கொவிட்- 19 இற்குப் பிந்திய உலக அரசியலின் திசை: முன்வைக்கப்படும் சில அவதானங்கள்

ஸகி பவ்ஸ் (நளீமி), PhD (Reading – Malaysia)

சர்வதேசத்தை முடக்கி விட்டுள்ள கொவிட்- 19 வைரஸிலிருந்து உலகம் விடுபட்டதன் பின்னரான உலக அரசியல் அதற்கு முந்திய நிலைமையை விட வித்தியாசமானதாக இருக்கும் என்ற கருத்து சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகின்றன. அதனுடைய தாக்கம் சர்வதேச வல்லரசுகள் முதல் பிராந்திய ஆதிக்க நாடுகள் வரை நீட்சி பெறலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. மிகக் குறிப்பாக, கொவிட்- 19 வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மேற்குலக ஆதிக்க சக்திகள் வைரஸ{க்குப் பின்னரான எவ்வாறு உலகில் இயங்கப் போகிறது? என்பதுதான் சர்வதேச ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள விடயமாகும். அதிலும் குறிப்பாக, கொவிட்- 19 வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுள்ள நாடு ஜக்கிய அமெரிக்க என்பதும் நோக்கத்தக்க விடயம்.

இந்த சூழலில் மேற்குலக ஆதிக்க சக்திகளது அரசியல், பொருளாதார மற்றும்; சமூகக் கட்டமைப்பில் கொவிட்- 19க்குப் பின்னரான சூழமைகள் பாரிய தாக்கத்தை விளைவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலொன்றுதான், சர்வதேச வல்லரசுகளது ஆதிக்கத்தினுடைய அச்சாணியாக திகழும் முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கில் எற்படப் போகும் தாக்கமாகும். ஏனெனில், கடந்த 70 வருட காலமாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச வல்லரசுகள் முதலாளித்துவத்தையும் பொருளாதார லிபரலிஸத்தையும் மையப்படுத்தி இயங்கி வருகின்றன. சர்வதேச அரசியல் நிகழ்வுகள் மற்றும் நிலைமாற்றங்கள் தொடர்பான அதனுடைய தீர்மானங்கள்கூட, ஒரு விதத்தில் முதலாளித்துவ பொருளாதார சக்கரத்தை முற்படுத்தியே எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், கொவிட்- 19 வைரஸின் பரவல் காரணமாக சர்வதேச ரீதியிலான நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி- இறக்குமதிப் பொருளாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்டுப்படுத்தப்படுள்ளது. குறிப்பாக, மேற்குலக முதலாளித்துவப் பொருளாதார முறை என்பது வளர்முக நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை குறைந்த விலையில் பெற்று, அதனை முழுமையாக பொருளாக வடிவமைத்து சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்வதிலேயே தங்கியுள்ளன.

இந்தப் பின்னணயில், சர்வதேச ரீதியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதனால் மேற்குலக கம்பனிகள் எதிர்காலத்தில் உள்நாட்டில் மூலப் பொருட்களைப் பெற்று உற்பத்திச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லும் தெரிவை நோக்கி தள்ளப்படலாம். இது வல்லரசுகளை தாங்கிப் பிடிக்கும் கம்பனிகளது இலாபத்திலும் உற்பத்திப் பொறிமுறையிலும் நஷ்டத்தை ஏற்படுத்த வல்லது. விளைவாக, கொவிட்- 19 இற்கு முன்பிருந்தது போன்றதொரு பலமான பொருளாதார சக்தியாக மேற்குலகால் தொடர்ந்தும் இருக்க முடியாது போகலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், அதனுடைய உள்நாட்டு பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதே சவாலாக மாறலாம் என்பதுதான்.

இன்னொரு புறத்தில், கொவிட்- 19 வைரஸ் சூழலை முகாமை செய்வதில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பல சர்வதேச நாடுகள் அதற்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய நிலைக்கு அதன் நிலைமை மாறியுள்ளது. இந்தச் சூழலில் ஏற்கனவே ட்ரம்பின் தவறான பல கொள்கைகளால் அமெரிக்காவின் சர்வதேச அந்தஸ்த்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட்- 19 அமெரிக்காவினுடைய இமேஜை சர்வதேச ரீதில் இன்னும் பாதிக்கலாம். இவையனைத்தும் இணைந்து, மேற்குலக நாடுகளது பொருளாதார கட்டமைப்பில் ஏற்படும் மாற்றமானது, நிச்சயமாக அதனுடைய சர்வதேச அரசியல் போக்குகள் குறித்த தீர்மானங்களிலும் சர்வதேச ரீதியாக அதனுடைய ஆதிக்கத்திலும் காத்திரமான எதிர்மறை தாக்கங்களை விளைவிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

இவை போக மேற்குலக நாடுகளில் பரவி வரும் வலதுசாரி கடும்போக்குவாதம் கொவிட்- 19க்குப் பின்னரான சூழலில் இன்னும் வலிமை அடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகிறது. அதாவது, ஐரோப்பிய யூனியன் என்ற சிந்தனைக்கு பலமானதோர் அடியாக கொவிட்- 19க்குப் பின்னரான சமூகச் சூழல் இருக்கப் போகிறது என சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏனெனில், தற்போது ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தனித்தனியாகவே கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டுடனான தனது எல்லையை முடக்கியுள்ளது. விரிந்த ஜரோப்பிய உலகம் என்ற சிந்தனையை ஒருபுறம் வைத்து விட்டு, தத்தமது பொருளாதார பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் நிலைக்கு அவை ஏற்கனவே தள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில், ஒவ்வொரு நாட்டிலும் குறித்த நாடுகளுடைய தனித்துவத்தை, பெரும்பான்மை இனத்தை, அவர்களது பொருளாதார நிலையைப் பாதுகாத்துக் கொள்வதே முதன்மையானது என்ற ஒதுங்கிச் செல்லும் அரசியல் கொள்கையை போதிக்கும் அரசியல் சக்திகள் பிரதான நீரோட்டத்திற்குள் ஆதிக்கம் பெறலாம். எனவே, கொவிட்- 19 க்குப் பின்னரான சூழலில் பலமிழந்து செல்லும் ஒன்றுபட்ட ஐரோப்பா சிந்தனை சர்வதேச ரீதியில் மேற்குலக அரசியல் ஆதிக்கத்தை வெகுவாகப் பாதிக்கலாம். ஏக காலத்தில், கொவிட்- 19 இனுடைய பிறப்பிடமான சீனா கொவிட்- 19க்குப் பிற்பட்ட பொருளாதார நிலையை சீர்செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. மட்டுமன்றி, அது தொடர்பான வைத்திய உதவிகள் மற்றும் உபகரணங்களை மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அது முன்னேறி விட்டது. அதனை விட, கொவிட்- 19 நிலைமையைப் பயன்படுத்தி சீனா தனது சர்வதேச அரசியல் காய் நகர்த்தல்களை துவங்கி விட்டதாக சிலர் நம்புகின்றனர். இதனை சினாவின் ‘ Mask Diplomacy ’ என அவர்கள் அழைக்கத் துவங்கியுள்ளர். அதாவது, கொவிட்- 19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அதனோடு தொடர்புபட்ட உபகரணங்களை இலவசமாக வழங்கி உறவுகளை பலப்படுத்திக் கொள்வதனூடாக சீனா பற்றிய அந்நாடுகளது எதிர்மறை நிலைப்பாடுகளை களைவதற்கான முயற்சிகளையே சீனாவின் ‘முகக் கவச இராஜதந்திரம்’ என சுட்டிக் காட்டுகின்றனர்.

கொவிட்- 19 இற்கு பிற்பட்ட சர்வதேச அரசியல் திசையை தீர்மானிக்கும் தனித்துவமான சக்தி என்ற இடத்தை அமெரிக்காவுக்குப் பதிலாக சீனாவினால் தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி நிலவுகின்றது. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் பல முன்னணி சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் உலக அரசியலில் தனித்த சக்தியாக சீனாவால் வர முடியாது என்ற கருத்தையே ஆதரிக்கிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். அதிலொன்று, சீனாவினுடைய உள்நாட்டுப் பொருளாதார நிலை சமநிலைத் தன்மை கொண்டதாக இல்லை என்பதாகும். ஏனெனில், சீனாவின் தெற்குப் பகுதி நகரங்கள் கண்டு வரும் அபார பொருளாதார முன்னேற்றத்திற்கு நேரெதிர் திசையிலேயே சீனாவின் வடக்கும் வட கிழக்கும் பயணிக்கிறது. ஆக, உள்நாட்டுப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சீனாவின் சர்வதேச பலத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் ஓர் அம்சமாகும். அடுத்து, சீனாவின் பிரத்தியேகமான கலாசாரம், மொழி மற்றும் ஒரு கட்சியை மையப்படுத்திய அரசியல் கட்டமைப்பு போன்றன சர்வதேச ரீதியாக பலமான தலைமைத்துவமொன்றை நோக்கி சீனாவை நகர்த்திச் செல்வதற்கு தடையாக இருக்கும் காரணிகளாக அடையாளம் காணப்படுகிறது. எனவே, கொவிட்- 19க்குப் பின்னரான உலக அரசியல் சூழலில் சீனா தனித்துவமான சக்தியாக வருவதற்காக வாய்ப்புகள் குறைவாகும். ஆனால், சர்வதேச அரசியல் ஒழுங்கும் இயங்கு தளமும் ஓரளவு அமெரிக்கா மற்றும் சீனா என்ற இரட்டைச் சக்திகளது ஆதிக்கத்திற்குள் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. என்றாலும்கூட, முன்பிருந்தது போன்று ஏனைய நாடுகளின் மீதும் சர்வதேச ஒழுங்குகளின் மீதும் கராரான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாததொரு நிலைக்கு இவ்விரண்டு சக்திகளும் தள்ளப்படலாம். ஒப்பீட்டளவில் சர்வதேச வல்லரசுகளது அழுத்தம் குறையும் பட்சத்தில் துருக்கி, ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் முன்பிருந்ததை விட பலமான தொனியில் சர்வதேச அரசியல் உரையாடல்களில் பங்குகொள்வதற்கான சாத்தியப்படுகள் அதிகம் காணப்படுகிறது.

இறுதியாக, எது எப்படியோ புதியதொரு சர்வதேச அரசியல் ஒழுங்கொன்றைத் தோற்றுவிப்பதற்கான இடைவெளி மெதுமெதுவாக துளிர் விடுவதாக உணரப்படுகிறது. கொவிட்- 19 பேரிடர் அதற்கான ஏற்பாடுகளை விரைபடுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பும் அதிகரித்த நுகர்வுக் கலாசார வாழ்வொழுங்கும்தான் சர்வதேச அரசியலின் அச்சாணிகளாக திகழ்ந்தன. பொருளாதார நலன்களும் பேருற்பத்தியை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கான உந்துதலுமே சர்வதேச ரீதியாக உலகின் சமநிலையைப் பாதிக்கும் அளவுக்கு நிலைமையை மாற்றி விட்டுள்ளன. உலகில் நடைபெற்ற போர்கள், அழிவுகள், இனப் படுகொலைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கின் வன்முறைகள்தான். இதனை சமநிலைப்படுத்தி சர்வதேச ரீதியாக நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டக் கூடிய, இயற்கை வளங்களை மதிக்கக்கூடிய மற்றும் ஒவ்வொரு மனித சமூகத்துக்கும் அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய, அவர்களது குரலையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான தேவை எழுந்துள்ளது. ஆனால், சர்வதேச சமூகம் எந்தளவு தூரம் கொவிட்- 19 ஏற்படுத்தித் தந்துள்ள வாய்பை பயன்படுத்தி புதியதோர் உலக ஒழுங்கை நோக்கிப் பயணிக்கும் என்பதுதான் கேள்வியாகும். பலம் பெறப் போகும் பிராந்திய சக்திகளும் சிறிய நாடுகளும் இணைந்து சர்வதேச சமூகத்தின் மீது இது தொடர்பில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய சூழமை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *