இரு வகை சுத்தம்: இஸ்லாத்தின் உயிர்… இறைதூதர் பணி…

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்

ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் கடந்த 06.12.2019 அன்று கொழும்பு, ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாசலில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் சாராம்சம்.

தஸ்கியா என்றால் தூய்மைப்படுத்துவது, வளர்ந்தோங்குவது எனப் பொருள்! இஸ்லாத்தின் நோக்கமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வருகையின் குறிக்கோளும் தஸ்கியாவாகும். இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முதற்தரப் பணியாகவும் அமைந்திருந்தது. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“இந்த நபி வேதத்தையும் ஞானத்தையும் உங்களுக்குக் கற்பித்து அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்றார்.” (3: 164)

தஸ்கியா இரு வகைப்படும். ஒன்று, அகச் சுத்தம். அடுத்தது, புறச் சுத்தம். ஒவ்வொரு மனிதனது ஆன்மாவும் சுத்தம் செய்யப்படுவது போல் அவனது உடலும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. தொழுகை, நோன்பு, ஹஜ், குர்ஆன் திலாவத், திக்ர், அவ்ராதுகள் முதலானவற்றுக்கூடாக ஆத்மா பரிசுத்தப்படுத்தப்படுகிறது. 

மனித உடம்பில் இரு உடல்கள் இருக்கின்றன. ஒன்று அவனது ஆன்மிக உடல். மற்றது அவனது ஸ்தூல உடல். இவ்விரு உடல்களும் எப்போதும் தூய்மையாக, சீத்தமாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல். மார்க்கத்தில் ஆன்மிக உடல் சீத்தம் எந்தளவு தூரம் வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதேயளவு பௌதிக உடலும் வாழும் இடமும் சுழலும் சீத்தமாக இருக்க வேண்டும். விளைவாக, ஒரு முஃமின் ஏக காலத்தில் உள்ளம், உடல் என இரண்டு வகையான சீத்தத்தைப் பெற்றவனாக இருப்பான்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்: “சுத்தம் ஈமானின் சரி பாதி ஆகும்.” 

பாவங்களிலிருந்து விடுபட்டு தௌபா செய்து தன் பக்கம் மீள்பவர்களை நேசிப்பதைப் போல சுத்தமாக இருப்பவர்களையும் அல்லாஹ் நேசிக்கிறான். அந்த வகையில் தூய்மை என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்ங்ம் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே உள்ளத்தை, உடலை, ஆடை அணிகலன்களை, வாழிடத்தை, சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது உயர்ந்த இபாதத் என்ற சிந்தனை எமது உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். 

இஸ்லாமிய மார்க்க சட்ட விவகாரங்கள் குறித்து விளக்குகின்ற பிக்ஹு கிரந்தங்களில் முதலாவது அத்தியாயமாக இடம்பெற்றிருப்பது கிதாபுத் தஹாரா எனும் சுத்தம் பற்றிய அத்தியா

யமாகும். சுத்தம் என்றால் என்ன, சுத்தம் செய்யும் முறை, சுத்தத்தின் வகைகள், தண்ணீரின் வகைகள், அசுத்தம் (நஜீஸ்) என்றால் என்ன, அசுத்தத்தின் வகைகள்… முதலான விடயங்களே பிக்ஹு கிரந்தங்களில் ஆரம்பமாக பேங்ப்படுகின்றன.

தொழுகையின் பிரதான நோக்கம் அகச் சுத்தமாகும். அதனை அடைவதற்கு புறச் சுத்தம் அவசியம். தொழுகை சுவனத்தின் திறவுகோலாக இருப்பதைப் போல சுத்தம் தொழுகையின் திறவுகோலாக இருக்கிறது. தொழுகை செல்லுபடியாவதற்கான அடிப்படை நிபந்தனைகளில் மிகவும் பிரதானமானது சுத்தம். தொழுபவரின் உடை, உடல், தொழுமிடம் என்பன சுத்தமாக இருக்க வேண்டும். தொழுபவர் சிறு தொடக்கு, பெருந்தொடக்கு இரு வகையான தொடக்குகளிலிருந்தும் நீங்கியிருக்கவும் வேண்டும். உள்ளமும் உடலும் சுத்தமாக இருக்கும் நிலையிலேயே ஒருவர் மஸ்ஜிதுக்கு சமுகமளிக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கிறது. சில இமாம்களின் கருத்துப்படி ஜுமுஆ தினத்தில் குளிப்பது வாஜிப் ஆகும். ஷாபி மத்ஹப் அதனை முக்கியமான ஸுன்னாவாக கருதுகிறது. அந்தளவுக்கு இஸ்லாம் சுத்தத்தின் மார்க்கமாக, சுத்தத்தை அதியுச்சளவு வலியுறுத்து

கின்ற மார்க்கமாக விளங்குகிறது. 

“நபியே! உங்களது ஆடையை சுத்தமானதாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கி அல்லாஹ் கட்டளையைப் பிறப்பிக்கின்றான். 

வாய்ச் சுத்தம் பேணுவதில் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் இன்றைய மருத்துவ உலகம் அதிகமான நோய்களுக்கு வாய்ச் சுத்தத்தைப் பேணாமையே மிக முக்கியமான காரணம் என்கிறது. 

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அன்றைய காலத்தில் மிக எளிமையான நடைமுறையினூடாக பற்சுத்தத்தை முஸ்லிம் சமூகத்தினுள் விதைத்தார்கள். “எனது சமூகத்துக்கு சிரமம் ஏற்படும் என்ற பயம் எனக்கு இல்லா விட்டால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன்” (முஸ்லிம்) என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். 

இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது பல் துலக்குமாறு நபியவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அதாவது மனிதர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால்தான் கட்டாயமாக செய்யும்படி தாம் வலியுறுத்தவில்லை என்று சொல்லும் அளவிற்கு வாய் மற்றும் பற் சுகாதாரத்தைப் பேண வலியுறுத்துகின்றார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “ஒருவர் பற்சுத்தம் செய்வது வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு இறை திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்கும் அது வழிவகுக்கும்.”

பற்சுத்தம் பேணாதிருப்பது ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட ரீதியில் சுகாதார ரீதியான பிரச்சினையாக அமைவது மாத்திரமன்றி, அவர் அல்லாஹ்வின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கும் அது காரணமாக அமைந்து விடுகின்றது. அந்தளவு தூரம் இஸ்லாம் பற்சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. நகம் வெட்டுதல், களையப்பட வேண்டிய உரோமங்களை அகற்றுதல் முதலானவையும் நபியவர்களது முக்கிய ஸுன்னாக்கள். 

“அல்லாஹ் நல்லவன்; அவன் நல்லதை விரும்புகிறான். அல்லாஹ் சுத்தமானவன்; அவன் சுத்தத்தை விரும்புகிறான். உங்களது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருங்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிமின் வீடும் வீட்டுச் சூழலும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பது ஈமானின் வெளிப்பாடாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஈமான் 60க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அதனுடைய உயர்ந்த கிளை லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவாகும். தாழ்ந்த கிளை பாதையில் மனிதர்களுக்கு இடையூறு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவதாகும்.”

வீட்டுச் சூழலை, வாழும் பிரதேசத்தை, பயணிக்கும் பாதையை, மக்கள் நடமாடும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பது, குப்பைகளை அகற்றுவது, அவற்றை முறையாக அழிப்பது இவையெல்லாம் ஈமானின் கிளைகள். அன்றாட வாழ்வோடு நேரடியாக தொடர்புபடுகின்ற இந்த ஸுன்னாக்களை முஸ்லிம் சமூகம் எந்தளவு தூரம் கடைப்பிடிக்கிறது என்பது ஆழமான சிந்தனைக்குரியது. 

இந்தப் பின்புலத்தில் ஒரு முஸ்லிமின் ஆடை, உடல், வாழ்விடம், வீட்டு முற்றம், ஒழுங்கை, தெரு, பிரதேசம் சுத்தமாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் என்றால் சுத்தமானவர்கள் (உள்ளத்தாலும் உடலாலும்) என்ற செய்தியை நடைமுறை வாழ்வினூடாக இந்த உலகிற்கு முஸ்லிம் சமூகம் உரத்துச் சொல்ல வேண்டும். அதனைத்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தஸ்கியா என்று எமக்குக் கற்றுத் தந்தார்கள். அந்தப் பணியை உலகில் நிலைநாட்டவே நபியவர்கள் உலகிற்கு வருகை தந்தார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “எனது உம்மத்தின் செயல்கள் எனக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டன. அவர்களுடைய நல்லமல்களும் பாவங்களும் எனக்குக் காண்பிக்கப்பட்டன. அவர்களுடைய நல்லமல்களின் வரிசையிலே பாதையில் இருக்கும் குப்பைகளை அகற்றுகின்ற அந்த நல்லமலும் எனக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டது.”

மற்றோர் அறிவிப்பில், “எனது உம்மத்தினுடைய நல்ல, கெட்ட செயல்கள் அனைத்தும் எனக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டன. கெட்ட செயல்களில் ஒன்றான மஸ்ஜிதில் உமிழ்நீர் துப்புகின்ற செயலும் எனக்கு எடுத்துக் காண்பிக்கப்பட்டது” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் மதீனாவைச் சேர்ந்த ஒரு கறுப்பின பெண் அவ்வப்போது மஸ்ஜிதுந் நபவியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுட்டு வந்தாள். அந்தப் பெண்ணுடைய பெயர் உம்மு மிஹ்ஜன். ஒரு நாள் நபியவர்கள் அந்தப் பெண்ணைக் காணாததனால் அவரைப் பற்றி விசாரித்தார்கள். “மஸ்ஜிதுன் நபவியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்கின்ற அந்தப் பெண்ணைக் காணவில்லையே?” என  ஸஹாபாக்களிடம் வினவியபோது “சில நாட்களுக்கு முன் அந்தப் பெண் மரணித்து விட்டாள்” என அவர்கள் பதிலளித்தார்கள். அந்த செய்தியைக் கேட்டு கவலையடைந்த நபிகளார் ஆத்திரப்பட்டார்கள். “ஏன் அந்தப் பெண்ணுடைய மரணச் செய்தியை என்னிடம் அறிவிக்கவில்லை?” என கடிந்து கொண்டார்கள். பின்னர் “அந்தப் பெண்ணின் கப்ரை எனக்குக் காண்பியுங்கள்” எனக் கூறிய நபியவர்கள் அந்தப் பெண்ணுக்காக விஷேடமாக ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினார்கள். இறைதூதரின் பார்வையில் மஸ்ஜிதுந் நபவியை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்த அந்தக் கறுப்பினப் பெண் முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணாகக் கருதப்பட்டாள். அந்தளவுக்கு நபியவர்கள் சுத்தத்திற்கு முன்னுரிமை அளித்தார்கள்.

தண்ணீரை மாசடையச் செய்வது மாபெரும் குற்றம். அல்லாஹ்வின் சாபம் இறங்கக் கூடிய ஒரு செயல் அது. ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்: 

“மூன்று சாபங்களைப் பயந்து கொள்ளுங்கள். அவையாவன தேங்கி நிற்கும் நீரில் மலம் கழிப்பது, பாதையோரங்களில் மலம் கழிப்பது, நிழல் கொடுக்கும் மரங்களின் கீழ் மலம் கழிப்பது என்பனவாகும்.” (ஸுனன் அபீதாவூத்)

மற்றோர் அறிவிப்பில், “ஓடாது தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது” என வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

எனவே, ஒரு முஸ்லிம் எப்போதும் தான் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் அதனை நேசிப்பவனாகவும் இருக்க வேண்டும். அல்குர்ஆன் சூழலைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் பல இடங்களில் பேசுகிறது.

மாடு, கால்நடைகள், தேனீ, எறும்பு, சிலந்தி முதலான உயிரினங்கள் பற்றி அல்குர்ஆன் பேசுகிறது. தாவரங்கள், இரும்பு முதலான தாதுப்பொருட்கள் குறித்தும் அல்குர்ஆன் எடுத்தியம்புகிறது. இலக்கிய நூலாக இருக்குமோ என வியக்கும் அளவிற்கு குர்ஆன் இயற்கையை வர்ணிக்கின்றது. சந்திரன், சூரியன், நட்சத்திரம், இடி, காற்று, இரவு, பகல், காலைப் பொழுது, அதிகாலை, மாலைநேரம் பற்றியெல்லாம் குர்ஆன் எடுத்தோதுகிறது. கடல் அலை, மணல் திட்டுக்கள், மலை, பாறைகள் குறித்தும் அல்குர்ஆன் அலசுகிறது. இவற்றின் மூலம் அல்குர்ஆன் இயற்கையோடு நெருக்கமான மனோநிலையை மனிதனிடத்தில் வளர்க்க முயல்கிறது. 

எந்தளவு தூரம் இயற்கை நேசர்களாக, சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பில் கரிசனையுள்ளவர்களாக, அழகுணர்ச்சி கொண்டவர்களாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது! என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

தாவரங்களை நாட்டுவதும் தோட்டம் அமைப்பதும் இபாதாவின் வட்டத்திற்குள் உள்ளடங்கும். மார்க்கத்தின் அடிப்படை நோக்கங்களில் மனித உயிரைப் பாதுகாத்தல், பொருளைப் பாதுகாத்தல், மனித பரம்பரையைப் பாதுகாத்தல், மனிதனின் புத்தியைப் பாதுகாத்தல் பிரதான அம்சங்கள். இவை பாதுகாக்கப்பட வேண்டுமானால் முதலில் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்தும் பாதுகாக்கப்படும். மார்க்கம் என்றாலே அனைவரோடும் அனைத்தோடும் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும். ஒரு முஃமின் அல்லாஹ்வுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது போலவே மனிதர்களோடும் தான் வாழும் சூழலோடும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். 

ஓர் அடியான் இவ்வுலகில் தனது பிரதிநிதியாக (கலீபா) நடந்து கொள்ள வேண்டும், தனக்கு இபாதத் செய்ய வேண்டும், பூமிப் பந்தை வளப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்பன அல்லாஹ்வின் மூன்று எதிர்பார்ப்புக்களாகும். அல்லாஹ் இந்தப் பூமியிலிருந்து உங்களைப் படைத்து இந்தப் பூமியை வளப்படுத்த வேண்டும் என உங்களிடம் எதிர்பார்க்கிறான்.

மர நடுகை, விவசாயம், பயிர்ச்செய்கை முதலானவற்றினூடாக பூமியை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தி வளப்படுத்த வேண்டும்; பூமியில் விஷமங்களையும் குழப்பங்களையும் விளைவிக்கக் கூடாது என்பது படைத்தவனின் எதிர்பார்ப்பு.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  கூறினார்கள்: “ஒரு மரத்தை நாட்டுவது மிகப் பெரிய ஸதகாவாகும்.”

“ஒருவர் ஒரு மரத்தை நாட்டி அதிலிருந்து கிடைக்கின்ற பழத்தை அல்லது அறுவடையை மனிதனோ, மிருகமோ, பறவையோ சாப்பிட்டால் அது அவர் செய்த ஸதகாவாக அமையும்.” 

“யார் நிழல் தரும் ஒரு மரத்தை வெட்டுகிறாரோ அவர் மறுமையில் நரகத்தில் தலைகுப்புற வீழ்த்தப்படுவார்.”

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனித இனத்துக்கு மாத்திரமன்றி ஜின் இனத்துக்கும் தாவர மற்றும் மிருக உலகங்களுக்கும் அருட்கொடையாக (ரஹ்மதன் லில் ஆலமீன்) அருளப்பட்டார்கள் என்பதன் அர்த்தம் இதுவாகும். அந்த உத்தம நபியை வழிகாட்டியாக ஏற்றுப் பின்பற்றும் முஸ்லிம் சமூகம் முழு மனித சமுதாயத்திற்கும் தாவர, மிருக இனங்களுக்கும் சூழலுக்கும் அருளாகத் திகழ வேண்டும். எமது தாய் நாடான இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் வளமான, மிக அழகான ஒரு தேசம். இதனால்தான் எமது நாட்டை நோக்கி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். “எங்களுக்கு ஒரே ஒரு சொர்க்கம்தான் இருக்கிறது. அது மறுமையில் கிடைக்கும். உங்களுக்கோ இரண்டு சொர்க்கம். பூமியில் ஒரு சொர்க்கம். மறுமையில் ஒரு சொர்க்கம். ஏனென்றால், உங்களது நாடே சொர்க்கபுரியாகவே காட்சி தருகிறது” என இலங்கைக்கு வருகை தரும் அரபிகள் புகழ்ந்து பேசுமளவுக்கு எமது நாடு வளமானது, அழகானது என்பதில் சந்தேகம் கிடையாது.

ஆனால், எமது அழகிய தேசத்தை மனித செயற்பாடுகள் எந்தளவு சீரழித்துக் கொண்டிருக்கின்றன? என்பது பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். வகை தொகையின்றி காடுகளை அழிப்பது, கைத்தொழில்மயமாக்கம் எனும் பெயரில் சூழலை மாசுபடுத்துதல், முறையற்ற வகையில் குப்பை கொட்டுதல், கழிவுப் பொருட்களை அழிப்பதற்கு முறையான பொறிமுறைகளைக் கையாளாதிருத்தல் என்று இறைவன் எமக்கருளிய வளம் நிறைந்த பூமியை நாசம் செய்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயம்.

இந்நிலையில் நாட்டில் “Vision of creating a safe country” எனும் மகுடத்தின் கீழ் அரசாங்கத்தினால் புதியதொரு வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அனைவரையும் விட அதிகமாக பங்களிப்புச் செய்கின்ற ஆன்

மிக, தார்மிகக் கடப்பாடு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. ஏனெனில், சுத்தம் பேணுவதும் சூழல் சுற்றாடலைப் பேணிப் பாதுகாப்பதும் உலகைப் பொறுத்தவரை காலத்தின் தேவையாக இருக்கின்றது. உலகம் எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியை விட, பொருளாதார மந்த நிலையை விட மிகப் பயங்கரமான பிரச்சினையே இதுவாகும்.

சுத்தம், ஒழுங்கு, நேர்த்தி, கட்டுப்பாடு என்பன எமது சமூகத்தில் குறைவாகவே காணப்படுகிறது என்பது கசப்பானதோர் உண்மை. மார்க்கம் என்றால் வழிபாடு மாத்திரமே என்ற பிழையான மனப்பதிவு எம்மிடம் இருப்பதும் இதற்கான ஒரு காரணம். வழிபாடும் பண்பாடும் கலந்ததுதான் மார்க்கம். வழிபாட்டின் நோக்கமே பண்பாடான மனிதர்களை உருவாக்குவதுதான். ஒவ்வோர் அமலும் இபாதத்தும் முஸ்லிம்களிடம் பண்பாடுகளை, ஒழுக்கங்களை உருவாக்கவில்லை என்றால்… பண்பட்ட, நாகரிகம் பெற்ற சமூகமாக ஆக்க துணை புரியவில்லை என்றால் அந்த வணக்க வழிபாடுகளின் பெறுமதி என்ன?

வழிபாட்டுக்காக பள்ளிவாசலுக்கு வரும் வழியிலேயே எத்தனையோ பண்பாடுகள் மீறப்படுகின்றன. போக்குவரத்துச் சட்டங்களை மீறி வாகனங்களை செலுத்துதல், மற்றவருக்கு அசௌகரியங்களும் இடையூறும் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துதல் என்ற அதன் பட்டியல் நீள்கிறது. இவை கண்டிக்கத்தக்க, மார்க்கத்தின் பார்வையில் முற்றாக நிராகரிக்கத்தக்க செயற்பாடுகள். அழகிய மார்க்கத்தை எமது செயல்களால் அசிங்கப்படுத்தும் செயற்பாடுகள்.

இன்று முஸ்லிம் ஊர்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளனவா? இது விடயத்தில் ஊர் மக்கள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் இந்நாட்டுக்கு ரஹ்மத்தாக, பரக்கத்தாக திகழ வேண்டுமே தவிர அதாபாக மாறிவிடக் கூடாது. சகோதர சமூகத்தினர் முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து இது ஒரு சாபக்கேடான சமூகம் என்று சபிக்கக் கூடிய நிலைஏற்பட்டு விடக் கூடாது. எனவே, முஸ்லிம் சமூகம் தாமும் சுத்தம் பேணி சூழலையும் சுத்தப்படுத்தி அலங்கரிப்பதுடன் அத்தகைய வேலைத் திட்டங்களுக்கு மகத்தான பங்களிப்பு நல்க வேண்டும். இதற்கூடாக எமது நாட்டின் நல்லிணக்கத்திற்கும் பாலம் அமைத்துக் கொள்ளலாம். 

எமது நாடு தூய்மையானதொரு பூங்காவாக மாற வல்ல இறைவன் அருள் புரிவானாக! 

அல்ஹஸனாத், ஜனவரி 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *