கொரோனாவிற்குப் பிந்திய இலங்கை எப்படி இருக்கும்? சில அவதானக் குறிப்புகள்

சிராஜ் மஷ்ஹூர்

இப்போது இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கி விட்டது. உலகளாவிய ரீதியில் அது 3 மில்லியனை அண்மித்திருக்கிறது. இதுவரை 2 லட்சம் பேர் இறந்து விட்டனர்.

200இற்கும் மேற்பட்ட நாடுகளையும் ஆள்புல எல்லைகளையும் இந்த வைரஸ் ஆக்கிரமித்திருக்கிறது. இந்தப் பரவல் காரணமாக, இதனை ஒரு நாட்டுடன் சுருங்கிய விடயமாகப் பார்க்க முடியாதுள்ளது.

பூகோளமயமாதல் யுகத்தில், ஒரு நோய்த் தொற்றின் பூகோளப் பரிமாணத்தை உணர முடிகிறது. இந்தப் பின்புலத்திலேயே இதனை இலங்கைப் பிரச்சினையாக மட்டும் அணுக முடியாதுள்ளது. எனினும், இலங்கையின் சுகாதார உட்கட்டமைப்பு வலுவாக இருப்பதன் காரணமாகவும் மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவும் ஊரடங்கு உள்ளிட்ட பல அரச முயற்சிகள் காரணமாகவும் இந்தளவுக்கு நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிந்துள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், பொலிஸார், ராணுவத்தினர், அரசாங்க அதிகாரிகள், உணவுப் பொருள் விநியோக முறையில் ஈடுபட்டுள்ளோர், தொண்டு நிறுவனங்கள்… என ஒரு பரந்த வலையமைப்பினூடாகவே இது சாத்தியமாகியது.

எனினும், ஊரடங்கு நிலையைத் தளர்த்திய கடந்த ஒரு வார காலமாக கொவிட் 19 தொற்று அதிகரித்து வருவது ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தொற்று மேலும் தீவிரமடையாமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ளது.

தற்போதைய சூழலில், நாடாளுமன்றம் இல்லாத நிலை, அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியாக, ஏப்ரல் 25ஐ ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்த போதிலும், தேர்தல் ஆணைக்குழு ஜூன் 30இற்கு அதை ஒத்திவைத்துள்ளது. இது அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் திகதியானது, கொவிட் 19 தொற்றின் வீச்சு எப்படி அமையும் என்பதிலேயே தங்கியுள்ளது.

இது நாட்டின் ஜனநாயகம் தொடர்பாக பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான ஒரு சூழலில் நாடாளுமன்றத்தின் இருப்பானது அரசியல் சமநிலையைப் பேணுவதற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

இலங்கை போன்ற வளர்முக நாடுகள் எதிர்கொள்ளும் பிரதானமான சவால் பொருளாதார ரீதியானதாகும்.

விவசாயப் பொருளாதாரம் குறித்தும் உணவுற்பத்தி தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய அரசின் கடப்பாடு மென்மேலும் அதிகரித்துள்ளது.

தொழிற்துறை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்திருக்கும் நிலை நீடிப்பது பாரிய பிரச்சினையாகும். இதனை வேகமாக வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் கடும் பிரயத்தனம் எடுக்கிறது.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் மீது காட்டப்படும் அக்கறையும் ஈடுபாடும் அதிகரித்தால் மட்டுமே நீண்ட கால நோக்கில் இலங்கை தாக்குப் பிடிக்கும்.

இலங்கையிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள், கொவிட் 19 காரணமாக பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. சேவைத் துறையில் முனைப்பாக ஈடுபட வேண்டிய தேவையும் உள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. படிப்படியாக அது இன்னும் எதிர்மறையான விளைவுகளையே கொண்டு வந்து சேர்க்கும்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் உள்ளூர்மயமாதல் (Localization) திட்டங்கள் காரணமாக கணிசமானோர், தொழில் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும். இப்போதே அதன் ஆரம்ப கட்ட பாதிப்புகள் தொடங்கி விட்டன.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் (Remittances), பிரதானமாக மத்திய கிழக்கிலிருந்தும் மேற்கு நாடுகளிலிருந்துமே கிடைக்கின்றன. இவ்விரு பிரதேசங்களிலும் சாதகமான சூழ்நிலைகள் தென்படவில்லை. இதுவும் பாதகமான விளைவுகளையே உருவாக்கும்.

நம் நாடு இந்தியாவிலும், அண்மைக் காலமாக சீனாவிலும் அதிகம் தங்கியிருக்கிறது. இவ்விரு நாடுகளும் பல புதிய பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளன. அவற்றின் நேரடித் தாக்கத்தை இலங்கையும் உணரவே செய்யும்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, அரசாங்கம் புதிதாக நாணயத் தாள்களை பெருமளவில் (சுமார் 200 பில்லியன் ரூபா)  அச்சிட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையாயின், பணவீக்கம், பொருளாதார பின்னனடைவு எனும் பின்னோக்கிய பாதையிலேயே நாடு நகர வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை தோன்றிவிடும்.

கொரோனாவிற்குப் பிந்திய இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பஸில் ராஜபக்ஷ தலைமையில் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது நல்ல விடயமே. எனினும், ‘இதில் ஒரேயொரு தமிழர்தான் உள்ளார். முஸ்லிம்கள் எவரும் இல்லை. இது நாட்டின் இனச் சமநிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை’ என மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருக்கிறார். இது உண்மையிலேயே கவலைக்குரிய விடயமாகும்.

2012 காலப் பகுதியிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறுப்பு அரசியல் தூபமிட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று காலத்தில் அது இன்னும் தீவிரம் பெற்றுள்ளது.

ஊடக மாஃபியாவும் அதிகார வர்க்கமும் அப்பட்டமாக இனவாதத்திற்கு அனுசரணை வழங்கும் போக்கு துரித கதியில் வளர்ந்து வருகிறது.

ஆரோக்கியமான இனச் சமநிலையைப் பேணினால் மட்டுமே கொரோனாவுக்குப் பிந்திய இலங்கையால் தாக்குப் பிடிக்கலாம்.

மக்கள் தொகையில் கணிசமான ஒரு தரப்பினரைத் தள்ளி வைத்து விட்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை.

ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் நெருக்கடி நிலை தொடருமாயின், கொரோனாவுக்குப் பிந்திய இலங்கையில் ஆரோக்கியமான சூழல் நிலவப் போவதில்லை. கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதன் மூலமே நாட்டை முன்னோக்கி நகர்த்தலாம். இதில் அரசாங்கம் பொறுப்போடு செயற்படாது விடின், நிலைமை மேலும் மோசமடையும்.

இது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கோ அல்லது சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டுமோ உரித்தான பிரச்சினை அல்ல. இது எல்லா சமூகங்களையும் பாதிக்கும் தேசியப் பிரச்சினையாகும்.

பரஸ்பரம் ஒருவர் இன்னொருவரில் தங்கியிருக்கும் நமது சமூகக் கட்டமைப்பில், இன ஒதுக்கல் போக்கு ஒருபோதும் நன்மையைத் தரப் போவதில்லை.

இலங்கை ஏற்கனவே கடன் பொறிக்குள் அகப்பட்டுத் தவிக்கிறது. இறக்குமதிப் பொருளாதாரத்திலேயே அதிகம் தங்கியுள்ளது.

இன்னொரு புறம், காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக அவதானிக்கப்படுகிறது. இயற்கை வளங்கள், வகைதொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் உயிரினப் பல்வகைமை சிதைக்கப்பட்டுள்ளது. சூழலியல் பற்றிய கரிசனை மிகவும் குறைந்துள்ளது. இது பாரிய இயற்கை அனர்த்தங்களுக்கே இட்டுச் செல்லும்.

தொழில்வாய்ப்பின்மையும் ஆதிகரித்து வருகிறது. பஞ்சம், பட்டினி பற்றிய அச்சமும் வளர்ந்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான திட்டங்களில் நாடு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயம், உணவுற்பத்தி, மீன்பிடிக் கைத்தொழில் போன்றவற்றை பாரியளவில் ஊக்குவிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்திகளை வளர்த்தெடுப்பதே நீண்ட கால நோக்கில் நன்மை பயக்கும். சுய சார்புப் பொருளாதாரமே மீட்சிக்கு வழியாகும்.

இலங்கையின் அமைவிடம் பூகோள- அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் விளைவாக, பல சர்வதேச சக்திகளின் அழுத்தத்திற்கும் செல்வாக்கிற்கும் ஆளாக வேண்டிய நிர்ப்பந்த நிலை உள்ளது.

இதனை ராஜதந்திர நுணுக்கத்துடன் கையாள்வதன் மூலமே வெற்றி கொள்ளலாம். அப்போதுதான் நமது நாட்டை அனாவசியமான பொறிகளிலிருந்தும் இரகசிய நிகழ்ச்சி நிரல்களிலிருந்தும் பாதுகாக்கலாம்.

கொரோனாவுக்குப் பிந்திய இலங்கை பன்முக சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. பிளவுபட்ட இலங்கையால் அதை வெற்றி கொள்ள முடியாது. பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கூடிய, இனங்களிடையே நல்லுறவு பேணப்படும் ஒன்றுபட்ட இலங்கையாலேயே இந்த சவால்களை உறுதியாக எதிர்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *