வேறுபட்ட சூழலில் ஒன்றுபட்ட உழைப்புக்கான ரமழான்!

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
முன்னாள் தலைவர்- இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

பசியையும்; தாகத்தையும் பழக்கமாக்கிக் கொள்ளவும் முடியும் வணக்கமாக்கிக் கொள்ளவும் முடியும். இரண்டுக்குமிடையிலான வேறுபாடு பழக்கத்துக்கு விட்டு விடுவதும் வணக்கம் என்று எண்ணம் கொள்வதுமன்றி வேறில்லை.

உறுதியோடு வணக்கம் என்ற எண்ணம் கொண்ட நிலையில் ஒருவர் பசியோடும் தாகத்தோடும் நோன்பு நோற்றால் அவரது பசியும் தாகமும் மட்டுமல்ல, உணவும் உறக்கமும்கூட வணக்கமாகவே மாறுகின்றன. அது மட்டுமல்ல, அவர் தனது வணக்கத்தை கெடுத்துவிடும் கெட்ட வார்தைகள் மற்றும் கெட்ட செயல்களையும் தவிர்ந்து கொள்வார். நல்ல சிந்தனை, நற்செயல், பயனுள்ள பேச்சு, நாவடக்கம் என்பன அவரது நோன்பை அப்போது அழகுபடுத்துகின்றன.

வணக்கம் என்ற எண்ணத்தோடு பகலில் இவ்வாறு நோன்பு நோற்று ரமழானை அழகுபடுத்தியவர், அதன் இரவுகளை ஒருபோதும் கைநழுவ விடமாட்டார்.

பகல் காலங்களில் உண்ணாமல் பருகாமல், பசி தாகம் பொறுத்து பகலின் வேகங்களுக்கும் ஈடுகொடுத்து அலங்கரித்த நோன்பின் மாண்புகளை அதன் இரவுகளில் வீணடிக்க ஒரு நோன்பாளிக்கு எங்கணம் மனசு வரும்.

பகலின் சுமைகளோடும் சிரமங்களோடும் நோன்பைக் காப்பதை விட அத்தகைய சுமைகள் இல்லாத இரவுகளால் நோன்பை அலங்கரிப்பது இலேசானதாகவே இருக்கும். உண்டு பருகி உடல் சிரமங்கள் குறைந்திருக்கும் இரவு வேலைகளில் நோன்பின் மாண்பு காக்கும் (இரவுத்) தொழுகையை ஒரு இறை விசுவாசியால் எங்கணம் விட்டு விட முடியும்? பகல் காலங்களிலேயே ஸ{ன்னத்துகளோடு பர்ளுகளையும் தவறாமல் தொழுதவருக்கு அது ஒரு சுமையாக நிச்சயம் இருக்க மாட்டாது.

உண்டு, பருகி உடல் சிரமங்களைக் கூட்டிக் கொள்பவர்களுமிருக்கிறார்கள். அவர்கள் நோன்பின் மாண்புகளை காணத் தவறிவிடுகிறார்கள். அல்லது அவற்றை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகையவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள்.

உண்டு, பருகி நோன்பு நோற்பவர்கள் உண்பதற்கும் குடிப்பதற்கும் வசதியே இல்லாதவர்களை ரமழானில் மறந்துவிட முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். நோன்பின் மாண்புகளில் உன்னதமானது அந்த நினைவுகூரலே.

அண்டை அயலவர்களில்….. சுற்றத்தார் மத்தியில்… அவ்வாறு நிர்க்கதியானவர்கள் இருப்பின் அவர்களது இல்லாமையைப் போக்கி அவர்களது உள்ளமைகளில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக நிச்சயம் நோன்பாளிகள் இருப்பார்கள். அயலவன் பசித்திருக்க உள்ளவன் புசிக்க முடியாதென்றால், அத்தகைய பண்பாட்டைக் கொண்ட மார்க்கத்தில் இல்லாதவன் நோன்பு நோற்க மற்றுமொருவன் எங்கணம் வகை தொகையின்றிச் சாப்பிட முடியும்?

நோன்பின் மாண்பு ரமழானை அலங்கரிப்பது மட்டுமல்ல, நோன்பாளிகளின் உள்ளங்களை மகிழ்விப்பதும்தான். அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளோடு (ஹுகூகுல்லாஹ்) அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் ( ஹுகூகுல் இபாத்) இணையும்போதே மார்க்கம் முழுமையடைகின்றது. நோன்பாளிகளின் நோன்பு காலத் தேவைகள் நோன்பாளிகளின் பெருநாள் தேவைகள் எனக் கவனிக்க முடியுமானவற்றைக் கவனித்து வசதியுள்ளவர்கள் தமது நோன்பு கால அறுவடைகளை நிச்சயம் இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.

இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு நோன்பாளிகளின் அயலவர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. அயலவர் யாராக இருந்தாலும் அவர்கள் ரமழானின் வருகையால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற உணர்வு நோன்பாளியிடம் இருக்க வேண்டும். அந்த நோக்கில் அவர்; ரமழானையும் கண்ணியப்படுத்த வேண்டும்@ ரமழானை அடைந்த மக்களையும் கண்ணியப்படுத்த வேண்டும்.

ரமழானை அடைபவர்கள் (முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள்) யராக இருந்தாலும் அவர்கள் ரமழானின் ரஹ்மத்தை ஏதாவது ஒரு வகையில் உணர வேண்டும். கஷ்ட நஷ்டங்களைப் போக்கிடும் ஒரு மாதம் வந்திருப்பதாக அவர்கள் உணர வேண்டும். நோன்பு ரஹ்மத்தின் மாதம் என்றால் அந்ந ரஹ்மத்தின் ஒரு பங்கை ஏன் அவர்கள் அனுபவிக்கக் கூடாது. நோன்பு பசியை உணர்த்துவதாயின் ஆதமுடைய மக்களின் பசியைத்தானே அது உணர்த்துகின்றது. அவர்கள் யாராக இருந்தால் என்ன?

நோன்பின் வருகையால் முஸ்லிம்கள் ஏன் மகிழ்ச்சியடைகின்றார்கள்? நோன்பு நோற்றால் அவர்கள் பெறுகின்ற இலாபம் என்ன? நோன்புக்கும் மானுட தர்மத்துக்கும் என்ன சம்பந்தம்? போன்ற விடயங்களை சகோதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடாதா? அதற்கான கவனயீர்ப்பை ரமழானில்தானே நாம் செய்ய வேண்டும்.

இதற்கான கவனயீர்ப்பு கொண்டாட்டங்களை உலகில் பல்வேறு முஸ்லிம் நாடுகள் பல விதமாக அனுஷ்டிக்கின்றன. சில நாடுகளில் மஸ்ஜித்களையும் கடைத்தெருக்களையும் மின்விளக்குகளால் அலங்கரிக்கின்றார்கள். இன்னும் சில இடங்களில் சிறு பிள்ளைகளின் ரமழான் வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றார்கள். மற்றும் சில இடங்களில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பாதையில் இனிப்புப் பண்டங்களை விநியோகிக்கிறார்கள். சஊதி அரேபியாவில் வசதிபடைத்தவர்கள் உழவெயiநெச களில் ஏற்றிவந்து பழங்களையும் ஏனைய உணவுப் பொருட்களையும் விநியோகிக்கின்றனர்.

இவ்வாறு செய்யும்போது ஏற்படும் புத்துணர்ச்சிகளும் புதிய ஆர்வங்களும் விபரிக்க முடியாதவையாகும். அத்தகைய புத்துணர்ச்சிகள் நாமறியாத விதத்தில் நன்மைகளை விதைக்க வல்லவை. ரமழான் இடையூறுகளின் மாதம் என்ற பதிவும் சிலரால் ஏற்படுத்தப்படுகின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அடுத்த மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாலிபர்களின் இரவுப் பொழுதுகளையும் மஸ்ஜித்களின் ஒலிபெருக்கிகளையும் மட்டுப்படுத்த வேண்டிய கடமைப்பாடும் இந்த வகையில் சமூகத்திற்குண்டு.

( ஹுகூகுல் இபாத் எனும்) அடியார்களுக்கான கடமைகள் விடயத்தில் எமது சூழலைக் கவனத்திற் கொண்டு இன்னும் பல உத்திகளை இந்த ரமழானில் சமூகம் கையாளலாம். அவற்றை சமூகத் தலைமைகளின் சிந்தனைக்கு விட்டுவிட்டு அடுத்த அம்சத்துக்கு செல்வோம்.

வாயும் வயிறும் பசித்திருந்தால் நாவும் நினைவும் திக்ரில் இருக்கலாம். திக்ர் மரணித்த உள்ளங்களை உயிர்பிக்கின்றது. வரண்ட உள்ளங்களுக்கு நீர் பாய்ச்சுகின்றது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கு இலகுவான வழி “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை அதிகம் மொழிவதாகும். சுப்ஹானல்லாஹ்இ அல்ஹம்துலில்லாஹ் போன்ற எண்ணற்ற வார்த்தைகளால் இந்த திக்ரை சதாவும் செய்ய முடியும்.

“திகர்” ரமழானோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டது என்பதை இப்படியும் விளக்களாம். “திகர்” என்ற பெயரைக் கொண்ட குர்ஆன் ரமழானிலேயே அருளப்பட்டது. அதனால் குர்ஆனுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கௌ;ளவது “திக்ர்” ஆகவே அமையும்.

குர்ஆனை ஓதுதல், பொருளுடன் ஓதுதல், “ததப்புர்” எனும் சிந்தனையுடன் ஓதுதல், ஒரு சில வசனங்கள் அல்லது சிறிய அத்தியாயங்கள் என்பவற்றைக் கற்றல், கற்றவர்கள் பிறருக்குக் கற்றுக் கொடுத்தல்… என இந்த “திக்ர்” ஐப் பரவலாக செய்யலாம்.

ரமழானின் பொழுதுகள் பயனுள்ளதாகக் கழிவதற்கு இது மிகச் சிறந்த வழியாகும். குர்ஆன் வன்முறையைப் போதிக்கின்றதா? போன்ற நூல்களை குர்ஆன் பற்றிய பிழையான அபிப்பிராயம் கொண்டவர்களுக்கு அறிமுகம் செய்தல் நல்லிணக்க வாசலைத் திறக்கும் ரமழானிய செயல்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் பார்த்தது போல சகோதர சமூகங்களைச் சேர்ந்த மக்களை அல்குர்ஆன் பார்க்கவில்லை. அந்தப் பயங்கரவாதிகள் மனித இனத்துக்குக் கேடு விளைவித்தது போல மனித சமூகத்திற்கு கேடு விளைவிக்குமாறு குர்ஆன் போதிக்கவில்லை என்ற செய்தி இன்றைய சூழலில் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் ஒரு நோன்பாளி இரண்டு கருத்துடையவனாக இருக்க மாட்டான். நோன்பு அருள்கள் நிறைந்த மாதம். அந்த மாதத்தில் அருள்கள் பற்றிய செய்திகள் அகிலமெல்லாம் சென்றடைய வேண்டும். அவைதான் இஸ்லாத்தின் செய்திகள் என்பது உணரவைக்கப்பட வேண்டும் என்பதிலும் நோன்பாளி முனைப்பானவனாகவே இருப்பான்.

நோன்பு அருள்கள் நிறைந்த மாதம். அல்லாஹ்வின் அருள்களைக் கணக்கிட்டால் அவற்றைக் கணக்கிட்டு முடிக்க மாட்டீர்கள் என்று கூறிய அல்லாஹ் பௌதிக அருள்களோடு மானுசிக அருள்களையும் அள்ளி வழங்கியிருக்கிறான் என்பதை இந்த ரமழானில் உணராதவன் உண்மையில் நஷ்டவாளியாவான். ஒரு நோன்பாளி அல்லாஹ்வின் அருள்களை அதிகமாக நினைவுகூர ஒருபோதும் தவற மாட்டான். அதனால் “அல்ஹம்துலில்லாஹ்” என்ற புகழ்ச்சி அவனது நாவில் தவழ்ந்து கொண்டே இருக்கும்.

அருள்களை உணர்வதோடு… அருள்களுக்குரியவனைப் புகழ்வதோடு ஒரு நோன்பாளி நின்று விட மாட்டான். மாறாக நோன்பாளியே ஓர் அருளாக மாறிவிடுகின்ற சூழலைத்தான் ரமழான் உருவாக்குகின்றது.

நோன்பாளி உணர்ச்சிவசப்பட மாட்டான்@ சர்ச்சைகளில் இறங்க மாட்டான்@ பிறரை அதிகம் மன்னிப்பவனாக இருப்பான்@ பகைமைகளை மறந்து வடுவான்@ விட்டுக் கொடுப்பான்@ தனது தவறுகளுக்காக தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்பான்@ தன்னிடமிருப்பவற்றையும் பிறருக்காக உவந்தளிப்பான். நபி (ஸல்) அவர்கள் ரமழானில் தென்றலைப் போல் வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள் என்பதை அவனால் எப்படி மறக்க முடியும்?!

அது மட்டுமல்ல அருளாளனிடம் கரமேந்தி தனது தேவைகளைக் கேட்கவும் தனது இயலாமைகளை முறையிடவும் தனது பலவீனங்களைக் களையவும் அவன் பிரார்த்தித்தவனாக இருப்பான்.

அருள்களை சார்ந்திருக்காமல் அருளாளனைச் சார்ந்திருக்கின்ற பண்பு இதனால்தான் உருவாகின்றது. அல்லாஹ் நாடினாலன்றி எந்தவொரு அருள்களுக்கும் பாத்திரமானவனாகத் தன்னால் மாற முடியாது என்ற நம்பிக்கையும் அதன் மூலம்தான் வளருகின்றது. அல்லாஹ்வின் அருள்களில் நம்பிக்கை வைத்து அவன் என்னைக் கைவிட மாட்டான் என்ற உறுதியின் பால் செல்வதற்கும் இதுவே ஆரம்பமாக அமைகின்றது.

அருளாளனைத் தனது விவகாரங்கள் அனைத்திலும் சம்பந்தப்படுத்திக் கொள்ள நோன்பாளி தவற மாட்டான். அதற்கு வழி செய்வதுதான் சந்தர்ப்ப துஆக்கள். மனிதன் எதிர்கொள்கின்ற சூழ்நிலைகள் யாவும் பல்வேறு தேவைகளை அவனுக்குள் ஏற்படுத்துகின்றன. பல்வேறு உதவிகளை எதிர்பார்க்கும் நிலையை அவனுக்குள் தோற்றுவிக்கின்றன. அதன்போது மனிதர்களை நாடும் பழக்கமே பொதுவாக இருக்கின்றது. எனினும். அருளாளனின் மீது நம்பிக்கை வைத்த ஒரு நோன்பாளி அனைத்துக்கும் முதலாக… அனைவருக்கும் முதலாக அல்லாஹ்விடமே தனது விவகாரங்களை ஒப்புவிக்கின்றான். அவனிடம் தனது தேவைகளை முறையிட்டு, உதவிகளைக் கேட்ட பின்பே உலகில் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அவன் முற்படுகிறான்.

அதனால் துஆக்கள், சந்தர்ப்ப துஆக்கள், காலை, மாலை ஓதல்கள் யாவும் அவனுக்கு அருமருந்தாகவே இருக்கும். அவற்றைத் தவற விடுவது அவனுக்கு ஒரு பேரிழப்பாகவும் தோன்றும்.

பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற காலமாக ரமழான் இருக்கிறது. அதற்கொரு காரணம் ஹலால்களைக்கூட அல்லாஹ்வுக்காக அவன் விட்டு விடுகின்ற நோன்பின் மாண்பாக இருக்கலாம். ஹலால்களையே அல்லாஹ்வுக்காக விட்டு விடுகின்ற பயிற்சி ஹராம்களை அல்லாஹ்வுக்காக விட்டு விடுகின்ற பயிற்சிக்கு ஒரு மனிதனை இட்டுச் செல்லாதிருக்குமா? அவ்வாறு இட்டுச் செல்லாவிட்டால் பிரார்த்தனைகள் தடைப்பட்டு விடும். அல்லாஹ்வுடனான உறவு துண்டிக்கப்படும் என்ற ஆபத்தை நோன்பாளி உணராதிருக்க மாட்டான். அவன் தனது உணவு, உடை, உடமைகள் போன்றவற்றை ஹராம் கலந்தவையாக ஒருபோதும் வைத்துக்கொள்ள மாட்டான். அருளாளனது உடனிருப்பை இழப்பதன் பாரதூரம் ஒரு நோன்பாளிக்குப் புரிவது போல் பிறிதொருவருக்கு புரிய மாட்டாது.

பிரார்த்தனைகளின்போது தனதும் தனது குடும்பத்தினதும் நலன்களுக்காகப் பிரார்த்திப்பதோடு நோன்பாளி நின்றுவிட மாட்டான். காரணம், அவனதும் அவனது குடும்பத்தினதும் நலன்கள் சமூகத்தினதும் நாட்டினதும் நலன்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இனவாதம், மதவாதம், தீவிரவாதம், இயற்கை அனர்த்தம், வரட்சி, வெள்ளப் பெருக்கு, கொரோனா தொற்று என மனித இனத்துக்கு சவாலாக வரும் எந்தக் கெடுதியாக இருந்தாலும் அது விடயத்தில் அமைதியாக இருக்க ஒரு நோன்பாளியால் முடிhயது. காரணம், அவனால் ஒன்றும் செய்ய முடியாது போனாலும் மனித சமூகத்தின் நலன்களுக்காக பேராற்றல் கொண்ட அல்லாஹ்வைப் பிரார்த்திக்க முடியாது போவதில்லை.

எனவே, பிரார்த்தனைகளை முதன்மையானதாகவும் மனித நேயப் பணிகளை இரண்டாவதாகவும் சிரமேற்கொண்டு மனித சமூகத்தின் அவலங்களைப் போக்குவதில் அவன் கவனம் செலுத்துவான். குறிப்பாக, கொரோனா உயிர்க்கொல்லி வைரஸின் தாக்குதலுக்கு முழு உலகமும் ஆளாகியிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், நோன்பாளியின் பிரார்த்தனைகளும் மனிதநேயப் பணிகளும் எங்கணம் குறைய முடியும்? இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிர் துறந்தும் நாடுகள் முதல் வீடுகள் வரை பொருளாதாரம் முடக்கப்பட்டும் மற்றும் பல்வேறு சமூக ரீதியான, உளவியல் ரீதியான பாதிப்புகளுக்குக்கு ஆளாகியும் இருக்கின்ற நிலையில் இம்முறை நாம் ரமழானை எதிர்கொள்கிறோம். எனவே, இந்த ரமழானில் வழமையான கடமைகளுடன் மேலதிக கடமைகளும் நோன்பாளிகளுக்கு முன்னால் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்ற ரமழானிய கடமைகளோடு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்திற்கு முழு அளவிலான ஒத்துழைப்பையும் இதுவரை நாம் வழங்கியது போன்று ரமழானிலும் வழங்க வேண்டும். அதே போன்று முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்றில்லாமல் முடக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை காரணமாக யாரெல்லாம் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களது அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் மனித நேயப் பணிகளிலும் நாம் கொரன்டைன் வரையறைக்குள் இருந்து முடியுமானவரை ஈடுபட வேண்டும்.

மேலும் உலகையும் மக்களையும் ஆட்கொண்டிருக்கும் அபாயகரமான நோயிலிருந்து பாதுகாப்புக் கோரி அல்லாஹ்வை இறைஞ்சிப் பிரார்த்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம். புனித ரமழானின் இரவு வேளைகளிலும் இப்தார் வேளைகளிலும் இந்தப் பிரார்த்தனையை நாம் மறந்துவிடக் கூடாது.

இவற்றோடு பிரார்த்தனையின் மற்றுமொரு பகுதி இருக்கிறது என்பதையும் நோன்பாளி மறந்துவிட மாட்டான். அதுதான் இஸ்திஃபார் ஆகும். நோன்பு பாவ மன்னிப்பின் காலமாக இருப்பதால் எப்போதும் இஸ்திஃபார் செய்யும் பழக்கமுடைய முஸ்லிம் நோன்பு காலத்தில் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்ளவான்.

அடியான் தனது தவறுகளை உணர்வதும் அவற்றுக்காக வருந்துவதும் அவற்றை மன்னித்து விடுமாறு இறைஞ்சுவதும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல்களாகும். அடியான் தனது பாவங்களை உணர்ந்து, வருந்தி வெளியிடும் ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என்ற வரார்த்தையே அதற்குப் போதுமானது. அடியானை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஒரு நாளில் எத்தனை முறை ஒரு நோன்பாளி இந்த வார்த்தையை உச்சரிக்க முடியும்!

மானுடமும் மனித நேயமும் விலைமதிப்பற்ற மனித வாழ்க்கையும் பல்வேறு அபாயகரமான சோதனைகளால் சூழப்பட்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில் நாம் எதிர்கொண்டிருக்கின்ற ரமழானை மேற்கூறப்பட்ட… கூறப்படாத பொருத்தமான நற்செயல்களால் அலங்கரித்து ஈடேற்றம் பெறுவோமாக!

இறைவா! ரமழானை உள்ளத்துக்கும் உலகத்திற்கும் அமைதி தருவதாயும் பயன்கள் நிறைந்ததாயும் ஆக்கிவைப்பாயாக!

மேலும் இந்த மாதத்தை அமைதியும் திடவுறுதியும் மிக்கதாகவும் சாந்தியும் சுபிட்சமும் நிறைந்ததாகவும் நிழலிடச் செய்வாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *