில் தனிமைப்பட்ட ர ஸூலுல்லாஹ் வஹியின் செய்தியைப் பெற்றுத் தந்தார்கள். ஸவ்ரில் தனிமைப்பட்டு தவக்குல் பாடத்தையும் ஹிஜ்ரத் படிப்பினையையும் பெற்றுத் தந்தார்கள். ஷிஃபு அபீ தாலிபில் தனிமைப்படுத்தப்பட்ட அண்ணலாரும் ஸஹாபாக்களும் அர்ப்பணச் சிந்தனையையும் தியாக வாழ்வையும் கற்றுக் கொண்ட பாடங்களாக முன்வைத்தார்கள். வரலாற்றுத் தொண்மை மிகு காலப்பிரிவில் குகைக்குள் தனிமைப்பட்ட இளவல் கூட்டம் (குகைவாசிகள்) இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரண வாழ்க்கையை சமர்ப்பணம் செய்தார்கள்.
  உடலை தாக்கி அழிக்கும் கெரோனா வைரஸிலிருந்து தப்பிக்கவே இத் தொற்றொதுக்கப் பொறிமுறை. உள்ளங்களை ஆக்கிரமிக்கும் வைரஸ்களை இல்லாதொழிக்கவே ரமழான் எனும் தனிமைப்படுத்தல் முகாம். வஹியின் வர்ஷிப்பால் இப்புவிப்பந்து நனைய ஆரம்பித்த நாளில் இந்த முகாம் அமைக்கப்பட்டு விட்டது. இது இறைவனால் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாம். இங்கு 29 அல்லது 30 நாட்களுக்கு முஸ்லிமான ஆண் பெண் இருபாலாரும் சுயமாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
  இங்கு சிந்தனை எண்ணம் உணர்வுகள் தனி மனித நடத்தைகள் உடலியல் இன்பங்கள் போன்றவற்றுக்கு பரிசோதனை நடத்தப்படுகின்றன. இங்கு கட்டாயம் ஒவ்வொரு நாளும் 12 அல்லது 13 மணித்தியாலங்கள் உணவு பானங்கள் உட்கொள்வது தவிர்க்கப்படல் வேண்டும். ஒவ்வொரு நோன்பாளியும் தன்னைத்தானே ஒவ்வொரு நாளும் சுயவிசாரணை மூலம் நோய் தொற்று உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களும் உள ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் இராக்கால வணக்க வழிபாடுகளின் ஊடாக உள்ளத்திற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக கொள்ள வேண்டும். இந்த முகாமின் இறுதிப் பத்து நாட்களில் விஷேடமாக கட்டமைக்கப்பட்ட இஃதிகாப் கூடாராத்திற்குள் புகுந்து இறுதியாக தனது உள ஆரோக்கியத்தை ஒரு முறை பரிசீலித்துக் கொள்ள முடியும். முழுமையாக சுகம் கண்டவர்களுக்கு அல்லா ஹுத் தஆலா ‘தக்வா’ என்ற சான்றிதழை வழங்கி ரமழான் என்னும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வழியனுப்பி வைக்கிறான்.
  இந்த நோய் தொற்றினால் தவிர்க்க முடியாமல் அமைக்கப்பட்ட தொற்றொதுக்க முகாம்கள் தற்காலிகமானவை. அவை இயல்பு வாழ்வு மலர்ந்தவுடன் அகற்றப்பட்டு விடும். இறைவன் அமைத்து தந்த ரமழானிய முகாமை நாம் கன கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே உள்ளத்தில் தொற்றியுள்ள வைரசுகளை அழிப்பதற்கு ஆன்மிக ரீதியான சிகிச்சை வழங்கப்படும் நிரந்தர முகாமாகும்.
  அசாதாரண நிலமையின் மூலம் நாம் கட்டுப்பாடான ஓர் அருளை சுவைத்ததைப் போல அதனைத் தொடர்ந்தாற் போல வந்துவிட்ட அருள் சுரக்கும் ரமழானையும் எம் வாழ்வை மறுசீரமைக்கும் அரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *