ஒரு சமயத்தை சரியாகப் பின்பற்றுபவர் தீவிரவாதியாக இருக்க மாட்டார்

-சார்ள்ஸ் தோமஸ்-
நேர்காணல்;: இர்சாத் இமாமுதீன், அறூஸ் யூஸுப்
தமிழில்: எம்.எச்.எம். நியாஸ்

தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய சிறந்த சொற்பொழிவுகளை நாடளாவிய ரீதியில் ஆற்றிவருவதுடன் கலையினூடாக நல்லிணக்கத்திற்குப் பங்களித்து வரும் ‘தஹம்’ அமைப்பின் தலைவர் சார்ள்ஸ் தோமஸ் அவர்கள் அல்ஹஸனாத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்ஹஸனாத்: ஏப்ரல் 21 தாக்குதலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சார்ள்ஸ் தோமஸ்: அதை நான் ஒரு முஸ்லிம்- கிறிஸ்தவ மோதலாகப் பார்க்கவில்லை. எல்லா மதங்களிலும் எல்லா இனத்தவர்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவ்வாறான தீவிரவாதிகள் அவர்களது சமயத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் அல்ல. காரணம், ஒரு சமயத்தை சரியாகப் பின்பற்றும் ஒருவர் ஒரு தீவிரவாதியாக இருக்க முடியாது. இஸ்லாத்திலோ கிறிஸ்தவ சமயத்திலோ தீவிரவாதத்தைக் காண முடியாது. எனவே, இது ஒரு குறிப்பிட்ட பயங்கரவாதக் குழுவின் அடாவடித்தனமேயன்றி இதற்கு முஸ்லிம் சமூகத்தையோ கிறிஸ்தவ சமூகத்தையோ சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

அல்ஹஸனாத்: ஏப்ரல் 21 இற்குப் பிறகு எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்தினார்கள். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சார்ள்ஸ் தோமஸ்: இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அதில் முதலாவதும் முதன்மையானதுமான காரணம், இலங்கை முஸ்லிம் சமூகம் தனது சமூகத்திற்குள்ளேயே மூடுண்டுபோன ஒரு சமூகமாக இருக்கின்றமை. தீவிரவாதி சஹ்ரான் முஸ்லிம் சமூகத்தினால் ஓரங்கட்டப்பட்ட ஒருவர் என்பதனை பெரும்பான்மையினர் அறிந்திருக்கவில்லை என்பது யதார்த்தமாகும். சஹ்ரான் அவரது சமூகத்தினரால் துரத்தப்பட்ட ஒருவராவார். அதன் பின் அவர் தனது கொள்கைக்குத் துணையாக ஒரு சில முஸ்லிம் இளைஞர்களை இணைத்துக் கொள்ளப் பார்த்தார். அதிலும் தோல்வி கண்ட அவர் தனது குடும்ப அங்கத்தவர்களை மட்டும் இணைத்துக் கொண்டு தனது முயற்சியைத் தொடர்ந்தார். ஆனால், அவரது இந்தத் தீய முயற்சியை நாட்டுக்கும் மக்களுக்கும் அறிவூட்டுவதற்கு முஸ்லிம் சமூகம் தவறி விட்டது என்றே கூற வேண்டும். மற்றொரு விடயம், குறித்த இந்த சஹ்ரானின் குழுவுடன் சில அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. முஸ்லிமல்லாத சில தீவிரவாதிகளும் உரமூட்டியுள்ளார்கள். அவர்களது மோசமான நடவடிக்கைகளும் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவதற்குக் காரணம் என்பதையும் கூறியாக வேண்டும்.

மேலும், இந்த நாட்டில் ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமாவர். பௌத்தர்கள் ஒரு தத்துவத்தை, தர்மத்தைப் பின்பற்றி வாழ்கிறார்கள். ஆனால், நாம் இன்றுவரை எமது ஓரிறைக் கொள்கையை முறையாக அவர்கள் முன் எடுத்து வைக்கவில்லை. இது எமது தவறாகும். இந்த இரு சாராரும் (முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்) தமது இறைவனை இந்த நாட்டின் அரசியல்வாதிகளிடமும் புலனாய்வுத் துறையினரிடமும் காட்டிக் கொடுத்தார்கள். நாம் ஒருபோதும் இந்த நாட்டுக்கு முன்மாதிரியான ஒரு சமூகமாக இருக்கவில்லை. இது எம் இரு சமயத்தவர்களினதும் தவறாகும்.

புலிகளுடன் நடைபெற்ற யுத்த காலத்தில்கூட பள்ளிவாசல்கள் சோதனைக்குள்ளாக்கப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின் முஸ்லிம் பள்ளிவாசல்கள் சோதனையிடப்பட்டன. அதனால் இறைவனை விடவும் சஹ்ரான் பலம் வாய்ந்தவர் என்ற கருத்து மேலோங்கி நின்றது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எமது மதங்களைக் காட்டிக் கொடுத்துள்ளோம். எனவே, இதற்குப் பிறகாவது நாம் (முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்) எமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

அல்ஹஸனாத்: இந்த நாட்டில் சிறுபான்மை-பெரும்பான்மை உறவு எவ்வாறு உள்ளது? அது எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

சார்ள்ஸ் தோமஸ்: சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் என்று இரு பிரிவுகள் இல்லை என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் பெரும்பான்மையினர் பௌத்தர்களாவர். மேலும் அவர்களுடன் நீண்ட காலமாக முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் இந்துக்களாகிய நாம் அனைவரும் எவ்விதப் பிரச்சினைகளுமின்றி வாழ்ந்து வருகிறோம். அது மட்டுமன்றி, கிறிஸ்தவமும் இஸ்லாமும் மனிதனை இறைவனது மிக உயர்ந்த படைப்பாக வர்ணிக்கிறது. அதுபோல் மனிதனாகப் பிறவியெடுப்பது ஓர் உயர் பிறப்பாக பௌத்த சமயமும் போதிக்கிறது. எனவே, மனிதர்களுக்கு மத்தியில் சிறுபான்மை-பெரும்பான்மை என்ற பேதமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்ஹஸனாத்: ஓர் இறைவனை நம்புகின்ற சமயத்தவர்கள் என்ற வகையில் கிறிஸ்தவ-முஸ்லிம் உறவு திருப்தியளிக்கக் கூடிய வகையில் இருக்கிறதென கருதுகிறீர்களா?

சார்ள்ஸ் தோமஸ்: நாம் அரசியல்வாதிகளிடமும் பாதுகாப்புப் படையினரிடமும் சரணடைந்து விட்டோம். இறைவனை விடவும் நாம் அவர்கள் மீதே நம்பிக்கை வைத்தோம். அந்த அடிப்படையில் கிறிஸ்தவ, முஸ்லிம் இரு சாராரும் எமது நம்பிக்கையை விட்டும் பிரிந்து தவறான வழியில் சென்று விட்டோம்.

மேலும், எமது மதத் தலைவர்கள் இறைவனுடைய அந்தஸ்தை தமது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்கள். இந்த அடிப்படையில் கிறிஸ்தவர்கள் குறிப்பாக கத்தோலிக்கர்களும் முஸ்லிம்களும் தம்மைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை கிறிஸ்தவ- முஸ்லிம் மோதல் வரலாற்றில் என்றுமே நடைபெற்றதில்லை. ஏப்ரல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவ முஸ்லிம்கள் முன்வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே ஏப்ரல் தாக்குதலில் ஈடுபட்டனர். எனவே கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் எமது ஓரிறைக் கொள்கை எனும் நம்பிக்கையில் உறுதி பூண வேண்டும். அந்த உறுதியுடன் எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.

அல்ஹஸனாத்: முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுடைய சமய – கலாசார, உணவு, உடை சார்ந்த நிறைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொரு சிறுபான்மையினர் என்ற வகையில் அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சார்ள்ஸ் தோமஸ்: இது குறித்து நாம் தெளிவு பெற வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் சமூகத்திற்கும் பல்வேறு கலாசாரம், பண்பாடுகள் காணப்படுகின்றன. நாம் அவை பற்றி கலந்துரையாடவும் தேவைப்படின் மாற்றங்கள் செய்து கொள்வதற்கும் முன்வர வேண்டும். அல்குர்ஆனைப் பற்றி சரியாக விளங்காமல் அதில் ஒரு சில வசனங்களைப் பிடித்துக் கொண்டு வாதிடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை. மதங்கள் மற்றும் அதன் நம்பிக்கைகள் பற்றி கலந்துரையாடுவதற்கு முன் குறித்த மதம் பற்றி ஆழமான, விரிவான அறிவு வேண்டும்.

மேலும், எமது மத நம்பிக்கை பற்றி ஏனைய மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற நாம் தவறி விட்டோம். எந்த ஒரு மத நம்பிக்கைக்கும் நாம் சவால் விடக் கூடாது. அது அவர்களது தனிப்பட்ட விடயம். பாதுகாப்புப் படையினரும் ஒரு சில மதத் தலைவர்களது கூற்றுக்கு ஏற்ப தாளம் போடத் தொடங்கியமை கவலைக்குரியது. அரபு நாட்டுக் கலாசாரத்தை நாம் இந்த நாட்டுக்கு கொண்டு வரத் தேவையில்லை.மேலும் ‘திறந்த பள்ளிவாசல்’ (Open Mosque) எனும் நிகழ்ச்சியை முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் நடத்தி வருவது பாராட்டத்தக்கது. அதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி நன்கு தெளிவு பெற்று வருகிறார்கள்.

அல்ஹஸனாத்: குறிப்பாக, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு நீங்கள் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் பற்றியும் அதன் முன்னேற்றங்கள் பற்றியும் சொல்ல முடியுமா?

சார்ள்ஸ் தோமஸ்: இது விடயத்தில் நான்கணிங்மானளவு முயற்சிகளை மேற்கொண்டேன். ஹெட்டிபொலையில் முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்தபோது அப்பகுதியிள்ள 14 பொலிஸ் தலைமையகங்களையும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் இணைத்து சீமார் 2000 பேரை விகாரைக்கு அழைத்துச் சென்று பிரச்சினைகளைத் தொடர விடாது பாதுகாத்தேன். கறுப்பு ஜுலை போன்றதொரு நிகழ்ச்சி ஏற்படாமல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்த குருமார்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து அதை மேற்கொண்டேன்.

அதேபோன்று பாணந்துறையிலும் அவ்வாறான பிரச்சினை ஏற்பட்டபோது அங்குள்ள விகாரைகளுக்கு பொலிஸார், பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களைக் கொண்ட சீமார் 3000 பேரை அழைத்துச் சென்று நிலைமை மேலும் மோசமாகி விடாது பாதுகாத்தேன்.

அல்ஹஸனாத்: பாதிக்கப்பட்டுள்ள உறவுப் பாலத்தை சீர்செய்வதற்கு நீங்கள் முன்வைக்கும் ஆலோசனைகள் எவை?

சார்ள்ஸ் தோமஸ்: ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின் முஸ்லிம் பள்ளிவாசல்களும் அமைப்புகளும் இன நல்லுறவுக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. மூடுண்டிருந்த முஸ்லிம் சமூகம் திறந்த நிலைக்கு வந்து பல விடயங்களில் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். எழுத்துத் துறையில் முஸ்லிம் சமூகத்தின் ஈடுபாடு குறைவாகவே உள்ளது. அது மேலும் அதிகரிக்க வேண்டும். அதுவே எமது நாட்டுக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.

அல்ஹஸனாத்: முஸ்லிம் சமூகம் உங்களுடன் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்றலாம்?

சார்ள்ஸ் தோமஸ்: நீங்கள் எனக்குத் தந்த ‘ப்ரபோதய’ சஞ்சிகை 1984 தொடக்கம் வெளிவருதாகக் கூறுகிறீர்கள். இஸ்லாம் பற்றி அதிகமான நூல்கள் இன்னும் வெளியிடப்பட வேண்டியுள்ளன. பௌத்த சமயத்தைப் பற்றி பல நூறு நூல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஊர் மட்டத்தில் இனங்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்துடன் ஏனைய சமூகங்கள் தமது தொடர்புகளை அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். முஸ்லிம்களது விஷேட தினங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களை அதிகமாக அழைத்தல் வேண்டும்.

அல்ஹஸனாத்: நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு கலையை எவ்வாறு பயன்படுத்தலாம்? உங்கள் அனுபவத்தினூடாக அதனை தெளிவுபடுத்த முடியுமா?

சார்ள்ஸ் தோமஸ்: கலை, சங்கீதம் போன்றவற்றை நாம் எமது மதங்களுடன் இணைக்கக் கூடாது. அவற்றை கலாசாரத்துடன் இணைத்தல் வேண்டும். எமது கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை பற்றி பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவப் பாடல் என்று நாம் பாடினாலும் அவை எமது மத கோட்பாடுகளுக்கு இடையூறாகவே இருக்கின்றன. எனவே, மத நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்தாமல் எமது கலை, சங்கீதம் போன்றவற்றில் நாம் ஈடுபடல் வேண்டும். அவற்றை நாடுபூராகவும் நாம் கொண்டு சென்று ஏனைய சமூகங்களுடனான உறவுப் பாலத்திற்கு வழிகோல வேண்டும்.

அல்ஹஸனாத்: இலங்கையை ஓர் அழகிய தேசமாக மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும்?

சார்ள்ஸ் தோமஸ்: அரசியல்வாதிகள் பின்னால் நாம் செல்வதைத் தவிர்த்து பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் அதனைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். முஸ்லிம் தீவிரவாதத்தை தடுக்க முஸ்லிம் பள்ளிவாசல்களே முன்வர வேண்டும். பௌத்த தீவிரவாதத்தைத் தடுக்க பௌத்த ஆலயங்கள் முன்வர வேண்டும். முஸ்லிம் தீவிரவாதத்தைத் தடுக்க பௌத்த ஆலயங்கள் முன்வரக் கூடாது. ஏற்கனவே நடந்த (ஏப்ரல் 21) தாக்குதல் சம்பந்தமாகவும் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு முஸ்லிம்களே முன்வந்தமை பாராட்டத்தக்கது. அத்துடன் மதத் தலைவர்களும் மற்றும் அமைப்புகளும் இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

-அல்ஹஸனாத், டிஸம்பர் 2019-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *