குடை நிழலில்…
–ஷாறா-
‘டாண்….. டாண்…. டாண்….’
பாடசாலை விட மணி ஒலித்தது.
கூண்டுகளிலிருந்து விடுபட்ட பறவைகளாக மாணவியர் வெளியேறத் தொடங்கினர்.
கைப்பையைத் தோளில் போட்டபடி வீட்டுக்குக் கிளம்பினாள் லைலா.
சுரீர் என வெயில் சுட்ட போதுதான் குடையை வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தாள்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்…’
ஸலாத்துக்குப் பதில் உரைத்தவாறே திரும்பிப் பார்த்தாள். வேகமாக வந்து கொண்டிருந்தாள் நாஹித்.
‘என்ன லைலா, குடையக் கொண்டு வர மறந்துட்டீங்களா?’ அன்பாய்க் கேட்டாள்.
‘காலைல அவசரமாக் கிளம்பியதுல மறந்துட்டன்..’
‘சரி, ஏன்ட குடையில சேர்ந்து போவோம் வாங்கோ!’
இது போன்ற வார்த்தைகளைத்தான் நாஹிதிடம் அன்றாடம் கேட்கிறாள் லைலா.
பிறரது பிரச்சினைகளைத் தன் பிரச்சினைகள் போல இழுத்துப் போட்டுக் கொள்ளும் போது, இவளுக்கு ஏன்தான் இந்தத் தலைவலியோ என லைலா யோசிப்பாள்.
ஆனால் நாஹித் அதை தலைவலியாக எடுப்பதாகத் தெரியவில்லை.
‘அஸ்ஸலாமு அலைக்கும் டீச்சர்’
வழமை போலவே வழி நெடுகிலும் நல விசாரிப்பு. லைலாவுக்கு எரிச்சலாக இருந்தது.
‘நல்லா இருக்கிறதாலதானே ஸ்கூலுக்குப் போறோம். எதுக்கு டெய்லி கேக்குறாங்க?’ நாஹிதிடம் கேட்டாள் லைலா.
அவளிடம் யாரும் கேட்டால் வேண்டா வெறுப்பாகப் பதில் சொல்லி விட்டுப் போய்விடுவாள். வெயில்ல செத்துக் கொண்டு போற நேரம் இதுக்கு வேறு பதில் சொல்ல வேணுமா என அவள் நினைப்பாள்.
‘அவங்கட களங்கமில்லாத அன்ப நாங்க மதிக்க வேணும் லைலா’ மாறாத புன்னகையுடன் சொன்னாள் நாஹித்.
லைலாவும் நாஹிதும் ஒரே பாடசாலையில் கற்பிக்கிறார்கள். மார்க்கப்பற்றில் சமூக மறுமலர்ச்சிக்காக உழைப்பதில் இருவரும் ஒன்று பட்டனர். எனவே இருவரும் நண்பிகளாக இருந்தனர்.
நாஹிதின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல ஒரு பெண் தனது வீட்டுக்கு முன் நின்றிருந்தாள். ஸலாம் சொன்னாள் நாஹித்.
‘அந்த விசயம் என்னவானது?’ கேட்டு விட்டு லைலாவிடம் திரும்பினாள்.
‘லைலா, நான் வர கொஞ்சம் சுணங்கும். நீங்க குடையக் கொண்டு போங்கோ!’ என்றாள்.
அவளது வீடு பக்கத்தில்தான். லைலாவோ இன்னும் கொஞ்சம் போக வேண்டியிருந்தது.
தான் வெயிலில் வியர்வை வழிய நின்று பேசுகின்ற அதேவேளை, அவள் நிழலில் போக வேண்டுமென்று நினைக்கின்ற நாஹிதின் மனது லைலாவுக்குப் புரியாத புதிராக இருந்தது. அவள்; பேசாமல் போய் விட்டாள்.
மறுநாள் நாஹிதைச் சந்தித்தவள் அவளிடம் குடையை ஒப்படைத்தாள். மணி ஒலிக்கவே இருவரும் வகுப்புகளுக்கு நடந்தனர்.
அடுத்தடுத்த வகுப்புகளில் பாடம். நாஹிதின் வகுப்பு மாணவியர் அவளது வரவை ஆவளோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது புரிந்தது.
தனது வகுப்பைப் பார்த்தாள் லைலா. இறுகிப்போன முகங்கள். அவள் வருவதைக் கண்டதும் வகுப்பில் அமைதி குடிகொண்டது.
சம்பிரதாயத்திற்காக ஸலாம் சொன்னார்கள்.
அவளும் பாடத்தை ஆரம்பித்தாள். நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுத்தாள். பக்கத்து வகுப்பில் நாஹித் கணிதம் கற்பிப்பதையும் இடையிடையே கவனித்தாள்.
பாடம் முடிய மணி ஒலித்தது.
‘அடுத்த பீரியட் என்ன பாடம்?’
‘மெத்ஸ்’ சொல்லும் போதே அவர்களது முகங்களில் மலர்ச்சி தெரிந்தது.
அடுத்த வகுப்புக்குப் போனாள் நாஹித். இரு வகுப்புகளின் நிலையும் ஒரேயடியாய் தலைகீழாய் மாறின.
முன்பு லைலா கற்பித்த வகுப்பு நாஹிதை உற்சாகமாக வரவேற்பது தெரிந்தது. ‘டீச்சா.. டீச்சர்..’ கனிவு ததும்பும் குரல்கள்.
அதேவேளை அவள் கற்பிக்க வந்த வகுப்பில் முன்பு இருந்த உற்சாகத்தைக் காணமுடியவில்லை. ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தவர்கள் போல் உட்கார்ந்திருந்தனர்.
இது அவளது மனதை வெகுவாகப் பாதித்தது. தன்னுடன் கரடுமுரடாக இருக்கும் பாதை நாஹிதை மட்டும் பூத்தூவி வரவேற்பதாக உணர்ந்தாள் லைலா. அவளை அரவணைத்துக் கொள்பவர்கள் தன்னை மட்டும் ஏன் அண்டுவதில்லை என்பதை அவளால் புரிந்த கொள்ள முடியவில்லை.
இத்தனைக்கும் நாஹித் ஒரு பட்டதாரியோ, எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கும் ஒரு திறமைசாலியோ அல்ல. அப்படியிருந்தும் இவள் எப்படி எல்லோரையும் ஈர்க்கிறாள் என லைலா சிந்தித்தாள்.
கடைசிப் பாடவேளை முடிந்ததும் லைலா கேட்டே விட்டாள்.
‘நாஹித், நானும் உங்களப் போல கஷடப்பட்டுப் படிப்பிக்கிறன். நல்ல விசயங்களப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறன். ஆனா பிள்ளைகள் எப்பவும் உங்களத்தான் சுத்திச் சுத்தி வாறாங்க. நீங்க ஒன்டு சொன்னா உடனே செய்யிறாங்க. உங்களால மட்டும் இது எப்படி முடியுது நாஹித்?’ ஆதங்கத்தோடு கேட்டாள்.
‘லைலா! இதுல பெரிய வித்தையொன்டும் இல்ல. நீங்களும் நானும் சமூகம் சீர்திருந்த வேணும் என்டு விரும்புறோம். மனிதர்கள் சேர்ந்ததுதானே சமூகம். நாங்க சொல்றத அவங்க கேக்க வேணும் என்டா, அவங்கட மனங்கள நாங்க வெல்ல வேணும்.
நான் பெரிசா எதுவும் செய்யிறதில்ல. என்னச் சுத்தியுள்ள எல்லரையும் ஒரேமாதிரி நேசிக்கிறன். வெறும் முகத்துதிக்காக அல்லாமல் ஏன்ட அடிமனதிலிருந்து வாரதத்தான் அவங்களோட பேசுறன். அவங்கட சுகதுக்கங்கள ஏன்ட சொந்த விசயமா நெனச்சிப் பங்கு கொள்றன்.
இறுகிப்போன மனங்களால யாருக்கும் பலன் இல்ல லைலா. பரந்த மனதோட நாங்க சிந்திக்க வேணும். இதுவல்லாமல் எந்த மந்திரமும் நான் போடல்ல..’
நாஹித் சொன்னதை நன்றாக மனதில் போட்டுக் கொண்டாள் லைலா.
கையொப்பமிட்ட பின் வெளியே வந்து பார்த்தாள் நாஹித். லைலாவின் குடையில் சித்தி டீச்சரும் போவது தூரத்தே தெரிந்தது.
(‘மல்லிகை இதயங்கள்’ தொகுதியிலிருந்து…)