அனர்த்தங்களுக்கு முன்னால் அல்லாஹ்வின் அடியார்கள்!

அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர்

விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

“நம்பிக்கையாளர்களே! நிலைகுலையாமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிலைகுலையாதவர்களுடன் இருக்கிறான்.” (ஸூரதுல் பகரா: 153)

ஸூரதுல் பகராவின் 153ஆவது இவ்வசனம் இஸ்லாமிய ஆளுமையின் மொத்த வடிவமாக ஒரு மனிதனை, முஸ்லிம் சமூகத்தை வடிவமைப்பதில், அவர்களை செதுக்கி செப்பனிடுவதில் மிகவும் பிரதான இடத்தை வகிக்கும் பொறுமை, தொழுகை குறித்து எடுத்தோதுகின்றது. இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் மக்காவின் காலப் பகுதிகள் முழுதும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து மீண்டும் மதீனாவில் அனர்த்தங்களும் சவால்களும் ஒரு புதிய பரிமாணத்துடன் எழ ஆரம்பித்த வேளையில்தான் இவ்வசனங்கள் இறங்கின.

மனிதன் எப்போதும் கஷ்டங்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியவன். அதனை எவ்வாறு ஒரு முஸ்லிம் நிலைகுலையாது எதிர்கொண்டு தனது வாழ்நாட்களை நிறைவு செய்கின்றான் என்பதில்தான் அவனது முஸ்லிம் என்ற ஆளுமை பூரணத்துவம் பெறுகிறது.

இன்று உலகம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மிகப் பெரிய சவால்களை எவ்வித வித்தியாச வேறுபாடுகளுமின்றி சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் முழு உலகையும் ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இனி எவ்வாறு வாழப் போகின்றோம்? நாளை என்ன நடக்கப் போகிறது? என அங்கலாய்க்க வைத்துள்ளது. இதுவோர் உயிரியல் யுத்தமா? அல்லது வரலாற்றுக்கு எப்போதும் பரிச்சயமான தொற்று நோயா? இதற்குப் பின்னால் இருக்கும் மனித நேய துரோகிகள் யார்? இதனை எவ்வாறு அறிவியல் எதிர்கொள்ளலாம்? என்ற கருத்தாடல்களுக்கெல்லாம் அப்பால் இது அல்லாஹ்வின் அதாப்- வேதனை என்றால் மனித கரங்களினால் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லாஹ் மனிதர்களுக்கு எதிராக ஒரு அதாபை (வேதனையை) அனுப்பினால், அவன் நிர்ணயித்த நேரப் பொழுதில் நடந்து முடிந்து விடும்.

நூஹ் (அலைஹிஸ்ஸலாம்), லூத் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோரின் சமூகங்கள் பிர்அவ்ன், ஆத், ஸமூத் சமூகங்கள் அழிக்கப்பட்தை அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் அதாபுக்கு முன்னால் மனித அறிவுக்கும் தடுத்து நிறுத்தல்களுக்குமான போராட்டம் முதலான சொல்லாடல்களுக்கு இடமே இல்லை.

இதனை ஒரு தண்டனையாகக் (இகாப்) கொண்டால் மனிதர்கள் இழைத்த மிகப் பெரிய அநியாயங்கள், ஆக்கிரமங்களுக்கான தண்டனையாக இருக்க முடியும். அறிவியல் முன்னேற்றம், அதி உச்ச அபிவிருத்தி என்ற பெயர்களில் உண்மையான அறிவும் ஆத்மிக விழுமியங்களும் ஒழுக்கப் பெறுமானங்களும் ஓரங்கட்டப்பட்டு விலங்கியல் நிலையில் மனிதர்கள் வாழ்வதற்கான கோட்பாட்டுருவாக்கம் செய்து அதுசார் கலாசாரத்தை உலகம் முழுவதும் நிர்வகித்ததன் விளைவாக இருக்கலாம்.

முஸ்லிம் சமூகங்கள் மீது அல்லாஹ்வின் கோபமாகவும் இருக்க முடியும்.

இவ்வாறான சூழல் தோன்றும்போது அல்லாஹ்வின் நல்லடியார்களும் இவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அப்போது அவர்களும் ஏனையவர்களைப் போல் இழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை தோன்றும். அவர்கள் அதனை ஒரு சோதனையாக ஏற்றுக் கொள்வார்கள். அச்சோதனைகளில் பொறுமையுடன் நிலைகுலையாது நிலைத்திருப்பார்கள்.

இணைவைப்பு சமூகங்கள் எப்போதும் தமது உலக வாழ்வு மீதான அச்சத்துடன் இருப்பவர்கள். ஆள் எண்ணிக்கையில், அடிப்படைத் தேவைகளில் ஆடம்பர தேற்றங்களில், பௌதிக இருப்புக்களில் குறைகள் அல்லது இழப்புகள் ஏற்பட்டுவிடும் என்ற தோல்வி மனப்பாங்குடனும் அவற்றை வெறுமனே பௌதிக காரணிகளால் மாத்திரம் அளவிடுக்கின்றோராய் இருக்க, இறைவனை மாத்திரம் சார்ந்து நிற்போர் பௌதிக விதிகள் என்ற அறிவியல் உண்மைகளுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பால் இறை நிர்ணயத்தை, இறை நாட்டத்தை சார்ந்து நிற்றல் என்ற மனவெழுச்சியுடன் இருப்பார்கள்.

அவர்கள் ஒருபோதும் உடைந்தது போவதில்லை. ஏகத்துவ சமூகம் அனர்த்தங்களுக்கு முன்னால் தம்மை மேலும் பட்டை தீட்டிக் கொண்டு கொள்கையில், நடத்தைகளில் கூர்மையடைந்து செல்கிறது. அறிவோடும் நம்பிக்கைகளுடனும் பொறுமை காப்பார்கள். உணர்ச்சிவசப்படல்களும் முட்டாள்த்தனமான நகர்வுகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு அல்லாஹ்விடத்தில் எம்மை குற்றவாளிகளாக ஆக்கிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வுகளோடு நடுநிலைத் தன்மையுடன் தம்மைக் கட்டமைத்துக் கொள்வார்கள்.

உலக விடயங்களில் நிகழும் சோதனைகள் யாரையும் விட்டுவைப்பதில்லை. நல்லவர்- கெட்டவர், ஏகத்துவவாதி- இணைவைப்பாளர், தலைவர்- பணியாளர்… எவரும் இதிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில், அது வாழ்வின் இயல்பு. மனவேதனை, ஆரோக்கியமின்மை, நேசர்களைப் பிரிதல், பொருள் இழப்பு, சக மனிதர்களால் ஏற்படும் தொல்லைகள், வாழ்க்கையின் கஷ்டங்கள், காலத்தின் திடீர் அனர்த்தங்கள்… முதலானவற்றிலிருந்து தப்பியவர் என ஒருவரைக் கூட காண முடியாது. அவை நிச்சயமானவை.

அல்லாஹ் கூறுகிறான்: “மேலும், சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்’ என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!” (2: 155- 157)

இந்த நாட்களில் நாம் திடீர் அனர்த்தத்திற்கும் அது ஏற்படுத்திய பல்வேறு நெருக்கடிகளுக்கும் முன்னால் நிற்கின்றோம். மட்டுமன்றி, இனவாத சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கு முன்னாலும் நிறுத்தப்பட்டுள்ளோம். எனவே, இச்சோதனையை மிகவும் கண்ணியமாக எதிர்கொள்ள வேண்டும்.

ஆபத்துக்களை எதிர்கொள்ள தொழுகையின் மூலமும் பொறுமையின் மூலமும் உதவி தேடிக் கொள்ளுங்கள் என வழிகாட்டப்படுகிறோம். அறிவு மற்றும் பயிற்சியின் மூலம் அடையும் முதிர்ச்சி நிலையே பொறுமையாகும். அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் நிர்வகிப்பதும் கனதியான ஒரு செயற்பாடாகும். “தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்” என்பதற்கு விளக்கமளிக்கும் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் தஹஜ்ஜுத் மற்றும் நஃபில் தொழுகைகள் என்கின்றனர்.

ஒரு முஃமின் சத்தியப் பாதையில் பயணிக்கின்றவன். அவனது தனிப்பட்ட விவரகாரங்களாக இருக்கலாம் அல்லது அவனது சமூகம் சார்ந்தவையாக (தஃவா, ஷஹாதத், இஸ்லாஹ்) இருக்கலாம். அப்போது எதிர்கொள்ளும் எல்லா இடர்களையும் முறியடித்து வெல்வதற்குத் தேவையான உயிரோட்டத்தையும் வாழ்வையும் தொழுகையே வழங்குகிறது.

என்னதான்  கஷ்டமான நிலைகள் வந்தாலும் அவன் தோற்பதில்லை. தொழுகை அவனை ஊக்கப்படுத்தி எழுச்சியூட்டுகிறது. அல்லாஹ்வை  நினைவுகூர்வதும் நன்றி செலுத்துவதும்தான் தொழுகை. அல்லாஹ்வின் நெருக்கத்தை, அண்மையைப் பெற்றுக் கொள்வதற்கும் சத்தியப் பாதையில் உறுதியுடன் இருப்பதற்காகவும் அவ்வுறுதியை வலுப்படுத்திக் கொள்வதற்காகவும் தொழுகையை கடைபிடிக்கின்றபோது அல்லாஹ் அவர்களுக்காகி விடுகின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *